உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன்!

சிறுவர் உலகிற்குள் பயணிப்பதும் அதற்குள்ளே குவிந்துகிடக்கும் அற்புதங்களை கண்டுகளிப்பதும் அவர்களுக்கே உரித்தானது
உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன்!

சிறுவர் உலகிற்குள் பயணிப்பதும் அதற்குள்ளே குவிந்துகிடக்கும் அற்புதங்களை கண்டுகளிப்பதும் அவர்களுக்கே உரித்தானது என்பதால் தான் கண்ணில் படும் அனைத்தின் மீதும் பரவசத்தை பொழிகிறார்கள். சட்டென வெருத்தொதுக்குவதும் உண்டு.விருப்பும் வெறுப்பும் சட்டென  நிகழும் அற்புத வெளியாய் விரிந்து கிடக்கும் சிறார் பரப்பிற்குள் வாழ்வதற்கு அவர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு .அதை தட்டி பறிக்காமல் சிறு மனங்களில் குவிந்துகிடக்கும் கோடி வசந்தங்களை மண்ணுலகில் தழுவவிடுவதே அவர்களை அவர்களாக இருக்க செய்வதற்கு நாம் செய்யும் பேருதவி.

சிறார் இலக்கியங்களில் தனி கவனம் செலுத்தி வரும் அறிவியல் புனை கதை எழுத்தாளர் இரா.நடராசன் மொழிபெயர்ப்பு, புனைகதையாக்கம், அறிவியல் புனைவு என பலப்பல தளங்களில் இயங்கி வருகிறார். அவரின் மிகசிறந்த ஆக்கங்களில் இந்த சிறுகதை மொழியாக்கமும் ஒன்று.

கொரியா, இந்தி, ஜப்பான், வங்காளம், ஆங்கிலம், பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட ஏழு மொழிகளில் வெளியான கதைகளை எளிமையான முறையில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

ஒவ்வொரு கதையும் விதம்விதமான கதைகளங்களை மையமாக கொண்டு இயங்கினாலும் சிறுவர்களின் உள்ளகிடங்கை அப்படியே நம் கண்முன்னே திரையிட்டு காட்டுவதாய் அமைந்திருக்கிறது. சிறுவயதிர்கேயான பேய், பிசாசு, மூடநம்பிக்கைக்குள் ஆட்பட்டு பின்பு விலகுவதான போக்கில் துவங்கி அன்பு, அரவணைப்பு, பயம் ,பாசம், துணிவு, தியாகம் என விசாலப்பட்டு கிடக்கும் சிறு மனங்களின் அப்பழுக்கற்ற எண்ணங்களை ஒவ்வொரு கதையும் காட்சிபடுத்துவதாய் அமைந்திருக்கிறது.

ஸ்ரீதர்ராஜாவின் சித்திரங்கள் ஒவ்வொரு கதையையும் சிறப்புற காட்சிபடுத்தி இருப்பது இத்தொகுப்பிற்கு  இன்னொரு சிறப்பாகும். அருகில் கிடக்கும் பந்தை எடுக்க முடியாமல் பசுவின் அருகில் மிரண்டு நிற்கும் தருணம் மாடு கொஞ்சம் சிலும்பினாளும் பீதியுரும் பிஞ்சு மனம்  என கொரியக் கதையும் தேசத்தை பாதுகாக்க போராடி விழும் பைலட்டை காப்பாற்ற முயற்சிக்கும் சிறுவன் என இந்தி மொழிகதையும் குடும்ப வறுமையால் கடனில் புதிய செருப்பை வாங்கி அணியும் சிறுவன் புதிய செருப்பை இருட்டில் அணிந்தால் நரி பிடித்துகொள்ளும் போன்ற ஜப்பானின் மாய நம்பிக்கையை கட்டுடைக்க 

'இங்கே பார் நெருப்பு வைத்துவிட்டேன் .இப்போது இது பழைய செருப்பு…. பயபடாமல் போ……. 
என கடைக்காரி சொன்னாலும் சுற்றி சூழ்ந்திருக்கும் இருட்டில் மிரண்டு ஓடும் நண்பர்கள் என ஜப்பான் கதையும் அமைந்திருக்கிறது.விளையாட்டையும் படிப்பையும் ஒன்றாக போட்டு குழப்பி கொள்ளும் பள்ளி மாணவனின் கதையில் புத்தக புழுவான ஆசிரியர் IAS தேர்விற்காக விடாமல் படித்துகொண்டிருந்த காரணத்தால் அசதியில்  மயங்கி விழும் போது இது தான் சாக்கென விளையாடுவதற்கு பாய்ந்து  ஓடாமல்  தண்ணீர் தெளித்து காப்பாற்றுவது போன்றதான வங்காளக் கதை சிறுவர்களின் உள்ளம் எத்தகையது என்பதை பிரதிபலிப்பதாய் இருக்கிறது.

பன்னையடிமையாய் இருக்கும் சிறுவன் தந்தையின் ஏற்பாட்டில் நகரத்தில் இருக்கும் தந்தையின் பணக்கார நண்பர்களின் வீட்டில் தங்கி வீட்டு வேலை பார்த்துக்கொண்டே கல்விகற்க போகும் ஆனந்தத்தில் அப்பா கொடுத்த கடிதத்தை தப்பு தப்பாய் படித்துகொண்டே எருமை மாட்டில் பயணிக்கும் பரவச நிலையை  பேசும்  பிலிப்பைன்ஸ் கதை சிறுவர்களின் மனதை நாம் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது.

பட்டாசு ஆலையில் வேலை பார்க்கும் சிறுமி எதிர்பாரா வெடிவிபத்தால் உடல் சேதமுற்று சிகிச்சைக்கு பணமில்லாமல் தவிக்கும் போது அவளின் தாய்க்கு பணவுதவி செய்யும் சிறுவர் கூட்டமென  ஆங்கில கதையை வாசிக்கும் போது சிவகாசியில் சமீபத்தில் நடைபெற்ற வெடிவிபத்தை நியாபகப்படுத்துகிறது.

பாட்டியின் சொல்கேளாமல்  பட்டம் விடும் ஆசையில் மதியநேர வெய்யிலில் மயங்கி விழும் சிறுவன் Sun Stroke கால் பாதிக்கபடுவது போன்ற பாகிஸ்தான் கதை என அனைத்து கதைகளும் வேறு வேறு சூழல்களை விதம்விதமான தளங்களில் நின்று சொல்லும்  பன்மொழி கதைகளை தமிழுக்கு கொடுத்திருப்பது சிறப்பு. இந்த தொகுப்பு சிறுவர் உலகை பெரியவர்கள் தெரிந்து கொள்வதற்காகவா?

இல்லை புவியின் மாயைகளில் இருந்து சிறுவர்கள் தெளிந்து கொள்வதர்க்காகவா? என்ற கேள்வியுடனே நீளும் மிகசிறந்த படைப்பாய் அமைந்திருக்கிறது.

- ச.மதுசுதன்

உலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன் 
தொகுப்பும் தமிழாக்கமும் : இரா.நடராசன் 
வெளியீடு : புக்ஸ் பார் சில்ட்ரன் 
421,அண்ணாசாலை தேனாம்பேட்டை 
சென்னை -600018. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com