Enable Javscript for better performance
cute ideas|வயதான துப்புரவுப் பணியாளரை குதூகலமாக்கிய அரசுப் பள்ளி மாணவர்களின் ‘கியூட்’ சிந்தனை!- Dinamani

சுடச்சுட

  

  வயதான துப்புரவுப் பணியாளரை குதூகலமாக்கிய அரசுப் பள்ளி மாணவர்களின் ‘கியூட்’ சிந்தனை!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 24th August 2017 04:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  000govenment

  விழுப்புரம் மாவட்டம், கோனேரிக் குப்பத்திலிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் இந்த கியூட் சிந்தனையைக் கண்டால் உங்கள் முகத்திலும் மெலிதான புன்னகை அரும்பக் கூடும்.

  ஏனென்றால் நம்மில் பலரும் ஒரு காலத்தில் அரசுப் பள்ளி மாணவர்களாக இருந்தவர்கள் தான். கடந்த 20 ஆண்டுகளாகத்தானே தனியார் பள்ளிகளின் மீதான மோகம் அதன் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் ஜமீன் வீட்டுப் பிள்ளையென்றாலும் ஜலதாரை வழிப்பவரின் பிள்ளையென்றாலும் ஒன்றாக அரசுப் பள்ளியில் படித்த காலம் ஒன்று உண்டு தானே?! கு.அழகிரிசாமியின்  ’ராஜா வந்திருக்கிறார்’ சிறுகதையில் சொல்லப்பட்டிருப்பது போல, மிராசு வீட்டுப் பிள்ளையும், அன்றாடங்காட்சியின் பிள்ளையும் அன்று கிராமத்திலிருக்கும் அரசு ஆரம்பப் பள்ளியிலோ, நடுநிலைப் பள்ளியிலோ ஒன்றாகச் சேர்ந்து தான் படித்துக் கொண்டிருந்தார்கள். 
  அந்தக் காலத்தில் என்னதான் வர்ணாசிரம தர்மம் கடைபிடிக்கப் பட்டாலும் கூட பள்ளிகள் என்று வரும் போது அரசுப் பள்ளிகளே பெற்றோர்களது சிந்தையில் முன்னுரிமை பெற்றதாக இருந்தது. காரணம் அப்போது தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை இன்றைய நாட்களைப் போல முக்குத் தெருவில் நான்கு கணக்காக இல்லை. ஒரு நகரத்துக்குப் பொதுவாக இரண்டு அல்லது மூன்று தனியார் பள்ளிகள் மட்டுமே இருக்கும். ஆனால் இன்றைக்குப் பாருங்கள் ஒரு தெருவுக்கு நான்கு அல்லது ஐந்து தனியார் பள்ளிகள் இருக்கின்றன. சரி அந்தப் பஞ்சாயத்தை வேறொரு கட்டுரையில் வைத்துக் கொள்ளலாம். இப்போது இங்கே சொல்ல வந்த விஷயமே வேறு!

  அனேக அரசுப் பள்ளிகளைப் போலவே விழுப்புரம், கோனேரிக் குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், மாணவர்களுக்குப் பல்வேறு அசெளகரியங்கள் இருக்கத்தான் செய்கின்றன. 

  • சிதிலமான பள்ளிக் கட்டிடம்
  • சிரத்தையற்ற சுண்ணாம்புப் பூச்சு
  • பள்ளி வளாகத்தில் தேவையற்ற புதர்கள்
  • பள்ளிக்கு சுற்றுசுவர் என்ற ஒன்று இல்லாத காரணத்தால், எந்த நேரத்திலும் அழையா விருந்தாளிகளாக உள்ளே நுழையும் மாடுகள், நாய்கள், பன்றிகள், கோழிகள் உள்ளிட்ட பிராணிகளின் தொல்லை.
  • இத்தனையும் தாண்டி பள்ளிக்குச் சொந்தமாக மிகப்பெரிய மைதானம், ஆனால் அந்த மைதானத்தைச் சுத்தம் செய்ய இங்கே பணிக்கு அமர்த்தப் பட்டிருப்பதோ வயதான துப்புரவுப் பணியாளர் ஒருவர். அவருக்கு முழு மைதானத்தையும் சுத்தமாகப் பெருக்கித் தள்ளுவது என்பது ஒவ்வொரு நாளுமே படு சிரமமான விஷயமே!

  இப்படிப் பட்டியலிடும் போது அந்த மாணவர்கள் சொல்கிறார்கள்...

  ‘அரசுப் பள்ளி மாணவர்கள் நாங்கள், இதில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள எல்லா விதமான செளகரியக் குறைவுகளையும் எங்களால் தீர்க்க முடியாவிட்டாலும் கூட, கடைசியாக உள்ள குறையை மட்டுமாவது தீர்க்க முடிகிறதா? என்று முயன்று பார்க்க ஆசைப்பட்டோம். அதன் விளைவு தான் எங்களுடைய பயனுள்ள இந்தக் கண்டுபிடிப்பு. இப்போது எங்கள் பள்ளியின் துப்புறவுப் பணியாளருக்கு மைதானத்தைச் சுத்தம் செய்வதில் இந்தக் கண்டுபிடிப்பால் பெருமளவு சுமை குறைந்திருக்கிறது’ என்கிறார்கள். இப்போது, அந்த மாணவர்கள் அப்படியென்ன கண்டிபிடித்திருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றுமே உங்களுக்கு?!

  பள்ளியின் துப்புரவுப் பணியாளரின் வேலைச் சுமையைக் குறைக்க கணிதப் பாடத்தில் பயன்படுத்தும் காம்பஸின் செயல்திறனை அடிப்படையாக வைத்து மாணவர்கள் யோசித்திருக்கிறார்கள். அதன் விளைவாக தென்னஞ்சிறகுகளைப் பயன்படுத்தி அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரு சக்கரத்தில் பிணைத்து சைக்கிளின் உதவியால் இயக்கும் போது ஒரு துடைப்பத்தால் முடியாத காரியத்தை அது சாதித்தது. இப்போது இதைக் கொண்டு பள்ளியின் பெரிய மைதானத்தைச் சுத்தம் செய்வதென்பது எளிதான காரியமாகி விட்டது என்கிறார்கள் மாணவர்கள்.

  மாணவர்கள் உருவாக்கிய மகா தென்னந்துடைப்ப கண்டுபிடிப்பின் செயலாக்கம் காண...

  மாணவர்கள் முதலில் தங்களது பிரச்னையை எடுத்துச் சென்றது நகராட்சி துப்புரவுப் பணியாளர்களிடம் தான், ஆனால் அவர்களுக்கிருக்கும் அனேக வேலைகளில் இதையும் ஏற்றுச் செய்ய மனமின்றி அவர்கள் மறுத்து விடவே, பிறகு தான் மாணவர்களுக்கு இப்படி ஒரு யோசனை வந்திருக்கிறது. ஆனாலும் தங்கள் யோசனைகளை இந்த மாணவர்கள் செயல்படுத்த கையாண்ட விதமும் கூட புத்திசாலித்தனமானது மட்டுமல்ல பாராட்டப் பட வேண்டிய விஷயமும் கூடத்தான்.

   

  முதலில் மாணவர்கள் அனைவரும் துப்புரவுப் பணியாளரின் சுமையைத் தீர்க்க அனைத்து மாணவர்களும் கூடிப் பேசியிருக்கிறார்கள், அதில் ஆளுக்கொரு ஐடியா கிடைத்திருக்கிறது, அந்த ஐடியாவின் அடிப்படையில் முதலில், தங்களது வயதான துப்புரவுப் பணியாளருக்குப் பதிலாக தாங்களே பள்ளி மைதானத்தை சுத்தம் செய்வது தொடங்கி, நகராட்சி துப்புரவுப் பணியாளர்களை பள்ளி மைதானத்தைச் சுத்தம் செய்து தரச் சொல்லி விண்ணப்பிப்பது வரை பல வகையில் முயற்சித்திருக்கிறார்கள். கடைசியில் வேலைக்கு வேலையாகவும், விளையாட்டுக்கு, விளையாட்டாகவும் சிக்கியது 
  தான் அந்த காம்பஸ் செயல்திறனுடன் கூடிய மகா தென்னந்துடைப்ப ஐடியா.
  இப்போது துப்புரவுப் பணியாளரின் பிரச்னையும் தீர்ந்தது. மாணவர்களுக்கும் மன நிறைவு!

  இந்த ஓரிடத்தில் மட்டும் தான் என்றில்லை... இன்னும் பெயர் அறிந்திராத சின்னச் சின்ன குக்கிராமங்களில் இருக்கும் சின்னஞ்சிறு அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எல்லோரும் கூட இப்படியான கியூட் ஐடியாக்களை செயல்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். முடிந்தவரை அவற்றை வெளிக்கொண்டு வந்து வெளிச்சமிட்டுக் காட்டுவது தான் ஊடகத்தின் தலையாய கடமை!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai