வெல்வாரா கமல்?

கமல்ஹாசன் தனக்கு என்ன தெரியாதோ அதை 100 சதவிகிதம் கற்றுக் கொண்டு வந்து திரைப்படத்தில் தோன்றுவார்.
வெல்வாரா கமல்?


ரஜினிகாந்த் தனக்கு என்ன தெரியுமோ அதை மட்டும் 100  சதவிகிதம் சரியாக வெளிப்படுத்தித் திரைப்படத்தில் தோன்றுவார். கமல்ஹாசன் தனக்கு என்ன தெரியாதோ அதை 100 சதவிகிதம் கற்றுக் கொண்டு வந்து திரைப்படத்தில் தோன்றுவார். இதனால் இவர்கள் இருவரும் இன்றளவும் முதன்மைக் கதாநாயகர்களாகத் தமிழக மக்களால் போற்றப் படுகிறார்கள்.

தமிழ்த்திரையுலகின் 40 ஆண்டுகால வரலாற்றில் இவர்களின் ஆளுமையே கோலோச்சி நிற்கிறது. எம்ஜியார் சிவாஜிகணேசன் ஆகியோருக்கு அடுத்து மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்த ரஜினியையும் கமலையும் பின்னுக்குத் தள்ள யாராலும் முடியவேயில்லை.

இவர்களின் காலத்தில் பல வெற்றிப் படங்களைத் தந்த சிவக்குமார், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு, கார்த்திக், மோகன், ராமராஜன், டி.ராஜேந்தர், கே.பாக்யராஜ் ஆகியோரும் நிகழ்காலப் போட்டியாளர்களாகத் திகழும் அஜித், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரும் தமக்கான இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிவதற்கு மாற்றாக, ரஜினி கமலின் இடங்களைக் கைப்பற்ற முடியவில்லை.

தமிழ்த்திரைப்படம் என்றால் முதலில் நிற்கும் இரண்டு பெயர்களாகத் தற்போது நீடித்துக் கொண்டிருக்கும் ரஜினியும் கமலும் அரசியல் குறித்துப் பேசத் தொடங்கியுள்ளனர். இவர்கள் இருவரும் அரசியலுக்கு வருவார்களா என்ற கேள்விக் குறிக்கு விடையைத் தமிழக அரசியல்களம் எதிர்பார்க்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற பரபரப்பு எழுந்தாலும் அதை ரஜினிகாந்த் அவர்களே முடக்கிவிடுவார். ஒரு மாதத்திற்கு முன்பு ரஜினியின் அரசியல் எண்ணம் குறித்துத் “தமிழரல்லாதவர்“ என்ற முழக்கம்   ஒலித்தபோது,  “அவரவர் அவரவர் வேலையைப் பாருங்கள் நான் என் வேலையைப் பார்க்கிறேன்“, என்று தானாகவே பேசித் தனது அரசியல் எதிர்காலம் குறித்த பரபரப்புக்குத் தடை விதித்தார்.

கமல்ஹாசன் அரசியல் குறித்துப் பேசிவந்தாலும் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதைப் பலமுறை உறுதிபடுத்தி வந்துள்ளார். ஆனால் தற்போதைய அவரின் செயல்பாடுகளும் பேச்சொலிகளும் அரசியலுக்குக் கமல் வந்துவிட்டத் தோற்றத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

1994ல் கமல்ஹாசன் தேவர் மகன் என்கிற வெற்றிப்படத்தைக் கொடுத்த பிறகு அதே வணிகநுட்பத்தைப் பயன்படுத்தி வணிகத்தரத்தில் வெற்றியைத் தரக்கூடிய படங்களைத் தேர்வு செய்திருக்க முடியும். ஆனால் மகாநதி என்கிற காவியப் படத்தைத் தருகிறார். தமிழுக்கு மட்டுமல்லாது உலகத் திரைப்படத்திற்கும் பாடம் சொல்லும் படமாக மகாநதி உருவாக்கப்பட்டிருந்தது.

பதின்வயது பெண்பிள்ளைகளின் பெற்றோர் மட்டுமல்லாது இதயம் உள்ள ஒவ்வொரு மனிதரையும் அழவைத்த படமாக மகாநதியைக் கமல் கொடுத்தார். அடுத்த படமான மகளிர் மட்டும் படத்தையும் அடுத்ததாக நம்மவர் படத்தையும் குருதிப்புனல் படத்தையும் கமல் கொடுத்தார்.

வழக்கமான வணிகத்தரத்திலிருந்து சமூகம் சார்ந்த தனது எண்ணம் சார்ந்த படங்களை வழங்குவதற்குக் கமல் முடிவெடுத்த அந்தச் சூழலில் தான் தனக்கான முதலிடத்தை ரஜினிக்குக் கமல் விட்டுக் கொடுக்கிறார். அதன் பிறகு அவர் வணிகத்தரமான படத்தை எடுத்தாலும் மனிதநேயத்தை மையப்படுத்துகிற கதைகளைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்தினார்.

இவ்வாறு திரைக்களத்தில் ஆளுமை செலுத்தி வந்த கமல்,  பிக்பாஸ் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், எல்லாத் துறைகளிலும் ஊழல் என்று பேசினார். இந்தப் பேச்சுக்குப் பதில் சொல்லத் தெரியாத தமிழக அமைச்சர்கள் கமலை ஒருமையில் பேசியும், பொத்திக் கொண்டு இருங்கள் என்று பேசியும் தங்களது அரசியல் நாகரிகத்தைக் கேவலப்படுத்திக் கொண்டார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. அரசியல் களத்தில் சந்திக்கக் கூடிய எதிர்க்கட்சியினரைக் கூட மதிப்பு குறையாமல் நட்புறவாட வேண்டும் என்பதே அரசியல் இலக்கணம். இந்த இலக்கணத்திற்கு இழிவுதரும் வகையிலேயே அமைச்சர்களின் பேச்சு அமைந்தது.

அமைச்சர்கள் இவர் மீது கூறுகிற, “கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெறியக் கூடாது“ போன்ற வார்த்தைகள் யாவும் அமைச்சர்கள் மீதே வீசிக் கொள்கிற கற்கள் தான் என்பதை அவர்கள் உணரவேயில்லை.

அனைத்துத் துறைகளிலும் ஊழல் என்று சொல்லக் கூடாது என்கிறார் அமைச்சர். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது ஏன்? தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் அனைத்துத் துறை ஊழியர்களும் பணியில் இருக்கிறார்கள். எல்லாத்துறை அரசு ஊழியர்களும் இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். ஓட்டுக்குப் பணம் என்கிற ஊழலைத் தடுக்க அவர்களால் முடிந்ததா? இவர்களின் துணையில்லாமல் பணம் வழங்குதல் நடந்ததா? இடைத் தேர்தல் நிறுத்தப்பட்ட நிகழ்வே, தமிழகத்தில் ஊழல் நிலவுவதற்குச் சான்றாகும்.

இந்த நிலையில் “இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தபோதே அரசியலுக்கு வந்துவிட்டேன்“ என்று கமல் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா? வந்தால் வெல்வரா என்கிற வினாக்கள் பற்றிக் கவலையில்லை. ஆனால், தன்னுடைய சமூகவலைத்தளப் பதிவில், தனது தொண்டர்களும், பணத்திற்கு வாக்களிக்காத மக்களும் தாங்கள் சந்தித்த ஊழல்களை அரசுக்கு அனுப்பிடுங்கள் என்று அறைகூவல் விடுத்துள்ளார். இவரின் இந்த அழைப்பில் இவர் வெற்றி காண்பாரா? என்ற வினாவிற்கான விடையைத்தான் நாம் தேட வேண்டியுள்ளது.

ஏனெனில் ஊழல் என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய். தான் பெற்றெடுத்த மகனுக்குப் பிறப்புச் சான்றிதழ் பெறுவதில் தொடங்குகிற இலஞ்சம், தந்தையின் மறைவிற்குப் பிறகு மகன் இறப்புச் சான்றிதழ் வாங்குகிற வரை தொடர்கிறது. முடிவேயில்லாத இலஞ்சம் இது.

இந்த இலஞ்சத்தினால் கருப்புப் பணம் சேர்தல், வறுமை அதிகரித்தல், தூய்மை கேடடைதல், பயங்கரவாதம் பெருகுதல், ஒழுக்கக் கேடுகள் மிகுதல், மனிதநேயம் ஒழிதல், நேர்மையான பணியாளர்கள் பழிவாங்கப்படுதல், ஊழியர் சங்கங்கள் வழிதவறுதல், ஆட்சியாளர்கள் கடமை தவறுதல் எல்லாவற்றிற்கும் மேலாக இயற்கை அழிதல் போன்ற தீமைகள் ஏற்படுகின்றன. இந்த இலஞ்சத்திற்கு எதிரான எந்தக் குரல் வந்தாலும் மக்கள் உடனடியாக ஆர்வத்தோடும் ஆசையோடும் ஏங்குகிறார்கள். இந்த ஏக்கப் பார்வையோடு கமலைப் பார்க்கும் போது அதற்கு அவர் என்ன தீர்வு வைத்திருக்கிறார்?

ஊழல் மலிந்திருக்கிறது, பொத்தாம் பொதுவாகச் சொல்லாமல் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்று தமிழக அமைச்சர் கமலிடம் கேள்வி கேட்ட அடுத்த நாளிலேயே காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர் மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோர் ஊழல் தடுப்புக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இந்த மூன்று பேரைத் தவிர பிற அனைத்து அரசுத் துறை ஊழியர்களில் எவரும் அன்றைய தினத்தில் ஊழல் செயலில் ஈடுபடவே இல்லை என்று நம்பலாமா? துணிச்சல் உள்ள இந்தியன் முடிவெடுக்கும்போது ஊழல்வாதிகள் கைது செய்யப்படுகிறார்கள். துணிச்சலும் தெளிவும் இல்லாத மக்கள் ஊழலை வேடிக்கை பார்க்கும் போது இலஞ்சம் வளர்கிறது.

இலஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்ற மனநிலைக்கு மக்கள் வந்திருக்கிற சூழல் விடுதலை இந்தியாவில் தொடர்ந்து நிகழ்கிறது.

இந்தச் சூழலில் அனைத்துப் பொது மக்களும் இலஞ்சத்தால் பாதிக்கப்படுவதை இணையம் வழியில் புகார் அளிக்கக் கூறியுள்ளார் கமல். அமைச்சர்களின் மின்னஞ்சல் முகவரிகள் காணாமல் போனதும் ஊழல் தடுப்புக் காவல் துறைக்குக் கடிதம் எழுதச் சொல்கிறார்.

திரைப்படங்களில் வெளிவந்த இந்தியனும் ரமணாவும் நடைமுறையில் ஊழலை ஒழித்துவிடாது என்பது போல தான், கமலின் அறிவுரைகளும் இருக்கின்றன.

பசலி, ஜமாபந்தி, சிரஸ்தார், தாசில்தார், மாமூல், தண்டல், கலெக்டர் போன்ற வார்த்தைகள் பாபர் காலம் தொடங்கி, ஷெர்ஷா ஆட்சியில் தொடர்ந்து மொகலாயர் ஆட்சியிலும் ஆங்கிலேயர் ஆட்சியிலும் கடைபிடிக்கப்பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளன. இந்தச் சொற்களைப் போலத்தான் சட்டங்களும் மாற்றப்படாமல் உள்ளன. அடிமைத்தனத்தை உருவாக்கக் கூடியதாகவும், மக்களைச் சுரண்டக் கூடியதாகவும் இருக்கக் கூடிய வருவாய்த்துறைச் சட்டங்களை வைத்துக் கொண்டு எந்தச் சீர்திருத்தத்தையும் உருவாக்கிவிட முடியாது. ஊழலை ஒழித்துவிட முடியாது.

விஸ்வரூபம் திரைப்படத்தில் 5 நிமிடச் சண்டைக்காட்சி விறுவிறுப்பை மட்டுமே பயன்படுத்தி 100 கோடி ரூபாய் மதிப்பிலான, 3மணி நேரத் திரைப்படத்திற்குத் திரைக்கதை அமைக்கிற துணிச்சல் கமலுக்கு மட்டுமே உண்டு. அதே திரைப்பட நுட்பம் ஊழலுக்கு எதிரான போரில் பயன்படுமா?

ஊழல் என்பது வெறும் அரசு அலுவலகங்களில் நடப்பது அல்ல. அரசியல்வாதிகள், மதவாதிகள், முதலாளிகள், அரசுஅதிகாரிகள் ஆகிய நான்கு தூண்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதுதான் ஊழல்.  இந்தப் பண வேட்டைத் தூண்களுக்கு எதிராக மாணவர்களையும் இளைஞர்களையும் பெண்களையும் சான்றோர்களையும் எழுச்சி பெற வைப்பது என்பது சாதாரண வேலை யல்ல.

இவரின் ரசிகர்களால்  ஊழல் ஒழிப்பு வேலையை உடனடியாகச் செய்து விட முடியாது. கமல் சொல்வது போல் இணையத்தில் புகார் அளித்தாலும், ஊழல் தடுப்புத் துறைக்குப் புகார் அளித்தாலும் அதற்கடுத்துப் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துத் தொடர்ந்து கண்காணித்து, இந்திய தகவல் அறியும் உரிமைச்சட்டத்தைப் பயன்படுத்தி, அந்தப் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்ககைகள் என்ன என்று கேட்கத் தெரிய வேண்டும். இந்தியத் தகவல் அறியும் உரிமைச்சட்டம் குறித்தும், ஊழல் தடுப்புக் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்தும் மக்களுக்குத் தெளிவான புரிதல் இல்லை. இந்த மக்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். பயிற்சி கொடுக்க வேண்டும். அப்போதுதான் கமலின் அறைகூவல் வெற்றிபெறும்.

“பாதகஞ்செய்பவரைக் கண்டால் நாம்
பயங் கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா”

என்ற பாரதியின் வீரவரிகளைப் பட்டித் தொட்டி எங்கும் சேர்க்காமல் கமலின் எண்ணம் நிறைவேறாது.

ஊழல் ஒழிப்புச் சிந்தனை என்பது பொதுமக்களுக்குத் தானாக வந்துவிடாது. “ நாட்டின் இரத்தத்தைச் சுட்டெரிக்கிற ஊழல் என்னும் நெருப்புடன் போர் தொடுக்க, நம் எண்ணத்திலும் செயலிலும் இரத்தத்திலும் தீ எரிந்து இதயம் கொதிக்க வேண்டும், நம் தாய்நாட்டின் கற்புத்தன்மையை ஊழலால் சூறையாடுகிற அயோக்கியர்களுக்குத் தண்டனை பெற்றுத் தரவேண்டும்”  என்று போர் முழக்கம் எழுப்புகிற உண்மை இந்தியர்களை உருவாக்கிட வேண்டும்.

தனக்குத் தெரியாததை 100 சதவிகிதம் கற்றுக் கொண்டு செயல்படுத்தும் கமல்காசன் ஊழல் ஒழிப்பதற்கான செயல்திட்டங்களை வகுத்துக் கொண்டு, அதை மக்களுக்கு 100 சதவிகிதம் சொல்லிக் கொடுத்துத் தட்டி எழுப்புவதன்  மூலம் தான் அவரின் அறைகூவலை வெற்றிபெற வைக்க முடியும். செய்வாரா கமல்? அப்போதுதான் வெல்வாரா கமல்? என்ற கேள்விக்கு விடை தெரியும்.

“கொலை வாளினை எடடா மிகு
கொடியோர் செயல் அறவே
குகைவாழ் ஒரு புலியே உயர்
குணமேவிய தமிழா”

என்கிற புரட்சிக்கவிஞரின் போர்வாள்களை உருவாக்குவாரா கமல்? பொறுத்திருந்து பார்ப்போம்.

- சி.சரவணன் 
தொடர்புக்கு - 9976252800 
(senthamizhsaravanan@gmail.com)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com