இவ்வளவு பெரிய மீனை உங்களால் பிடிக்கமுடியுமா? பிக் ஃபிஷ் (Big Fish) திரைப் பார்வை!

நமக்கு அலுக்கவே அலுக்காதவை என்னவென்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது கதைகள் தான். 
இவ்வளவு பெரிய மீனை உங்களால் பிடிக்கமுடியுமா? பிக் ஃபிஷ் (Big Fish) திரைப் பார்வை!

நமக்கு அலுக்கவே அலுக்காதவை என்னவென்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?  இந்த உலகம் அற்புதமான கதை சொல்லிகளின் வசம் சிறிதளவேனும் இருப்பதால் வாழத் தகுந்த இடமாக உள்ளது. படைப்பாளிகளின் கற்பனையில் உருவாகும் இலக்கியம், திரைப்படங்கள் இவைதான் ஓய்வற்ற இந்த நெடும் வாழ்க்கையில் சிறு இளைப்பாறுதல். ஹாலிவுட் இயக்குநர் டிம் பர்டனின் இயக்கத்தில் பிக் ஃபிஷ் என்ற படம் அத்தகைய ஒன்று என்றால் மிகையல்ல.

வில் புளூம் பத்திரிகையில் வேலை செய்பவன். அவனது தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் இருக்கிறார் என்ற செய்தி கிடைத்ததும் நிறை மாத கர்ப்பிணியான தன் மனைவியான ஜோசபினுடன் தனது கிராமத்துக்கு விரைகிறான். வரும் வழி நெடுகிலும் தந்தையைப் பற்றிய நினைவுகள் அவன் மனத்தை நிறைக்கின்றன.

வில் புளூமின் அப்பாவின் பெயர் எட்வர்ட் புளூம். சிறு வயதிலிருந்து தனது மகனுக்கு பலவிதமான சாகஸக் கதைகளை கூறுவதே எட்வர்டின் முக்கிய பொழுதுபோக்கும். விழிகள் விரிய சிறுவன் வில் தந்தையின் கதைகளை ஆர்வத்துடன் கேட்பான்.  அவனுடைய அப்பா கூறும் கதைகள் அனைத்தும் நம்ப முடியாத அளவுக்கு புனைவால் கட்டமைக்கப்பட்டவை என்பது அந்த வயதில் அவனுக்குத் தெரியாது. சிறுவர்களுக்கே உரிய சாகஸ மனப்பான்மையால் அப்பா கூறும் கதையுலகில் அவன் மிகவும் சந்தோஷமாக திளைத்தான். ஆனால் வயதாக ஆக அவனுடைய குழந்தைமை அவனை விட்டு நீங்கிச் செல்கிறது. அப்போது தந்தை எந்த கதையை சொல்ல முயற்சி செய்தாலும் எரிச்சாகி இதைத்தான் ஆயிரம் முறை கேட்டுவிட்டேனே என்று சலித்துக் கொள்ளத் தொடங்கினான்.

மேலும் அவருடைய கதைகளில் உள்ள சில புதிர்த்தன்மைகளை விடுவிக்க அவரிடம் சில கேள்விகள் கேட்டாலும் அவரிடமிருந்து அதற்கு பதில் வந்ததில்லை. அவனது திருமண தினத்தன்று கதை சொல்லத் தொடங்கிய அப்பாவை இடையில் நிறுத்தச் சொல்லிவிடுகிறான் வில். அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் சில கருத்து வேறுபாடுகள் உருவாகவே, வெளியூரில் இருக்கும் தனது வேலை வாழ்க்கை என மூழ்கிவிடுகிறான். 

மூன்று வருடங்கள் தந்தை மகனுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் இல்லாமல் போனது. மரணத் தருவாயில் மகனைப் பார்க்க ஆசைப்படுகிறார். மகனையும் மருமகளையும் பார்த்து மனம் மகிழ்ச்சி கொள்கிறார் எட்வர்ட். மகனுக்கு தன்னுடன் பேச நேரம் இருக்காது என்று ஜோசபினிடம் தன் வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை வைத்து புனைவாக சில கதைகளைக் கூறுகிறார் எட்வர்ட். 

அவரது வார்த்தைகளில் விரிந்த வாழ்க்கை அனுபவம் ஜோசபினை பரவசத்துக்கு உள்ளாக்குகிறது.  எட்வர்ட்டின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தாலும், அவர் அதைப் பற்றி சிறிதும் பயப்படுவதில்லை. எட்வர்ட் தன் வாழ்நாள் முழுவதும் நம்பிய ஒரு விஷயம் உயிர்ப்புடன் இருப்பது, தன்னால் இயன்ற அளவுக்கு தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி தருவது. அது கதை அது கதை உலகமாகவும் இருக்கலாம் நிகழ் உலகத்திலும் இருக்கலாம். இளம் வயதிலிருந்தே எட்வர்ட் துணிச்சலானவன். தனது நண்பர்களுடன் யாரும் போகக்கூடாது என்று ஊராரால் தடைவிதிக்கப்பட்ட சூனியக்கார கிழவியின் மாளிகைக்குச் செல்கிறான். அருகில் செல்ல நண்பர்கள் தயங்க, எட்வர்ட் தைரியமாக அந்த வீட்டின் கதவைத் தட்டுகிறான். வெளியே வந்த கிழவியைப் பார்த்து அவன் பயப்படவில்லை. தன்னைப் பார்த்து பயம் கொள்ளாத அந்தச் சிறுவனைப் பார்த்து கிழவியும் ஆச்சரியப்படுகிறாள். மெல்லிய நட்பொன்று அவர்களிடையே உருவாகிறது. சிறு உரையாடலுக்குப் பிறகு அந்த சூனியக்காரக் கிழவி எட்வர்ட்டின் மற்றும் அவனது நண்பர்களின் மரணம் எப்படி இருக்கும் என்பதை தனது முகத்தில் மூடி இருக்கும் கண் திரையை விலக்கிக் காண்பிக்கிறாள். (இதுதான் வில் விரும்பாத ஒரு விஷயம். சூனியக்காரிகளின் இருப்பையும் அவர்களுடனான நட்பையும் தந்தையால் எப்படி உண்மையென கூற முடியும். சிறு வயதில் இதை நம்ப முடிந்தது ஆனால் வளர்ந்த ஒருவனிடம் அவர் ஏன் இப்படி கூறுகிறார் என்று அவருடைய கதைகளின் நம்பகத்தன்மையை கேள்வி கேட்கத் தொடங்கினான்). அவரிடமிருந்து மெள்ள விலகிச் சென்றான்.

அலைகள் ஓய்வதில்லை. போலவே எட்வர்ட்டின் கதைகளும். அவருடைய கதைகள் ஒவ்வொரு மனத்திலும் வெவ்வேறு வகையான எட்வர்ட்டை விதைத்துக் கொண்டிருந்தன. இம்முறை ஜோசபின் அவரது கதைகளால் பெரிதும் கவரப்பட்டாள். ஸ்பெக்ட்ரா எனும் கிராமத்துக்கு அவர் எப்படி புலம்பெயர்ந்து போனார், அங்கு அவரது சாகஸங்கள் என்னென்ன, அவரது திருமணம் எப்படி நிகழ்ந்தது, அவர் எப்படி போர் வீரனாக மாறினார் போன்ற சம்பவங்களை, வில்லுக்கு ஏற்கனவே பலமுறை கூறப்பட்ட கதைகளை அவளும் தெரிந்து கொண்டாள்.

இரவில் தந்தையைப் பார்த்துக் கொள்ள முடிவெடுத்து அவருடன் தங்குகிறான் வில். தனது அப்பாவின் நண்பரான மருத்துவரிடம் தான் பிறந்த கதையைக் கேட்கிறான் வில். காரணம் அதற்கு முன் பலமுறை அப்பா அதை புனைவாக்கம் செய்து பெரிய நிகழ்வாகக் கூறியிருப்பார். அதுதான் இந்தக் கதையின் மையம். அவர் கூறிய புனைவுக்கு நேர் எதிராக உண்மை இருந்தது. வில் எதிர்பார்த்த நேரத்திற்கு முன்பே பிறந்துவிட்டதால் வெளியூரில் இருந்த எட்வர்ட்டால் உடனடியாக வர முடியவில்லை. அதனை சமன் செய்ய அவர் தனது கற்பனையில் உருவாக்கிய காட்சியைத் தான் மீண்டும் மீண்டும் கூறி அதை மெய் போலவே நிறுவ முயன்றார் என்பதை புரிந்து கொள்கிறான் வில். மிகச் சாதாரணமாக நடக்கும் சம்பவங்களில் தனது அபார கற்பனையைக் கலந்து வாழ்வின் அத்தருணங்களை சீர் அமைத்துள்ளார் தனது தந்தை என நெகிழ்ந்து போகிறான் வில். இத்தனை காலம் தந்தையின் குழந்தை மனம் புரியாமல் அவர் மனத்தை புண்படுத்திவிட்டோமே என வருந்துகிறான் வில்.

மனம் திறந்து தன் தந்தையிடம் பேசுகிறான் வில். ஆனால் அவருக்குத் தன் மகன் மீது சிறிதும் கோபம் இல்லை. அவருடைய கடைசி தினங்களாக அவை இருப்பதால் வருத்தத்துடன் அந்த சூனியக்காரியின் கண்களின் என்ன தெரிந்தது என்ற கதையைச் சொல்வீர்களா என்று கேட்கிறான். கவலைப்படாதே என்னுடைய மரணக் காட்சி இதுவல்ல, இந்த ஆஸ்பத்திரியில் நிச்சயம் இல்லை என்று கூறி நீயேன் இந்தக் கதையை எனக்குச் சொல்லக் கூடாது என்று கேட்கிறார். வில் அவருடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை கூறத் தொடங்குகிறான். தனது தந்தை வாழ்ந்த அந்த புனைவுலகத்தில் அவனும் கலந்து போகிறான். அது நிஜம் கலந்த புனைவா அல்லது புனைவுகளுக்கு இடையே சில நிஜங்களா என்று பகுத்துப் பார்க்க அவன் விரும்பவில்லை. அவன் விரும்புவதெல்லாம் அவனது தந்தையின் மகிழ்ச்சி. எப்படி சிறுவனாக இருந்தபோது அவன் அப்பா அவனுக்குப் பலவகையான கதைகள் சொல்லி மகிழ்வித்தாரோ அந்த அக்கறை மட்டுமே அவனிடம் இருந்தது. அவன் கூறிய அந்த நெகிழ்ச்சியான கதையை அசைபோட்டபடி அவனது அப்பா உறக்கத்தின் பிடியில் அமிழ்கிறார். அதன் பின் அவர் விழித்தாரா? கதையின் மையமான அந்த பிக் பிஷ் யார்? அதைப் பற்றிய எட்வர்ட்டின் புனைவு என்ன என்பதெல்லாம் இந்தப் படத்தைப் பார்த்து ரசிகர் பிரத்யேகமாக உணர வேண்டிய விஷயங்கள். 

மனத்தை உருக்கும் இந்தப் படத்தில் தந்தை மகன் உறவின் ஆழத்தை, அதன் பிரச்னைகளை, வளர்ந்துவிடுவதன் சுமையை, வேலை வாழ்க்கை போன்ற விஷயங்களால் பெற்றவர்களிடமிருந்து தள்ளிப் போவதை நுட்பமாகச் சித்தரித்திருப்பார் இயக்குநர் டிம் பர்டின். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com