சுடச்சுட

  

  பாறைகளில் பலவிதம். அதை மனிதன் பயன்படுத்தும் விதம் வெவ்வேறானவை. அதுபோல, தஞ்சாவூர் - திருச்சி சாலையில் உள்ள வல்லத்தில் கிடைக்கும் பாறைகள் வித்தியாசமானவை.

     காவிரி டெல்டாவில் இது ஒரு வித்தியாசமான பகுதி. டெல்டாவில் மிகவும் உயரமான பகுதியும் இதுவே. வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுப்பகுதியில் காணப்படும் மண் 'லேட்ரைட்' எனப்படும் சிவப்புக் கப்பிக்கல் வகையைச் சார்ந்தது. இதை வல்லம் பகுதியில் செம்பாறங் கல் எனக் கூறுகின்றனர்.

     இதைக் கட்டடக் கற்களாக வடிவமைத்து வல்லம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வீடுகள், கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

     இந்தக் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட கட்டடத்தில் கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் தெரியாது. வெளியில் வீசும் வெப்பக் காற்றை இந்தக் கல் உள்ளே விடாது. அதேபோல, உள்ளே உள்ள குளுமையான காற்றும் வெளியே செல்லாது.

  ஏறத்தாழ குளிரூட்டப்பட்ட (ஏ.சி.) அறையில் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். மழைகாலத்திலும், குளிர்காலத்திலும் வெளியே எவ்வளவு குளிர் இருந்தாலும், இந்தக் கட்டத்துக்குள் கதகதப்பாகத்தான் இருக்கும். தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப மாறக் கூடிய இந்தக் கற்களால் கட்டப்படும் வீடுதான் உண்மையான பசுமை இல்லம்.

     இந்தக் கற்களைப் பயன்படுத்தி கட்டப்பட்ட சுவரில் ஆணி கூட அடிக்க முடியாது. அந்த அளவுக்குக்குக் கடினமாக இருக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

     இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழக நில அறிவியல் துறை இரா. பாஸ்கரன் தெரிவித்தது:

     'இதன் அடிப்படையை ஆய்வு செய்யும்போது, பண்டைய காலத்தில் டெல்டாவில்  மற்ற பகுதிகளில் இருந்த பாறைகள் தண்ணீரில் அடித்து சென்றன. வல்லம் சுற்றுப்பகுதிகளில் மட்டும் பாறைகள் தண்ணீரில் அடித்துச் செல்லாமல் படிந்துள்ளன என்பது தெரிகிறது.

      இந்த பாறைகள் உடைந்து, சிதைந்து அதில் உள்ள வேதிப்பொருள்கள் வெளியேறிய பிறகு மிச்சமுள்ள பொருள்கள்தான் இந்தச் சிவப்புக் கப்பிக்கல். இது, சிகப்பு நிறத்தில் சிறு, சிறு உருண்டைகளாக இருக்கும். இதில், இரும்புத் தன்மை 48 சதம்தான் இருக்கும்.

      பலத்த மழை பெய்யும்போது அக்கற்களில் உள்ள இரும்பும் கரைந்து நிலத்துக்குள் செல்லும். இதில், தேவையில்லாத மூலப்பொருள்கள் தண்ணீரில் கரைந்துவிடும். சிறு, சிறு துவாரம் வழியாக மேல் நோக்கி வரும்போது சிறு, சிறு உருண்டைகளாக உருவாகின்றன. தொடர்ந்து, ஹைட்ரைடு அயர்ன் ஆக்ஸைடு செறிவூட்டப்பட்டு சிவப்புக் கப்பிக் கற்களாக மாறுகின்றன.

      இந்தச் சிவப்புக் கப்பிக்கல் ஈரமாக இருக்கும்போது துண்டுத் துண்டாக வெட்டலாம். அந்தத் துண்டுகள் காய்ந்த பிறகு அவற்றை உடைக்க முடியாது. சுத்தியால் அடித்தால் கூட உடையாது.

      அதன் தன்மை உணர்ந்த முன்னோர்கள் அதைக் கட்டடம் கட்டப் பயன்படுத்தியுள்ளனர். இது, மிகச் சிறந்த இயற்கையான கட்டடக் கல்' என்றார் பாஸ்கரன்.

     இதுபோன்ற கற்கள் மேற்கு தொடர்ச்சி மழையிலும, கிழக்குத் தொடர்ச்சி மழையிலும் உள்ளன. நீலகிரி, கொல்லிமலை உள்ளிட்ட மலைப் பகுதி மக்கள் இந்தக் கற்களைப் பயன்படுத்தித்தான் வீடுகளைக் கட்டுகின்றனர். பண்டைய கிரேக்க நாகரிகத்திலும் இந்தக் கற்களைப் பயன்படுத்தி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

     மற்ற கற்களில் இரும்பு அதிகமாக இருக்கும். இதனால், வெப்பமும், குளிரும் அதிகமாகத் தெரியும். ஆனால், வெப்பமும், குளிரும் தெரியாத சிவப்புக் கப்பிக் கல்லை நாம் விரயம் செய்து கொண்டிருக்கிறோம்.

     இந்தக் கற்களால் கட்டப்பட்ட வீடுகளில் சுவர் சொரசொரப்பாக இருக்கும். பார்ப்பதற்கும் அழகாக இருக்காது. எனவே, சிமென்ட் கலாசாரம் வந்த பிறகு இந்தக் கற்களை யாரும் விரும்புவதில்லை.

     வல்லம், சுற்றுப் பகுதிகளில் கட்டப்பட்ட இந்த வீடுகள் இப்போது சிமென்ட் கட்டடங்களாக மாறிவிட்டன. சில வீடுகள் சிவப்புக் கப்பிக் கற்களால் கட்டப்பட்டிருந்தாலும், அதன் மீது சிமென்ட் கலவையை பூசப்பட்டுள்ளன. இதனால், அதன் இயல்புத்தன்மை இருப்பதில்லை.

     ஏறத்தாழ 40 ஆண்டுகளாக செம்பாறங் கற்களால் வீடு கட்ட யாரும் விரும்பாததால், அக்கற்களைத் தயாரிப்பதற்கான ஆள்களும் இப்போது இப்பகுதியில் இல்லை என்றனர் கட்டுமானத் தொழிலாளர்கள். 

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai