Enable Javscript for better performance
தர்மத்தின் பாதையில் ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு என்ன? நிறைவுப் பகுதி- Dinamani

சுடச்சுட

    

    தர்மத்தின் பாதையில் ஜெயலலிதா வழக்கு: தீர்ப்பு என்ன? நிறைவுப் பகுதி

    By சோமசுந்தரம்  |   Published on : 11th May 2015 04:39 PM  |   அ+அ அ-   |    |  

    jaya1

    பெங்களூரில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில்  அரசுத் தரப்பு இறுதி வாதம் முடிந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பின் இறுதி வாதங்கள் ஜூன் 20-ம் தேதி தொடங்கியது. அப்போது இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ஆஞ்சநேயா பிரின்டர்ஸ், ஜெ. ரியல் எஸ்டேட், ஜெ. ஃபார்ம் ஹவுஸ், க்ரீன் ஃபார்ம் ஹவுஸ், ஜெ.எஸ் ஹவுஸிங் டெவலப்மென்ட் லிமிடெட் ஆகிய ஐந்து நிறுவனங்களை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று மனுத்  தாக்கல் செய்து இருந்தனர். இதனை விசாரித்த நீதிபதி குன்ஹா, வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கண்டித்து அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    அதன் பிறகு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் தன் வாதங்களை தொடங்கினார்.  இது முழுக்க முழுக்க தி.மு.க-வின் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக போடப்பட்ட வழக்கு. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் அரசு ஊழியர்கள் கிடையாது. அவர்களிடம் விசாரித்து இருக்கலாம், அதை விடுத்து முறையாக விசாரிக்காமல் தன்னிச்சையாகக் தனிமனித சுதந்திர பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிராக ஜெயலலிதாவின் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தினார்கள். மேலும் அவர்களை கைது செய்துள்ளனர்.  போயஸ் தோட்டத்தின் மதிப்பு 13 கோடி என்று பதிவு செய்யப்பட்டது. அது முழுக்க முழுக்கத் தவறானது. இதுபோன்று பல கட்டடங்களின் மதிப்பு கூடுதலாகப் போடப்பட்டுள்ளது. மேலும், எனது மனுதாரர் வாங்கிய சொத்துகள் அனைத்தும், வழக்கு நடக்கும் காலகட்டத்துக்கு முன்பே வாங்கப்பட்டவை. அதோடு சொத்து மதிப்பையும் மிகைப்படுத்திக் காட்டியிருக்கிறார்கள்.

    அதே வேளையில் நமது எம்.ஜி.ஆர், சூப்பர் டூப்பர் நிறுவனங்களுக்கு பொதுமக்கள் செய்த வைப்புத்  தொகையெல்லாம் காட்டவே இல்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் எனது கட்சிக்காரரான ஜெயலலிதாவின் உறவினர்கள் அல்ல. 3 -வது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள சுதாகரன், எனது கட்சிக்காரரான ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும் அல்ல.  என வழக்கறிஞர் குமார் கூறினார். இப்படியாக தொடர்ந்து 10 நாட்கள் வாதிட்ட குமார், நல்லம நாயுடு தலைமையில் செயல்பட்ட தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் எனது கட்சிக்காரரின் சொத்து மதிப்பை மிகைப்படுத்தி காட்டினார்கள்.

     

    jaya1.jpg 

    ஆனால், அவருக்கு விவசாய நிலத்தில் கிடைத்த வருமானங்களை திட்டமிட்டு வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு காட்டியிருக்கிறார்கள். என்றும் கூறினார். அதனைத்தொடர்ந்து,  ஆகஸ்ட் 28-ம் தேதி... ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் குமார் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் மராடி ஆகியோர் தங்கள் இறுதி வாதத்தின் நிறைவு தொகுப்புரையை முடித்தனர். இதையடுத்து நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்று வழக்கறிஞர்கள்,  தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை சிறப்பு அதிகாரி, பத்திரிகையாளர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அனேகமாக தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என்றே நினைத்தனர். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை நிறைய ஆவணங்கள் இருக்கின்றன.

    அதைப் படிக்க வேண்டியிருப்பதால் கூடுதலாக ஒரு வார காலம் தேவைப்படுகிறது. அதனால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார். இதையடுத்து, இந்த தீர்ப்பு தேதியை ஒட்டுமொத்த இந்தியாவே எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், செப்டம்பர் 15-ம் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஜெயலலிதாவுக்கு அச்சுறுத்தல் இருப்பதால் நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வராக உள்ள ஜெயலலிதா ‘இசட்’ பிரிவு பாதுகாப்பில் உள்ளார். இப்போது வழக்கு நடைபெறும் சிறப்பு நீதிமன்றத்தில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஜெயலலிதா நேரில் வந்து வாக்குமூலம் அளித்தபோது உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பரப்பன அக்ரஹாராவுக்கு நீதிமன்றம் தற்காலிகமாக மாற்றப்பட்டது. அதேபோல், தீர்ப்பு வழங்கப்படும் தினத்தன்று நீதிமன்றத்தை பரப்பன அக்ரஹாராவுக்கு மாற்ற வேண்டும். போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனுவை 16-ம் தேதி விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார். பாதுகாப்பு கருதி பரப்பன அக்ரஹாரா சிறை வளாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும். செப்டம்பர் 20-ம் தேதிக்குப் பதில், 27-ம் தேதிக்கு தீர்ப்பு வழங்கப்படும்  என்று குன்ஹா உத்தரவிட்டார். செப்டம்பர் 27-ம் தேதி என்ன தீர்ப்பு வருமோ என்று முதல்வர் ஜெயலலிதா மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவே காத்திருந்தது. இந்நிலையில்  செப்டம்பர் 27ம் தேதி  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பு அளித்தது.

    அதில் ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே  அனுமதிக்கப்பட்டன. தமிழக முதல்வர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதையொட்டி, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தை சுற்றிலும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  ஒட்டமொத்த மாநகரப் பேருந்துகளின் இயக்கம் வெகுவாகக் குறைக்கப்பட்டு, குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. தமிழகத்தில் பல அதிமுக தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டனர். 

    இதுதவிர ஆயுதப் படை, அதிரடிப் படையைச் சேர்ந்த ஆயிரம் பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறை வளாகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அந்தப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்காருவதற்கு தனி கொட்டகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பெங்களூர் தனி நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் இடைக்கால ஜாமீன் வழங்கியது. மேலும் ஜெயலலிதா சொத்து வழக்கு அப்பீல் மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனி நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடந்தது.

    இதில் அரசு வழக்கறிஞராக  விசாரணை நீதிமன்றத்தில் ஆஜரான பவானி சிங்கே ஆஜரானார். இதை எதிர்த்து அப்பீல் மனு விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராக கூடாது என்றும் வேறு வழக்கறிஞரை நியமிக்க கோரியும் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் பவானி சிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

    மேலும் பவானி சிங் நியமனம் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த வழக்குடன் முடிந்து விட்டது. எனவே, புதிதாக அரசு வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமிக்க வேண்டும். அவரது எழுத்துப்பூர்வ வாதத்தை கேட்டறிந்த பின், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கலாம். புதிதாக அரசு வழக்கறிஞரை நியமித்து, மறு விசாரணை நடத்திய பின் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற நீதிபதி மதன் லோகுரின் தீர்ப்பு ஏற்புடையதல்ல. ஏற்கெனவே தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், மறு விசாரணை தேவையில்லை. கர்நாடக அரசு 28-ம் தேதிக்குள்(நாளை) 50 பக்கங் களில் எழுத்துமூலம் வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும். அன்பழகன் தரப்பும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டு, அவரது வாதத்தை 90 பக்கங்களுக்கு மிகாமல் தாக்கல் செய்ய வேண்டும். இவற்றை பரிசீலித்த பின் நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும்.

    தீர்ப்பு வழங்கும் முன், இந்த வழக்கின் சாட்சியங்கள் அனைத்தையும் நீதிபதி குமாரசாமி முழுமையாக படித்துப் பார்க்க வேண்டும். ஊழல் வழக்கின் ஆழத்தையும், அதன் தாக்கத்தையும் கவனத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும். பவானி சிங் இந்த வழக்கில் தாக்கல் செய்துள்ள வாதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. என்று தீர்ப்பில் கூறினர்.

    இப்படி பல கட்டங்களை கடந்து வந்த இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று மே 11-ம் தேதி காலை வெளியாக உள்ளது. இதையொட்டி, கர்நாடக உயர் நீதிமன்றப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை வெளியிடப்படும் தீர்ப்பால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படாத வகையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

    இன்று காலை 11 மணிக்கு நீதிமன்றம் வந்து தனது இருக்கையில் அமர்ந்த நீதிபதி குமாரசாமி மேல்முறையீட்டு வழக்கின் வரிசை எண்களை வாசித்துவிட்டு, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை ஏற்பதாக முதலில் கூறினார். பின்னர் 4 பேரும் மேல்முறையீட்டு மனுவில் முன் வைத்த கோரிக்கையான கீழ் நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும்; அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதாகவும் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். அதிகபட்சம் 3 நிமிடங்களிலேயே தமது தீர்ப்பை வாசித்து முடித்தார்

    மேலும் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் அவரிடமே மீண்டும் ஒப்படைக்க நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.  மூன்று நிமிடத்தில் இந்த தீர்ப்பு கூறப்பட்டாலும் 919 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பின் நகல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    http://karnatakajudiciary.kar.nic.in/noticeBoard/CRL-A-835-838-2014.pdf

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp