‘தீபா’ சாயலில் அத்தை மாதிரி இருப்பதால் மக்களிடையே ஜெயலலிதாவுக்கு மாற்றாக நினைக்கப் படுவாரா?

ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த போதும் கூட ஓரிரு நிமிடங்களே தீபா தன் அத்தையின் பூத உடலின் அருகே நிற்க முடிந்தது. உடனடியாக காவலர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள்
‘தீபா’ சாயலில் அத்தை மாதிரி இருப்பதால் மக்களிடையே ஜெயலலிதாவுக்கு மாற்றாக நினைக்கப் படுவாரா?

செவ்வாய் அன்று ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரண்டிருந்த கூட்டத்தில் ஒரு நபர் வந்த போது மட்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் வேறு யாருமல்ல மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறந்த சகோதரரான அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா தான். மாலை சுமார் 5.30 மணி அளவில் தீபாவைக் கண்டதும் ’ ‘அப்படியே அம்மா போலவே இருக்கியேம்மா! எங்க அம்மாவையே உன் முகத்தில பார்க்கிறோம் நாங்க’ என்றவாறு கூட்டத்திலிருந்த பெண்கள் பெருவாரியாக அவரோடு பேசவும், புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் ஆசைப்பட்டு அவரை நெருங்கி விரைந்து வந்தனர்.

தீபா வருகைக்கு முன்னதாகவே கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தை சமாளிக்கும் பணியில் திணறிக் கொண்டிருந்த காவல்துறையினர். இந்த பரபரப்பைப் கண்டதும் சற்று அதிர்ந்து தீபாவை கூட்ட நெரிசலில் இருந்து பாதுகாப்பதற்காக உடனடியாக அவரை அருகிலிருந்த  டி6 காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர். தீபாவின் கார் நிறுத்தப் பட்டிருந்த இடம் அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருந்ததால், காவலர்கள் அவரது காரை காவல் நிலையத்தின் முகப்பிற்கு கொண்டு வந்து நிறுத்தச் சற்று நேரமாகி விட்டது. ஆனால் காவல்துறையினரின் இந்தச் செய்கையை தவறாகப் புரிந்து கொண்ட பொதுமக்களிடையே ‘ ஏன் நாங்கள் அவரைச் சந்திக்கக் கூடாதா? எங்கள் அம்மாவின் மருமகளை சந்திப்பதை ஏன் தடுக்கிறீர்கள் என்று பதட்டக் குரல் எழுந்தது. பின்பு தீபாவின் கார் அங்கிருந்து நகர்ந்ததும் பதட்டம் தணிந்தது. 

கடந்த செப்டம்பர் 22 அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப் பட்ட நாள் முதற்கொண்டு தீபா தனது அத்தையைப் பார்க்க தன்னாலான முயற்சிகளை தொடர்ந்து கொண்டே தான் இருந்தார். ஆனால் ஒரு முறை கூட அவர் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப் படவே இல்லை. கடந்த ஞாயிறு அன்று ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு வந்த செய்தி அறிந்து உடனடியாக தீபா தன் அத்தையைப் பார்க்க சென்ற போதும் கூட அவருக்கு அனுமதி அளிக்கப்படவேயில்லை. “ஏன் என் அத்தையைச் சந்திக்க விடாமல் தடுக்கிறீர்கள்?” என தீபா அப்பல்லோவில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது ‘நாங்கள் என்ன செய்வது? இது மேலிட உத்திரவு’ என்றே பதில் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்க விசயம். 
ஜெயலலிதாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த போதும் கூட ஓரிரு நிமிடங்களே தீபா தன் அத்தையின் பூத உடலின் அருகே நிற்க முடிந்தது. உடனடியாக காவலர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா உயிருடனிருந்த போது அவரால் தூக்கி எறியப்பட்டவர்களான சசிகலாவின் உறவினர்கள் அனைவரும் அன்று ஜெ வின் உடலுக்கு வெகு அருகில் நின்று கொண்டிருந்தனர். உடன் பிறந்த அண்ணன் மகளான தீபாவால் தன் அத்தை இறந்த பின்னும் கூட நிதானமாக அத்தைக்கு அஞ்சலி செலுத்த முடியாமலிருந்தது.

இந்தக் காட்சிகளை  நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களிடையே இந்த விசயம் பரவலான பேசு பொருளாகி விட்டது. முன்பு தன் அத்தையைப் பார்க்க விடாமல் தடுப்பதாக நாளிதழ்களில் பேட்டி அளித்த தீபாவும் செவ்வாயன்று அஞ்சலி செலுத்த வந்த போது தன்னிடம் கேள்வி கேட்ட நிருபர்களிடம், அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் பொத்தாம் பொதுவாக “அதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது” என்றே பதிலளித்துச் சென்றிருக்கிறார்.

தமிழக அரசியலில் தீபாவின் சாயல் ஒற்றுமையாலும், ரத்த உறவாலும் ஏதாவது மாற்றம் நிகழுமா எனப் பொறுத்திருந்து தான் காண வேண்டும். 

source: ENS

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com