Enable Javscript for better performance
தர்மத்தின் பாதையில் ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு என்ன? - பாகம் -2- Dinamani

சுடச்சுட

    

    தர்மத்தின் பாதையில் ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு என்ன? - பாகம் -2

    By சோமசுந்தரம்  |   Published on : 10th May 2015 06:29 PM  |   அ+அ அ-   |    |  

    HC jaya

    தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு கடந்த 19 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் நாளை தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற பதபதைப்பு ஏறத்தாழ அனைவரிடத்திலுமே இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை. இருந்த போதும் தர்மம் வெல்லும் என்று எதிர்க்கட்சியினர் சார்பில் ஒலிக்கும் குரலும் இன்னொரு பக்கம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்று அதிமுகவினர் தரப்பு குரலும் ஒலிக்க கேட்கும் போது, எது தர்மம் என புரியாமல் தலையை பிய்த்துக்கொள்ளும் சாமானியக் கூட்டம் நாளை தீர்ப்பு வரட்டும் அடுத்த தேர்தலில் வைத்துக் கொள்கிறோம் என்று கர்ஜிக்கிறது.

    இது ஒருபுறம் இருக்க, இந்த வழக்கில் 19 ஆண்டுகளாக என்னென்ன  நடந்தது என்பதை நீங்கள் அறிய தந்து கொண்டுடிருகிறோம். நேற்று  நீதிபதி பாலகிருஷ்ணா முன் நான்கு நாட்கள் வாதம் செய்த அரசு வழக்கறிஞர், வழக்கு தொடர்பான ஆவணங்களைப் படிக்காமலும் முழுமையாகத் தெரிந்துகொள்ளாமலும் வாதம் செய்தாரா அல்லது வழக்கை தாமதப்படுத்தும் உள்நோக்கத்தில் செயல்படுகிறாரா என்று சந்தேகம் வருகிறது. 

    ஆகவே, வெள்ளிப் பொருட்களை கொண்டுவர வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அல்லது நீதிமன்றத்துக்கு உகந்ததாகக் கருதப்படும் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்குப் பதில் அளித்த அரசு வழக்கறிஞர் பவானி சிங் எனக்கு முழு விவரம் தெரியாது என்றார். இதையடுத்து இந்த மனு மீதான ஆட்சேபணையை பிப். 6 -ம் தேதிக்கு தாக்கல் செய்யலாம் என்று அரசு மற்றும் ஜெ தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி உத்தரவிட்டார் என்று பார்த்தோம். இனி...

     

    jaya-sasi.jpg 

    ஜெயலலிதா தர்ப்பு வழக்கறிஞர் குமார், நீதிமன்றத்தில் மார்க் செய்யாத 149 நினைவு பரிசுப் பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதைத் திருப்பித்தர வேண்டும் என தாக்கல் செய்த மனுவும், மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் தரப்பில், சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடைவிதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் பிப்ரவரி 6-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணை முடிந்து விட்டது. இறுதித் தீர்ப்பு முடிந்தவுடன் முறைப்படி பெட்டிஷன் போட்டு அந்த  நினைவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என  நீதிபதி குன்ஹா தெரிவித்ததோடு  வழக்கறிஞர் குமார் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். அதோடு  லஞ்ச ஒழிப்புத் துறையினர் பாஸ்கரன் உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதை விசாரித்து 15 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.  கைப்பற்றப்பட்ட வெள்ளிப் பொருட்களின் மஹஜர் பட்டியலைத் தாக்கல் செய்ய வேண்டும்.  பாஸ்கரன் வசம் உள்ள வெள்ளிப் பொருட்கள் பற்றிய சோதனைப் பட்டியல் விவரத்தையும் அறிவிக்க வேண்டும்.  ஜெயலலிதாவின் வீடு போயஸ்கார்டனில் வெள்ளிப் பொருட்களின் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அலமாரி சாவி யாரிடம் இருக்கிறது என்று தெரியப்படுத்த வேண்டும் என 4 உத்தரவுகளையும் நீதிபதி குன்ஹா பிறப்பித்தார்.

    இதையடுத்து பிப்ரவரி 15-ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின் போது வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளிப் பொருள்களை வைத்திருந்த ஜெயலலிதாவின் செயலாளரும் சட்ட ஆலோசகருமான பாஸ்கரன் குறித்த அறிக்கையை டி.எஸ்.பி சம்பந்தம் தாக்கல் செய்தார். அதில், சென்னை அருகேயுள்ள சோழிங்கநல்லூர் வட்டாட்சியரால் பாஸ்கரனின் இருப்பிடத்தை உறுதிசெய்ய முடியவில்லை. சென்னை மாநகராட்சியில் பாஸ்கரன் மரணம் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அவர் மரணம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கான சான்றிதழைப் பெற இயலவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதற்கு அரசு வழக்கறிஞர் பவானி சிங் ஆட்சேபம் தெரிவித்ததோடு பாஸ்கரன் உயிரோடு இருக்கிறார் என கூறினார். ஆனால்  அன்பழகனின் வழக்கறிஞரான தாமரைச்செல்வன், 2013, டிசம்பர் 2-ம் தேதி பாஸ்கரன் வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் இறந்தார். அதற்கான இறப்புச் சான்றிதழ் வேலூர் மாநகராட்சியில் கடந்த ஜனவரி 9-ம் தேதி பெறப்பட்டுள்ளது என்று கூறி, அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

    இதையடுத்து நடந்த விசாரணையின் போது  அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கின் வாதத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சீனிவாசன், சீத்தராமன், செல்வராஜ் ஆகியோர் அளித்துள்ள சாட்சியங்களைப் படித்து காட்டினார். அதில், 1988 முதல் 1993 ஆண்டு வரை ஜெயலலிதாவுக்கு சொந்தமான கட்டடம், நிலம், திராட்சைத் தோட்டம், பண்ணை வீடு உள்பட பல வழிகள் வந்த வருமானம், செலவு, கடன் உள்பட அனைத்து விவரங்களையும் கொண்ட வருமான வரி ஆவணங்களைத் தாக்கல் செய்ததுடன், அவரது சொத்துகளுக்கான சொத்துவரி, வருமானவரி செலுத்தியதற்கான விவரங்களையும் படித்துக் காட்டினார்.

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அளித்துள்ள சாட்சியத்தையும் படித்துக்காட்டினார்  தமிழக அரசின் பொதுப்பணித் துறையின் மூத்த மின் பொறியாளர் திருத்துவராஜ் அளித்துள்ள சாட்சியத்தில்,  சிறுதாவூர் பண்ணைத் தோட்டத்தில் ரூ.17,50,000, பையனூர் பங்களாவில் ரூ.31,13189, ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் நிறுவனத்தில் ரூ.47,75,000, போயஸ் கார்டன் வீட்டில் ரூ.1,05,25,000 என்று மதிப்பீடு செய்துள்ளதை படித்துக் காட்டினார். மேலும் கோவை ராமநாதன் என்ற சார்பதிவாளர் அளித்துள்ள சாட்சியம்,  தியாகராஜசுவாமி என்ற சமையல்காரர் கொடுத்துள்ள சாட்சியம்  ஆகியவற்றையும் படித்துக் காட்டினார்.

    HC jaya.jpg 

    அதையடுத்து, வழக்கு விசாரணை தொடங்கியதும் லெக்ஸ் பிராபர்ட்டீஸ் கம்பெனி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் குலசேகரன், இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எங்கள் நிறுவனங்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்பது நியாயமான கோரிக்கை.எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து சொல்ல வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று மனுத் தாக்கல் செய்தார். அந்த மனு மீதான கோரிக்கைக்கு பதிலளித்த நீதிபதி குன்ஹா, இந்த வழக்கு 14 ஆண்டுகளாக நடந்து வருகிறது. உங்கள் கம்பெனிகளை இடையில் சேர்க்கவில்லை. வழக்கு பதிவு செய்த காலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அப்போதே கம்பெனியை விடுவிக்க வேண்டும் என்று ஏன் கோரிக்கை வைக்கவில்லை. என்று கேட்டதோடு  இது தொடர்பாக அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை பார்த்து, என்ன சொல்கிறீர்கள்? என்றார். அதற்கு பவானி சிங், கம்பெனிகள் அனைத்தும் குற்றவாளிகளின் சொத்துப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதை விடுவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

    பின்னர் அந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதி குன்ஹா. தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதையடுத்து, மே 9-ம் தேதி அரசு வழக்கறிஞர் பவானி சிங்,  2,500 பக்க சாட்சியங்கள் அடங்கிய ஆவணத்தை சமர்பித்தார்.  ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார், அசோகன், பன்னீர்செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள். தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் தரப்பில் வழக்கறிஞர்கள் சரவணன், நடேசன், பாலாஜி சிங், குமரேசன் ஆகியோர் ஆஜராகினர்.  காலை 10.30க்கு  தொடங்கி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4.15 மணிக்கு வரை ஜெயலலிதாவின் 306 சொத்துப் பட்டியல் வாசிக்கப்பட்டது. அப்போதைய மதிப்பு ரூ.66,44,73,573 என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையடுத்து 16-ம் தேதி காலை நீதிமன்றம் கூடியபோது சொத்து பட்டியல் போல 1991 முதல் 1996 வரை செய்த 248 செலவுப் பட்டியல்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி வாசித்தார். ஐந்தாண்டில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வேலைபார்த்த ஆட்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவு, ஜெயா பப்ளிகேஷன் கட்டிய மின்சாரக் கட்டணம், ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் கட்டிய மின்சாரக் கட்டணம், உட்பட  1991 முதல் 1996 வரை செலவு செய்த மொத்த தொகை ரூ.12,00,59,338 என தெரிவிக்கப்பட்டது. இப்படியாக போய்க் கொண்டிருந்த இந்த வழக்கின் அரசு தரப்பு இறுதிவாதம் மே 19-ம் தேதி ஒருவழியாக முடிவுக்கு வந்தது. பின்னர் தி.மு.க பொதுச்செயலாளர் க. அன்பழகன்  தரப்பு வழக்கறிஞர்கள் குமரேசன், சரவணன், நடேசன் ஆகியோர் நீதிபதி முன்பு 428 பக்க எழுத்துபூர்வமான ஆவணத்தைச் சமர்ப்பித்தனர்.

    அதையடுத்து நீதிபதி, ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் இறுதி வாதத்தை 2.6.2014 அன்று தொடங்கலாம் என்றும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் நாளை முதல்  தங்களது இறுதி வாதத்தைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினார். எனினும்  அன்பழகன் தரப்பு சமர்ப்பித்த ஆவணத்தை படித்துப் பார்க்க எங்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். ஆனால் நீதிபதி அந்த மனுவைத் தள்ளுபடி செய்து, நாளை முதல் இறுதி வாதத்துக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

     

    Bangalore_HighCourt.jpg 

     ஆனால், ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குமாரின் தாயார் இறந்துவிட்டதால்,  ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஜூன் 2-ம் தேதி தொடங்க உத்தரவிடப்பட்டது. சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு இறுதி வாதத்தைத் குறிப்பிட்ட மே 23-ம் தேதி தொடங்க உத்தரவிட்டார்.  ஆனால்  சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள்  இந்த வழக்கில் ஏ1 குற்றம்சாட்டப்பட்டுள்ளவர் பொதுசேவையில் இருப்பதால், அவருடைய இறுதி வாதம் முடிந்த பிறகுதான் நாங்கள் வாதத்தைத் தொடங்க முடியும். இந்த வழக்கில் கம்பெனிகள் தரப்பு விசாரணை, எங்களுக்குச் சாதகமாக நடைபெற்று வருவதால், அந்த வழக்குகள் நிறைவடைந்த பிறகுதான் எங்களுடைய இறுதி வாதத்தைத் தொடங்க முடியும். எனவே, 309 -வது விதிப்படி எங்களுக்குக் கட்டாயம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தனர். இதை ஏற்க மறுத்த நீதிபதி இனியும் இந்த வழக்கை தாமதப்படுத்த முடியாது, நன்றாக யோசித்து ஒரு மணிக்கு உங்கள் வாதத்தைத் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பு வழக்கறிஞர்களும், வாதாட முடியாது என்று சொல்லி அமர்ந்திருந்தனர். மாலை 4 மணி வரை பார்த்து விட்டு  மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி, சசிகலா, சுதாகரன், இளவரசி மூன்று பேருக்கும் தலா 3,000 வீதம் மொத்தம் 9,000 அபராதம் விதிக்கிறேன். அத்துடன் இனி வரும் ஒவ்வொரு இறுதி வாதத்தின்போதும் கட்டாயம் சசிகலா, சுதாகரன், இளவரசி மூவரும் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி 26 -ம் தேதி காலை சசிகலாவும் இளவரசியும் பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் சுதாகரனுக்கு கடுமையான காய்ச்சல் என்பதால், வர முடியவில்லை என அவரது வழக்கறிஞர் அன்புக்கரசு கூறினார். அதை எழுத்துப்பூர்வமாக எழுதித்தருமாறு நீதிபதி கேட்டார். அதன் பின் நடந்த வாதத்தை தொடர்ந்து, இந்த  வழக்கை ஜூன் 6-ம் தேதி வரை விசாரிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டது. ஆனாலும், பெங்களூரு நீதிமன்றத்துக்கு அந்த உத்தரவு நகல் வந்து சேராததால், நாளைக்கு ஒத்திவைக்கிறேன் என்று நீதிபதி கூறினார்.

    இன்னும் என்ன நடந்தது...நாளை பார்க்கலாம்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp