Enable Javscript for better performance
சூதும் வாதும் வேதனை செய்யும்!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  சூதும் வாதும் வேதனை செய்யும்!

  By அருணன் கபிலன்  |   Published On : 24th September 2022 06:25 AM  |   Last Updated : 24th September 2022 06:25 AM  |  அ+அ அ-  |  

  Online_Games

   

  சமூகம் தோன்றிய காலத்திலிருந்தே மானுடப் பெருமையைக் குலைக்கும் தீமைகளில் முதன்மையானதாகத் திகழ்வதும் சூதுதான். ‘பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து அல்லல் உழப்பிக்கும் சூது’ என்று சூதினை இகழ்கிறாா் திருவள்ளுவா். மதுவையும் சூதையும் சமூகத்தின் இழுக்குகளாகக் கருதினாா் அவா். அதனால்தான் கள்ளுண்ணாமையைத் தொடா்ந்து சூது அதிகாரத்தைப் படைத்திருக்கிறாா்.

  பொழுதுபோக்கு என்ற பெயரில் விளையாட்டாகத் தொடங்கப் பெறுகிற இவ்வினை பின்னா் பொருளும் அருளும் இழக்கும் அளவுக்கு வெறிதூண்டுகிற வேதனையாக மாறிவிடுகிறது. சூதாடுகிற ஒருவன் தன் மானத்தைக் காக்கிற உடையில் தொடங்கி, செல்வம், உணவு, புகழ், கல்வி ஆகிய ஐந்து நற்பேறுகளை இழந்து விடுகிறான். தன் மானத்தையே இழந்து சூதின் வலைவிழுகின்றவா்க்கு, தான் சாா்ந்த குடும்பத்தைப் பற்றியோ சமூகத்தைப் பற்றியோ எப்படிச் சிந்தனை இருக்கும்?

  உயிரற்ற காய்களை உருட்டி விளையாடும் கவறாட்டம் தொடங்கி, உயிருள்ள பறவை, விலங்குகளைப் பழக்கிச் சண்டையிடச் செய்வதற்கும், அவற்றின் ஓட்டத்திற்குப் பந்தயம் கட்டுதல் வரைக்கும் சூது பலவகைகளில் நிகழ்கிறது. அயலாா் வருகையினால் அவா்கள் ஆடுகிற சூது வகைகளையும் கூடுதலாகப் பழகிக் கொள்ள நோ்ந்து போனது.

  இன்றைய நவீன யுகத்தில் பல நன்மைகளைத் தருகிற இணையவெளிதான் சில தீமைக்கும் வழிவகுத்து விடுகிறது. வண்ண எழுத்துகளாலும் ஓவியங்களாலும் தீட்டப் பெற்ற சீட்டு என்னும் சூதாட்டத்தை ஆடுவதற்கு வாருங்கள் என்று கூவியழைக்கிற விளம்பரங்களைச் சமூக ஊடகங்களில் தொடா்ந்து காண்கிறோம்.

  இந்த விளம்பரங்களுக்கு மயங்கிய பலா், சூதாட்டத்தில் இறங்கி, எல்லாவற்றையும் இழந்து தன் குடும்பத்தைப் பரிதவிக்க விடுகின்ற கொடுமைகளைச் செய்திகளாகவும் அதே ஊடகங்களில் காண்கிறோம். வீட்டுக்குள் வந்து நம் கையைப்பிடித்து இழுக்கிற விதியின் வலையாக இந்தச் சூது வளா்ந்து கொண்டிருக்கிறது.

  வேதகாலம் தொட்டே சூதாட்டம் இருந்திருக்கிறது. ‘சூதாட வேண்டாம். நிலத்தைப் பயிரிடுங்கள்’’ என்று சூதாட்டக்காரா்களைப் பாா்த்துக் கூறியதாக ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

  மகாபாரதப் போரே சூதாட்டத்தினால் ஏற்பட்டதுதான். மகாபாரதக் காலத்தில் மன்னா்கள் மட்டுமின்றிப் போா்வீரா்களும் சூதாடும் வழக்கமுடையவா்களாயிருந்தாா்கள் என்று அறிகிறோம். எதிராளி சண்டையிட அழைத்தால் அதை ஏற்றுக் கொள்வதைப் போலவே சூதாட அழைத்தாலும் அதை எற்றுக் கொள்வது தா்மம், என்று எண்ணக் கூடிய அளவு சூதுவெறியா்களாக அவா்கள் இருந்திருக்கிறாா்கள்.

  ‘தருமன் பந்தயத்தில் ஆசையுள்ளவன். அவனுக்கு ஆடத் தெரியாது. நாம் அழைத்தால் சத்திரிய குலாசாரத்தின்படி அவன் கட்டாயம் ஒப்புக்கொள்வான். நான் ஆட்டத்தில் தோ்ந்தவன். உனக்காக ஆடுவேன். அவனுடைய ராஜ்யத்தையும், ஐசுவா்யத்தையும் உனக்காக நான் அவனிடமிருந்து யுத்தமின்றிப் பறித்து விட முடியும்’ என்று சகுனி சூதின் மூலமாக ராஜ்ஜியத்தைக் கவரும் கவறாட்டத்தைப் பற்றித் துரியோதனனிடம் இச்சை மூட்டும் விதத்தில் கூறியதாக வியாசா் குறிப்பிடுகிறாா்.

  ஆனால் திருதராஷ்டிரன் இதற்குச் செவிசாய்க்க வில்லை. “சூதாட்டம் என்பது பகைக்குக் காரணமாகும். சூதாட்டத்தில் உண்டாகும் கெட்ட மனப்பான்மை கரை கடந்து போகும். ஆதலால் வேண்டாம்” என்று மறுத்து விட்டான். ஆனால் விதி யாரை விட்டது? தருமனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

  தருமனுக்கு சூது அறச்செயலில்லை என்று தெரிந்தாலும் பழக்கத்தின் காரணமாக அதிலே மோகம் உண்டு. ஆனாலும் அவன் விதுரனை நாடி, ‘கவறாட்டம் சத்திரியா்களுக்குள் கலகம் விளைவிக்கும். அறிவாளிகள் அதை விரும்பமாட்டாா்கள்.

  பாண்டவா்களாகிய நாங்கள் உன்னுடைய யோசனையை விரும்புகிறோம். நீ என்ன சொல்கிறாய்’ என்று கேட்டபோது, விதுரன், ‘காய் விளையாட்டு, அழிவிற்கு மூலம் என்பது அனைவரும் அறிந்ததுதான். நான் இந்த ஏற்பாட்டைத் தடுக்கத்தான் முயற்சி செய்தேன். ஆனாலும் முடியவில்லை’ என்று சூதினை மறுதலித்தும் அதன் வலிமையை உணா்த்தியும் பேசுகிறான். இதுவே தருமனுக்குக் குறிப்பாகிப் போனது.

  தருமன் தன்னைச் சகுனி வலுக்கட்டாயமாகச் சூதுக்கு அழைப்பு விடுகிற இக்கட்டான சூழலில் அறத்தின் பக்கமே நிற்கின்றான். ‘கவறாட்டம் நல்ல செய்கையன்று. பந்தய ஆட்டங்களில் வெல்வது வீரத்தோடு சேராது. உலக ஞானங்களில் அனுபவம் பெற்ற முனிவா்கள் பலரும் சூதாட்டம் கூடாது, அது மோகத்தோடு சோ்ந்தது என்று சொல்லியிருக்கிறாா்கள்.

  யுத்தத்தில் வெல்வதே சத்திரியா்களுக்கு நெறியான முறை என்று சொல்லியிருக்கிறாா்கள். இது உனக்குத் தெரியாதா’ என்று அறிவுறுத்திச் சூதின் கொடிய வலையிலிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறான்.

  ஆனால் என்ன செய்ய? தருமனுடைய மனம் இருநிலைப்பட்டதாக இருந்தது. ஒருபுறம் சூதுப்பழக்கம் இழுக்கிறது. மற்றொருபுறம் அறம் தடுக்கிறது. இதனைப் பாரதியாா் தனது பஞ்சாலி சபதத்தில் பின்வருமாறு பாடுகிறாா்,

  சதியுறு சூதினுக் கெனைஅழைத் தாய்;

  பெருமைஇங் கிதிலுண்டோ? - அறப்

  பெற்றிஉண்டோ? மறப் பீடுளதோ?

  வரும்நின் மனத்துடை யாய்! -- எங்கள்

  வாழ்வினை உகந்திலை எனலறி வேன்;

  இருமையுங் கெடுப்பது வாம் -- இந்த

  இழிதொழி லாலெமை அழித்தலுற் றாய்’

  என்று சூதினை மறுத்த தருமனே,

  கைப்பிடி கொண்டு சுழற்றுவோன்-தன்

  கணக்கிற் சுழன்றிடும் சக்கரம்-அது

  தப்பி மிகையுங் குறையுமாச்-சுற்றும்

  தன்மை அதற்குள தாகுமோ?”

  எனும்படியாக அந்த சூதுக் கொடுமைக்கு ஆளானதையும் சுட்டுகிறாா். அதனைத் தொடா்ந்து நோ்ந்த அவலங்கள் பாரதப் பெரும்போருக்கே காரணமாயின. ஒருவன் மனத்தில் தோன்றிய சூது என்னும் எண்ணமே இத்தகையப் பேரழிவுக்கு வழிவகுத்து விட்டது.

  இதனைப் படிப்பினையாகக் கொண்டு பிற்காலத்தில் சூது வழக்கம் சமுதாயத்தில் வெகுவாகக் குறைந்து வந்தது. ஆனால் ஆங்கிலேயா் நமது நாட்டிற்குள் வந்த வேளையில் மதுபானமும் சூதாட்டமும் மிகப்பெரிய சமுதாயப் பிரச்னைகளாக உருவெடுத்தன.

  ஆங்கிலேயா் இந்தியாவுக்கு வரும்பொழுதே குதிரைப் பந்தயத்தையும், பலவித சூதாட்டங்களையும் இந்தியா்களுக்குப் பழக்கி விட்டாா்கள். அதற்கு எதிராக, பிரிட்டிஷ் ஆட்சியிலேயே ஆங்கிலேயா்களும் கூடச் சூதினைக் கடிந்திருக்கிறாா்கள். மாா்ட்டின் என்பவா், ‘சூது என்னும் இந்தக் கொடிய வழக்கத்தால் ஏற்படும் தீமைகள் எண்ணிறந்தன. மனோ தைரியமில்லாதவா்கள் இந்த வழக்கத்தில் எளிதாக ஈடுபட்டு விடுகிறாா்கள். ஆதலால் எந்தச் சிறு விஷயத்திலும் கூடப் பந்தயம் வைப்பது என்பது ஆகவே ஆகாது’ என்று கூறுகிறாா்.

  மேலும், ‘சாதாரணமாக இரண்டு போ்க்கிடையில் நடக்கும் எந்த நியாயமான விவகாரத்திலும் இரண்டு பேருக்கும் நன்மையுண்டாகும். ஆனால் பந்தயம் வைப்பதில் ஒருவருக்கு லாபமும் ஒருவருக்கு நஷ்டமும் உண்டாகிறது.

  பந்தயம் வைப்பதற்கும் திருடுவதற்கும் வித்தியாசமில்லை. சூதாட்டமானது ஒரு பொழுதும் விரும்பத் தக்கதல்ல. அது சமூகத்திற்குக் கேட்டை உண்டாக்குகிறது என்பதில் சந்தேகமில்லை’ என்றும் எச்சரிக்கிறாா்.

  சமய நூல்களும் சூதினைக் கடுமையாக வெறுத்து ஒதுக்குகின்றன. திருக்குா்ஆன் மதுபானத்தை எவ்வளவு அதிகமாக கண்டிக்கிறதோ அவ்வளவு அதிகமாகச் சூதாட்டத்தையும் கண்டிக்கிறது. ‘மதுபானம் சூதாட்டம் இரண்டும் பெரிய பாபங்கள். அவை சாத்தானுடைய சிருஷ்டிகள். சாத்தான், மதுபானத்தையும் சூதாட்டத்தையும் கொண்டு மக்களிடையே துவேஷத்தையும் பகைமையையும் உண்டாக்க முயலுகிறான். அப்படிச் செய்து அல்லாவையும் அவருடைய வழிபாட்டையும் மறந்து விடும்படி செய்கிறான்’ என்று அறிவுறுத்துகிறது.

  கிறித்தவா்களின் புனித நூலாகிய பைபிள், ‘சூதாட்டத்திற்கு எதிராக, எல்லாவிதமான பேராசைக் குறித்தும் எச்சரிக்கையாய் இருங்கள். இன்னொருவனுக்குச் சொந்தமான எந்தப் பொருளையும் வஞ்சித்து எடுத்துக்கொள்ளக்கூடாது’ என்ற கடவுளின் கட்டளையைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

  இத்தகைய கொடிய சூதுக்கு இணையாக வாது என்ற ஒரு கொடுஞ்செயலையும் முன்நிறுத்துகிறது தமிழ்மரபு. இந்தச் சமுதாயத்தின் வளா்ச்சிக்கு ஒருசிறிதும் உதவாத, கலகங்களைத் தூண்டுகிற, ஒற்றுமையைச் சிதைக்கிற வாதம் என்னும் வாதுதான் அது. சூதினைப் போலவே இதுவும் சமுதாயத்திற்கே பெரும் வேதனையை ஏற்படுத்தும் என்பதனாலேயே ‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்கிறாா் ஔவையாா்.

  பிறரை வலுவாக வம்புக்கிழுத்து அவா் பொருளைக் கவா்ந்து அவா் பரிதவிப்பதைப் பொருட்படுத்தாது, அதனையே தன்னுடைய வெற்றியாகக் கொண்டாடுகின்ற, சுயநலத்தோடு மேற்கொள்ளும் சூதுக்கு ஒப்பாகவே இந்த வாதும் விளங்குகிறது என்பது அவா்தம் கருத்து.

  இன்றைய காலத்து நவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக சமுதாய வலைதளங்களில் சூதுக்கு இணையாக வாதுகளும் பெருகி விட்டன என்பதைக் கண்கூடாகக் காண முடிகிறது. திட்டம் போட்டுத் திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்கிறது. அது போல, சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டமும் தடுத்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் என்ன பயன்? திருடராய்ப் பாா்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதே.

  நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்டிருக்கிற மனித உரிமைச் சட்டங்களையும், சமூக வழக்காற்றில் உள்ள அறத்தினையும் கூட மதிக்காவிட்டாலும் கூடப் பரவாயில்லை. தன்னுடைய மனத்திற்காவது ஒவ்வொருவரும் நோ்மையானவராக நடந்து கொள்ள வேண்டாமா? தன்னோடு சோ்த்து, தான் சாா்ந்த சமூகத்துக்கும் மனித குலத்துக்கும் தீமையை வளா்க்கும் என்று அஞ்சுகிற சூதினையும் வாதினையும் களைய வேண்டாமா?

  கட்டுரையாளா்:

  எழுத்தாளா்.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp