திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்!

திமுக தலைவராகிறார் மு.க.ஸ்டாலின்!

வரும் 14-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடக்கவுள்ள திமுகவின் அவசர செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்


வரும் 14-ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடக்கவுள்ள திமுகவின் அவசர செயற்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 2016 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அவரது கோபாலபுரம் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வந்தார். இதனால் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.

இதையடுத்து, கடந்த 2017 ஜனவரி 4-ஆம் தேதி நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் திமுக செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன்பிறகு கட்சியின் அனைத்து முடிவுகளையும் ஸ்டாலின் மேற்கொண்டு வந்தார்.

இந்நிலையில் இடையிடையே கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதன் காரணமாக முரசொலி அலுவலகம், அண்ணா அறிவாலயம் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் வருகை தந்திருந்தார்.

கடந்த ஜூன் 3-ஆம் தேதி அவரது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார். கிட்டத்தட்ட 19 மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வந்த கருணாநிதிக்கு சில தினங்களுக்கு முன்பு தொண்டையில் பொருத்தப்பட்ட டிரக்கியாஸ்டமி கருவி மாற்றப்பட்டது.

இதற்காக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாலையே வீடு திரும்பினார். இருப்பினும் சிறுநீரக தொற்று காரணமாக கருணாநிதிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவரது வீட்டிலேயே அனைத்து மருத்துவ உபகரணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

அவரது உடல் நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 27-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில், காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்த குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாக கூறப்பட்டது.

கடந்த 11 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த கருணாநிதிக்கு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி காலை அவரது உடல்நிலை பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து மாலை வெளியான அறிக்கையில் வயது மூப்பு காரணமாக உடல் உறுப்புகளை செயல்பட வைப்பதில் சவால் நிறைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்துக்கு மருத்துவ உதவிகளுக்கு உடல்தரும் ஒத்துழைப்பை வைத்தே உடல்நிலை குறித்து கூற முடியும் என்று காவேரி மருத்துவமனை கூறியிருந்தது. இந்த நிலையில், 11 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்து. செவ்வாய்கிழமை மாலை 6.10 மணியளவில் (ஆக 7) காவிரிக் கரையில் பிறந்து, காவிரித் தண்ணீரில் நீந்தி விளையாடி, காவிரிக்காகப் போராடிய கருணாநிதியின் இறுதி மூச்சு காவேரி மருத்துவமனையில் பிரிந்தது. 

கடந்த அறுபது ஆண்டுகளாக கருணாநிதியைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த திமுக, அவரது 50 ஆண்டு தலைவர் பதவியில்  அடியெடுத்து வைத்த நிலையில் ஏற்பட்ட மறைவால் திமுக ஸ்தம்பித்துப் போய் நிற்கின்ற நிலையில், திமுகவுக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுக பொதுச் செயலாளர் பேராசியர் அன்பழகனை செயல் தலைவர் மு.க ஸ்டாலின் சந்தித்துள்ளார். திமுக பொது குழு, மாநில சுயாட்சி மாநாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. பொதுக்குழு 19-ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் கருணாநிதி மறைவையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதையடுத்து வரும் 14-ஆம் தேதி செவ்வாய்கிழமை அண்ணா அறிவாலயத்தில் திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெறும் என்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின் நடைபெறவுள்ள முதல் செயற்குழு கூட்டத்தில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்துவது உள்பட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன்னை வழி மொழியவோ, ஆதரிக்கவோ எந்தத் தலைவரோ, செல்வச் சீமானோ இல்லாமல், அண்ணா, ஈ.வெ.கி. சம்பத், நெடுஞ்செழியன், மதியழகன் போன்றவர்களைப்போல பட்டப்படிப்போ, முதுநிலைப் படிப்போ இல்லாத நிலையில், தனக்கென ஜாதிப் பின்னணியோ, பண பலமோ இல்லாத சூழ்நிலையில், அவர் அடிக்கடி சொல்வதைப்போல நிஜமாகவே ஒரு சாமானியன், இந்த நிலையை அடைய எந்த அளவுக்கு எதிர்நீச்சல் போட்டிருக்க வேண்டும் என்பதையும், அத்தனையையும் எதிர்கொண்டு இத்துணை வெற்றியை அடைவதென்றால் எத்துணை திறமைகள் அந்த போராளியிடம் இருந்திருக்க வேண்டும் என்பதையும் நினைத்தால் பிரமிப்பாகவே உள்ளது. 

1957-ஆம் ஆண்டு பேரவைத்தேர்தலில் பேட்டியிட்டு  வெற்றி பெற்றது முதல் 2016 தேர்தல் வரை போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தவரும், 1975-ஆம் ஆண்டு அவரது ஆட்சி கலைக்கப்பட்டு, நெருக்கடி நிலையும் அதைத் தொடர்ந்து எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியும் அமைந்தபோது, பலரும் கருணாநிதியின் சகாப்தம் முற்றுப்பெற்றதாகவே முடிவு கட்டிய நிலையில், அடுத்த 13 ஆண்டுகள் தொடர் தோல்விகள், பின்னடைவுகள் என்று திமுக தளர்ந்தாலும், சோர்ந்து விடாமல் தொடர்ந்து தனது தலைமையில் அந்தக் கட்சியைக் கட்டிக்காத்த பெருமை அவரது தனித்திறமை.

இந்த நிலையில், அந்த போராளி பெற்றெடுத்த பிள்ளையும், தற்போது செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின், திமுகவின் அடுத்த தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு திமுகவில் இருந்து நீக்கப்பட்ட தென்மண்டல அமைப்புச் செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சரும், கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.அழகிரி சமரசம் அடையாமல் இருந்து வந்த நிலையில், கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 நாட்களும் அழகிரியும் சகோதரர் ஸ்டாலினும் பலமுறை பேசியுள்ளதாகவும், அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் மட்டத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. எனவே, அழகிரிக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள தம்பி ஸ்டாலினுக்கு, அண்ணன் அழகிரி ஆதரவு வழங்குவார் என்றே பரவலாக பேசப்பட்டு வருகிறது. தன் தந்தை கட்டி காத்து வந்த பெருமைகளை தனது தம்பி ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரி அளிக்கும் ஆதரவும் அரவணைப்பிலே உள்ளது என்றும் அப்படிப்பட்ட ஆதரவை தம்பி ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரி வழங்குவார் என்றே நம்பப்படுகிறது.

தமிழக அரசியலில் முக்கிய தலைவர்களாகவும் கடைகோடி மக்களுக்கும் முகம் தெரிந்தவர்களாகவும், பேசப்பட்டு வந்தவர்களுமான ஜெயலலிதா, கருணாநிதி இருவரும் மறைந்துவிட்ட நிலையில், தற்போது அதிமுகவில் அப்படியொரு தலைவர்கள் இல்லாத நிலையே தொடர்கிறது. திமுகவில் கருணாநிதியை அடுத்து அவரது வாரிசாகவும், இளைஞரணித் தலைவராகவும், துணை முதல்வராகவும், மேயராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும், செயல் தலைவராகவும் தமிழகம் முழுவதும் மக்களுக்கு தெரிந்த முகமாக இருந்து வருபவர் ஸ்டாலின்.

தனக்கென ஜாதிப் பின்னணியோ, பண பலமோ இல்லாத சூழ்நிலையில், ஒரு சாமானியனாக, இந்த நிலையை அடைய போராடிய போராளியான தனது தந்தையின் செயல்பாடுகளை எண்ணி அவருடைய பின்னணியில் மக்களுக்கு அடையாளம் காட்டப்பட்ட அவரது பிள்ளைகள் ஒருவருக்கொருவர் தனது ஆதரவையும் அன்பையும் அளித்து அவர் 50 ஆண்டுகள் தலைவராக இருந்து காத்து வந்த திமுக இயக்கத்தை சிறப்பாக வழிநடத்திட வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

1949 செப்டம்பர் 17-ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) என்ற புதிய அமைப்பை அண்ணா தொடங்கினார். பின்னர் அரசியல் கட்சியாக மாறி 1957 முதல் தேர்தலில் திமுக போட்டியிட்டு வருகிறது. அப்போது திமுகவில் தலைவர் பதவி இல்லை. பொதுச்செயலாளராக அண்ணா தேர்ந்தெடுக்கப்பட்டார். 20 ஆண்டுகள் திமுகவின் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்த அண்ணா உடல் நலக் குறைவால் 1969-ல் காலமானார். அதன் பிறகு திமுகவில் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. கடந்த அறுபது ஆண்டுகளாக கருணாநிதியைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த திமுக, அவரது 50 ஆண்டு தலைவர் பதவியில் அடியெடுத்து வைத்த நிலையில் மறைந்துள்ளார். 

இதையடுத்து திமுக தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள செயல் தலைவர் ஸ்டாலினும் தனது தந்தை வழியில் அனைத்து தரப்பினரின் ஏகேபித்த ஆதரவோடு திமுகவை கட்டுக்கோப்புடன் வலிமை மிக்க கட்சியாக வழி நடத்துவதற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com