செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சித்திரை முதல் நாள். தமிழ் புத்தாண்டு. பூஜையறையில் ‘படி' நிறைய பச்சரிசி, அதன் மீது மட்டைத் தேங்காய், அதன் மீது புதுத் துணி, பக்கத்தில் தட்டு நிறைய வடை, பழங்கள், பூக்கள் என்று புத்தாண்டு பூஜை களைகட்டியது. இது நம்ம
செக்கிற்கும், சிவலிங்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளுங்கள்

சித்திரை முதல் நாள். தமிழ் புத்தாண்டு. பூஜையறையில் ‘படி' நிறைய பச்சரிசி, அதன் மீது மட்டைத் தேங்காய், அதன் மீது புதுத் துணி, பக்கத்தில் தட்டு நிறைய வடை, பழங்கள், பூக்கள் என்று புத்தாண்டு பூஜை களைகட்டியது. இது நம்ம வீட்டு விஷேசம். ஊருக்கெல்லாம் வாழ்த்துச் சொல்லி ‘விளம்பர புத்தாண்டாக' கொண்டாடுவதில் எப்போதும் எனக்கு உடன்பாடில்லை. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இது குடும்பத்தோடு கொண்டாட வேண்டியது. மற்றொன்று, சித்திரை முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கு நம் நண்பர்கள் சிலர் விரும்புவதில்லை. புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்து கொள்வதால், ‘அவர்களை நாம் சீண்டுவதாக' நினைத்துவிடக்கூடாது. ஜாதி, மதம், கொள்கை, என்று எல்லாவற்றையும்விட நட்பு வட்டம் மரியாதைக்குறியது. இந்த வட்டத்திலிருந்து வெளிவருவது ரொம்ப எளிது, உள்ளே நிரந்தரமாக தங்குவது ரொம்ப கஷ்டம். இன்றைய காலகட்டத்தில் இதற்கு நிறைய சகிப்புத் தன்மை தேவைப்படுகிறது. அப்படி ஒரு சம்பவத்தை சந்திக்கும் நிலை இன்று ஏற்பட்டது.
 

பூஜைக்கு ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும் போது, வாட்ஸ் ஆப்'பில் ஒரு மெசேஜ். வழக்கம் போல இது புத்தாண்டு வாழ்த்தாக இருக்கும்', என்று நினைத்து படிக்கும் போதுதான் தெரிந்தது அது ஒரு விரசமான, வில்லங்கமான புத்தாண்டு செய்தி என்று. அது தமிழ் புத்தாண்டு பிறந்த கதையாம்.! மலத்தைச் சுவைத்து உமிழ்ந்திருக்கிறான் ஒரு கிராதகன்.

பகவான் கிருஷ்ணரைப் பார்த்து நாரதர் கேட்டாராம்.

“உனக்கு எட்டு மனைவியர், ராதா என்கின்ற காதலி, இதெல்லாம் போதாது என்று 16000 காதலிகள், ஆனால் எனக்கோ யாரும் இல்லை. எனக்கு அருள் புரியக்கூடாதா?"

"சரி, எனது காதலிகள் வீடுகளுக்குப் போ. அவர்களில் யார் உன்னை ஏற்றுக் கொள்கிறார்களோ, அவரை அனுபவித்துக்கொள்", என்றாராம் கிருஷ்ணர்.

(நாரதனும் நாக்கை தொங்கப் போட்டு ஒவ்வொரு வீடாக போகிறான். திருட்டுக் கண்ணன், இவன் போகின்ற வீட்டில் நாரதனுக்கு முன்னர் அந்த வீட்டுப் பெண்ணோடு லீலையில் இருக்கிறான். நொந்துபோன நாரதன் திரும்பி வந்து கண்ணனிடம் ... .)

இப்படி கதை வளர்ந்து கொண்டே போகிறது. இறுதியில் நாரதன் பெண்ணாக மாறி, கிருஷ்ணருடன் உறவு வைத்துக் கொண்டு அதற்கு பிறந்தவர்கள் தான் அறுபது தமிழ் வருஷமும்', . . . . .. தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு', என்று அந்த வாட்ஸ் ஆப் மெஸேஜில் மிக மோசமான வார்த்தைகளால் உமிழப்பட்டிருந்தது.

இந்தக் கதைக்கு விளக்கமளிக்க இதிகாசங்களை படிக்க வேண்டிய அவசியமில்லை. இந்தக் கதை தொடங்கி, முடியும் வரை எத்தனை ஜென்மங்கள் கடந்தது, எத்தனை வருடங்கள் கடந்தது என்பது யாருக்காவது தெரியுமா? நாரதர் பெண்ணாக மாறினார் என்று சொல்கிறார்கள், அவர் முன் ஜென்ம வாசனையோடு இருந்தார் என்று எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா? ஒருவர் நறுமணத்தின் குணங்களை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், துற்நாற்றம் வீசும் சாக்கடையை விட்டு முதலில் வெளியே வரவேண்டும். அப்படியில்லாமல், சுற்றி வீசும் துர்நாற்றமே உலகம் என்று நினைத்தால் அதற்கு நறுமண உரிமையாளர்கள் பொறுப்பல்ல. முன் ஜென்ம வாசனைன்னா என்ன? விளக்க வருகிறது ஒரு குட்டிக்கதை.

ஒரு நாத்திக இளவரசன். தன் நண்பர்களோடு வேட்டைக்குச் சென்றான். மரத்தடியில் ஒரு சாது அமர்ந்திருந்தார். அவரை சோதிக்க நினைத்தான் இளவரசன். அவரை வணங்கினான்.

‘ஐயா! நான் இந்த நாட்டு இளவரசன். என் எதிர்காலம் எப்படியிருக்கும்?' என்று கேட்டான்.

‘தம்பி! எதிர்காலத்தை கணித்துச் சொல்ல எனக்குத் தெரியாது. ஆனால், முன் ஜென்மத்தைப் பற்றிய கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியும்', என்றார் சாது.

இளவரசனின் நண்பன் பேசினான்.

‘ஐயா! நான் முன் ஜென்மத்தில் என்னவாக இருந்தேன்?' என்று கேட்டான்.

‘தம்பி! முன் ஜென்மத்தில் நீ ஒரு சிற்பியாக இருந்தாய். புகழோடு வாழ்ந்தாய். நான் சொல்வதை நம்பவில்லையென்றால், இங்கிருந்து ஒரு காததூரம் சென்றால் ஒரு பாழடைந்த கிணறு இருக்கும். அதில் நீ செதுக்கிய சிற்பம் இருக்கிறது. அந்த சிற்பம் உன் முக சாயலில் இருக்கும். போய்ப் பார்', என்றார் சாது.

நண்பர்களோடு சென்று பார்த்தான் இளவரசன். சாது சொன்னது உண்மை. அங்கிருந்த சிலை நண்பனின் முகத்தைப் போலவே இருந்தது.

மீண்டும் சாதுவிடம் வந்தனர். மற்றொரு நண்பன் சாதுவை வணங்கினான்.

‘தம்பி! முற்பிறவியில் நீ ஒரு பொற்கொல்லனாக இருந்தாய். நீ இறந்து போவதுற்கு முன் நிறைய நகைகளை பெட்டியில் வைத்து பக்கத்து கிராமத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட்டு இறந்து போனாய்', என்று சொன்னார்.

வேகமாகச் சென்று கிணற்றுக்குள் குதித்தான். சாது சொன்னதைப் போலவெ நகைப் பெட்டி கிடைத்தது. தான் ஒரு பொற்கொல்லன் என்பதை புரிந்துகொண்டான் நண்பன்.

அடுத்ததாக இளவரசன் சாதுவை வணங்கினான். அப்போது அந்த வழியே ஒரு பிச்சைக்காரன் வந்து கொண்டிருந்தான். சட்டென்று எழுந்தார் சாது. நேராக பிச்சைக்காரனிடம் சென்றார். வணங்கினார். அவனை மரியாதையோடு அழைத்து வந்தார்.

‘சாதுவே! இந்த நாட்டு இளவரசன் இங்கே இருக்கிறேன். என்னைவிட இந்த பிச்சைக்காரன் உயர்ந்தவனா?', என்று குதித்தான் இளவரசன்.

‘தம்பி! இவர் இந்த ஜென்மத்தில் பிச்சைக்காரர். கடந்த ஜென்மத்தில் இவர்தான் இந்த நாட்டின் அரசர். இவருடைய வீரத்தாலும், விவேகத்தாலும் இந்த நாடு வளர்ந்தது. அரண்மனை கஜானாவில் இவர் பயன்படுத்திய தங்க வாள் இவர் பெயரிடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. நீ வேண்டுமானால் சென்று அதைப் பார்த்து உறுதிபடுத்திக்கொள்', என்றார் சாது.

இளவரசன் அரண்மனைக்குச் சென்றான். என்ன ஆச்சரியம்! சாது சொன்னதைப் போலவே தங்க வாள் இருந்தது. மீண்டும் சாதுவிடம் வந்தான் இளவரசன்.

‘சாதுவே! நீங்கள் சொன்னது உண்மை. ஆனால், முன் ஜென்மத்தில் இவர் அரசர் என்றால், இவரா எங்களது முன்னோர்? ரொம்ப கேவலமா இருக்கே!' என்றான் இளவரசன்.

அமைதியாக இருந்தார் சாது. இளவரசன் மீண்டும் பேசினான்.

‘சாதுவே! என்னைப் பற்றி சொல்லுங்கள். நான் முன் ஜென்மத்தில் யாராக இருந்தேன்?' என்று கேட்டான் இளவரசன்.

‘தம்பி! நீயும், உன் தந்தையும் சாக்கடையில் புரளும் பன்றிகளாக இருந்தீர்கள்', என்றார் சாது.

‘அயோக்கியப் பயலே! யாரைப் பார்த்து பன்றி என்றாய்? உன்னை என்ன செய்கிறேன் பார்!' என்று குதித்தான்.

‘தம்பி! முன் ஜென்மத்திலும் நான் சாதுவாகவே இருந்தேன். இப்போது பிச்சைக்காரனாக இருப்பவன் அப்போது அரசனாக இருந்தான். இப்போது சொன்னது போலவே அவனுடைய முன் ஜென்மத்தைப் பற்றி சொன்னேன். கோபத்தில் என் தலையை வெட்டினான். அதன் பலனாய், இந்த ஜென்மத்தில் அவன் பிச்சைக்காரனாக பிறந்திருக்கிறான். ஆகையால், என்னை வெட்டி கொன்றுவிடு. நாத்திகத்தால் நாசம் செய்யும் இளவரசனை பிச்சைக்காரனாக்கிய பெருமை எனக்கு வரட்டும்', என்று குனிந்து நின்றார் சாது.

பயந்து போனான் இளவரசன். பக்கத்தில் இருந்த நண்பன் பேசினான்.

‘ஒரு பன்றியின் ராஜ்ஜியத்திலா நாம் வாழ்கிறோம்?', என்றான் ஒருவன்.

‘அதனால்தான் இவங்க அப்பாவுக்கு நிறைய குழந்தைகளோ!', என்றான் மற்றொருவன்.

‘தம்பி! வாழ்கின்ற ஜென்மத்தில் எப்படி இருக்கிறோம் என்பதுதான் முக்கியம். இதனால்தான் ஜென்ம வாசனையை அறியும் வாய்ப்பு நமக்கிருப்பதில்லை. இந்த ஜென்மத்தைப் பொறுத்தவரை, பன்றி நாடாள முடியாது, நாடாளும் தகுதியுடையவர் பன்றியாக முடியாது. ஆகையால், வாழ்கின்ற நாட்களை நிம்மதியாக வாழுங்கள். போய் வாருங்கள்', என்றார் சாது.

இளவரசன் நண்பர்களோடு நடக்கத் தொடங்கினான். பிச்சைக்காரன் பேசினான்.

‘தம்பிங்களா! எதுக்கும் அந்தப் பக்கம் போகாதீங்க. அங்கே பொதுக்கழிப்பிடம் இருக்கு', என்று சொல்லிவிட்டு நகர்ந்தான் குசும்பு பிச்சைக்காரன்.

பிச்சைக்காரனுக்கு, தான் ஒரு அரசன் என்ற பெருமை. இளவரசனுக்கு, தான் ஒரு பன்றி என்ற அவமானம். நம்மை ஆள்வது ஒரு பன்றி என்ற அருவருப்பு நண்பர்களுக்கு.

முன் ஜென்ம வாசனை என்பது இதுதான். பன்றியாய் பிறப்பது, பன்றியாய் இருக்கும் வரை கேவலமாக பார்க்கப்படுவதில்லை. முன் ஜென்ம பன்றியையும், இந்த ஜென்ம அரசனையும் ஒப்பிட்டால், அது ஒப்பிட்டவனின் முட்டாள்தனம். இரண்டு ஜென்மங்களுக்குமிடையே எத்தனை வருடங்கள் கடந்து சென்றிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அத்தனை வருடங்களையும் அழித்துவிட்டு ஒரே கோட்டில் “பன்றி நாடாள்கிறது” என்று யாராவது சொன்னால், அப்படி சொல்பவன் சிந்தனையில், செயலில், உணர்வில் பன்றியும் அதன் வயிற்று மலமும் கலந்திருக்கிறது என்று அர்த்தம்.

நாரதர் அடுத்த பிறவியில் பெண்ணாக பிறந்திருக்கலாம்! கிருஷ்ணருடன் வாழ்ந்திருக்கலாம். அதை எப்படி தவறு என்று சொல்ல முடியும்? இதை உணராமல் ‘நாதாரி நாரதன்', என்று எழுதினால் தவறு அவனிடம்தான் இருக்கிறது என்று அர்த்தம். அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை. பதில் சொல்ல வேண்டியதில்லை. ஆனால், எந்த காரணத்திற்காக இந்த கேவலம் பரப்பப்படுகிறதோ, அதை நம்மால் முறியடிக்க முடியும்.

இறைவன், இறைவழிபாடு, பக்தி, நம்பிக்கை ஆகியவை எங்கள் உணர்வில் கலந்தவை. இந்த உணர்வை வழி நடத்திச் செல்ல எந்த அமைப்போ, அரசியல் கட்சியோ எங்களுக்கு இது நாள்வரை தேவைப்பட்டதில்லை. தொடர்ந்து எங்கள் உணர்வுகளை பாதிக்கும் செயலில் இறங்குவார்களேயானால், தகுந்த பாதுகாப்பை தேடி ஓடும் நிலை எங்களுக்கு ஏற்படும். இது நாள்வரை அரசியலையும், மதத்தையும் நாங்கள் இணைத்துப் பார்த்ததில்லை. அந்த நிலைக்கு இந்து விரோத சக்திகள் எங்களை தள்ளாது என்று நம்புகிறோம்.

‘நான் மனிதன், பிறகு இந்தியன், பிறகு இந்து, பிறகு தமிழன், பிறகு சார்ந்த ஜாதி, அதற்குப் பிறகுதான் என் பெயர், முகவரி ஆகியவை'. இப்படித்தான் உலகத்தின் பார்வையில் நாங்கள் இருக்கிறோம். இவைதான் உலகளவில் எங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் வழி. இத்தனை நாட்கள் ஜாதியை முன்னிலைப் படுத்தியிருக்கிறோம். தமிழன் என்ற இன உணர்வை முன்னிலைப் படுத்தியிருக்கிறோம். ஆனால், ‘இந்தியன் - இந்து' என்ற வார்த்தைகளை விண்ணப்பங்களில் எழுத மட்டுமே பயன்படுத்தியிருக்கிறோம். நாத்திக போர்வையில், தொடர்ந்து எங்களுக்கு எதிராக அசிங்கங்கள் நிகழ்த்தப்படுமேயானால், ‘இந்து' என்ற நிலையை கெட்டியகப் பிடித்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவோம். இதை நாங்களும் விரும்பவில்லை. மற்றவர்களும் விரும்பமாட்டார்கள். இந்த முடிவெடுக்கும் நிலைக்கு எங்களை தள்ளாதீர்கள். செக்'கிற்கும், சிவலிங்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ளுங்கள்.

தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவோம். வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்.

- சாது ஸ்ரீராம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com