Enable Javscript for better performance
சென்னை குடிநீர் - தெலுங்கு கங்கை திட்டம் - 1977ஆம் வருட ஒப்பந்தத்துடன் ஒரு அலசல்- Dinamani

சுடச்சுட

  

  சென்னை குடிநீர் - தெலுங்கு கங்கை திட்டம் - 1977ஆம் வருட ஒப்பந்தத்துடன் ஒரு அலசல்

  By C.P.சரவணன்  |   Published on : 28th July 2017 05:01 PM  |   அ+அ அ-   |    |  

  Telugu_ganga_3


  சென்னையின் மக்கள் தொகை கடந்த 130 ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ந்துவிட்டது. கடந்த காலங்களில் விஜயவாடாவிலிருந்து சென்னைக்கு 432 கிலோமீட்டர் ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்த வரலாறும் உண்டு. 1953-இல் ஆந்திர மாநிலம் மெட்ராஸ் மாகாணத்திலிருந்து பிரிந்தது முதல் கிருஷ்ணா நீரைப் பெற தமிழ்நாடு பல முயற்சிகள் எடுத்தது. அது பற்றி விரிவாக பார்ப்போம்.

  தெலுங்கு கங்கா குடிநீர்த்திட்டம் - பின்னணி

  சென்னைக் குடிநீர்

  பெருநகரங்களில் வயதில் மிக குறைந்தது சென்னையாகும். பிரிட்டீஷ் குடியேற்றம் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் 1641, செப்டம்பர். 1870-இல் மக்கள் தொகை 0.37 மில்லியன்.

  கி.பி. 1870 வரை சென்னை மாநகருக்கென முறையான குடிநீர் விநியோக அமைப்பு இல்லை. பொதுப்பணித்துறை, தலைமைப் பொறியாளராக இருந்த ஜேம்ஸ் பிரேசர் (James Frazer), வேலூர் அருகே உற்பத்தியாகும் கொசஸ் தலையாற்றில் இருந்து தண்ணீரை சோழவரம் மற்றும் செங்குன்றம் ஏரிகளுக்குத் திருப்பி, கீழ்ப்பாக்கம் நீரேற்று நிலையத்துக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் வகுத்தார். அதுதான் சென்னையில் முறையாகக் கொண்டு வரப்பட்ட முதல் குடிநீர் விநியோகத் திட்டம். இதை 1872-இல் செயல்படுத்தினார். குழாய் வழியாக நீர் வழங்கும் திட்டமாகும் (Piped Water Supply System) பிரேசர் திட்டத்தை கொண்டுவந்தபொழுது மக்கள் தொகை 047 மில்லியன், தற்போது 174 சதுர கிலோமீட்டரில் 4.6 மில்லியன் மக்கள் உள்ளனர்.

  சென்னை மாகாண கவர்னராக, பெண்லாண்ட் பிரபு (H.E Lord Penland) இருந்தபொழுது, சிறப்பு பொறியாளராக இருந்த J.W. மெட்லி (J.W. Madley) கீழ்ப்பாக்கம் நீர் சுத்திகரிப்பு மையத்தை 17, டிசம்பர்,1914-இல் திறந்தார்.

  1962—இல் கிருஷ்ணா - கோதாவரி நீரைக்கேட்டு, N.D. குல்காதி தலைமையில் ஒரு மனு அளிக்கப்பட்டது. ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. 

  இந்திராகாந்தியின் முயற்சியில், 15, பிப்ரவரி,1976-இல் சென்னையில் பொதுக்கூட்டத்தில் ஆற்றங்கரை மாநிலங்களிடையே, (Riparian States)  இத்திட்டம் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதில் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

  27, அக்டோபர், 1978-இல் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து திறந்தவெளி வாய்க்கால் மூலம் தண்ணீர்  பெற மாநில அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. 15, ஜூன்,1978-இல் நடைபெற்ற முதலமைச்சர்கள் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

  ஆந்திர பிரதேசத்தில் குறுகியகால குடியரசுத்தலைவர் ஆட்சிக்குப்பின் (10, அக்டோபர் முதல் 10, டிசம்பர், 1973) 6, மார்ச், 1978 வரை ஜலகம் வெங்கலராவ் முதலமைச்சராக இருந்தார். அவருக்குப்பின் வந்த Dr. சென்னாரெட்டியும், தமிழ்நாடு முதலமைச்சர் M.G.ராமச்சந்திரனும் 15 டி.எம்.சி தண்ணீர் ஒப்பந்த்தத்தில் கையெழுத்திட்டனர்.

  அதன்பின் தெலுங்கு தேசம் கட்சியை தொடங்கி ஒன்பதே மாதத்தில், அதாவது ஜனவரி, 1983-இல் ஆட்சியை பிடித்தார் N.T.ராமாராவ். தமிழ்நாட்டில் 1977 முதல் 1987 வரை M.G.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்தார்.
  M.G.R. மீது மிகவும் மதிப்பு கொண்டவர் என்.டி.ராமராவ். இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டு பேரும் தங்கள் மொழி படவுலகில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கியவர்கள்.. இருவரும் அரசியலில் ஈடுபட்டு தனிக் கட்சி தொடங்கி முதல் அமைச்சரானவர்கள்..


  சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆந்திரத்தின் வறட்சியான தென்பகுதிகளுக்குப் பாசனத்துக்கு தண்ணீர் தேவைப்படுவதைக் கருத்தில் கொண்டும், சென்னையின் குடிநீர்ப் பற்றாக்குறையை மனதில் கொண்டும் இத்திட்டத்தை நிறைவேற்ற இருமாநில முதல்வர்களும், திரையுலக நண்பர்களுமான என்.டி.ராமராவும், எம்.ஜி.ஆரும் மிகுந்த முனைப்புகாட்டினர். அதன்படி அந்த சிறப்பு மிக்க ஒப்பந்தம் 18,ஏப்ரல், 1983-இல் கையெழுத்தானது. அதன் பின் மகாராஷ்ட்ரா, அக்ர்நாடக, ஆந்திரபிரதேச, தமிழ்நாடு முதலமைச்சர்கள் முன்னிலையில் 25,மே, 1983-ல் இந்திரா காந்தி அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் M.G.ராமச்சந்திரன் திட்ட முன்பணம்  ரூபாய் 30 கோடிக்கான செக்கை கொடுத்தார்.

  அதன்பின் கிருஷ்ணா தண்ணீர் தமிழ்நாடு-ஆந்திரபிரதேச எல்லையை கடந்தது 29, செப்டம்பர்,1996 ஆகும்.

  ‘சாய்-கங்கா கால்வாய்’


  தமிழக தலைநகர் மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து 25 கி.மீ. கால்வாய் பாதையை ரூ. 200 கோடியில் சீரமைத்த சத்யசாய் பாபா சென்னை மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்று வாழ்கிறார். 

  ஆந்திர மாநிலம் கண்டலேரு நீர்தேக்கத் திலிருந்து 15 டி.எம்.சி. நீர் அனுப்பப்பட்ட போதிலும் 1996 முதல் 2000-ம் ஆண்டு வரை கால்வாய் சரிவர பராமரிக்கப் படாததால் சென்னைக்கு உரிய தண்ணீர் கிடைக்கவில்லை. சில வருடங்கள் அரை டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே கிடைத்தது.

  இப்படி இந்தத் திட்டம் கானல் நீராகிக் கொண்டிருந்த நிலையில் தான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அறக்கட்டளை இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியது. சாய்பாபா சொன்ன வார்த்தைகளை செயல்படுத்தும் பொறுப்பை சத்யசாய் சென்ட்ரல் டிரஸ்ட்  19, ஜனவரி, 2002 ஏற்றுக்கொண்டது. முதலில் கண்டலேரு நீர்தேக்கத்தை 35 டி.எம்.சி-யிலிருந்து 67 டி.எம்.சி-யாக உயர்த்தியது. கண்டலேருவிலிருந்து பூண்டி வரை 65 கி.மீ. நீள கால்வாயின் பக்க வாட்டு சுவர்கள் உறுதியான காங்கிரீட் கலவைகளால் பலப்படுத்தப்பட்டது. மேலும், தண்ணீரை பூமி உறிஞ்சுவதைத் தடுக்க வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாலி எதிலின் நார்வகைகளையும் பயன்படுத்தி சர்வதேச தரத்தில் சீரமைத்தனர். இப்பணிக்கு 4000 பேர்களும், 50 பொறியாளர்களும் பணியாற்றினர். இந்தப் பணிகள் முடிந்ததும் 2004 நவம்பர் 24-ல் சத்ய சாய் பாபாவின் பிறந்த நாளில் கண்டலேருவில் திறக்கப்பட்ட தண்ணீர்த் தடைகள் எதுவுமின்றி துள்ளிப் பாய்ந்து, நாலே நாட்களில் தமிழக எல்லையான ஜீரோ பாயின்ட்டைத் தொட்டது.  தெலுங்கு - கங்கை என ஆந்திராவில் அழைக்கப்பட்ட இந்தத் திட்டம் தற்போது ‘சாய்-கங்கா’ என ஆந்திர அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

  ஒப்பந்தம்
  கிருஷ்ணா நதியிலிருந்து மெட்ராஸ் மாநகருக்கு குடிநீர் பெற ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம்
  நாள்:18.4.1983

  சென்னை மாநகராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை கணக்கில் கொண்டு, தமிழ்நாடு போதிய நீர்வள ஆதாரங்கள் இல்லாததாலும், மகாராஷ்ரா, கர்நாடக, ஆந்திர பிரதேச அரசுகள் 14, ஏப்ரல், 1976 அன்று தங்களின் பங்குகளிலிருந்து 5 டி.எம்.சி கிருஷ்ணா நீரை வழங்க ஒப்புக் கொண்டு, அதன்மூலம் தமிழ்நாடு வருடத்திற்கு 15 டி.எம்.சி குடிநீரை மெட்ராஸ் மாநகருக்கு வழங்கவழிவகை செய்தது.

  அவ்வாறிருப்பதால், 27, அக்டொபர், 1977-இல் மத்திய வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன அமைச்சரால் திரட்டப்பட்ட கூட்டத்தில், கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்ரா, ஆந்திரபிரதேச அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 முதல் அக்டோபர் கால கட்டத்தில், ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்திலிருந்து 15 டி.எம்.சிக்கு மிகாமல், திறந்தவெளி கால்வாய்கள் வழியாக, ஆரம்பப் புள்ளியானது ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு அரசுகளிடையே ஒப்புக் கொள்ளப்பட்டு, சோமசீலா மற்றும் ஸ்ரீசைலம் இடையே வெளியேற்றம் 1500 கியூசெக்ஸ்க்கு மிகாமல் பார்த்துக் கொள்ளுமாறு, வெளிபோக்கி வசதி செய்து, இரு மாநிலங்களுக்கிடையே ஒப்புக் கொள்ளப்பட்டு, ஸ்ரீசைலம் முதல் பூண்டி வரை நீர்வரத்துக்கான செலவு, பராமரிப்பு, இயக்கம் போன்ற செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

  மேலும் அவ்வாறிருப்பதால், மேற்கூறிய ஒப்பந்தம் சம்மந்தப்பட்ட மாநில அரசுகளின் ஏற்புறுதிக்கு (Ratification) உட்பட்டது. 

  மேலும் அவ்வாறிருப்பதால், கர்நாடகா, தமிழ்நாடு, மஹாராஷ்ட்ரா அரசுகள் 1977-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை ஏற்புறுத்தி கொள்ளும் போது, ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் எவ்வகையிலும் ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணாநதி நீரை வேளாண்மைக்கும், மற்ற நுகர்வு பயன்பாடுகளுக்கு பயன்படுத்தும் உரிமையை பாதிக்கக் கூடாது;

  மேலும் அவ்வாறிருப்பதால், மேலே குறிப்பிட்ட முடிவுகளை பின்பற்றும் வகையில் ஆந்திரபிரதேசம், தமிழ்நாடு முதலமைச்சர்கள் 15,ஜூன்,1987-இல் ஹைதராபாத்தில் சந்தித்து, இத்திட்டம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவும் ஆய்வின் முன்னேற்றங்களை இணைப்புக் குழுவினால் (Liaison Committee) கண்காணிக்கப்பட்டது.

  மேலும் அவ்வாறிருப்பதால், ஆந்திரபிரதேச மற்றும் தமிழ்நாடு அரசுகள் ஆய்வுகளை மேற்கொண்ட வேளையில், தொழில்நுட்ப நீதியான சாத்தியக் கூறுகளை நிறுவின.

  மேலும் அவ்வாறிருப்பதால், ஆந்திர அரசு கிருஷ்ணா நீரை மாநிலத்திற்குள், வேளாண்மை மற்றும் இதர காரியங்களுக்கு பயன்படுத்த பல திட்டங்களிலும், இரு மாநிலங்களும் பொது திட்டங்களிலும் அங்கம் வகித்தது.

  இப்போது, ஆந்திரபிரதேசம் தமிழ்நாடு தங்கள் வழித்தோன்றல்கள், பிரதிநிதிகளுக்காக, அரசுகள் ஒப்புக் கொண்டு தங்களையும், தங்களை பிணைத்துக் கொண்டதற்கு பின்வருமாறு சாட்சியாயின:-

  (i) ஆந்திரபிரதேச மற்றும் தமிழ்நாடு அரசுகள் 1977-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கூறு-(iv)இன் படி கடப்பா தாலுக்காவிலுள்ள சென்னமுக்கபள்ளியிலிருந்து கால்வாய் எடுத்துக் கொள்ள (Off-take) ஒப்புக் கொள்கிறது. 

  (ii). ஆந்திரபிரதேச மற்றும் தமிழ்நாடு அரசுகள் மெட்ராஸ் மாநகர குடிநீர் திட்டத்தின் அங்கங்கள் அட்டவணை “A”-இல் குறிப்பிட்டுள்ளவாறு, ஆந்திரபிரதேச எல்லைக்குள், சொந்த ஆட்களையும் பொருட்களையும் வைத்துக் கொண்டு கட்ட வேண்டும். செலவுத்தொகை பின்வரும் கூறுகளில் விவரித்தவாறு பிரித்துக் கொள்ளப்படும்.

  (iii). ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் அட்டவணை “A“ யில் குறிப்பிட்டுள்ள வாய்க்கால், பராமரிப்புடனான கட்டுமான வளர்ச்சி, ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் அட்டவணை “B“ யின் படி செலவுகளை பங்கிட்டுக் கொள்ள ஒப்புக்கொள்கிறது.

  (iv) ஆந்திரபிரதேச மற்றும் தமிழ்நாடு அரசுகள் மெட்ராஸ் மாநகர குடிநீர் திட்டத்தினைப் பொறுத்தவரை தண்ணீர் அனுப்பும் முறைகளில் ஏற்படும், அனுப்புகை இழப்பை(Transmission Loss, ஸ்ரீசைலம் முதல ஆர்திரப்பிரதேசம்-தமிழ்நாடு எல்லை வரை வருடத்திற்கு 3 டி.எம்.சி என ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்த தீர்வு நடவடிக்கைகளுக்கான (Remudial Measures) செலவுகள், நீர் அனுப்பும் முறை, தண்ணீர் பெறப்பட்ட விகித்ததிற்கு ஆந்திர பிரதேசம் தமிழ்நாடு அரசுகள் பொதுவாக பகிர்ந்து கொள்ளும். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் பெறும் முறைகளில் முழு தொகையும் ஏற்கிறது.

  (v) ஆந்திரப் பிரதேச அரசு கண்டலேறு நீர்த்தேக்கத்தில் மெட்ராஸ் மாநகர குடிநீருக்காக 5 டி.எம்.சி தண்ணீரை தேக்கிக் கொள்ள ஒப்புக்கொள்கிறது. தமிழ்நாடு எல்லைவரை அட்டவணை “C“ யில் குறிப்பிட்டுள்ள கூட்டு நீர்ப்பாசனம்-நீர்வரத்து(Irrigation-cum-watersupply) கால்வாய் வழியாக, தமிழக எல்லையில், உட்கூறு-(iv) இல் குறிப்பிட்ட இழந்த தண்ணீர் (Less Losses) இன்றி, வருடத்திற்கு 15 டி.எம்.சி தண்ணீரை அனுப்ப ஒப்புக்கொள்கிறது. 

  2. ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு அரசுகள் அட்டவணை “B“ யில் குறிப்பிட்டுள்ள பணிகளை, கூட்டு திட்ட அறிக்கையில் உள்ளவாறு நிறைவேற்ற ஒருமனதாக ஒப்புக் கொள்கிறது. மெட்ராஸுக்கு தண்ணீர் அனுப்பும் திட்டத்தில்,  கூட்டு அறிக்கையில் படுகையளவில், நீரியல் (Hydraulic) மாற்றங்கள் செய்ய வேண்டியிருந்தால், வாய்க்காலில் செய்ய வேண்டியிருந்தால், இணைப்புக்குழுவின் (Liaison Committee) ஒப்புதலுக்கு பின்னரே நடைமுறை படுத்தமுடியும்.

  3. தமிழக அரசு இதன் முலம் திட்டத்தில் குறிப்பிட்ட விகிதத் தொகையை, அட்டவணை “B“ யில் உள்ள வழிகாட்டுதலின்படி ஏற்றுக் கொள்ள, ஒப்புக் கொண்டு, திட்டத்திற்கு தேவையான நிதியை முன்னதாக ஒதுக்க இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொள்கின்றன. தமிழ்நாடு அரசு செலுத்த வேண்டிய தொகையை அரையாண்டுக்கு ஏப்ரலிலும், ஆந்திர அரசு அக்டோபரிலும் செலுத்த வேண்டும். இறுதியில் மீதமுள்ள தொகை வரும் ஆண்டுகளில் சரிசெய்துகொள்ளப்படும். ஒவ்வொரு திட்டத்திற்கு முன் திட்டச்செலவு மொழியப்படும், தமிழ்நாடு அரசின் செலுத்தும் தொகையாக ஒழுங்குபடுத்தப்படும்.

  4. அட்டவணை “B“ யில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசு, ஒட்டுமொத்த சேமிப்பு மற்றும் அனுப்பும் அமைப்பை (Storage-cum-Conveyance system) பராமரிப்புச் செலவின், விகிதத்தை ஏற்றுக் கொள்ள  ஒப்புக் கொள்கிறது. அந்த செலவுத்தொகை ஏப்ரல் மாதத்தில் கொடுக்கப்பட வேண்டும். மேலும், ஆந்திர அரசு குறிப்பிடும் செலவினங்களில் மீதி வரும் வருடங்களில் சரி செய்து கொள்ளப்படும்.

  5. இணைப்புக் குழுவானது, திட்டப்பணிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும். மேலும் திட்டம் முடியும் வரை இரு அரசுகளின் ஒத்துழைப்பை உறுதிசெய்யும்.

  6. கிருஷ்ணா நதிநீர் தமிழ்நாடு அரசு குடிநீருக்கு மட்டுமின்றி வேறு காரியங்களுக்கு கிடையாது.

  7. ஆந்திரபிரதேச மற்றும் தமிழ்நாடு அரசுகள் மெட்ராஸ் மாநகர குடிநீர் திட்டம் நிறைவடைய குறைந்தபட்சம் 3 வருடங்களும், அதிகபட்சம் 6 வருடங்களும் ஆகுமென ஒப்புக்கொள்கிறது. இரு அரசுகளும் திட்டம் விரைவில் முடிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இந்நோக்கத்தின் வழியில் மற்றும் ஒப்பந்தத்தின் கூறு-3 இன் கூறப்பட்டுள்ள விதிகளுக்குட்பட்டு, தமிழ்நாடு அரசு, ஆந்திரபிரதேச அரசுக்கு ஏப்ரல் அரையாண்டு பணம் ரூபாய் 30 கோடியை ஏப்ரல் 1983-ல் செலுத்தவும், 1980-84, 1984-85, 1985-86 இல் அட்டவணை “A“ இல் குறிப்பிட்ட அம்சங்களுக்கு செலுத்த ஒப்புக் கொள்கிறது. 

  8. முன்சென்ற விதிகளின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் எதுவும், ஆந்திர பிரதேச அரசை கிருஷ்ணா நீரைப் பயன்படுத்துவதை சுருக்கவோ அல்லது உரிமையை பறிக்கவோ பொருள்கொள்ள முடியாது.

  9. அட்டவணை “A“ இல் குறிப்பிட்டுள்ள அங்கங்களுக்கு பாதகமின்றி, ஆந்திர மாநில அரசு கிருஷ்ணா நதி நீரை மாநிலத்திற்குள் பயன்படுத்துவதில் அவ்வப்போது அங்கங்களை சேர்த்துக் கொள்ளலாம்.


  ஒப்பம்/-(18.4.1983)                                                         ஒப்பம்/-(18.4.1983)
  N.T.ராமராவ்                                                                  M.G.ராமச்சந்திரன்
  ஆந்திரபிரதேசம்                                                        தமிழ்நாடு
  முதலமைச்சர்                                                            முதலமைச்சர்  அட்டவணை “A“

  திட்டத்தின் அங்கங்கள்

  இத்திட்டம் பின்வரும் அங்கங்களைக் கொண்டிருக்கும்.

  1. பொத்திரெட்டிபாடு தலை மதகு (Head Regulator) முதல் ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம் வரையிலான அணுகு வாய்க்கால்

  2. பொத்திரெட்டிபாடுவிலுள்ள தலை மதகு

  3. பொத்திரெட்டிபாடுவிலிருந்து, பனகாசெர்லா குறுக்கு மதகு (Cross Regulator)வரையிலான கால்வாய்

  4. பனகாசெர்லா குறுக்கு மதகு

  5. பனகாசெர்லா முதல் நீர் ஏற்பு முனை வரையிலான முக்கிய கால்வாய்

  6. சோமசீலா வரையிலான திறந்தவெளி கால்வாய்

  7. சோமசீலா நீர்த்தேக்கம் நிலை-II

  8. சோமசீலா முதல் கண்டலேறு நீர்த்தேக்கம் வரையிலான கால்வாய்

  9. கண்டலேறு நீர்த்தேக்கம்

  10. கண்டலேறு நீர்த்தேக்கம் முதல் தமிழ்நாடு ஆந்திர பிரதேச எல்லை வரையிலான கால்வாய்

  ஒப்பம்/-(18.4.1983)                                                         ஒப்பம்/-(18.4.1983)
  N.T.ராமராவ்                                                                  M.G.ராமச்சந்திரன்
  ஆந்திரபிரதேசம்                                                        தமிழ்நாடு
  முதலமைச்சர்                                                            முதலமைச்சர்

  அட்டவணை “B“

   

      


  குறிப்பு: அங்கப்பணிகளில் மாறுதல்கள், சேர்த்தல்கள் தவிர பிற பணிகளுக்கான செலவுகள் புதிதாக வரையப்பட வேண்டும்

  ஒப்பம்/-(18.4.1983)                                                         ஒப்பம்/-(18.4.1983)
  N.T.ராமராவ்                                                                  M.G.ராமச்சந்திரன்
  ஆந்திரபிரதேசம்                                                        தமிழ்நாடு
  முதலமைச்சர்                                                            முதலமைச்சர்


  அட்டவணை “C“

  தமிழ்நாடு எல்லையில் வழங்கப்பட வேண்டிய தண்ணீர் அட்டவணை

   

  தமிழ்நாட்டிற்கான வரத்தை கணக்கிட, அளவீட்டுக் கருவியை கூட்டு கூர்நோக்கின் போது    , தமிழ்நாடு எல்லையில் நடத்திட இரு மாநில அரசுகளும் ஒப்புக் கொள்கின்றன.

  ஒப்பம்/-(18.4.1983)                                                         ஒப்பம்/-(18.4.1983)
  N.T.ராமராவ்                                                                  M.G.ராமச்சந்திரன்
  ஆந்திரபிரதேசம்                                                        தமிழ்நாடு
  முதலமைச்சர்                                                            முதலமைச்சர்

  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  flipboard facebook twitter whatsapp