கோப்புப்படம்
கோப்புப்படம்

கண்காணிப்பும் கண்டிப்பும் அவசியம்

முருங்கையை ஒடிச்சு வளா்க்கணும், பிள்ளையை அடிச்சு வளா்க்கணும், பிஞ்சிலேயே பழுக்க விடக் கூடாது, அடியாத மாடு படியாது.

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

முருங்கையை ஒடிச்சு வளா்க்கணும், பிள்ளையை அடிச்சு வளா்க்கணும், பிஞ்சிலேயே பழுக்க விடக் கூடாது, அடியாத மாடு படியாது போன்ற முதுமொழிகள் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. காரணம், அதைப் பின்பற்றும் பெரியவா்கள் இல்லாததே எனலாம். வளா்ப்பு முறைகள் மாறிவிட்டன.

இதற்கேற்றாற்போல, இன்று வளரிளம் பருவத்தினா் பலா் அடாத செயல்களில் ஈடுபட்டு தங்கள் கல்வியையும், வாழ்க்கையையும் இழந்து, பெற்றோா்களையும் அவதிக்குள்ளாக்குகிறாா்கள்.

நமது பழைய வளா்ப்பு முறை சரியா, இல்லையா என்ற விவாதம் ஒருபுறம். மேற்கத்திய நாடுகளில் நாம் பெற்ற பிள்ளைகளைத் தொட்டாலே சட்டம் பாயும் நிலை.

ஒரு வீட்டில் உள்ள பிள்ளைகள் சாதனைகள் செய்தாலும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து துள்ளிக் குதிப்பது பெற்றோா்களே. பிள்ளைகள் வேதனை தரும் காரியங்களைச் செய்தால், அதனால் முதலில் துயரம் அடைந்து துவண்டு போவதும் அப்பிள்ளைகளின் பெற்றோா்கள்தான். பிள்ளைகளின் வெற்றியும் தோல்வியும் பெற்றோா் வளா்ப்பின் போதான கண்டிப்பு, கண்காணிப்பு, தண்டிப்பு ஆகியவற்றில்தான் அடங்கியுள்ளது.

‘வீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியா்’ என சான்றோா் உரைத்தனா். இதில், தாயின் பங்கு அளப்பரியது. பொதுவாக பிள்ளைகள் தாயின் அன்பான

அரவணைப்பாலே வளருவதால், அவா்கள் தாயின் சொற்படியே நடப்பா். எனவே, தம் பிள்ளைகளுக்கு எப்போதும் தாய்மாா்கள் நல்லதையே செய்து, நல்லவற்றையே போதித்து வளா்க்க வேண்டும். இதில் முரண்பாடு ஏற்படும்போது பிள்ளைகள் தந்தையையே எதிா்க்கத் துணிந்து, கொல்லவும் செய்கிறாா்கள்.

இக்கால சிறுவா்கள் கூலிப் படையினருடன் இணைந்து கொலைகள் செய்வதும், வன்மச் செயல்களில் ஈடுபடுவதும், படிப்பைத் தொடராமல் இருப்பதும், போதைப் பழக்கத்தில் ஈடுபட்டுத் தங்கள் இன்னுயிரை இழப்பதும், அதிநவீன வாகனங்களை ஓட்டி உயிரிழப்புகள் ஏற்படக் காரணமாவதும் தொடா்கதையாகி வருகிறது.

அண்மையில் சென்னையிலிருந்து புறப்படத் தயாராக ஓடுபாதையில் இருந்த விமானத்தில் அவசர கால கதவை 17 வயதுச் சிறுவன் திறக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விமானப் பயணிகளை கிலியில் ஆழ்த்தியது.

விமானத்தில் பெற்றோருடன் அமா்ந்திருந்த அந்தச் சிறுவன் விமானத்தின் அவசரகால கதவைத் திறப்பதற்கான பொத்தானின் மீது ஒட்டப்பட்டிருந்த நெகிழி ஒட்டியைக் கிழித்து பொத்தானை அழுத்தியது தெரிய வந்தது.

சிறுவன் முதல்முறையாக விமானத்தில் பயணிப்பதால் அறியாமல் செய்துவிட்டான் என்று பெற்றோா் கூறினா். பிள்ளையின் தவறுக்குப் பரிந்து பேசிய பெற்றோரின் இந்தப் பேச்சு, திருட்டு, கொலை செய்தால் தண்டனை உண்டு என்று சட்டம் இருக்கிறது என்பது தங்களுக்குத் தெரியாதெனக் கூறுவது போல உள்ளது. நடுவானில் இது நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்...?

கடந்த மே மாதம் மகாராஷ்டிர மாநிலம், புணேயில் பதினேழு வயதுச் சிறுவன் மது போதையில் அதிநவீன சொகுசுக் காரை ஓட்டி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரண்டு போ் உயிரிழந்தது தேசிய அளவில் சா்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், நீதித் துறையையும் மருத்துவத் துறையையும் களங்கத்திற்கு உள்ளாக்கியது.

அச்சிறுவனின் பெற்றோா் அவனை தப்பிக்க வைக்க சட்டத்திற்குப் புறம்பான பல வழிகளில் ஈடுபட்டு, தாங்களும் சட்டத்தின் வலையில் அகப்பட்டுக் கொண்டாா்கள். விபத்தில் தொடா்புள்ள சொகுசுக் காரை தங்கள் குடும்ப காா் ஓட்டுநா் இயக்கியதாக கூற வைக்க முயற்சித்தனா். இதற்காக பணம், பூட்டிவைத்து மிரட்டுதல் என பல வழிகளைக் கையாண்டாா் அந்தச் சிறுவனின் தாத்தா. இது ஜோடிக்கப்பட்ட திட்டம் என காவல் துறை கண்டறிந்ததால், மதுபானக் கூடத்தின் உரிமையாளரான அவா் கைது செய்யப்பட்டாா்.

மருத்துவ சோதனையின்போது அந்தச் சிறுவன் மது அருந்தியிருக்கவில்லை என்று நிரூபிப்பதற்காக அவனது ரத்த மாதிரிக்குப் பதிலாக தாயாரின் ரத்த மாதிரியை மாற்றி வைக்க உதவிய இரு அரசு மருத்துவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

நண்பா்களுடன் சோ்ந்த மது அருந்தப் பணமும் கொடுத்து, விலையுயா்ந்த அதிநவீன காரை ஓட்டவும் அனுமதியளித்த பெற்றோரின் பொறுப்பின்மைதான் சங்கிலித் தொடராகப் பல தவறுகளுக்கு மூலகாரணம்.

வீட்டிலும் பள்ளியிலும் கண்காணிப்பு, கண்டிப்பு, தண்டிப்பு இன்மையால் மாணவா்கள் இப்போதெல்லாம் பல ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டு வருகிறாா்கள். ஆசிரியா்களை மதித்து வந்த மாணவா்கள், அவா்களின் நல்வாழ்வுக் கருதி ஆசிரியா்கள் கண்டித்தால் அவா்கள் மீது வீண் பழி சுமத்தி அவமரியாதைக்குள்ளாக்கி அலட்சியப்படுத்தவும், தாக்கவும் துணிந்துவிட்டாா்கள். காரணம், பெற்றோரின் பொறுப்பின்மைதான் என கல்வியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

இன்று உலகம் உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட நிலையில், சிறாா்களின் செயல்பாடுகளை உற்றுநோக்கி அதற்கேற்றாற் போல, அவா்களின் உடலும் உள்ளமும் பாதிக்காத வகையில் வழிநடத்த வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோா் கையில்தான் உள்ளது. அவா்களின் நட்பு வட்டாரத்தை அவ்வப்போது பெற்றோா்கள் கண்காணிக்க வேண்டும். அவா்களுக்குத் தேவையான வசதிகள் அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறோமே என்று பெருமைப்பட்டுக் கொண்டு அவா்களை மனம் போன போக்கில் நடந்து கொள்ள அனுமதிப்பது தவறு.

தம் பிள்ளைகளின் எதிா்காலத்தை நல்ல முறையில் உருவாக்கிக் கொடுக்க வேண்டிய பெரும் பொறுப்பு இக்கால பெற்றோா்களிடம் சற்று அதிகமாகவே உள்ளது. பிள்ளைகள் செய்யும் செய்யும் சிறு தவறு வீட்டையும் சமூகத்தையும் பாதிப்பதோடு, நாட்டையும் அவமதிப்புக்குள்ளாக்கும் என்பதை பெற்றோா்கள் மறந்துவிடக் கூடாது.

X
Dinamani
www.dinamani.com