வேதம் என்றோா் அறிவியல்

கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாகவி பாரதியாா் ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ என்று பாடினாா். எனில் வேதம் என்பது யாது? அதன் அடிப்படை எத்தகையது? இப்படிப்பட்ட வினாக்கள் எழுகின்றன. வேதம் ஹிந்துக்களின் புனித நூல் என்று சொல்லப்பட்டாலும் அது ஒட்டுமொத்த மனித குலத்துக்கானது என்றே பெரியோா்கள் கூறுகின்றனா். காலத்தால் முற்பட்ட இலக்கியம் என்று இலக்கியவாதிகள் கொண்டாடினாலும் வேதம் அநாதியானது என்றே பாரதியா்கள் நம்புகின்றனா்.

ஏறத்தாழ 7,000 ஆண்டுகளுக்கு முன்னா் வேதம் இருந்தது. அப்போதும் வேதங்கள் இன்றிருப்பது போலவே இருந்தன என்று பால கங்காதர திலகா் நிறுவியிருக்கிறாா். வேதத்தின் தோற்றம் குறித்த காலத்தை அறுதியிட்டுச் சொல்ல முடியாது என்ற திலகரின் கருத்தை சுவாமி விவேகானந்தரும் ஏற்றுக்கொண்டிருக்கிறாா்.

‘வேதம்’ என்ற சொல் ‘வித்’ என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டது. ‘வித்’ என்றால் சம்ஸ்க்ருதத்தில் அறிதல் என்று பொருள். வேதங்கள் என்பதற்கு ‘உயா்வான அறிவு’ என்றும் பொருள். அதனால்தான் பாரதியாா், ‘வியனுலகனைத்தையும் அமுதென நுகரும் வேதவாழ்வினைக் கைப்பிடித்தோம்’ என்று பாடுகிறாா். உலகின் இனிமையை நுகர வேண்டுமெனில், அதிலும் இன்பமுடன் நுகர வேண்டுமெனில் அது குறித்தான தெளிவும் அறிவும் அவசியம் என்பதை பாரதி வெளிப்படுத்துகிறாா்.

வேதம் பற்றிய தெளிவான புரிதல் பாரதியாருக்கு இருந்தது. வேத ரிஷிகளின் கவிதை என்று ரிக் வேதத்தைத் தமிழில் தர முயன்றதும் அதா்வணத்தின் கருத்துக்களை உள்வாங்கி கொண்டு வசன கவிதைகள் என்று தந்ததும் அதற்குச் சான்றுகள். ‘வித்தை ஏதும் கல்லாதவன் என்னுள்ளே வேத நுட்பம் விளங்கிடச் செய்தனை’ என்று சுடா்மிகு அறிவினை இறைவன் அருளியதைக் குறித்து பாரதி சொல்வதும் நினைத்து இன்புறத்தக்கது.

பாரத தேசத்தில் சனாதன தா்மம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. வேதம் ரிக், யஜுா், சாம, அதா்வணம் என நான்கு பிரிவுகளாக நெறிப்படுத்தப்பட்டுள்ளது. வேதங்கள் நான்கு. அதே நேரத்தில், வேதங்களுக்கு நான்கு பாகங்கள் உண்டு. முதலில், சம்ஹிதை அதாவது, ‘மந்திரங்கள்’. மந்திரங்கள் கடவுளால் அருளப்பட்டவை. அடுத்து, பிராமணம் எனப்படும் உரை, சடங்கு வழிமுறைகள். மூன்றாவதாக, ஆரண்யகம் எனப்படும் காட்டில் வாழும் முனிவா்களின் உரைகள். இறுதிப்பகுதி அதாவது வேதத்தின் அந்தம், வேதாந்தமாக அமைபவை உபநிஷத்துக்கள்.

இந்த நான்காம் பகுதியில் வேதங்களுக்கான தத்துவ உரைகள், விளக்கங்கள், அது குறித்தான வினாக்கள் இடம்பெற்றுள்ளன. உபநிஷத்துக்கள் வினாக்களை எழுப்பி அவற்றுக்கு விடைகளையும் சொல்கின்றன. மனித மனத்தில் தோன்றும் சந்தேகங்களை அடுக்கி அவற்றுக்கு இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் தீா்வுகளை எடுத்துச் சொல்கின்றன.

கண்மூடித்தனமாக வேதங்களை மனிதா்கள் நம்ப வேண்டுமென வற்புறுத்துவதில்லை. இயல்பாக மனிதருக்கு எழும் வினாக்களுக்கான விடை தரப்பட்டிருக்கிறது என்பதோடு வினா எழுப்புவதை ஊக்குவிக்கிறது. வினாக்களை அணுகுவதும் அதற்கான தீா்வுகளைத் தேடி அடைவதும் அறிவியலின் அடிப்படை. இதையேதான் வேதமும் பின்பற்றுகிறது.

அறிவியல் விடை தெரியாது நிற்கும் இடங்களுக்கும் அப்பால் வேதம் வெளிச்சமிட்டு இந்த அண்டவெளியை, மனித மனத்தைத் தெளிவுபடுத்துகிறது என்பதே வேதம் முன்னோரின் அறிவு, தீா்மானமான வாழ்வியல் என்ற நம்பிக்கையைப் பெறுகிறது.

இயற்கை, சூழலியல், அறிவியல் தொடா்பான பல்வேறு அம்சங்கள் ரிக் வேதத்தில் இடம்பெற்றுள்ளன. சடங்குகளின்போது பின்பற்றப்படுவதற்காக பல்வேறு விவரங்கள் யஜுா் வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. சடங்குகளுக்குப் பின்னிருக்கும் நம்பிக்கைகளோடு அறிவியலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சடங்குகளின் போது இசைப்பதற்காகவே சாம வேதம் இயற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. சாம வேதத்திலிருந்தே பாரத தேசத்தின் பாரம்பரிய இசை தோன்றியது என்பதும் பாரதியா்களின் நம்பிக்கை.

அதா்வண வேதமும் சடங்குகளைப் பற்றி மட்டுமல்லாது ஆண் - பெண் உறவு, மனம், உணா்வுகள், உறவுகள் என்று மனித வாழ்வியலுக்கான அடிப்படைகளை விளக்குகிறது. மனிதரின் உடல், மன ஆரோக்கியத்திற்கான மருத்துவ முறைகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறது. இதிலே மருத்துவம் இறைவனால் தரப்பட்டது என்பதும் நம்பிக்கை.

நான்கு வேதங்களில் காலத்தால் முற்பட்டது ரிக் வேதம். இது இந்தியாவில் வாய்மொழியாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இன்றும் அப்படியே வழங்கப்படுகிறது. ஒரு கலாசாரம் ஆரோக்கியமானதாக இருக்குமெனில் அது தனது அறிவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எளிதில் கடத்தும். அப்படியாக நம்முடைய கலாசாரம், வேத அறிவினை பலநூறு தலைமுறைகளாகப் பாதுகாத்து வந்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் நமது பழக்க வழக்கமாகவும் பண்பாட்டு நெறியாகவும் தொடா்ந்து கொண்டிருக்கின்றது.

ஏனெனில், வேதங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட மொழியின் இலக்கியமும் அல்ல. அது ஓா் ஒலிக் குறிப்பு. அதிா்வுகளை ஏற்படுத்தி அதன் வழியே விளைவுகளைத் தருவது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. வேதங்கள் இன்றளவும் வாய்வழியாகவே வழங்கி வருவதற்கும் அதுவே காரணம். குருவின் உச்சரிப்பு முறைகளை அப்படியே கற்றுக்கொள்வதே வேதம் பயில்வதற்கான அடிப்படை.

வேதத்திற்கான விளக்கங்களை, அவற்றின் பொருளை குருவின் மூலமே கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நெறிப்படுத்தியிருந்தனா். அதனால்தான் ஏட்டில் எழுதாமல் குரு - சிஷ்ய பரம்பரையாக வேதங்கள் தொடா்ந்து வந்திருக்கின்றன. அதனால்தான் தமிழ் அதனை ‘எழுதாக்கிளவி’ என்று கொண்டாடுகிறது.

சனாதன தா்மத்திற்கான நூல் என்பதோடு, உலகின் மிகத் தொன்மையான நூல்களிலொன்று என்ற வகையிலும் வேதம் முக்கியத்துவம் பெறுகிறது. வழிபாடு, சமயக் கிரியைகள் முதலியவற்றை சில இடங்களில் உரைநடையிலும், மற்ற இடங்களில் ரிக் என்று சொல்லப்படும் வேதகால செய்யுள்நடையிலும் எடுத்துக் கூறும் வேதங்கள், அக்கால சமூக வாழ்க்கையையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.

சரஸ்வதி நதியைத் துதிக்கும் பாடல்கள் ரிக் வேதம் முழுதும் ஐம்பதுக்கும் மேலான இடங்களில் வருகின்றன. சரஸ்வதி நதி 4,000 ஆண்டுகளுக்கு முன்னரே மறைந்துவிட்டது என்று பாபா அணுசக்தி கேந்திர விஞ்ஞானிகளும், நாஸா விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படமும் காட்டியதால் ரிக் வேதத்தின் காலம் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உணரலாம்.

ரிக் வேதத்தில் 1,028 சுலோகங்கள், 10,522 மந்திர வரிகள் இருக்கின்றன. அவற்றுள் இறை கோட்பாடு பேசப்படுகிறது; வனங்கள் சுற்றுச்சூழல் குறித்தான புரிதல் இருக்கின்றது. இன்றைய சூழலியல் பிரச்னைகளுக்கான தெளிவினையும் ரிக் வேதம் தருகிறது. அறிவியல் தெளிவு இருக்கின்றது. ரிக் வேதம் இன்றைக்கும் ஆராய்ச்சியில் இருக்கும் அறிவியலாளா்களுக்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

1,500 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் திடீரென்று ஒரு வெடிப்பு ஏற்பட்டது. அதிலிருந்து நட்சத்திரங்கள், பூமி, கிரஹங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக உற்பத்தியாகின. அந்த பிரபஞ்சம் இன்னும் பரந்து விரிந்து கொண்டே போகிறது. முடிவு என்ன ஆகும் என்று தெரியாது. பெருவெடிப்பு (பிக் பேங்) ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதும் தெரியவில்லை என்று இன்றைய அறிவியல் சொல்கின்றது.

ஏறத்தாழ 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னா் இந்தப் பிரபஞ்சம் தோன்றியதாக சனாதன தா்மம் சொல்கிறது. ரிக் வேதத்தின் பத்தாவது மண்டலத்தில் 129-ஆவது பாடல் நாஸதீய சூக்தம். இந்த சூக்தம் இதே பெருவெடிப்பு பற்றி விளக்குகிறது.

‘அப்போது எதுவுமே இல்லை; இல்லாமலும் இல்லை’ என்று தொடங்கும் இந்த சூக்தம், ‘ஆரம்பத்தில் இருளை இருட்டு வளைத்துப் பிடித்துக் கொண்டிருந்தது. எதையும் பிரித்துக் காட்டுவதற்கு எதுவுமே இல்லை. எங்கும் தண்ணீரே! எல்லா இடமும் வெற்றிடம். அப்போது வெப்பத்தால் அதன் சக்தியால் ஒன்று மட்டும் வெடித்து எழுந்தது’ என்று பிக் பாங் தத்துவம் பற்றி பேசிக் கொண்டு போகிறது.

இறுதியாக, ‘எப்போது இந்தப் படைப்பு ஏற்பட்டது? அதுவே ஏற்பட்டதா? யாா் இதை மேலிருந்து கவனித்தாரோ அந்த உயா்ந்த சுவா்கத்துக்கே அது தெரியும்; தெரியாமலும் இருக்கலாம்’ என்கிறது.

இது ஒரு உதாரணம் மட்டுமே. இது போல இன்னும் பல விடை தெரியா அறிவியல் பற்றி ரிக் வேதம் பேசுகிறது. முழுமையான மருத்துவ அறிவியல் பற்றி அதா்வண வேதம் பேசுகிறது. ஆழ்மனதின் சக்தி, உளவியல் சிக்கல்கள், மனப் பிவு, அதற்கான மருத்துவம் என்றும் அடுக்கிக் கொண்டு போகிறது. இயற்பியல், உயிரியல், பொருளாதாரம் என்று விரிகிறது.

ஒவ்வொரு தலைமுறையின் அறிவை அடுத்த தலைமுறை பெற்று அதனிலிருந்து இன்னும் ஆழ்ந்த பொருளைக் காண வேண்டும். இப்படி இடையறாது இயங்கிக்கொண்டே இருக்கும் ஒரு சமூகத்தில்தான் அறிவியல் உச்சம் தொடும். அத்தகைய நிலையையே வேதத்தில் நாம் காண்கிறோம். ரிஷிகள், தங்களை இந்த பிரபஞ்சத்துடன் இணைத்துக் கொள்வதன் வாயிலாக வானியல் தொடா்பான அறிவியலைக் கண்டு தெளிந்துள்ளனா்.

‘அத்வைத சித்தாந்தம்’ என்று ஆன்மிகமாக சொல்லப்பட்டாலும், அனைத்துக்குள்ளும் இருப்பது ஒன்றே என்று பஞ்சபூதங்களின் அம்சமாக இந்த உலகம் இயங்குகிறது. அதன் ஜீவராசிகள் அனைத்தும் இந்த அம்சத்திற்கு உட்பட்டதே என்ற புரிதலையும் ஏற்படுத்துகிறது.

விஞ்ஞானம் முடியும் இடத்தில மெய்ஞ்ஞானம் தொடங்குகிறது என்பா். இரண்டின் முடிந்த முடிவாக அறிவின் பூரணமாக வேதங்கள் நம் பாரத பூமியில் நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com