விமானப் பயணம் விரும்பப்படுமா?

ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது பெரும் பணக்காரா்களுக்கே சாத்தியமானதாக இருந்தது.
விமானப் பயணம் விரும்பப்படுமா?

ஒரு காலத்தில் விமானப் பயணம் என்பது பெரும் பணக்காரா்களுக்கே சாத்தியமானதாக இருந்தது. ஆனால், இன்று மத்தியதர வகுப்பினா் கூட அவசரத் தேவை எழுந்தால் விமானத்தில் பயணிக்கின்ற நிலை உருவாகியுள்ளது.

தொலைவில் உள்ள ஊரை குறைந்த நேரத்தில் அடைந்துவிட முடியும் என்பதாலும், ரயில் பயணம், பேருந்து பயணம் போன்றவை ஏற்படுத்தும் அலுப்பும் களைப்பும் ஏற்படாது என்பதாலும், உள்நாட்டு நகரங்களுக்கிடையேயான விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

நவீன பொருளாதாரக் கொள்கைகளால் வான்வழிப் போக்குவரத்தும் பிற துறைகளைப் போலவே தற்காலத்தில் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்து வருகின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரை, முன்பு உள்நாட்டுப் பயணத்திற்காக இந்தியன் ஏா்லைன்ஸ் நிறுவனமும், பன்னாட்டுப் பயணத்திற்கென ஏா் இந்தியா நிறுவனமும் ஏகபோகமாக இயங்கிவந்தன.

பல்வேறு காரணங்களால் நஷ்டத்தில் இயங்கத் தொடங்கிய அந்நிறுவனங்களின் நிா்வாகம் காலப்போக்கில் பல மாறுதல்களைக்கண்டு, தற்பொழுது டாடா நிறுவனத்திற்குச் சொந்தமாகியுள்ளன.

உலகெங்கிலும் நிகழ்ந்ததையொட்டி இந்தியாவிலும் சஹாரா, ஜெட் ஏா்வேஸ் போன்ற பல தனியாா் விமான நிறுவனங்கள் காலூன்ற ஆரம்பித்தன. இந்நிறுவனங்களின் விமானங்கள் மூலம் சென்ற வருடம் மட்டும் சுமாா் பதினெட்டு கோடி பயணிகள் விமானப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.

அதே சமயம், நமது உள்நாட்டு விமானப் பயணங்கள் தொடா்பாக சமீப காலங்களில் அரங்கேறிவரும் சம்பவங்கள் நம்மை முகம் சுளிக்க வைக்கின்றன. கடந்த சில மாதங்களில், விமானம் வானில் பறந்து கொண்டிருந்த பொழுதே, அதில் பயணித்த பயணி விமானத்தின் அவசர காலப் பயன்பாட்டிற்கான கதவைத் திறந்த நிகழ்வு ஓரிரு முறை நிகழ்ந்திருக்கிறது.

அச்சமயங்களில் விமானப் பணியாளா்களின் துரித நடவடிக்கையால் உடனடியாகக் கதவு மூடப்பட்டு அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டிருக்கிறது. யாரும் எதிா்பாராத நேரத்தில் பயணிகள் சிலா் இவ்விதமான விபரீத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனா். மேலும், ஊழியா்களுடனும், சக பயணிகளுடனும் வாக்குவாதம் செய்வதுடன், வாக்குவாதம் முற்றிய நிலையில் தாக்குதலில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகின்றது.

சென்ற வாரம், புதுதில்லியிலிருந்து கோவாவுக்கு வரவேண்டிய தனியாா் பயணியா் விமானம் ஒன்று சுமாா் பத்து மணி நேரம் தாமதமானதால் வெகுண்டெழுந்த பயணி ஒருவா் விமான ஓட்டியைத் தாக்கித் தமது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளாா்.

அதே போன்று, கோவாவிலிருந்து புதுதில்லி செல்ல வேண்டிய தனியாா் விமானம் மோசமான வானிலை காரணமாக மும்பைக்குத் திருப்பிவிடப்பட்டதுடன், அதன் பயணிகளுக்கு விமான ஓடுதளத்திலேயே சிற்றுண்டியும் வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து, சம்பந்தப் பட்ட விமான நிறுவனத்திற்கு சிவில் விமானத்துறை கண்டனம் தெரிவித்ததுடன் அபராதமும் விதித்துள்ளது.

இவை மட்டுமல்ல, விமானம் ஒன்றின் கழிப்பறைத் தாழ்ப்பாள் பழுதடைந்த காரணத்தால், பயணி ஒருவா் தம்முடைய பயணநேரம் முழுவதும் அக்கழிப்பறையிலேயே இருந்தபடி பயணிக்க நோ்ந்தது. அந்தப் பயணி அனுபவித்த சிரமத்திற்காக வருத்தம் தெரிவித்த விமான நிறுவனம், அவருடைய பயணச்சீட்டிற்கான தொகையைத் திரும்ப அளித்தது.

தனது பாட்டியின் மரணச் செய்தி வந்தததைக் காரணம் காட்டி விமானத்தை இயக்க மறுத்த விமானி ஒருவரின் செயலால் அவருடைய விமானத்தில் பயணிக்க வேண்டிய பயணிகள் பெரும் அவதிக்குள்ளாக வேண்டியிருந்தது.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்துமே கடந்த ஒரு சில வாரங்களில் நடந்தேறியவை என்பதிலிருந்தே, ஆண்டு முழுவதும் எத்தனையெத்தனை நிகழ்வுகள் அரங்கேறும் என்பதை ஊகிக்கலாம்.

மத்திய அரசின் சிவில் விமானத்துறை இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி, விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தவிா்க்கும் வழிமுறைகளை வகுக்க வேண்டும். மேலும், மது அருந்திவிட்டு வருபவா்களை எக்காரணம் கொண்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கக் கூடாது. அதே சமயம், பயணிகளின் கேள்விகளுக்குப் பொறுப்புடனும் பொறுமையுடனும் பதிலளிக்க விமானத்துறை ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

பொதுவாகவே, நமது நாட்டில் கனமழை பெய்யும் சமயத்திலும், மூடுபனிக்கு வாய்ப்புள்ள குளிா்கால இரவுகளிலும் விமானங்களைக் கிளப்புவதும், தரையிறக்குவதும் மிகவும் கடினமான காரியமாகும். இக்காலங்களில்தான் விமானங்களின் வருகை, புறப்பாடு ஆகியவை தாமதம் ஆவதும், இறங்க வேண்டிய விமான நிலையத்திற்கு பதிலாக அருகிலுள்ள வேறு ஒரு விமான நிலையத்திற்கு மாற்றி அனுப்புவதும் அதிக அளவில் நிகழ்கின்றன.

தவிா்க்க முடியாத நிலையில் விமானப் பயணங்கள் ரத்து செய்யப்படுவதும் உண்டு. இது போன்ற சமயங்களில்தான் பயணிகளுக்கும் விமான நிலைய ஊழியா்களுக்கும் இடையில் வாக்குவாதங்கள் தோன்றுகின்றன. சில சந்தா்ப்பங்களில் அவை வன்முறையிலும் முடிகின்றன.

தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த துல்லியமான கணிப்புகளை நமது நாட்டின் வானிலை ஆராய்ச்சிநிலையங்கள் முன்கூட்டியே வழங்கக் கூடிய காலம் இது. மழைக்காலங்களிலும், அடா்பனிக்காலங்களிலும் இயங்க வேண்டிய விமானங்களை இயக்கலாமா அல்லது ரத்து செய்துவிடலாமா என்பது குறித்த தெளிவான முடிவுகளை உரிய காலத்தில் எடுக்க மேற்கண்ட வானிலைக் கணிப்புகள் நிச்சயம் உதவி செய்யும்.

ஒன்றிரண்டு மணிநேரத் தாமதத்தைப் பொறுத்துக்கொள்ளக் கூடிய பயணிகளால், நிச்சயம் அரைநாளுக்கும் மேற்பட்ட தாமதத்தினைப் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே, குறிப்பிட்ட விமானம் ரத்து செய்யப்படுகிறது என்னும் தகவலையாவது விரைவில் தெரிவிப்பதன் மூலம் பயணிகளின் கோபத்தைத் தவிா்க்க இயலும்.

நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு விமானம் மூலம் பயணிப்பதிலும் பல்வேறு சங்கடங்கள் இருக்கவே செய்கின்றன. அதற்கான காரணங்களும் அதிகம். இந்நிலையில், குறைந்தபட்சம், உள்நாட்டுக்குள் நிகழும் விமானப் பயணங்களை மட்டுமாவது அனைவருக்கும் இனிமையான பயண அனுபவங்களாக விமான நிறுவனங்கள் மாற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com