சுடச்சுட

  

  விவசாயிகள் போராட்டம் போதிய கவனம் பெற அய்யாக்கண்ணுவுக்கு ஒரு பகிரங்க கடிதம்!

  By Rm  Thiruchelvam  |   Published on : 20th April 2017 04:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ayyakannu

   

  மதிப்பிற்குரிய திரு. அய்யாக்கண்ணு அவர்களுக்கு,

  வணக்கம்.

  தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள், 

  உங்களது மாபெரும் முயற்சிக்கு வலுச்சேர்க்கும் வண்ணம் எங்களால் இயன்ற சில தகவல் தொழில்நுட்ப வழிமுறைகளைப் பற்றி பகிர்ந்து கொள்வதே இக்கடிதத்தின் நோக்கம். விவசாயத்துறையில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டின் ஒட்டு மொத்த விவசாயிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பை பெற தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் பரிந்துரைகளாக நாங்கள் சிலவற்றைக் கூற விரும்புகிறோம், அவை;

  • விவசாயிகளுக்கான முழு பயிர்காப்பீடு
  • அதிகபட்ச உற்பத்திக்கான தகவல்கள் 
  • தரமான இடுபொருள்கள், நியாயமான லாபம் 

  - உள்ளிட்ட ஒட்டுமொத்த தீர்வு கிராம அளவில் கிடைக்கச்செய்வதன் மூலம் கடன் தள்ளுபடி போன்ற கடினமான சூழ்நிலை எதிர்காலத்தில் வராமல் இருக்கும் நிலையை உருவாக்க முடியும். 

  அதற்கு தகவல் தொழில் நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு ஒன்று கடந்த 15 வருட தொடர் முயற்சியின் மூலம் ஒரு வழிமுறையினைக் கண்டறிந்தது. அது என்னவெனில்; தகவல் தொழில்நுட்பத்தின்  அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி மற்றும் நிகர லாபத்தை அதிகமாக்குதல் என்பதே! இதனடிப்படையில் விவசாயம் செய்வதில்  உள்ள  கடின  தன்மையை இலகுவாக்கி, ஒரு புது இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, மாதிரி அளவில் அதை வெற்றிகரமாக செயல்படுத்தி, சிறப்பான மதிப்பீடுகளை பெற்றிக்கின்றோம்.  

  இந்த திட்டத்தின் மூலம் திட்டமிடுதலில் தொடங்கி  விதை முதல்  விற்பனை வரையிலான சேவைகளை, கிராம அளவில் செயல்படும் விவசாய மேலாண்மை மையத்தில் குறு, சிறு விவசாயிகளும் பெற்று பலன் பெற முடியும். இந்தத்தீர்வை பெரிய அளவில் அரசாங்கத்துடன் சேர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் நாங்கள் தற்போது ஈடுபட்டிருக்கிறோம்.

  இந்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக விவசாயிகள் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதில் அடுத்து வரப்போகும் பெரும் ஆபத்து என்னவெனில் பருவமழை இந்த ஆண்டும் மோசமானதாக இருக்கும் என்கிற கணிப்பினால் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை மேலும் பெருமளவு அதிகரிக்கும் என்கிற செய்தி பரவி வருவதுதான்.

  இந்த நிலையில் தாங்கள் மேற்கொண்டுவரும் தொடர் போராட்டம் விவசாயத்தின், விவசாயிகளின் இன்றைய ஆபத்தான நிலையை நாட்டிற்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறது. இது விவசாயத்திற்கான விடிவிற்கு வழிவகுக்கும் என நம்புகின்றோம்.

  எங்கள் பங்களிப்பாக, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் தொழில் நுட்பத்துறையின் அதீத ஆற்றலை உரிய வகையில், முழு விவசாயத்தீர்வுக்கு பயன்படுத்தும் முயற்சில் ஈடுபட்டுவரும் நம்பிக்கையில் கீழ்கண்ட கருத்துக்களை தங்கள் பார்வைக்கு முன்வைக்கின்றோம்:

  தங்கள் போராட்டம் நாடுதழுவிய அளவில் ஒத்துழைப்பை பெறுவதில் ஏற்படும் தாமத்திற்கான காரணங்கள்:

  • விவசாய கடன் தள்ளுபடி என்பது அரசுக்கு வருவாய் இழப்பு என்பதாலும் இது ஒரு தொடர்கதையாகிவிடும் என்கிற அச்சத்தினாலும் தங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படுவதில் தாமதம் ஏற்படுகிறது.
  • மேலும் ஏறக்குறைய 50 சதவிகித விவசாயிகளே வங்கிக்கடன் பெற்று விவசாயம் செய்கின்றனர். எனவே வங்கிக்கடன் பெறாதவர்கள்/ பெறமுடியாதவர்கள் கடன் தள்ளுபடி பற்றி கவலைப்படுவதில்லை.
  • காவிரி நீர் பிரச்சினை என்பது தமிழகத்தின் ஒரு பகுதியை சேர்ந்த விவசாயிகளின் பிரச்சனையாகப் பார்க்கப்படுவதினால் தமிழக மக்களே ஒருங்கிணைந்து செய்யப்படுவது இல்லை.
  • சில விவசாயிகள் விவசாயக்கடனை விவசாயத்தொழிற்கு பயன்படுத்துவதில்லை. விவசாயம் செய்யாததவர்கள் கூட பயிர்காப்பீடு பெற்றுவிடுகிறார்கள் போன்ற தவல்களால் பொது மக்கள் விவசாயிகள் கடன் பிரச்சினைகளை தீவிரமாகப் பார்ப்பது இல்லை.

  நாட்டின் ஒட்டுமொத்த விவசாயிகளின் மக்களின் ஒத்துழைப்பை பெரும் விதமாக கீழ்கண்ட பரிந்துரைகளை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்:
   
  நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் தேவை நல்ல தரம், அதிக உற்பத்தி, உரிய விலை, விவசாயம் செய்வதில் உள்ள கடினத்தன்மையை இலகுவாக்குதல் மற்றும் வறட்சி, புயல் போன்ற இயற்கை சோதனைகளின் போது முழு இழப்பையும் ஈடுகட்டும் விதமான சிறப்பு பயிர்காப்பீடு என்பதே ஆகும்.

  இவைகள் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் விதமான ஒரு முழு தீர்வை அரசு ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால் விவசாயிகளின் தற்கொலைகள், போராட்டங்கள், உணவு விலை ஏற்றங்கள், உணவுத்தரமின்மை போன்ற துரதிஷ்டமான நிகழ்வுகள் நாட்டில் நிகழாது.

  அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வந்தாலும் தற்போது இருக்கும் கட்டமைப்பை கொண்டு இலக்கை அடைவது சாத்தியமில்லை. தேவை மாற்று அணுகுமுறை.. அவற்றில் முக்கியமானது தகவல் தொழில் நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது.

  உலக பொருளாதாரமயமாக்குதல், பல துறைகளின் அசாதரண வளர்ச்சி போன்றவற்றிக்கு அடித்தளமாக இருந்துவருவது தகவல் தொழில்நுட்பம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் துரதிஷ்ட வசமாக அதன் பயன்பாடு விவசாயத்துறையை பொறுத்த மட்டில் மிகக்குறைவே (நியாயப்படுத்துவதிற்கு பல (சரி செய்யக்கூடிய) நொண்டிக்காரணங்கள்  இருக்கின்றன). மிக நம்பிக்கைக்குரிய விஷயம் என்னவெனில் திட்டமிடுதலில் இருந்து விற்பனை செய்து முடிக்கும்வரை தேவைப்படும் சேவைகளை தகவல் தொழில் நுட்பத்துறையினால் விவசாயிகளுக்கு கிராம அளவில் செய்து கொடுக்க முடியம் என்பதுதான்.

  எனவே தற்போது இருக்கும் விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும் என்கிற கோரிக்கையுடன் விவசாயம் லாபகரமானதாக, இலகுவானதாக, வருவாய் பாதுகாப்பான ஒன்றாக இருக்கும் வகையிலான தீர்வை அரசு ஏற்படுத்தி தருவதற்கு வேண்டுகோள் வையுங்கள். நாட்டின் உணவுப் பாதுகாப்பு குறித்து சிறப்புக்கவனம் செலுத்தும் அரசு; விவசாயிகளின் வாழ்க்கைப்பாதுகாப்பு குறித்த நேர்மறையான கோரிக்கையை மகிழ்வோடு ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பை உருவாக்கும். உணவுத்தரம், சரியான விலை போன்றவற்றால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.

  விவசாய மறுமலர்ச்சிக்கான தீர்விற்கான அடிப்படை, கிராம அளவிலான விவசாய தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் ஏற்படுத்தி விவசாயிகள் விவசாயத்தொழிலை வெற்றிகரகரமாக செய்து முடிக்கத்தேவைப்படும் வசதிகளை, சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதில் தான் உள்ளது. இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை  மையம் செயல்படும். இதில், இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர், அதை ஆபரேட் செய்ய ஒரு பட்டதாரி, மற்றும் பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட டீம் இருக்கும்.

  விவசாயிகள் இவர்களின் துணையோடு, வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள், தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடபட்டிருக்குது என்கிற விபரம்,  தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான வழிகள், நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள் என்ற   தகவல்களைப் பெறலாம்.

  விதை, உரம், பூச்சி கொல்லி போன்ற இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறிப்பிட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி, தனது ஊரில், வேலை ஆட்கள் மட்டும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில் அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி மற்றும் முக்கியமாக, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல், நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மை தேவைகளை   செய்துகொள்ள  முடியும். குறு சிறு விவசாயிகளுக்கான மிகச்சிறந்த தீர்வாக இது அமையும்.

  இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல், மன உளைச்சல் குறையும், நிகர லாபம் அதிகரிக்கும், சமூக, பொருளாதார வாழ்க்கைத் தரம் முன்னேறும். தேவையில்லாமல் நகர்புறத்துக்கு இடம் பெயர வேண்டியதில்லை. அன்றைய தினத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் நில பரப்பு, தட்ப வெட்பம் போன்ற புள்ளி விபரங்கள் உடனுக்குடன் இணையத்தகவல்களாக பதிவு செய்யப்படுவதால் அரசாங்கத்தை பொறுத்தவரை நாட்டின் உணவு தரம், பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு போன்ற மிக முக்கிய விசயங்களை சிறப்பாக நிர்வகிக்கலாம், பயிர் கடன் மற்றும் காப்பீட்டில் ஏற்படும் நஷ்டங்களைக் குறைக்கலாம். பயிர்கடன்களை,காப்பீடுகளை விரிவாக்கம் செய்து  சிறு குறு விவசாயிகளோட வாழ்க்கைய பாதுகாக்கலாம். கிராம பொருளாதார மேம்பாட்டு மூலமா நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதிகரிக்கலாம். தரமான இடுபொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதில் தங்கள் பொருள்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கலாம்.

  விவசாயிகளினுடைய குறிப்பாக சிறு குறு விவசாயிகள் பிரச்சினைகள் உலகில் பல நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே விவசாயப் பிரச்சனைகளுக்குக்கான தீர்வு ஒன்றை முன் வைக்கும்போது இந்தியா மட்டுமல்லாது மற்ற நாடுகளாலும் கூர்ந்து கவனிக்கப்படும். இன்னல்கள் நிறைந்த தங்களது முயற்சிக்கான பலன் விவசாயத்திற்கான நீண்ட காலத்தீர்வை பெற்றுத்தருவதில் தான் உள்ளது.

  நிறைவாக ஒன்று. பாரத பிரதமர் அவர்களை சந்திக்கும் முன், இந்திய திட்டக்குழு (நிதி ஆயோக்) தலைவர் மற்றும் தேசிய மென்பொருள் நிறுவன கூட்டமைப்பின் (நாஸ்காம்)  தலைவருடன் விவசாய தீர்வு குறித்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். அவர்கள் கருத்துக்களை கேட்டறியுங்கள். இந்த அணுகுமுறை தங்கள் கோரிக்கைகள் நாடு முழுதும் பேசப்பட, விவாதிக்கப்பட வழிவகுக்கும். பிரதமர் அவர்கள் இவ்விஷயத்தில் நேரடியாகத் தலையிட துணைபுரியும்.

  ‘உழவன் பின் உழன்றது உலகு’ என்கிற வள்ளுவனின் வாக்கிற்கு நேர்ந்த சோதனையாக இன்று உழவர்கள் மற்றவர் பின் கெஞ்சி சென்று கொண்டிருக்கும் காலம் தாற்காலிகமானதுதான். பொய்யாமொழிப்புலவனின் வாக்கு பொய்ப்பதில்லை. நம்பிக்கையுடன் முயற்சிப்போம். விரைவில் உலகம் மீண்டும் உழவன் பின் சுழலும்.

  இப்படிக்கு,

  தங்கள் உண்மையுள்ள,

  Rm. திருச்செல்வம்

  Email: thiru@it-rural.com; thirurm@gmail.com 

  Mobile: 98403 74266

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai