5 மாநில தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமா..? கூட்டணிக்கான முன்னோட்டமா..?

தேர்தல் முடிவுகள் வரும் 2019 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையுமா அல்லது கூட்டணிக்கான முன்னோட்டமாக அமையுமா
5 மாநில தேர்தல் முடிவுகள் மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமா..? கூட்டணிக்கான முன்னோட்டமா..?

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 தொடங்கி எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்ற நிலையில், தேர்தல் முடிவுகள் வரும் 2019 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையுமா அல்லது கூட்டணிக்கான முன்னோட்டமாக அமையுமா என்ற கேள்வி அரசியல் தலைவர்களின் எண்ணோட்டங்களை எழுச்சி அடைய செய்துள்ளது.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், இந்த தேர்தல் முடிவுகள் தேசிய அளவில் மிகுந்த ஆவலையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

5 மாநில பேரவைக்கான தேர்தலில் மொத்தம் 679 தொகுதிகளில் 8,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட்டனர். ராஜஸ்தானில் மட்டும் வேட்பாளர் ஒருவர் இறந்ததால் ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை. வாக்குப்பதிவுகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறன்றன. 

இந்த தேர்தல் முடிவுகள் பாஜக, காங்கிரஸ் மட்டுமின்றி பல்வேறு பிராந்தியக் கட்சிகளுக்கும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில், தேர்தல் முடிவுகளுக்கு ஏற்பவே அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல் கூட்டணிகள் அமையும். 

இதில் தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், மொத்தம் 119 தொகுதிகளில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 90 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. மீண்டும் சந்திரசேகர் ராவ் முதல்வராக பதவியேற்ப்பார் என தெரிகிறது. காங்கிரஸ்  கூட்டணி 22, பாஜக 1 இடங்களிலும், மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

ஊழலற்ற அரசு எங்களுடையது என்று மார் தட்டி வந்த மோடிக்கு பகிரங்கமாகவே வியாபம் ஊழலில் ஈடுபட்டு ஆப்பு வைத்தவர் சிவராஜ் சிங் சௌகான், இந்த முறை தோல்வியை தழுவுவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்த நிலையில், மொத்தம் 230 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் 2003 ஆம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லாத காங்கிரஸ் ஆளும் பாஜகவை பின்னுக்கு தள்ளி 120 முன்னிலைலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இந்த தேர்தலில் அகற்ற வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தீவிரமாக தேர்தல் பணிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றே கூறலாம். தற்போதைய நிலவரப்படி மற்ற 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது

இன்றைய 5 மாநில தேர்தல் முன்னிலை நிலவரங்கள் இந்திய அரசியல் தலைவர்களில் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர்கள் மத்தியில் அடுத்தக்கட்ட எழுச்சிக்கான விவாதங்களையும், ஆளும் கட்சி தலைவர்களிடையே ஒரு மாநிலங்களில் கூட வெற்றி பெறமுடியாத வீழ்ச்சிக்கான காரணங்கள் குறித்த விவாதங்களையும் தொடங்கி உள்ளது. 
 
கடந்த முறை நடந்த கர்நாடக மாநில தேர்தலின்போது வாக்குப்பதிவுகள் முடிவடையும் வரை இறக்கத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை, தேர்தல் முடிந்த அடுத்த நாளே விலை ஏற்றம் உச்சம் அடைந்து வரலாறு காணாத நிலையில் லிட்டர் ரூ.90 ஐ நெறுங்கியது. இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனம் எழுத்த நிலையிலும் கண்டுகொள்ளாத மத்திய அரசு, 5 மாநிலங்கள் பேரவைத் தேர்தலுக்காக கடந்த ஒன்றரை மாதங்களாக குறைந்து வந்தது. இதற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதே காரணமாக கூறப்பட்டு வந்தது. ஆனால், 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று மாலைக்குள் முழுமையாக வெளியாக உள்ள நிலையில் நாளை அல்லது மறுநாள் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை ஏறும் என அனைத்து மட்டத்தினர் மத்தியிலும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 

இந்த 5 மாநில பேரவைத் தேர்தலில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் அரசியல் ராஜதந்திரம், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரமும் முற்றிலும் எடுபடவில்லை என்றுதான் கூற வேண்டும். 

2014 இல் வீச தொடங்கிய மோடியின் அலை, பல தேர்தல்கள், பல விமர்சனங்களை கடந்து தற்போது ஓய்ந்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். முக்கியமாக மோடி அலை ஓய்ந்துவிட்டது என்று அவர் செய்த தேர்தல் பிரச்சாரங்களிலேயே தெளிவாக காண முடிந்தது. அவை தற்போது வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளில் தெரிந்துகொள்ளலாம். 

மாநில சுயாட்சியை மதிக்காதது தொடர்ந்து மத கலவரம், பிரிவினை வாதம், சாதி பிரச்சனை, பசுக் கொலை கலவரம். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மக்களை நேரடியாக பாதித்த சரக்கு மற்றும் சேவை வரி, பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளாதது, செய்தியாளர்களை சந்திக்காதது, உச்சம் தொட்ட பெட்ரோல், விவசாயிகள் கடன், டீசல் விலை உயர்வு, சிலை விவகாரங்கள், கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது போன்ற பல முக்கிய விவகாரங்களில் மக்களின் நலனை கருத்தில் கொள்ளாதது மற்றும் மத்திய அரசின் உயர் பதிவிகளில் உள்ள அதிகாரிகளுடனான மோதல் உள்ளிட்ட பல விவகாரங்களில் மோடி கண்டுகொள்ளாமல் இருந்ததின் கோபமே, 5 மாநில மக்கள் பாஜகவின் அஸ்திவாரத்தை ஆட்டிப்பார்த்துவிட்டனர் என்றே கூறலாம். 

இதனிடையே அண்மைக் காலமாக, மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்த சூழலில் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்பட பல்வேறு பொருளாதார நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ரிசர்வ் வங்கியை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முயலுகிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டி வந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் நேற்று தனது பதவி ராஜிநாமாவை செய்துள்ள நிலையில், அடுத்த கட்ட பரபரப்பான மத்திய அரசின் சூழ்நிலையில்  பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் சுர்ஜித் பல்லா ராஜிநாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.

தொடர்ந்து மத்திய அரசில் பரபரப்பு நிலவி வரும் நிலையில், இன்றைய 5 மாநில தேர்தல் பேர்வைத் தேர்தல் முடிவுகள் வரும் 2019 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையுமா அல்லது கூட்டணிக்கான முன்னோட்டமாக அமையுமா என்ற விவாதம் அரசியல் தலைவர்களின் எண்ணோட்டங்களை எழுச்சி அடைய செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சிகளின் பலம் எப்படி இருக்கிறது? என்பதை எடைபோடும் தேர்தலாக இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதால், பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் களத்தில் இறங்கப்போகும் கட்சிகள் இப்போதே வரிந்து கட்டு நிற்கின்றன. 

தேசிய அளவில் கூட்டணி அமைப்பதா? அல்லது மாநில அளவில் கூட்டணியா? என்பது குறித்தும் பிரதமர் வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது, முக்கியமான பிரச்சார யுக்திகள், பாஜக அரசுக்கு எதிராக மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் பொருள் நிரலில் பாஜக அல்லாத ஒரு மகா கூட்டணியை அமைப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் நேற்று நடைபெற்ற பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

இந்நிலையில், தேசிய, மாநில கட்சிகள் வரும் தேர்தல்களில் யாருடன் கூட்டணி அமைப்பது குறித்து அந்தந்த கட்சிகள் தங்களது இரண்டாம் கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்த தொடங்கியுள்ளனர். மாநில அளவிலான சிறய கட்சிகளோ தங்களது கூட்டணி நிலை குறித்து களக்கம் அடைந்திருந்தாலும், பெரிய கட்சிகளுடனான கூட்டணிக்காக அடுத்த தலைவர்கள் மூலம் காய் நகர்த்த தொடங்கி உள்ளனர். 

5 மாநில தேர்தல் முடிவுகள் தேசிய கட்சிகளுக்கு எப்படி அமைந்திருந்தாலும் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளுடனான கூட்டணிக்கே முக்கியத்துவம் அளித்து காய் நகர்த்தவும், மாநில அளவிலான சிறய கட்சிகள் பெரிய கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். 

5 மாநில தேர்தல் முடிவுகள் வரும் 2019 மக்களவை தேர்தலுக்கான முன்னோட்டமாக அமையுமா என்பதைவிட தேசிய, மாநில கட்சிகளுடனான கூட்டணிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளது என்பதே திண்ணம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com