எங்கள் சமூகத்திலிருந்து இனி ஒருவரும் இந்தத் தொழிலில் ஈடுபடக் கூடாது!

குமாரும் கவிதாவும் அவர்களது மூன்று குழந்தைகளோடு, கரும்புத் தோட்டமும் மாந்தோப்பும் கொண்ட ஒரு பண்ணையில்
எங்கள் சமூகத்திலிருந்து இனி ஒருவரும் இந்தத் தொழிலில் ஈடுபடக் கூடாது!

குமாரும் கவிதாவும் அவர்களது மூன்று குழந்தைகளோடு, கரும்புத் தோட்டமும் மாந்தோப்பும் கொண்ட ஒரு பண்ணையில் கொத்தடிமைகளாக தாம் கழித்த நாட்களையும், பணியிடத்திலிருந்து தப்பிக்க நினைத்தபோது அந்த வாய்ப்பு எப்படி தட்டிப்பறிக்கப்பட்டது என்பதையும் 2016 மே மாதம் அவர்கள் மீட்கப்பட்டபோது நினைவுகூர்கிறார்கள்.

குமாரும் கவிதாவும் திருவள்ளூரில் உள்ள ஒரு விவசாயப் பண்ணை முதலாளியிடமிருந்து ரூபாய் 20,000/- முன்பணமாக வாங்கியிருந்தார்கள். அந்தக் கடனை திருப்பச் செலுத்த, அவர்கள் கரும்புத் தோட்டமும் மாந்தோப்பும் உள்ள பண்ணைக்கு சென்று மா மற்றும் கரும்பு விளைச்சலை பார்த்துக் கொண்டார்கள். அந்தப் பணியிடம் மிகவும் பெரியது, ஒதுக்குப்புறமாக சில ஏக்கர் நிலத்தில் உள்ளது. குமார் கவிதா குடும்பத்தினருக்கு அந்தப் பண்ணையில் செய்யும் வேலைக்கு ஆணடுக்கு ரூபாய் 45,000/- அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

கரும்புத் தோட்டத்தில், அவர்கள் முதலில் கரும்பு கன்றுகளை பயிரிட்டனர். அப்போதிலிருந்து அதே தளிர்களையே பயன்படுத்தினர். கடந்த விளைச்சலிலிருந்து, எரிக்கப்பட்ட மிச்சங்களை அவர்கள் சுத்தப்படுத்தினர். பிறகு நிலத்தின் வேறொரு பகுதிக்கு அவர்கள் சென்றனர். அரும்புகளிலிருந்து கரும்பு பயிர்கள் வளர ஆரம்பித்தவுடன் தொடர்ச்சியாக களை எடுக்க வேண்டியது அவசியம். கரும்பு பெரிதாகி களை அதனருகே வராத அளவுக்கு வளரும் வரை களை எடுக்க வேண்டியது அவசியம். தண்ணீர் தேங்கி கரும்பு வளர தேவையான சத்துக்களை அளிக்கும் வகையில் கரும்பை சுற்றி வட்ட வடிவில் தண்ணீருக்கான கால்வாய்களை வெட்டுவார்கள். அறுவடையின் போது தினக்கூலி தொழிலாளர்கள் அறுவடை வேலைக்காக அழைக்கப்படுவார்கள். குமாரும் கவிதாவும் அறுவடையின் போது கரும்பு வெட்ட வெட்ட இந்த தொழிலாளர்கள் தேவை இல்லாத இலைகளையும் கொம்புகளையும் பறித்து அவற்றை பகுதி பகுதியாக எரிப்பார்கள். குமாரும் கவிதாவும் கரும்பு வளர ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் அவற்றுக்கு தண்ணீர் ஊற்றுவார்கள். எந்த தடையும் இல்லாமல் தண்ணீர் செடிகளுக்கு போவதற்கு கால்வாய்களை தேவையான அளவு வெட்ட வேண்டும். தண்ணீர் போகிறதா என்பதை ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு தடவையாவது பரிசோதிக்க வேண்டும். இவை தவிர கவிதாவும் குமாரும் தேவைப்படும்போது மற்றும் முதலாளி சொன்ன போது கைகளில் எந்தவித பாதுகாப்பு உறையும் அணியாமல் இல்லாமல் உரங்களைத் தெளித்தார்கள்.

அவர்கள் ஏற்கனவே நடப்பட்டிருந்து மா மரங்களையும் பார்த்துக் கொண்டார்கள். மரங்களுக்குத் தேவையான தண்ணீர் வருவதற்கு புதிய கால்வாய்களை வெட்டுவதும் பழைய கால்வாய்களை வேறு வரிசையில் உள்ள மரங்களுக்கு திருப்புவதும் உள்ளிட்ட பணிகளை செய்து மாந்தோப்பையும் பராமரித்தார்கள் அவர்கள் களை எடுத்தார்கள். மா மரங்களைச் சுற்றி வளரும் தேவையில்லாத செடிகளைப் பிடுங்கி எறிந்தார்கள். பூச்சிகள் வராமல் இருக்க உரங்களைத் தெளித்தார்கள் மா மரத்தில் பழங்களும் காய்களும் வந்த பிறகு, உரிமையாளர் அவற்றை பறிக்கும் போது குமாரும் கவிதாவும் அங்கு இருக்க அவர்களுக்கு அனுமதி இல்லை.

குமார் தினமும் அதிகாலையிலேயே இருட்டு முழுமையாக விலகாதபோதே பண்ணை வேலைக்குக் கிளம்பி விடுவார். கவிதா தன்னுடைய தினசரி வீட்டுப் பணிகளை முடித்த பிறகு குமாருடன் இணைந்து கொள்வார். குழந்தைகள் பள்ளியிலிருந்து இடை விலக நேரிட்டது. ஏனென்றால் குமார் மற்றும் கவிதாவால் குழந்தைகளை குறித்த நேரத்திற்குப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. அவ்வாறு செய்தால் அவர்கள் வேலைக்கு செல்வது தாமதமாகும். முதலாளியிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும். இந்த குடும்பத்திற்கு வாரத்திற்கு மிகவும் குறைவான கூலியான ரூபாய் 200 ரூபாயிலிருந்து 300 வரை தான் அளிக்கப்பட்டது வேலை இல்லாத போதும் மாந்தோப்பை விட்டு வெளியேறி வேறு வேலை செய்து அதனால் தங்கள் வருமானத்தை அதிகரித்துக் கொள்ள அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

வாழ்வின் முக்கியமான தருணங்களில் பண்ணையை விட்டு வெளியேற அவர்கள் அனுமதி கேட்டபோது பண்ணை உரிமையாளர் அவர்களை வார்த்தையால் துன்புறுத்தினார். குமாரின் அண்ணன் மகன் இறந்த போது கூட அவருக்கு இறுதி மரியாதை செய்வதற்காக ஊருக்கு  செல்வதற்கான அனுமதி குமாருக்குக் கிடைக்கவில்லை. நீண்ட நேரம் வேலை செய்வதாலும், சுகாதாரமற்ற சூழலில் வாழ்வதாலும், முறையான உணவு இல்லாததாலும் குமாரை பலவித நோய்கள் அடிக்கடி தாக்கின. 2015 ஆம் ஆண்டின் பின் பகுதியில் குமாருக்கு முதலில் அம்மை நோய் வந்தது. ஆனாலும் அவர் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார். இதனால் அவர் உடல்நலம் வெகுவாக பாதித்தது. அவருக்கு கழுத்தில் ஒரு கட்டி வந்தது. கடுமையான வயிற்றுவலி அடிக்கடி வந்தது. இதனால் அவரால் ஒரு வேலையைக் கூட செய்ய முடியவில்லை, எப்போதும் படுக்கையிலேயே இருக்குமாறு செய்தது.  இத்தகைய சமயங்களில் கவிதா சமையல் வேலை, குழந்தைகளைக் கவனிப்பது, தனது கணவனை கவனிப்பது ஆகியவைகளோடு பண்ணை வேலையையும் செய்ய வேண்டியிருந்தது. தனது கணவருக்கு மருத்துவம் தேவை என்று உரிமையாளரிடம் கவிதா கெஞ்சிய போதும் பண்ணை உரிமையாளரால் கவிதா உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார்.

குமார் வேலையே செய்ய முடியாத அளவுக்கு பலவீனம் ஆகிவிட்டார். அந்த நிலையில் கவிதா, முதலாளியிடம், ஓய்வெடுக்க தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தங்களை அனுமதியுங்கள் என்று கெஞ்சினார்.  குமாரும் கவிதாவும் 5 நாட்களில் பணிக்குத் திரும்பி விட வேண்டும் என்ற கட்டுப்பாட்டோடு பண்ணை உரிமையாளர், அவர்களுக்கு விடுமுறை வழங்கினார். ஆனால் ஐந்து ஐந்து நாட்கள் முடியும் முன்பாகவே கிராமத்தினர் முன் பண்ணை முதலாளி குமாரையும் கவிதாவையும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டினார். குமாரின் மருத்துவ தேவைக்காக அவரும் கவிதாவும் 15 நாட்கள் தங்கள் பணி இடத்தை விட்டு வெளியே இருந்த போது முதலாளி குறைந்தது பத்து தடவையாவது அவர்களை தொலைபேசியில் அழைத்து, திட்டி அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

பணிக்குத் திரும்பிய பிறகு குமாரின் உடல் நலம் மிகவும் சீர் கெட்டது. கவிதாவின் உறவினர்களில் ஒருவர் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்தார். குமாருடன் அந்த வண்டியில் மருத்துவமனை செல்லக் கூட கவிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவள் வேலை செய்வதற்காக பண்ணையிலேயே நிறுத்தப்பட்டார். குழந்தைகளும் கவிதாவுடன் இருந்தனர். ஆனால் கவிதாவின் கவனம் முழுவதும் தனது கணவரின் உடல் நலம் பற்றியே இருந்தது.

மருத்துவமனையிலிருந்து குமார் வீட்டுக்கு வந்தவுடனேயே பண்ணை உரிமையாளர் வேலைக்கு வருமாறு குமாரைக் கட்டாயப்படுத்தினார். குமாரை ஓய்வு எடுக்கவே முதலாளி விடவில்லை. ஓய்வு தராததோடு மருத்துவமனையில் இருந்த நாட்களுக்காக கூடுதல் பணியும் செய்யுமாறு குமார் கட்டாயப்படுத்தப்பட்டார். இனிமேலும் இத்தகைய சூழலைத் தாங்க முடியாது எனும் நிலை வந்தபோது குமாரும் கவிதாவும் அந்தப் பண்ணையை விட்டு தப்பித்துச் செல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தனர். அத்தகைய ஒரு சந்தர்ப்பம் தானாக வந்தபோது, பணியிடத்திலிருந்து அவர்கள் தப்பித்து ஓடி அங்கு காத்திருந்த ஒரு வண்டியில் ஏறினர். அந்த வண்டி அவர்களை நேரிடையாக வருவாய் கோட்ட அலுவலரின்  (RDO) அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது. தங்களின் நிலையை குமாரும் கவிதாவும் வருவாய் கோட்ட அலுவலரிடம் விவரித்தனர். அவர் அவர்களுக்கு மிகவும் தேவையான கொத்தடிமை தொழிலிருந்து மீள்வதற்கான சான்றிதழையும் முதல் கட்ட நிவாரணமான ஆயிரம் ரூபாயை கவிதா, குமார் இருவருக்கும் வழங்கினார்.

பண்ணை உரிமையாளர் வாழும் அதே கிராமத்திலேயே வாழலாம் என்று குமாரும் கவிதாவும் முடிவெடுத்தனர். துவக்கத்தில், அவர்களுக்கு தங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே பயமாக இருந்தது. மெதுவாக, அவர்களால் தங்கள் சுதந்திரத்தை நிறுவ முடிந்தது.

தங்கள் வாழ்வு எப்படி முன்பை விட நன்றாக மாறியது என்பதை கவிதா விளக்கினார். அவர்கள் குடும்பம் அவர்களுக்கான சாதி/சமூகச் சான்றிதழுக்காக உள்ளூர் அதிகாரிகளை பார்த்து பேசி வருகின்றனர். கிராம நிர்வாக அதிகாரியிடம் அவர்களுக்கான நிரந்தர, சொந்த நிலத்துக்காகவும் தற்போது பேசி வருகிறார்கள். அவர்கள் வாழும் குடியிருப்புக்கு தண்ணீர் வசதியை பெற்றுவிட்டார்கள், மின்சார இணைப்புக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசிவருகிறார்கள். குமார் இப்போது அவரது சகோதரியின் இடத்தில் அரக்கோணத்துக்கு அருகில் வேலை செய்து வருகிறார். கொத்தடிமைத் தொழிலிருந்து விடுதலையான ஆரம்ப நாட்களில், குமார் மற்றும் கவிதா குடும்பத்தினர் அவர்களின் முதலாளியை நினைத்து பயந்திருந்தனர். அவர் இருக்கும் அதே இடத்தில் தாமும் வாழ்வதால் அவரால் மிரட்டப்படுவோமோ என்று அஞ்சினர். ஆனால், இன்று, குமார் எந்தவித பயமும் இன்றி தன் குடும்பத்தை விட்டுவிட்டு. வேலைக்குச் செல்கிறார். கவிதா தைரியமாக தன் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார்.

குமார் மற்றும் கவிதாவின் மூன்று குழந்தைகளும் தற்போது உள்ளூர் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரும் நன்றாக படிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் கனவுகள் உள்ளன, அதை நனவாக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள். முதல் பிள்ளை, ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறார். மூன்றாவது குழந்தை ஆசிரியராக வேண்டும் என்றும் தனது சமூகத்துப் குழந்தைகளுக்கு கல்விச் சேவை செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். அவர்கள் அனைவரும் தங்கள் சமூகத்துக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும், தங்கள் சமூகத்திலிருந்து இனி ஒருவரும் கொத்தடிமைத் தொழிலில் ஈடுபடக்கூடாது, அதற்கான பணிகளைச் செய்யவேண்டும் என்று நினைக்கிறார்கள். மிகவும் கூச்ச சுபாவத்துடனும் பயத்துடனும் இருந்தவர்கள் இப்போது நாளுக்கு நாள் பலமானவர்களாகவும் தைரியமானவர்களாகவும் மாறிவருகிறார்கள். தங்களின் உரிமைகளுக்காகவும் பலன்களுக்காகவும் மாவட்ட நிர்வாகத்தோடு வாதாட தங்களை உயர்த்திக் கொள்ளும் அளவுக்கு மாறியிருக்கும் குமாரின் குடும்பம் இந்த நிலைக்காக நீண்ட தூரம் பயணித்திருக்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com