திறன் அறிந்து சொல்லுக

கோப்புப் படம்.
கோப்புப் படம்.

 அடுத்தவர் வீட்டின் அடுப்படி வரை சென்று பழகிய காலம் இப்போது இல்லை. மாறிவரும் சமூகச்சூழல் அதற்கான தேவையை தவிர்த்துள்ளது. அடுத்தவர் வீடுகளில்தான் இந்த நிலை என்பதில்லை. உறவினர் வீடுகளிலும் இதுதான் நிலைமை. அவ்வளவு ஏன், தனது மகனோ, மகளோ வசிக்கும் இடத்துக்குச் செல்லவே பெற்றோர் அனுமதி பெற்றோ, தகவல் சொல்லிவிட்டோதான் செல்ல வேண்டியிருக்கிறது.
 முன்காலங்களில் ஒரு வீட்டின் அடுப்படி வரை சென்றோர் அக்குடும்பத்தின் உறவினர்களாகவே இருப்பர். அவ்வாறு செல்வோர்க்கு சில நேரங்களில் அந்த குடும்பங்களின் வறுமை நிலை தென்படும். அவ்வாறு தென்படும் வறுமையை தற்காலிகமாவாவது போக்க அவர்கள்முயல்வர். ஒருவேளை அந்த வீட்டின் அரிசிப்பானை காலியாக இருக்குமானால், சந்தடியே செய்யாமல் ஒரு நான்கு படி அரிசி இவர்கள் வீட்டை அடைந்துவிடும். இவ்வாறான நெகிழ்வான சம்பவங்களுக்கு இப்போது வாய்ப்புமில்லை; தேவையுமில்லை.
 இன்றைய நாட்களில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளுக்கு நேரசியாகச் சென்று அவர்களை சந்திக்க வேண்டிய தேவை பெரும்பாலோருக்கு இருப்பதில்லை. அவ்வாறு தேவையிருப்பினும், ஒரு தொலைபேசி அழைப்பில், அவர்கள் இருப்பை உறுதி செய்த பின்னரே செல்கின்றனர். அவ்வாறு செல்லும்போதும் வரவேற்பறையுடனேயே உரையாடல் முடிந்துவிடுகிறது. ஒரு வாய் காபி அருந்திவிட்டு சென்ற பணியை முடித்துக் கொண்டு திரும்புகின்றனர்.
 இவ்வாறான சந்திப்புகளையும் வார இறுதியில் அல்லது விடுமுறை நாட்களில்தான் மேற்கொள்ள இயல்கிறது. அந்த நாட்களிலும் மாலை நேரமே இவ்வாறான சந்திப்பிற்கான நேரமாகி வருகிறது. அண்மையில் சுமார் இருநூறு பேர் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தேன். அவர்களில் கடந்த ஆறு மாதத்திற்குள் தங்களது சகோதரன் அல்லது சகோதரி வீட்டிற்கு சென்று வந்தோரைக் கை உயர்த்தச் சொன்னேன். ஐந்து கைகள் மட்டுமே உயர்ந்தன. அந்த அளவுக்கு உறவினர் வீட்டிற்குச் செல்லும் பழக்கம் அருகியுள்ளது.
 திட்டமிட்டுத்தான் சந்திப்புகள் நிகழவேண்டும் என்பதில்லை. வெளியே செல்லும்போது தற்செயலாகவும் சந்திப்புகள் நிகழலாம். இவ்வாறான சந்திப்புகளில் நிகழும் உரையாடல் எப்படிப்பட்டது என்பது சிந்தனைக்குரியது. இவ்வாறான சந்திப்புகளில் அடுத்தோரை உற்சாகப்படுத்தும் வகையில் உரையாடல் அமைய வேண்டும். இடைப்பட்ட காலத்தில் ஒருவர் பருத்திருக்கலாம் அல்லது இளைத்திருக்கலாம்; அவரது தலைமுடி நரைத்திருக்கலாம் அல்லது கொட்டியிருக்கலாம். எது எப்படியோ சில ஆண்டகளில் ஒருவரது தோற்றம் மாறியிருக்கவே வாய்ப்புள்ளது.
 ஒருவரைப் பார்த்தவுடன் "என்ன இப்படி இளைத்துவிட்டாய்' என்றோ "இப்படிப் பெருத்துவிட்டாயே' என்றோ கேட்கக் கூடாது. அதுவும் அந்த நபரின் துணை (கணவரோ, மனைவியோ) உடனிருக்கையில் நிச்சயம் கேட்கக் கூடாது. அது போலவே மற்ற உடல் தோற்றங்களைப் பற்றியும் விமர்சனம் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
 பின் எப்படிதான் பேசவேண்டும்? அவரோடு முன்னர் தாம் மகிழ்ந்திருந்த பொழுதினை நினைவுபடுத்தி உரையாடலைத் தொடங்கலாம். அவர் தனது மனக்குறையைப் பகிரத் தொடங்கினால் நிச்சயம் அதைக் கேட்பதற்கு நேரம் செலவழிக்கத் தயாராக இருக்கவேண்டும். அவரோடு உரையாடி ஆறுதல் அளித்துவிட்டு வரும் பொறுமையும் கரிசனமும் அவசியம். ஒருவேளை அவ்வாறு அவர் சொல்ல வருகையில் நமக்கோ, அவருக்கோ நேரமின்மை தடையாக இருப்பின். அவரது தொலைபேசி எண்ணை மறக்காமல் பெற்று பின்னர் நேரம் கண்டறிந்து உரையாடலாம்.
 அடுத்தோருடனான சந்திப்புகளில் திருமணத்திற்காகக் காத்திருக்கும் பெண்களையோ, ஆண்களையோ சந்திக்க நேரலாம். அவ்வாறான சந்திப்புகளில் அவர்களது திருமண ஏற்பாடு குறித்த விசாரிப்புகளிலும் எச்சரிக்கை தேவை. அவர்களாக கேட்டால் தவிர அறிவுரைகளை அள்ளிவிடக்கூடாது. வாய்ப்பிருப்பின் அவர்களுடைய பெற்றோரிடம் பேசி அவர்கள் விருப்பத்தை தெரிந்துகொள்ளலாம். அவர்கள் விருப்பத்திற்கேற்ற பெண்ணோ, பையனோ நமக்குத் தெரிந்திருப்பின் பெற்றோரிடம் பகிர்ந்து உதவலாம்.
 மணமாகி குழந்தைக்காகக் காத்திருப்போருடனான உரையாடலிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வு அவசியம். நம்மைவிட அவர்களுக்கு மனக்குறை அதிகம் இருக்கும். அதற்கான சிகிச்சைகளில் அவர்கள் ஈடுபட்டிருக்கவே செய்வர். நமக்குத் தெரிந்த மருத்துவமனைகள், மருத்துவர்கள் பெயர்களையெல்லாம் நான்குபேர் மத்தியில் அறிவுரையாகப் பொழியாதிருப்பதே அறிவுடைமை. உண்மையாகவே அவர்களுக்கு உதவ விரும்பினால் அவர்களது நியாயமான தேவையை அறிந்துகொண்டு முடிந்த வகையில் உதவலாம்.
 இன்றைய அவசர யுகத்தில் யாரும் இதனை விரும்பி செய்கின்றனர் என்று சொல்லமுடியாது. மாறாக இயல்பாக வெளிப்படும் இவ்வாறான வார்த்தைக் கணைகள் அடுத்தோரை எவ்வாறு பாதிக்கும் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியமாகும். தெரிந்தோ, தெரியாமலேயே வாழ்க்கை வாழ்வது கடினமாகி வருகிறது. பொருளாதார நெருக்கடிகளும் அடுத்தோரைப் போல வாழவேண்டும் என்ற தவறான கற்பிதங்களும் மக்களுக்குள்ளேயே அன்றாடம் போட்டி மனப்பான்மையை ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றன.
 ஒருவரது குறை தனக்குத் தெரிந்தால் அதனை சரி செய்வதை விடுத்து, அதனை தனது விமர்சனத் திறமையின் மூலம் வெளிச்சம் போடுவோர் இன்று அதிகரித்து வருகின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஒருவரது மனக்குறையை அவரே உணர்ந்து மீண்டு வருவதே நல்லது.
 ஒருவரது குறையை அவர் உணர்வதுபோல பக்குவமாகச் சொல்வதென்பது ஒரு கலை. அக்கலை எல்லாருக்கும் வாய்ப்பது அரிது. அந்த கலை அறியாமல் அடுத்தோர்க்கு அறிவுரை பொழிவது, அவர்களை மேலும் தாழ்வு மனப்பான்மை கொள்ளச் செய்யும். அடுத்தடுத்த சந்திப்புகளைக் கூட தவிர்க்கச் செய்துவிடும். பொருள் பொதிந்த உரையாடல்களே சந்திப்புகளைத் தொடரச் செய்யும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com