ஸ்ரீராமன் அனைவருக்கும் சொந்தமானவன்! 

எனக்கு இப்போது 97 வயது. 1942-இல் எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது, மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் மூலமாக அரசியலில் கால் பதித்தேன்.
ஸ்ரீராமன் அனைவருக்கும் சொந்தமானவன்! 

எனக்கு இப்போது 97 வயது. 1942-இல் எனக்குப் பதினாறு வயதாக இருக்கும்போது, மகாத்மா காந்தியின் அறைகூவலை ஏற்று "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் மூலமாக அரசியலில் கால் பதித்தேன். அப்போது, இந்தியாவில் "ராமராஜ்யம்' அமைய வேண்டும் என்று மகாத்மா காந்தி சொன்னார். அதன் பொருள், அரசுக்கும் குடிமக்களுக்கும் ஆதாரமான அறம், ஒழுக்கம், நீதி ஆகிய ஆதர்ஷ கோட்பாடுகளை நாடு கொண்டிருக்க வேண்டும் என்பதே.

ராமாயணம், வெறும் புராணக் கதையோ, காப்பியக் கவிதையோ மட்டுமல்ல; ஸ்ரீராமன் கடவுளாகவும் மனிதனாகவும் ஒரே நேரத்தில் காட்சி தருபவன்.
"ராமாயணம் ஒரு சமயத்தில் வரலாறாக இருக்கிறது. இன்னொரு சமயத்தில் புராணமாகவும், இணையற்ற உயர்ந்த இலக்கியமாகவும் விளங்குகிறது; உச்சபட்சக் கலையழகுடனும், பிரம்மாண்டமான நாடகீயத் தருணங்களுடனும் அது இலங்குகிறது'  என்று மகரிஷி அரவிந்தர் கூறுவார்.

"ஆதிகவி' என்று போற்றப்படும் வால்மீகி மகரிஷி, இந்தப் புண்ணிய பூமியின் பல்வேறு மொழிகளிலும் மிளிர்ந்த கவிஞர்களுக்கு உத்வேகமூட்டுபவராக இருந்துள்ளார். தமிழில் கவிச்சக்கரவர்த்தி கம்பர், வால்மீகி ராமாயணத்தை அடியொற்றி ஆறு காண்டங்களுடன்  "இராமாவதாரம்' என்ற தனது காப்பியத்தை அரங்கேற்றினார். அது முன்னுதாரணமான தமிழ் இலக்கியமாகப் போற்றப்படுகிறது.

கம்பரின் ராமாயணத்தைப் படித்து அதன் காவியச்சுவையை உணர்ந்த பலர் அதன் கவித்துவ அழகிலும், கற்பனைத் திறத்திலும் மயங்கி இருக்கின்றனர். தமிழகத்தின் மிகச் சிறந்த தேசபக்தரும் புரட்சியாளருமான வ.வே.சு.ஐயர், "கம்பரின் ராமாயணம் வால்மீகி ராமாயணத்தை விட தனித்தன்மை மிகுந்தது' என்று பாராட்டி இருக்கிறார்.

மாபெரும் இதிகாசமான மகாபாரதத்துடன் கம்பராமாயணத்தை இணை வைக்கலாம் என்றும்கூட வ.வே.சு.ஐயர் கூறுவார். அதுமட்டுமல்ல, "உலக மகா காவியங்களாகப் போற்றப்படும் ஹோமரின் இலியட், வர்ஜிலின் ஆனைடு, மில்டனின் பாரடைஸ் லாஸ்ட் ஆகியவற்றை விஞ்சி நிற்பது கம்பரின் படைப்பு' என்பார் அவர்.

அதனால்தான், நமது காலத்தின் மிகச்சிறந்த மனிதர்களுள் ஒருவரான மூதறிஞர் ராஜாஜி, ராமாயணத்தை உரைநடையில் தீட்டி மகிழ்ந்தார்; அது மட்டுமல்ல, கம்பராமாயணத்தின் அயோத்தியா காண்டத்தை மட்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதனை சாகித்திய அகாதெமி வெளியிட்டது.

அந்நூலின் முகவுரையில், "இந்த மண்ணில் மானுடனாக அவதரித்து வாழ்வின் துயரங்களைத் தானும் ஏற்று,  உயரிய வாழ்க்கையை  உலகிற்கு உணர்த்திய ஸ்ரீராமனின் கதையை கம்பர் பாடியிருக்கிறார். ராமனை நாயகனாக முன்னிறுத்துவதில் கூட வால்மீகிக்கும் கம்பருக்கும் இடையே வேறுபாடு காணப்படுகிறது. வால்மீகியின் ராமாயணம் காவியத்தன்மை கொண்டது. கம்பரின் ராமாயணமோ கவித்துவமானது. பட்டை தீட்டிய வைரத்தின் ஒவ்வொரு முகப்பும் ஒளிர்வது போல, கம்பரின் கவிதைகள் மின்னுகின்றன. வால்மீகியின் படைப்பில் காணப்படும் துயர சோபை கம்பரின் காப்பியத்தில் காணப்படுவதில்லை' என்று ராஜாஜி எழுதி இருக்கிறார்.

மேலும் அவர், "கம்பனின் காப்பியத்தில் உள்ள பல கவித்துவ வரிகளை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்ய இயலவில்லை. அவர் கூறியுள்ள கவிதையின் உட்பொருளை மட்டுமே என்னால்  மொழிபெயர்க்க முடிந்தது' என்று தனது முகவுரையில் கூறியிருக்கிறார். ஆகவே, தமிழர்களுடன் அயோத்தி ராமனுக்கு ஆழமான பிணைப்பு இருப்பது தெளிவாகிறது.
நமது நாட்டின் கலாசார நெறிமுறைகளின் உருவாக்கத்தில் ஸ்ரீராமனுக்குப் பெரும் பங்குண்டு.  ஏனெனில், நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் மதித்துப் பின்பற்றும் நாயகராக ஸ்ரீராமன் இருக்கிறார்.  அவர் கடவுளின் அவதாரம் என்பதாலோ, தெய்வீகத் தன்மை கொண்டவர் என்பதாலோ அல்ல, வாழ்க்கையின் கடினமான காலங்களை எதிர்கொண்டபோதும் கருணையுள்ளவராக அவர் திகழ்ந்தார் என்பதால்தான், மக்கள் அவரைப் போற்றுகின்றனர்.

இங்கு சிலர், "தமிழ்நாட்டிற்கும் ஸ்ரீராமனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' என்று கூறுவது கிறுக்குத்தனமான வாதமாகும். நம் மாநிலத்தை ஆண்ட எம்.ஜி. ராமசந்திரனின் பெயரிலேயே ராமன் இருக்கிறார். அவரது அமைச்சரவையில் பணிபுரிந்தவன் நான். அவர் அதிதீவிர ராமபக்தர் என்பதை நான் நன்கு அறிவேன்.

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் "ஸ்ரீராமன் உலகம் முழுவதற்கும் சொந்தமானவன்' என்று அடிக்கடி குறிப்பிடுவார். இந்தியா மட்டுமல்லாது, நமது தேச எல்லையைத் தாண்டியும் பல்வேறு நாடுகளில், பல்வேறு உலக மொழிகளில் ராமாயணத்தின் பல வகை பிரதிகள் படிக்கப்படுகின்றன.
ஆசிய நாடுகளின் சமயப் பாரம்பரியங்களிலும் கலாசார அம்சங்களிலும் ராமாயணம் பெரும் தாக்கம் செலுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளில் ராமாயணத்தின் மாறுபட்ட வடிவங்கள் இருந்து வருவதை இங்கே சில உதாரணங்களில் காணலாம்:

1. இந்தோனேசியாவில் ராமாயணத்திற்கு செழுமையான பாரம்பரியம் உள்ளது. அங்கு  "ராமாயணா பெல்லட்' என்று ராமாயணம் அழைக்கப்படுகிறது. அங்குள்ள ஜாவா தீவுகளில் பாரம்பரியமாக நடைபெறும் நாட்டிய  நாடகத்தின் மூலக்கருவாக "ராமாயணா பெல்லட்' திகழ்கிறது. அந்நாட்டில் மிகவும் போற்றப்படும் இலக்கியக் கருவூலமாக அந்நூல் விளங்குகிறது.

2. ஜப்பானில் ராமாயணம், "ராமா-டென்' என்று அழைக்கப்படுகிறது. பாரதத்திலிருந்து சென்ற பௌத்தத் துறவிகளால் ராமாயணம் அங்கு பரவியது. இதன் மாறுபட்ட வடிவங்கள் ஜப்பானிய இலக்கியத்திலும் நிகழ்த்துக் கலைகளிலும் விரவிக் கிடக்கின்றன.

3.  சீன இலக்கியம், நாடகம், கலைகளிலும் ராமாயணத்தின் செல்வாக்கு உள்ளது. அங்கு ராமாயணம் "லுவோ மா ஜிங்' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சீன நாட்டுப்புறப் பாடல்களிலும் ராமாயணக் கதையின் மாறுபட்ட வடிவங்கள் காணப்படுகின்றன.

4. தாய்லாந்து நாட்டில் தேசிய காப்பியமாகப் போற்றப்படும் "ராமாகீன்' ராமாயணத்தின் மற்றொரு வடிவமே. தாய்லாந்து கலாசாரத்திலும், கட்டடக் கலையிலும் "ராமாகீன்'  பெரும் தாக்கம் செலுத்துகிறது.

5. கொரியாவில் ராமாயணம் "சாம்குக் யுசா' என்று அழைக்கப்படுகிறது. உள்ளூர் வரலாறு, புராணக் கதைகள், ராமாயணத்தின் திரிபுகள்ஆகியவை கலந்ததாக கொரிய நாட்டுப்புற இலக்கியம்  காணப்படுகிறது.

6. ரஷியாவில் ராமாயணம் பரந்த அளவில் அறியப்படாத போதும், ருஷ்ய மொழியில் ராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அந்நாட்டு இலக்கியத்தில் ராமாயணத்திற்கும் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

7. வியத்நாம் நாட்டின் பண்பாட்டு உருவாக்கத்திலும் ராமாயணம் பெரும் தாக்கம் செலுத்துகிறது. அங்கு நிகழ்த்தப்படும் பொம்மலாட்டக் கலைகளில் ராமாயணத்தின்  வியத்நாம் வடிவமான "ட்ரூயென் கியூ' மூல ஆதாரமாக இருந்து வருகிறது.

8. மங்கோலியாவில் "தாரி ராமா' என்ற பெயரில் ராமாயணத்தின் வேறுபட்ட வடிவம் புழக்கத்தில் உள்ளது. ராமாயணக் கதைகளும் உள்ளூர் நாட்டுப்புறப் பாடல்களும் கலந்த மங்கோலியக் காப்பியமாக அது கருதப்படுகிறது.
எனவே, ராமாயணம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்குமே பொதுவானது. ஸ்ரீராமரும் உலக மாந்தர் அனைவருக்கும்  உரியவர். எனவே, அவரது ஜன்மபூமியான அயோத்தியில் பிரம்மாண்டமான ஆலயம் அமைந்துள்ள சூழலில், அங்கு இன்று (ஜனவரி 22) நிகழவுள்ள பாலராமர் சிலை பிராண பிரதிஷ்டை விழாவை  எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்திருப்பது வரலாற்றுத் தவறாகும்.  

பலகோடி ராமபக்தர்களின் பல்லாண்டு கால எதிர்பார்ப்பும், பக்திபூர்வமான நம்பிக்கையும் நிறைவேறும் தருணத்தில், அதனை மதித்து நடப்பதே அரசியல் கட்சிகளுக்கு அழகு. கடந்தகாலத் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரமிது. இத்தகைய சமயத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் தவறான முடிவால் அருவருப்பான நடத்தையையே வெளிப்படுத்துகின்றன. இந்த முடிவால் எதிர்கால இந்திய அரசியலில் ஒரு மூலைக்கு அவை தள்ளப்பட இருக்கின்றன.

ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா என்பது ஒரு வரலாற்று நிகழ்வு. பிற்காலத்தில் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கும்போது, இவ்விழாவில் பங்கேற்காமல் புறக்கணித்தவர்களை காலமும் புறக்கணிக்கும். ஜம்மு - காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-ஆவது பிரிவு நீக்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகள் தவறான நிலைப்பாட்டையே எடுத்தன. அயோத்தி விஷயத்திலும் மீண்டும் அவை தவறான திசையிலேயே செல்கின்றன.

"பாறைகள் பழையவையாக இருக்கலாம், சிற்பியின் உளியால் அவை புத்திளமை கொண்ட சிலைகளாகின்றன; நாகரிகம் மிகப் பழைமையானதாக இருக்கலாம், ஆனால் அது மீண்டும் பிறக்கிறது; மக்கள் மிகவும் இளையவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் எதையும் மறக்க மாட்டார்கள்; ஒவ்வோர் ஆண்டும் மற்றோர் ஆண்டு போலவே இருக்கலாம், ஆனால் அது புதிய தொடக்கத்தின் அடையாளமாகும்' என்ற வாசகத்தை எதிர்க்கட்சிகளுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கட்டுரையாளர்:
முன்னாள் அமைச்சர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com