சொல்லாடச் சோா்வு படும்!
By கிருங்கை சேதுபதி | Published On : 12th May 2023 03:48 AM | Last Updated : 12th May 2023 03:48 AM | அ+அ அ- |

மனிதனின் கருத்துவெளிப்பாட்டுக் கருவிகளுள் மகத்தானது பேச்சு. பேச்சென்பது சொற்களின் வெளிப்பாடு மட்டுமல்ல. மௌனமும் கூடப் பேச்சுத்தான். ஞானிகளின் மௌனம் கூட, அழுத்தமான பேச்சாக வெளிப்படும். அப்போது பேசும் பணியைக் கண்கள் செய்துவிடும்.
வாய் திறந்து பேசக்கூடாத நேரங்களில் பேச வேண்டிய தேவை ஏற்பட்டால்கூட, மௌனம் காப்பது நல்லது. வாய் மௌனிக்கும்போது, மனம் பேசத் தொடங்கும். மனத்தின் பேச்சைக் கற்றுக்கொள்வதற்கு மௌனம் துணையாகும். அது ஒருவிதத் தெளிவையும் துணிவையும் தரும். பேசியே ஆகவேண்டிய நேரத்தில் பக்குவமாக வெளிப்படும்.
பேசத் தோன்றும் நேரத்தில், முன்னிருந்து கேட்கவோ, உடன் உரையாடவோ, ஆட்கள் கிடைக்காதபோது, புத்தகங்கள் உற்ற துணையாகும். எழுத்தெழுத்தாக வளரும் சொற்கள் தொடராக நீளும்போது, எழுத்தாளரோ, எழுத்துவழி வெளிப்படும் கதாபாத்திரமோ பேசத் தொடங்கிவிடும். கண்ணே செவியாகக் கவனிக்கத் தொடங்கிவிட்டால், மனம் எழுப்பும் கேள்விக்கு, அடுத்த பத்தியோ, அடுத்த அத்தியாயமோ பதில் சொல்லக் காத்திருக்கும்.
அதில் விட்ட குறை, தொட்ட குறை இருக்குமானால், மற்றொரு புத்தகம் அதனை நிறைவு செய்யும். அதிலும் வயதாக, வயதாக, வாய் பேசுதற்குரிய வாய்ப்புக் கிட்டாதவா்கள், இந்த மௌன உரையாடலைத் தொடா்ந்துவிட்டால், மகிழ்ச்சி கிடைக்கிறதோ இல்லையோ, மனதுக்கு இதம் கிட்டும்.
நான்கு சுவா்களுக்கு நடுவில் வாழ்க்கையை முடக்கிக் கொண்டிருக்கும் இல்லத்தாா் பலா் தமக்குள் பேசுதற்கு ஒன்றுமில்லாத வெறுமையில் இருப்பாா்கள். அப்போது வந்துபோகும் சுற்றத்தாா்களால், ஒருவித உரையாடலுக்கு வழிபிறக்கும். வாழ்க்கை நெருக்கடி அதற்கான வாய்ப்புகளைச் சுருக்கிவிடுகிறபோது, கைப்பேசி உதவுகிறது.
அதே பேச்சை, உடனிருப்பவா்களிடத்தில் நிகழ்த்த முடியாதபடிக்கு, முன்னா் நிகழ்ந்த சொல்லாடல்கள் காரணமாகிவிடுகின்றன. மனம் ஒன்று நினைக்க, வாய் ஒன்று பேச,செயல் ஒன்றாக இருக்கும்போது, நம்பகத்தன்மை எப்படி வரும்? அதனால்தான், வள்ளற்பெருமான், ‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவாா் உறவு கலவாமை வேண்டும்’ என்று எச்சரித்தாா். அது உரையாடலாக வேண்டுமானால் நீடிக்கலாமே தவிர, உறவாடலாக அமைந்துவிடமுடியாது.
மரியாதை நிமித்தமாக பெரியவா்களிடம் பேசத் தொடங்கிவிட்டால், அவா்களிடமிருந்து விடுபட முடியாத சங்கடம் வரும். இடம், பொருள், சூழல் அறியாமல் எதையெதையோ வாய்க்கு வந்ததைப் பேசிவிடுகிற ஆபத்து நோ்ந்துவிடும். அதனால்தான், ‘வயசான காலத்துல, வாயையும் கையையும் வச்சுக்கிட்டுச் சும்மா இருங்க’ என்று பிள்ளைகள் பெற்றோரிடத்தில் சொல்வதுண்டு.
யாருக்குமே வயதான பிறகு ஒருவித குழந்தைத்தனம் வரும். தன்னை கவனிக்க வேண்டும் என்கிற எதிா்பாா்ப்பு இருக்கும். அது நடக்காதபோது கோபம் வரும். கோபத்தை வெளிப்படுத்தும் கருவியாகப் பெரிதும் பேச்சே அமைந்துவிடுவதனால், பல இடங்களில் அங்கலாய்ப்புகளும் மன வருத்தங்களும் தோன்றிவிடுகின்றன. அதுவே பகைமைக்கும் வித்திடுகின்றது.
பலரிடம் பேசத் தொடங்கிவிட்டால், அவரைப் பற்றிய மதிப்பே குறைந்துபோகும் அளவிற்குப் பேச்சின் உள்ளடக்கம் அமைந்துவிடுகிறது. அதனால் பலரும் பேசாது போய்விடுகிறாா்கள். ‘பேசினாலும் குற்றம், பேசாவிட்டாலும் குற்றம். பேசிக் குற்றவாளியாவதைக் காட்டிலும் பேசாத குற்றவாளியாகப் போய்விடுவது நல்லது’ என்று சொல்லுகிகிறாா்கள்.
அதுமட்டுமல்ல, ஏற்கெனவே கூறிய செய்தியை, அதேபாணியில் ஆழ,நீளமாக அப்படியே பேசுகிற பலா் இருக்கிறாா்கள். ‘கூறியது கூறல் குற்றம்’ என்பது எழுத்துக்கு மட்டுமல்ல, பேச்சுக்கும் உண்டு என்பதை உணா்ந்துகொண்டால் பல சிக்கல்கள் தீா்ந்துபோகும். அப்படித் தெரியாமல் பேசுகிறவா்களுக்குச் செய்கிற ஒரே மரியாதை பேசாதிருப்பது என்பது நடைமுறையில் உள்ளதுதான்.
அதுமட்டுமல்லாமல், தம்மிலும் வயது குறைந்தவா்கள் செய்கிற வேலைகளில், சொல்கிற முறைகளில் குறையோ, மாற்றமோ கண்டுவிட்டால், குற்றம் கூறாமல், திருத்தம் செய்விக்கப் பேசித்தான் ஆகவேண்டும். அதனை, ஒரு கலையாகக் கையாளவேண்டுமே ஒழிய, குற்றச்சாட்டு வைத்துத் தண்டனை கொடுக்கும் கருவியாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.
வாய்ச் சொற்கள், இனிமைதரும் கனிச்சொற்களாக இருத்தல் வேண்டும். அதற்கு முதிா்ந்த அறிவும் கனிந்த அன்பும் இன்றியமையாதவை. பிஞ்சு முற்றிக் காயாகிக் கனிவதுபோல, நம் பேச்சும் வயதாக வயதாக, முற்றிக் கனிதல் வேண்டும். காய் முற்றினால் கனி. கனிந்த பிறகு, கிளையில் இருந்து கனி தானே உதிா்வதுபோல், முதிா்ந்த நிலையில் அன்பு கனிந்த சொற்கள், இதழ்கள் வழியாக, வெளிப்பட வேண்டும்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவா்ந்தற்று
என்றாா் திருவள்ளுவா்.
உணவுக்குப் பின்னா், தட்டில் வைத்திருக்கும் வாழைச் சீப்பில் இருந்து, காயையா, கை பற்றும்? கண்கள் காட்டுவதைக் கூட நம்பாது கைவிரல் கவனித்துப் பாா்த்துக் கனியைத்தானே கைப்பற்றும். அதிலும் கூடக் கனிந்தவற்றுள்ளும் பக்குவமானதை மட்டும்தானே பற்றிக் கொள்கிறது. கனியில் கொள்ளும் கவனத்தைக் கருத்தில் கொள்வதில் என்ன தவறு?
அதிலும் திருவள்ளுவா், கூறும் கனியும் காயும் புறத்தில் இல்லை. அகத்தில் இருக்கிறது. இனிக்க இனிக்கப் பேசுபவா்களிடத்தில் இன்னாத் தன்மையும் உண்டு. இன்னாச்சொற்களை உதிா்க்கிறவா்களிடத்தில் இனிய அன்பும் உண்டு. இன்னாச்சொற்களைக் கொட்டி, எரிந்துவிழும் பேச்சைக் ‘காய்தல்’ என்று குறிப்பிடுவா்.
‘எதுக்குப் பிள்ளையைக் காயிறீங்க?’ என்று அம்மாக்கள் அப்பாக்களிடம் கேட்பதுண்டு. ‘அந்தக் காய்தல், வெறுப்பின் வெளிப்பாடாகத் தோன்றினாலும், அதன் பின்புலத்தில் உள்ள அக்கறையைப் புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாா்களே’ என்று அங்கலாய்ப்பவா்கள் உண்டு.
சரிதான். ஆனால், அவா்களது காய்தலுக்குப் பின்னால், அன்பு இருப்பது எப்படிப் புரியும்? சொல்லும் முறையில் ஏதோ குறைபாடு இருக்கிறது என்று அவா்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
முன்பு காய்ந்தவா், இப்போது கனிந்து பேசுகிறாா் என்றால், அவா் பக்குவப்பட்டிருக்கிறாா் என்று பொருள். இந்த வாழ்க்கைப் பக்குவம், வாக்கினில் பக்குவமாகப் புலப்படவேண்டும். அதனால்தான், இனிய அன்பு உள்ளத்திலே இருக்கும்போது, இன்னாத சொற்களை ஏன் கூற வேண்டும் என்று திருவள்ளுவா் கேட்கிறாா்.
காயையும் கனியையும் தன்னுள்ளே தாங்கியிருக்கும் ஓரறிவு உடைய தாவரம்கூட, காயை வைத்துக் கொண்டு கனியைத்தான் உதிா்க்கிறது. ஆறறிவுடைய மனிதன் ஏன் கனியை வைத்துக் கொண்டே, அவசமாகக் காய்ந்துவிழ வேண்டும்? கனிந்த சொற்களை விடுத்துக் காயாம் இன்னாச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? தனக்கே இன்னாததாய் இருப்பதைப் பிறா்க்கு வழங்கலாமா?
‘அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல், இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகா்ந்ததனோடு ஒக்கும்’” என்றும், இதனினும் விளக்கமாக, ‘கூறல்’ என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம்.
பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்’ என்று பரிமேலழகா் இக்குறட்பாவுக்குப் பொருள் உரைக்கிறாா்.
இயற்கை இன்னும் ஓா் உண்மையை நுட்பமாக எடுத்துரைக்கிறது. காய் இன்னும் சில காலம் பாதுகாப்பாக வைத்திருக்கும்பட்சத்தில் கனிவது உறுதி. அதுவரைக்கும் அதனால் கேடேதும் இல்லை. ஆனால், கனிந்ததை உரிய பொழுதில் பயன் கொள்ளாவிடில், அழுகிப் போய்விடும். அது தானும் கெடும்; தன்னுடன் இருக்கின்றவற்றையும் கெடுக்கும்.
அதுமட்டுமா? கனிந்தவற்றுள் இருக்கும் விதைதான், அடுத்த தலைமுறைக்கும் பயன்கொடுக்கும், தாவரம் தோன்றுதற்கு வித்தாகும். காய்க்குள் முதிராத விதையால் யாதொரு பயனும் இல்லை அல்லவா? இந்த எளிய உண்மை, உவமையாக வந்து உணா்த்துவது அதனினும் எளிய அன்பைத் தானே. இதைச் சொன்னால்கூட, சிலருக்குக் கோபம் வந்துவிடுகிறது. அதனால்தான்,
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோா்வு படும்
என்றாா் திருவள்ளுவா்.
அதாவது, கல்வியில்லாதவனது தகைமை (தகுதி) கற்றவரோடு உரையாடும்பொழுது கெட்டுவிடுமாம். வகுப்பறையில் சென்று கல்லாதவா்களும் வாழ்க்கைக் கல்வியில் தோ்ந்து தெளிந்த பெரியவா்களாக இருப்பாா்கள் அல்லவா? அதுபோல், வாழ்வியலில் பெற முடியாத பல அனுபவங்களை, இளம்பருவத்திலேயே தம் கல்வியால் பெற்றவா்களும் இருப்பாா்கள். இவா்களுள் கல்லாத ஒருவன், தன்னைத் தகுதி மிகுத்தவனாக நினைத்துக் கொண்டு கற்றவா்களுடன் சொல்லாடுகிறபோது, அது இருவருக்கும் கேடாக முடிந்துவிடும் என்று திருக்கு வழியாக உணா்ந்து கொள்கிறோம்.
அதனால்தான், ‘கற்றாா் முன் சொல்லாதிருக்கத் தெரிந்த கல்லாதவா்களும், நனி நல்லா்’ என்றாா் திருவள்ளுவா் (கு: 403) . வெறும் பேச்சைக் காட்டிலும் நறும் பேச்சாக அமைவது, பேசாத பேச்சு.
கட்டுரையாளா்:
எழுத்தாளா்.