நாம் ஏன் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறக் கூடாது?!

தினமும் ஒரு நீளமான பதிவு. சில கவிதைகள். சில கட்டுரைகள். நிறைய புகைப்படங்கள்,
நாம் ஏன் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறக் கூடாது?!

தினமும் ஒரு நீளமான பதிவு. சில கவிதைகள். சில கட்டுரைகள். நிறைய புகைப்படங்கள், சில சமயம் மீள் பதிவுகள் என்று என்னுடைய ஃபேஸ்புக் பயணம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஃபேஸ்புக் என்ற ஒன்று தொடங்கியதிலிருந்து அதில் எனக்காக பக்கத்தை உருவாக்கியிருந்தேன். ஆனால் நிஜ வாழ்க்கையில் கூட அத்தனை போராளியாக இருந்திருக்க மாட்டேன். ஃபேஸ்புக்கில் தினம் தினம் சில அக்கப்போர்களை சந்திக்க வேண்டியதாகிவிட்டது. கருத்து மோதல்கள் ஒருபுறம் இருக்க, நம்முடைய புகைப்படங்களையும் களவாடுகிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அது சார்ந்த மன உளைச்சல்களால் படைப்பாக்கம் சார்ந்து இயங்க முடியாத நிலையும் ஏற்பட்டது. 

ஃபேஸ்புக் என்பது வெட்டி விவாதங்களை வளர்த்தெடுக்கும் இடமாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சைபர் க்ரைம்கள் மலிந்து கிடக்கும் தளமாகவும் இருக்கும்போது அதில் தேவையின்றி என்னுடைய பொன்னான நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.

சிலர் இதற்கெல்லாம் பயந்தால் எப்படி, நாமே மீடியாவில் பணிபுரிபவர்கள் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பதற்கு மாறாக பயந்து ஓடுவது அழகல்ல என்று அறிவுரை கூறினார்கள். நல்ல விஷயங்களுக்கு முன் உதாரணமாக இருப்பது சரி, ஆனால் ஃபேஸ்புக் போன்ற இடங்களில் நம்முடைய கருத்துரிமைகளை நிலைநாட்டுவதில் எனக்கு விருப்பமிருக்கவில்லை. எனவே அதற்கு முற்றும் போட்டுவிட்டுவிட்டேன். வாட்ஸ் அப் அரட்டைகளிலிருந்தும் என்னை விடுவித்துக் கொண்டேன்.

இந்த நவீன ஆக்டோபஸ்களின் வேலை என்ன தெரியுமா? முதலாவதாக, நம்முடைய நேரத்தை உறிஞ்சி எடுப்பதுதான். இன்று ஒரு சமூகமே தலைகுனிந்து நடந்து கொண்டிருக்கிறது என்றால் அதற்குக் காரணம் நம் கைகளில் உள்ள ஸ்மார்ட் ஃபோன்கள் தான். காத்திரமான விமரிசனங்களை முன் வைத்தால் உங்கள் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்படும். அல்லது அத்தகைய பதிவுகள் நீக்கப்படும் என்று உங்களுக்குத் தெரியுமா?

இரண்டாவதாக, கூகிள், ஃபேஸ்புக், ஸ்மார்ட் போன் ஆகியவை நம்மைத் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருக்கிறது என்பதை உணரத் தொடங்கினேன். இந்த உலகத்தில் எதாவது ஃப்ரீயாக கிடைக்கிறதா? நிச்சயம் எல்லா நுகர்பொருளுக்கும் ஒரு விலை உண்டு. கூகிள், ஃபேஸ்புக் இவையெல்லாம் இலவசமாக ஒரு சேவையை தருகிறது என்றால் நிச்சயம் லாப நோக்கில்லாமல் இருக்காது. கார்ப்பரேட் உலகின் தவிர்க்க முடியாத விஷயம் விளம்பரம். நீங்கள் இணையதளத்தில் உங்கள் ஊரில் உள்ள சிறிய கடையைப் பற்றி கூகிளில் தேடிப் பாருங்கள். ஒரு முறை அதைத் திறந்து பார்த்தால் போதும், அதன்பின் அதன் விளம்பரங்கள் உங்களை நிழல் போல் தொடர ஆரம்பிக்கும். அதுவும் குறிப்பாக சம்பளத் தேதிகளில் கணினித் திரையின் எல்லா மூலைகளிலும் அவை நீக்கமற காட்சியளிக்கும். கூகிளின் தந்திரமே இத்தகைய விளம்பர யுக்திதான்.

நமக்கே தெரியாமல் நம்மை அதற்கு அடிமைப்படுத்தி உள்ளது என்று நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கிறோம். உங்களுக்கு என்ன பிடிக்கும், நீங்கள் எந்த கணினியை பயன்படுத்துகிறீர்கள், உங்கள் நண்பர்கள் யார், விரோதி யார், நீங்கள் இதுவரை எத்தனை வேலைகளை செய்திருக்கிறீர்கள், தற்போது உங்களுடைய சம்பளவு எவ்வளவு என்று மெளஸ் நுனியில் உங்களது தகவல்கள் கூகிளில் ஏதோ ஒரு ஈசான மூலையில் பத்திரமாக வைக்கப்படுகிறது. அது எப்படி சாத்தியம் என்று யோசிக்காதீர்கள். உங்களுடைய இணைய செயல்பாடுகள் அனைத்தையும் இந்த தேசத்தின் உளவு அமைப்புகள் நீங்கள் பயன்படுத்தும் மென்பொருட்கள் வாயிலாக கண்காணித்து வருகிறது. உங்கள் வங்கியில் எவ்வளவு பணம் உள்ளது என்பதுமுதல் இன்று மாலை நீங்கள் எத்தனை லிட்டர் பெட்ரோல் போட்டீர்கள் என்பது வரை டேட்டா பேங்கில் சென்று சேர்வதற்கான ஆதார அட்டை அரசாங்கத்திடம் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். 

சமீபத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ எனும் படத்தில் கதாநாயகனுடைய வேலையே மற்றவர்களின் தொலைபேசியை ஊடுருவி உரையாடல்களை ஒட்டுக் கேட்பது. ஆனால் திரைப்படத்தில் வருவதை விட மேலதிகமாகவே நிஜத்தில் உள்ளது. உங்கள் மின்னஞ்சல்கள், வாட்ஸ் அப் ஃபார்வெட்டுகள், குறுஞ்செய்திகள், தொலைபேசி உரையாடல்கள் என எல்லாமும் ஒட்டு கேட்கப்படுகிறது. நீங்கள் உதிர்க்கும் ஏதோ ஒரு வார்த்தை அவர்கள் சேமித்து வைத்திருக்கும் கோட் வார்த்தைகளுடன் ஒத்துப் போய்விட்டால் உங்கள் கதை அவ்வளவுதான். ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உடனடியாக உங்கள் இருப்பிடம் வந்து நீங்கள் அரசுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டுகீர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் விசாரிக்கப்படுவீர்கள்.  

நீங்கள் செய்யும் அத்தனை வேலைகளும் இன்டெலிஜென்ஸ் பிரிவின் கண்காணிப்பில் வந்துவிடுமாம். கண்காணிப்பவர்களின் செர்வருக்கு குறிப்பிட்ட அந்த வார்த்தையின் அல்காரிதம் கிடைத்துவிடும். உங்களுடைய ஒரு புகைப்படத்தை வைத்து உங்களை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை வேறு ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளனர். எப்படியா? நீங்கள்தான் கடமை தவறாமல்  பேஸ்புக்கில் உங்கள் நண்பர் உங்கள் புகைப்படத்தை டேக் செய்வதை பெருமையாக நினைத்தீர்கள் அல்லவா? அதுதான் அப்பாவியான உங்களை முதலில் உங்களைக் காட்டிக் கொடுக்கும் வஸ்து. 

சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதற்கான முகாந்திரம் உங்களுக்கு இருந்துள்ளதா என்று ஆராய்ந்து உங்களை அடையாளப்படுத்தி விடும். ஃபேஸ்புக்கில் லைக், ஸ்மைலி இமொஜிக்கள் இவற்றால் உங்கள் மனநிலை கண்டறியப்படுகிறது. உங்களுக்கே தெரியாமல் ஒரு மாயவலையில் நீங்கள் சிக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் அது மிகையில்லை. நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள், உங்களின் விருப்பு வெறுப்புகள் என்ன, உங்களுடைய நண்பர்கள் யார், எதிரி யார் என்று சகல விஷயங்களையும் எளிதில் கண்காணிக்க முடியும். நீங்கள் இந்த நாட்டை அல்லது மதத்தைப் பற்றிய விமரிசனத்தை அதில் எழுதியிருந்து, தற்போது நீங்கள் நடிக்கவிருக்கும் நாடகத்தின் வசனத்தை நண்பருக்கு தொலைபேசியில் சொல்லும்போது, தேசத்துரோகி என தவறாக நினைக்கப்பட்டு பிடிபட்டு, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டால், குற்றத்தை உறுதிபடுத்த உங்களுக்கு எதிரி வெளியிலிருந்து எல்லாம் வர வேண்டாம் உங்கள் சொந்த ஃபேஸ்புக்கில் நீங்களே வாக்குமூலம் எழுதி வைத்திருப்பீர்கள். அதன் பிறகு மார்க் சிபாரிசு செய்தால் கூட உங்களை வெளியில் விடமாட்டார்கள்.

தனி நபர் ரகசியம் பற்றி கூகிள் தலைவர் எரிக் ஸ்கிமிட் ஒரு பேட்டியில் கூறியிருப்பதை படித்தால் அந்த கருத்தாக்கம் உங்களை எதிர்கேள்வி கேட்க முடியாமல் செய்துவிடும். நீங்கள் செய்யும் செயல் யாருக்கும் தெரிய கூடாது என்று நீங்கள் விரும்பினால் ஒருவேளை நீங்கள் அதை செய்திருக்கவே கூடாது என்பதுதான் எரிக்கின் வாதம்.

தனி நபர் சுதந்திரத்தை மீறுவதில் உலகத்தில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா, அதற்காக அவர்கள் 2013-ம் ஆண்டு ஒதுக்கிய தொகை 52 பில்லியன் டாலர். அமெரிக்காவின் முன்னணி இன்டெலிஜென்ஸ் அமைப்பான NSA, PRISM என்ற ஒரு ரகசிய ஆபரேஷன் மூலம் எல்லா தகவல் தொழில்நுட்ப அமைப்பிலும் ஊடுருவி உள்ளது எனும் செய்தியைப் படித்தபின்பு தான் இந்தக் கட்டுரையின் முதல் வரியை எழுதத் தொடங்கினேன்.

மக்களின் பாதுகாப்பும், நாட்டின் பாதுகாப்பும் முக்கியம், மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம் இருக்கும் என்று நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்த்தீர்களா? ஒரு காலத்தில் வீட்டு வாசலைப் பூட்டாமல் கூட உறங்கச் செல்வார்கள். ஆனால் மனிதர்களின் பேராசையும் அடுத்தவரைக் கொன்று பிழைக்கும் கேடுகெட்டத்தனமும் அதிகரிக்கவே பாதுகாப்புக்கான தேவைகளும் அதிகரித்தன. எந்த அளவுக்கு பாதுகாப்புக்கு இந்த நாடு உத்தரவு தருகிறதோ அந்த அளவுக்கு நமக்கு தனி மனித சுதந்திரம் பறி போகிறது எனக் கொள்ளலாம். ஒரு சரியான குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஆயிரம் அப்பாவிகளை பலிவாங்க நினைக்கும் ஒரு தொழில்நுட்பத்தை நம் வரவேற்பரையில் வைத்து அனுதினமும் நாம் பூஜை செய்து கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. 

வீதிக்கு வீதி, அலுவலகத்தின் அத்தனை மூலைகளிலும், வீட்டுக்கு வீடு என சர்வ இடங்களிலும் வியாபித்திருக்கும் சிசிடிவி கேமராக்கள் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதைவிட அப்பாவிகளையே அதிகம் பாதிப்படையச் செய்கின்றன. இத்தனை சிசிடிவிக்களை நிறுவதற்குப் பதில் நம் அத்தனை கிராமங்களுக்கும் மக்களுக்கு சுகாதார முறையில் கழிப்பறை கட்டித்தரலாம். ஒரு பக்கம் நவீன வசதிகள், பெறுகும் தொழில்நுட்பம் இன்னொரு புறம் அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை, வறுமை, நோய், ஜாதி, கல்வியின்மை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் என தலைவிரித்தாடும் பல பிரச்னைகள். ஏற்றத் தாழ்வுகளுடனே இயங்கி வரும் சமூக அரசியல் பல்சக்கரம். ஆக்கபூர்வமான வளர்ச்சிகளில் இன்னும் தீவிரம் காட்டாமல், கண்காணிப்பு போன்ற செயல்களில் இறங்கியிருப்பது துயர்.

முரண்களின் மொத்தத் தொகுப்பாக விளங்கும் நம் நாட்டில் கருவிகளின் மீதும், தொழில்நுட்ப சாதனங்களின் மீதும் மட்டும் குறைகளை அடுக்க முடியாது. அதைப் பயன்படுத்தும் மனிதர்கள் அவற்றை எந்த நோக்கில் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் கவனித்துப் பார்க்க வேண்டும். நிச்சயம் சிசிடிவி கேமராக்கள் பயனுள்ளவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அது என்னுடைய வீட்டின் வரவேற்பரையில் வந்து அமரும் போது தான் இந்தப் பிரச்னையின் தீவிரத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடியும் அல்லவா?

மேலும் நீங்கள் ஒரு செயலியை (App) தரவிறக்கம் செய்யும்போது அது உங்களுடைய அத்தனை விபரங்களையும் கேட்டு வாங்கிக் கொள்ளும். Deny - Aloow என்பதில் நாம் அலவ் செய்த விஷயங்கள் நமக்கே ஆப்பாக அமைந்துவிடுவதும் உண்டு. நம்முடைய ஃபோனிலும் சரி வீட்டிலும் சரி மனத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி எதை அங்கீகரிக்க வேண்டும், எதனை விலக்கி வைத்திருக்க வேண்டும் என்ற தெளிவு நமக்கிருக்க வேண்டும். அதுதான் நிம்மதியான மனநிலையைத் தரும்.

சமூக வலைத்தளங்கள் அதன் நோக்கில் உண்மையாக கையாளப்படுகிறது என்று யாரால் சரியாகக் கூற முடியும்? நவீன விஞ்ஞானம் பெறுக பெறுக அதற்கேற்ற வகையில் குற்றங்களும் பெருகிக் கொண்டுதானிருக்கின்றன. இத்தனை கண்காணிப்புக்களை மீறியும் குற்றங்கள் முன்பை விட அதிகளவில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரு சமூகம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பிரயத்தனப்படுவதைவிட குற்றங்கள் நிகழாமல் இருக்க, அல்லது குறைவதற்கேனும் நடைமுறை சாத்தியங்கள் உள்ளதா என்று கண்டறிய வேண்டும். அதற்கான மனிதநேயம் மிகுந்த ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே சமூகத்தை வாழத் தகுந்த இடமாக மாற்றியமைக்கும் முயற்சிக்கான முதல்படி.

சரி இந்தத் தொல்லையே வேண்டாம் என ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறும் சமயத்தில், நீங்கள் ஏன் பேஸ்புக்கை விட்டு வெளியேறுகிறீர்கள், இவர்கள் எல்லாம் வருத்தப்படுவார்கள், இவர்கள் எல்லாம் கதறி கண்ணீர் விடுவார்கள் என்று செயற்கை இண்டலிஜென்ஸால் உங்களை எமோஷனல் ப்ளாக்மெயில் செய்யும். விடாது கருப்பு என்று அடிக்கடி உங்கள் ஜிமெயிலுக்கும் நினைவுபடுத்தும்.

இது போன்ற பலவித உளவியல் சிக்கல்களை உங்களுக்கு ஏற்படுத்தி அதன் பல்வேறு பரிசோதனை முயற்சிகளுக்கு உங்களை இலவச எலியாக பயன்படுத்திக் கொள்ளும். அதைப் பற்றிய புரிதலோ அக்கறையோ இல்லாமல் காலை வணக்கம், மதிய வணக்கம், நண்பகல் வணக்கம் என பதிவு போட்டுக் கொண்டிருப்போம். நம்மை முட்டாளாக்கும் மெய்நிகர் உலகம் எதற்கு? உண்மையில் அது பொய்நிகர் உலகம் என்று ஒருநாள் உங்களுக்குத் தெரிய வரும்போது நீங்களும் என்னைப் போல ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறிவிடுவீர்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com