சுடச்சுட

  

  விவசாயப் பிரச்னைக்குத் தீர்வு - ரஜினி சார் நீங்க மனசு வெச்சா முடியும்...!

  By Rm Thiruchelvam  |   Published on : 26th May 2017 11:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajinikanth14

  நடிகர் ரஜினிகாந்த் நினைத்தால் விவசாயப் பிரச்னையை தீர்க்க முடியும் என்று தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

  இது குறித்து தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், ரஜினிகாந்த்துக்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளனர்.

  அந்த மடலில், 

  வணக்கம்.

  ‘போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்’ என்கிற தங்களது மூன்று வார்த்தைகள் தேசிய அளவில் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் தங்களுக்கு இயற்கை வழங்கியிருக்கும் ஆற்றலுக்கான, அநுக்ரஹத்திற்கான ஒரு சான்று.

  எங்களது இந்த கடிதம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர் குறித்தது. ஆம். விவசாயத்தை, விவசாயிகளை காப்பாற்றுவதற்கான போர். அது எழுபது கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பற்றியது. 130 கோடி மக்களின் தரமான உணவு பற்றியது. நாட்டின் உணவு பாதுகாப்பு, பொருளாதாரம், உணவு பணவீக்கம் தொடர்புடையது.

  விவசாயிகளுக்கு உதவுவதில் மூன்று வகை உண்டு. 1. விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்கிக்கொடுப்பது, சிலரின் கடனை அடைப்பது போன்றவை; 2. விவசாயிகள் பிரச்னைகள் தொடர்பான போராட்டங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, போராட்டங்களில் பங்கேற்பது. 3. அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் அரசிடம் நிரந்தர தீர்வை வலியுறுத்துவது அல்லது தீர்வை முன்வைப்பது.

  இந்திய விவசாயிகளுக்கு வங்கிகள் மூலமாக தற்போது வழங்கப்படும் கடன் அளவு பத்து லட்சம் கோடிகள். வங்கிகள் மூலமாக கடன் வாங்காதவர்களின்/ வாங்க முடியாதவர்களின் தேவைகள், விதை, உரம் போன்றவற்றிற்கான  மானியங்கள் எனக் குறைந்தது 15 லட்சம் கோடிகளுக்கு மேல் ஆண்டுக்கு தேவைப்படக்கூடிய மிகப்பெரிய துறை. இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களின் ஒட்டுமொத்த சொத்தை சேர்த்தாலும் விவசாயிகளின் ஓராண்டு தேவையைக்க்கூட பூர்த்தி செய்ய இயலாது என்றிருக்க விவசாயிகளுக்கு பிரபலங்கள் பொருளாதார ரீதியாலாக என்ன செய்தார்கள், ஏன் செய்யவில்லை என்கிற கேள்விகள் அர்த்தமற்றதாகிவிடுகிறது.

  விவசாயக்கடன் தள்ளுபடி, விலை பொருள்களுக்கு குறைந்த பட்ச விலை, சிறந்த பயிர்காப்பீடு போன்றவற்றிற்கான போராட்டங்கள், கோரிக்கைகள் அரசாங்கத்திடம் தேவையான கட்டமைப்பு மற்றும் தீர்வு இல்லாத நிலையில், ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

  எனவே தற்போதைய உடனடித்தேவை விவசாயத்திற்கான ஒட்டுமொத்த தீர்வு மற்றும் அதற்கு தேவைப்படும் கட்டமைப்பு குறித்த கருத்துக்கள், கலந்துரையாடல்கள், கோரிக்கைகள். ரஜினிகாந்த் எனும் மாபெரும் சக்தி விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை, தேசிய அளவில் அவர்களுக்கு விவசாயத்திற்கான முழு, நீண்டகாலத்தீர்வை பெற்றுத்தருவதில்தான் இருக்கிறது. தாங்கள் விவசாயப் பிரச்னைக்கான தீர்வு குறித்து பேச, கலந்துரையாட ஆரம்பிக்கும்போது அது முடிவெடுக்கக்கூடிய அளவில் அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு தவிர்க்கமுடியாத சூழ்நிலையை உருவாக்கிவிடும். மோடி அவர்கள் தங்களை தங்கள் இல்லத்தில் வந்து சந்திக்கின்றார் என்றிருக்கும்போது  தங்கள் கருத்துக்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெரும் என்பதில் சந்தேகமில்லை.  தங்கள் ஈடுபாடு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். விவசாயிகளுக்கு நம்பிக்கையை கொடுக்கும். விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வை பெற்றுத்தரும் என்பது உறுதி.

  தமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு 15+ வருட முயற்சியின் மூலம்  தகவல் தொழில்நுட்பத்தின்   அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல் மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கடின  தன்மையை இலகுவாக்கும், ஒரு புது  இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி, சிறப்பான மதிப்பீடுகளை பெற்றிக்கின்றோம்.

  திட்டமிடுதலில் தொடங்கி  விதை முதல்  விற்பனை வரையிலான சேவைகளை, கிராம அளவில் செயல்படும் விவசாய  மேலாண்மை மையத்தில் குறு, சிறு விவசாயிகளும் பெற்று பலன் பெற முடியும். இந்தத்தீர்வை பெரிய அளவில் அரசாங்கத்துடன் சேர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். தாங்கள் கூறியபடி சிஸ்டம் கெட்டிருந்தாலும் அந்த சிஸ்டத்தில் இருக்கும் சில நல்ல திறன்மிக்க அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் உதவியுடன் மெதுவாக முன்னேறிக்கொண்டிருக்கின்றோம். ஆந்திர மாநிலத்தில் வெற்றிகரகமாக நிரூபிக்கப்பட்டதை மட்டும் முன்னிறுத்தாமல் எங்கள் முயற்சிக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், வேப்பங்குளம் பஞ்சாயத்தில் இந்தத்தீர்வை செயல்படுத்தும் முயற்சியில் உள்ளோம். முதற்கட்ட பணிகள் முடிவடைந்திருக்கின்றன.

  * நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் தேவை நல்ல தரம், அதிக உற்பத்தி, உரிய விலை, விவசாயம் செய்வதில் உள்ள கடினத்தன்மையை இலகுவாக்குதல் மற்றும் வறட்சி, புயல் போன்ற இயற்கை சோதனைகளின் போது முழு இழப்பையும் ஈடுகட்டும் விதமான சிறப்பு பயிர்காப்பீடு என்பதே ஆகும். இவைகள் விவசாயிகளுக்கு எளிதில் கிடைக்கும் விதமான ஒரு முழு தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டால் விவசாயிகள் தற்கொலைகள், போராட்டங்கள், உணவு விலை ஏற்றங்கள், உணவுத்தரமின்மை போன்ற துரதிஷ்டமான நிகழ்வுகள் நாட்டில் நிகழாது. அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வந்தாலும் தற்போது இருக்கும் கட்டமைப்பை கொண்டு இலக்கை அடைவது சாத்தியமில்லை. தேவை மாற்று அணுகுமுறை.  அவற்றில் முக்கியமானது தகவல் தொழில் நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது. மிக நம்பிக்கைக்குரிய விஷயம் என்னவெனில் திட்டமிடுதலில் இருந்து விற்பனை செய்து முடிக்கும்வரை தேவைப்படும் சேவைகளை தகவல் தொழில்நுட்பத்துறையினால் விவசாயிகளுக்கு கிராம அளவில் செய்து கொடுக்க முடியம் என்பதுதான்.  எங்களது 15+ ஆண்டுகால தீவிர பயணம் இந்த இலக்கை நோக்கித்தான்

  * விவசாய மறுமலர்ச்சிக்கான தீர்விற்கான அடிப்படை, கிராம அளவிலான விவசாய தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் ஏற்படுத்தி விவசாயிகள் விவசாயத்தொழிலை வெற்றிகரமாக செய்து முடிக்கத் தேவைப்படும் வசதிகளை, சூழ்நிலையை உருவாக்கிக்கொடுப்பதில்தான் உள்ளது. இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை  மையம் செயல்படும். இதில், இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர், அதை ஆபரேட் செய்ய ஒரு பட்டதாரி மற்றும் பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட குழு இருக்கும். விவசாயிகள் இவர்களின் துணையோடு, வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள், தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருக்கிறது என்கிற விபரம்,  தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான வழிகள், நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள் என்ற     தவல்களைப்  பெறலாம். விதை, உரம் போன்ற  இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறிப்பிட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி, தனது ஊரில், வேலை ஆட்கள் மட்டும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில்  அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி மற்றும் முக்கியமாக, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல், நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மை தேவைகளை   செய்துகொள்ள  முடியும். குறு சிறு விவசாயிகளுக்கான மிகச்சிறந்த தீர்வாக இது அமையும்.

  இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல், மன உளைச்சல் குறையும், நிகர லாபம் அதிகரிக்கும், சமூக, பொருளாதார வாழ்க்கை தரம் முன்னேறும். தேவையில்லாமல் நகர்புறத்துக்கு இடம் பெயர வேண்டியதில்லை. அன்றைய தினத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் நில பரப்பு, தட்ப வெட்பம் போன்ற புள்ளி விபரங்கள் உடனுக்குடன் இணையத்தகவல்களாக பதிவு செய்யப்படுவதால் அரசாங்கத்தை பொறுத்தவரை நாட்டின் உணவு தரம், பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு போன்ற மிக முக்கிய விசயங்களை சிறப்பாக நிர்வகிக்கலாம், பயிர் கடன் மற்றும் காப்பீட்டில் ஏற்படும் நஷ்டங்களைக் குறைக்கலாம். பயிர்கடன்களை, காப்பீடுகளை விரிவாக்கம் செய்து  சிறு குறு விவசாயிகளோட வாழ்க்கைய பாதுகாக்கலாம். கிராம பொருளாதார மேம்பாடு மூலமாக நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதிகரிக்கலாம். தரமான இடுபொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதில் தங்கள் பொருள்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கலாம்.

  எங்களது தேசப்பற்று, 15+ ஆண்டுகால விடா முயற்சி, விவசாயத்தீர்வு தொடர்பான எங்கள் அனுபவம் இவற்றின் அடிப்படையில் தங்களுடன் விவசாயப் பிரச்னை மற்றும் தீர்வு குறித்து கலந்துரையாட வாய்ப்பு வழங்க வேண்டுகின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

  நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் நுழைவது குறித்து பரிசீலித்து வருவதாக வெளியாகும் தகவல்களுக்கு இடையே, அவரது அரசியல் பிரவேசம் குறித்து ஊடகங்களில் விவாதங்கள் ஒரு புறம், அவர் வரலாம் என்றும், வரக் கூடாது என்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் விமரிசனம் மறுபுறும் சூடுபிடிக்கிறது.

  இந்த நிலையில், தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள், ரஜினிகாந்த் ஒரு வேளை தனது அரசியல் பிரவேசத்தை முடிவு செய்திருந்தால், அவருக்கான ஒரு சரியான களத்தை அமைத்துக் கொடுக்க முன் வந்திருப்பதாகவே இந்த மடல் காட்டுகிறது.

  இந்த நல் வாய்ப்பை ரஜினிகாந்த் பயன்படுத்திக் கொள்வாரா?

  - Rm  Thiruchelvam
  செல்பேசி: 98403 74266
  மின்னஞ்சல் - thiru@it-rural.com; thirurm@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai