கட்டாயத் திருமணம் அடிமைத்தனத்தின் ஒரு வடிவமா?

நம் நாட்டில் பல திருமணங்கள் இன்னமும் பதிவு செய்யப்படாமல்தான் நடக்கின்றன.
கட்டாயத் திருமணம் அடிமைத்தனத்தின் ஒரு வடிவமா?

நம் நாட்டில் பல திருமணங்கள் இன்னமும் பதிவு செய்யப்படாமல்தான் நடக்கின்றன. இத்தகைய வழக்கத்தால் கட்டாய திருமணங்கள் எவ்வளவு நடக்கின்றன என்ற புள்ளிவிவரம் அவ்வப்போது வேறுபடுகிறது. 2003-ம் ஆண்டில், பெண்களைப் பற்றிய ஆய்வுக்கான சர்வதேச மையம், 18 வயதுக்கு உட்பட்ட 51 மில்லியன் (5 கோடியே 10 லட்சம்) சிறுமிகளுக்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது என்று கணக்கிட்டுள்ளது. ஆப்பிரிக்கா, தெற்காசியாவின் வளர்ச்சியடையாத ஏழை நாடுகளில் கட்டாயத் திருமணங்களும் உரிய வயதுக்கு முன்னரே திருமணங்கள் நடப்பதும் சாதாரணமான விஷயம். அதே நேரத்தில், ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவின் மிகவும் வளமான நாடுகளில் கூட, இன்னமும் கட்டாய மற்றும் சிறுவயது திருமணங்கள் நடைபெறுகின்றன. கட்டாயத் திருமணங்கள் அடிமை முறையின் பிற வடிவங்களோடு பின்னிப் பிணைந்துள்ளது. பாலியல் உறவுக்காக கடத்தப்படும் குழந்தைகள் கட்டாயத் திருமணங்களுக்காக விற்கப்படலாம். 18 வயதுக்கு மேற்பட்ட வயது வந்த ஒருவர் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பின்னர் கடத்தப்படலாம். அதன் பிறகு அந்த ஆண் அல்லது பெண்ணின் இணையரின் லாபத்துக்காக ஏதாவது ஒரு வேலையிலோ அல்லது பாலியல் தொழிலிலோ ஈடுபடுத்தப்படலாம்.

அடிமைத்தனம், அடிமை வியாபாரம் மற்றும் அடிமைத்தனத்துக்கு இணையான நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளை ஒழிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்பாட்டின் சட்டக் கூறுகள் / பிரிவுகள் 1 மற்றும் 2, கட்டாயத் திருமணம் அடிமைத்தனத்துக்கு இணையானது என்று வரையறுத்துள்ளது. கட்டாயத் திருமணம் என்ற நடைமுறையில் திருமணம் செய்யப்படும் தனிநபர்களுக்கு அந்த திருமணம் வேண்டாம் என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை. தவிர அவர்களின் பெற்றோர்கள், காப்பாளர்கள், உறவினர்கள் அல்லது  வேறு யாராவது தனிப்பட்ட நபர் அல்லது குழுக்கள் இவர்களில் எவருக்கும் அந்த நபருக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்கும் வாய்ப்பு இருக்காது. இளவயதுத் திருமணம் என்பது ஒரு குழந்தைக்கு நடத்தப்படுகிற கட்டாயத் திருமணமாகும். சர்வதேச அளவில் குழந்தை என்பது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. கணவன் கொடுக்க வேண்டிய சில வகையான கட்டணத்துக்கு பதிலாக கட்டாயப்படுத்தி / பலவந்தமாக மனைவியை பண்டமாற்று முறைபோல் மாற்றிக் கொடுக்கும் நடைமுறையும் உள்ளது. கணவனை இழந்த பெண் அவளின் விருப்பம் இன்றி கணவனின் ஆண் உறவினர்களில் யாராவது ஒருவரால் சொந்தமாக்கிக் கொள்ளப்படுவதும் நடைமுறையில் உள்ளது. இத்தகைய இரு சந்தர்பங்களிலும் கட்டாயத் திருமணம் அல்லது கொத்தடிமை திருமணம் நடக்கிறது.

சர்வதேச தொழிலாளர் நிறுவனம் ஐஎல்ஓ (ILO) அமைப்பும் வாக் ப்ரி பௌண்டேஷன் என்னும் அமைப்பும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சர்வதேச அமைப்பும் (IOM) இணைந்து  உலகம் முழுவதிலும் 40.3 மில்லியன் மக்கள் அடிமைகளாக உள்ளனர் என்று கணக்கிட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2012-ம் ஆண்டில் 20.9 மில்லியனாக இருந்தது. தற்போது இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது  கணக்கிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மை மக்கள் பெண்களும் சிறுமிகளும்தான். கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படும் மூன்றில் ஒருவர் குழந்தைகள். அதில் 40 சதவிகித குழந்தைகளுக்கு, திருமணம் செய்து வைக்கப்படும்போது வயது 15 தான். பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை மேம்படுத்தவும் அதன் மூலம் அடிமைத்தனத்தை முடிவுக்கு கொண்டுவரவும் கட்டாய திருமணங்களை முடிவுக்கு கொண்டுவருவது மிக அவசியம்.

கட்டாயத் திருமணங்களில் மூன்று முக்கியமான வகைகள் உள்ளன: 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் கட்டாயத் திருமணம், இளவயது அல்லது குழந்தைத் திருமணம், திருமணத்துக்காக கடத்துவது. கட்டாயத் திருமணங்கள் ஏன் நடத்தி வைக்கப்படுகின்றன என்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மணப்பெண்ணுக்கான விலையைத் தருவது,  கடனை ரத்து செய்வது அல்லது ஏதாவது சண்டையை தீர்த்து வைப்பது,  போகோஹராம் அமைப்பால்  பல சிறுமிகள் கடத்தப்பட்டதைப் போல ஆயுதம் தாங்கிய குழுக்களால் சிறுமிகளும் பெண்களும் கடத்தப்படுதல்,  ஏமாற்றுதல்,  - இயற்கை பேரிடர்களின் போது அல்லது வேலைக்காக புலம் பெயரும் போது தமது பொறுப்பிலிருந்து விலகுவதற்காக (தன்னுடைய பொறுப்பில் இருக்கும் பெண்ணை வேறு ஒருவருக்கு கட்டாயத் திருமணம் செய்து கொடுப்பது), ஒரு நாட்டில் இருக்கும்  ஒரு தனிநபரின் வீட்டை தனதாக்கிக்கொள்வது - இவையெல்லாம் கட்டாயத் திருமணங்கள் நடைபெறுவதற்கான பல  காரணங்களில் சில.  எந்த வகையான காரணமாக இருந்தாலும், திருமண பந்தத்துக்குள் நுழைந்து விட்டால், அவர்களுக்கு அதைத் தொடர்ந்த கூடுதலான சுரண்டலும் தொந்தரவுகளும் பன்மடங்கு அதிகரிப்பதற்கான அபாயம் அதிகம். உதாரணமாக, கட்டாயத் திருமணத்துக்குள் நுழைந்த பிறகு, ஒருவர், கட்டாய உழைப்பு, பாலியல் சுரண்டல், கூடுதலாக அல்லது வீட்டில் அடிமைப் பணி செய்வது உள்ளிட்டவற்றை செய்ய வேண்டியிருக்கும்.

கட்டாயத் திருமணத்தால் பாதிக்கப்பட்டது ஒரு குழந்தையாக இருந்தால் அதற்கு நேரிடும் சுரண்டலும் தொந்தரவுகளும் பன்மடங்காக இருப்பதற்கான அபாயம் அதிகம்.  திருமணத்துக்கு சம்மதம் சொல்லியிருந்தாலும் அதுவும் சிக்கலானது.  ஒவ்வொரு வருடமும் 18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து கொள்ளும் சிறுமிகளின் எண்ணிக்கை 12 மில்லியன் என்று அறிவிக்கப்படுகிறது.  குழந்தைத் திருமணங்கள் அனைத்தும் நவீன அடிமைத்தனத்துக்குள் வராது. குறிப்பாக திருமணம் செய்து கொள்ளும் இருவரும் ஒரே வயதுடையவர்களாக இருந்தால், அதாவது 16-லிருந்து 18 வயது வரை இருந்தால் அது அடிமைத்தனத்துக்குள் வராது. கட்டாயத் திருமண பந்தத்தில் வாழ்பவர்களில் 37 சதவிகிதத்தினர் திருமணம் நடக்கும்போது அவர்கள் குழந்தைகளாக இருந்தனர் என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு கணக்கிட்டுள்ளது. அதிலும் 44 சதவிகிதம் பேர் 15 வயதுக்கும் குறைவானர்கள். கட்டாயத் திருமணங்கள், குழந்தைகளை அவர்களின் குழந்தைப் பருவத்திலிருந்து பிய்த்து எறிந்து அவர்களின் எதிர்காலத்தை கட்டுப்படுத்துவதோடு அவர்களின் கல்வி, பொருளாதார மற்றும் உடல்நலனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுமிகளுக்கு திருமணம் நடத்திவைக்கப்பட்டால், அவர்கள் பள்ளியை விட்டு இடைவிலக நேரிடும், அதனால் அவர்களுக்காக பொருளாதார வாய்ப்புகள் குறையும். மேலும், இத்தகைய திருமணங்களில் மணப்பெண்ணின் வயது மிகவும் குறைவாக இருப்பதால் பாலியல் உறவுகளுக்குள் ஈடுபடுவதற்கான முழு சக்தி அவர்களிடம் இருக்காது. அவர்களுடைய உடல் குழந்தையை பெற்றுக் கொள்ளத் தேவையான வளர்ச்சியை எட்டும் முன்னர் அவர்கள் கருவுறுவதால் அவர்களுக்கு  உடல் நலம் சார்ந்த தீவிர பிரச்னைகள் வரும். கட்டாய உழைப்பு, பாலியல் வன்புணர்வு, வீட்டில் அடிமைப்பணி செய்வது, உடல் ரீதியாக மற்றும் வார்த்தை ரீதியாக மோசமாக நடத்தப்படுவதிலிருந்து விடுபடமுடியாத நிலையில் இருப்பது உள்ளிட்ட கொடூரமான மனித உரிமை மீறல்களை கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட பல சிறுமிகளும் இளம் பெண்களும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இவற்றோடு கூடுதலாக மேலே சொன்ன உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

கட்டாயத் திருமணத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் உள்ள தொடர்பு என்ன? அதன் மையப் புள்ளியில், அடிமைத்தனம் என்பது ஒருவர் உடைமைப் பொருள் போன்று நடத்தப்படுவதுதான். உங்களுக்கு சொந்தமாக ஒரு வாகனமோ (மகிழுந்து) அல்லது அலைபேசியோ இருந்தால் அதை என்ன செய்வீர்கள்? நீங்கள் நினைத்தால் அதை பயன்படுத்தலாம், விற்கலாம், யாரிடமாவது கொடுக்கலாம், அதை வைத்து வியாபாரம் செய்யலாம், குப்பையில் போடலாம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டத்தில், கட்டாயத் திருமணம் என்பது ஒரு ‘அடிமைத்தனம் போன்ற நடைமுறை’ என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கட்டாய உழைப்பு மற்றும் மனிதக் கடத்தல் போன்ற பிற தொந்தரவுகளை மூடி மறைக்க ‘திருமணம்’ என்ற நடைமுறை பயன்படுத்தப்படுகிறது என்பதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அடிக்கடி, கட்டாயத் திருமணம் என்பது அந்தக் குற்றத்தை தடுக்கும் எண்ணத்துடன் செயல்படவேண்டிய சட்டங்களை உருவாக்குபவர்களால் மறக்கப்படுகிறது அல்லது மேலோட்டமாகப் பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலைத் தான் நாங்கள் மாற்ற விரும்புகிறோம்.

பிரிட்டன் நாட்டில், திருமணம் செய்து கொள்பவர்களில் யாராவது ஒருவரோ அல்லது இருவருமே திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என்றால் அதிலும் அவர்களில் யாராவது ஒருவர் பிரிட்டன் குடிமக்கள் என்றால், அத்தகைய வழக்குகளைக் கையாள்கிற, வெளிநாடு மற்றும் உள்நாட்டு அலுவலகங்களின் ஒரு பிரிவு, 2017-ம் ஆண்டில் கட்டாயத் திருமணம் சார்ந்த வழக்குகள் தொடர்பாக தாம் கவனம் செலுத்தவேண்டிய நான்கு நாடுகளில் இந்தியா முதலாவதாக உள்ளது என்று அறிவித்துள்ளது. மேற்சொன்ன அலுவலகத்தின் கட்டாய திருமணம் தொடர்பான பிரிவு (FMU), இந்தியாவோடு தொடர்புடைய 82 வழக்குகளைக் கையாண்டுள்ளது. சமீபத்திய புள்ளி விவரப்படி, இந்தப் பட்டியலில் பாகிஸ்தான் 439 வழக்குகளோடு முதலாவது இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் 129 வழக்குகள், சோமாலியா 91 வழக்குகளோடு இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளது. கட்டாயத் திருமணங்கள் தொடர்பான வழக்குகளில், திருமணங்களில் ஈடுபடும் இணையர்களில் யாராவது ஒருவர் பிரிட்டன் நாட்டு குடிமக்களாகவும் மற்றொருவர் வெளிநாட்டு குடிமக்களாகவும் இருப்பார்கள். அத்தகைய சூழலில் பிரிட்டன் நாட்டில் குடியேறுதல் தொடர்பான பிரச்னைகள் அவ்வப்போது வரும். மேற்சொன்ன வழக்குகளில், ஏதாவது ஒரு நாட்டில் இருந்து ஒரு தனி நபரை விடுமுறைக்கு பிரிட்டன் அழைத்துச் செல்கிறோம் என்ற பெயரில் அழைத்துவந்துவிட்டு பின்னர் திருமணத்துக்கு கட்டாயப்படுத்துவது தொடர்பான வழக்குகளும் உள்ளடங்கும்.  இந்தியாவில் இத்தகைய வழக்குகளின் விகிதம் 2016-ம் ஆண்டில் இருந்ததைப் போலவே 2017-ம் ஆண்டிலும் உள்ளது. இந்த எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால் வழக்கு நடத்த பொருளாதாரரீதியாக உதவி செய்ய யாரும் கிடைக்காததால் புகாரளிக்க இயலாமல் இருக்கும் கட்டாயத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட வயது வந்தவர்களும் ஆண்களும் நிறைய எண்ணிக்கையில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம்” என்று கட்டாயத் திருமணம் தொடர்பான வழக்குகளை கையாளும் பிரிவின் குறிப்பு தெரிவிக்கிறது.

இந்தியாவில், பெண்கள் திருமணத்துக்காக கட்டாயப்படுத்தப்பட்டால் அந்த நகரத்தின் உள்ளூர் காவல் நிலையத்தின் பெண்கள் பிரிவை தொடர்பு கொள்ளலாம். தன்னை இந்தத் திருமணத்துக்கு நியாமில்லாமல் கட்டாயப்படுத்தினார்கள் என்றும் அதனால்தான் தாங்கள் இதற்கு  சம்மதித்தோம்  என்றும்  தங்களை திருமணத்துக்கு கட்டாயப்படுத்தும் நபர் மீது அந்த காவல் நிலையத்தின் பெண்கள் பிரிவில், கட்டாயப்படுத்தப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம். அவர்கள் தங்கள் மீது குடும்ப வன்முறை நடக்கிறது என்று குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் அவர்களின் பெற்றோர்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் மீது புகார் கொடுக்கலாம். அந்தப் புகார் யார் மீது வழங்கப்பட்டதோ அவர்களை கட்டாயத் திருமணம் செய்விப்பதிலிருந்து தடுத்து நடுவர் நீதிபதி ஒரு  இடைக்கால உத்தரவு வழங்கலாம். தவிர, அந்த வழக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிக்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு அளித்து கட்டாயத் திருமணத்தை தடுக்கும்படி கட்டளையிடலாம். திருணத்துக்காக கட்டாயப்படுத்தப்படும் பெண்கள் தேசிய பெண்கள் ஆணையத்தையும் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.  

ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள் 8.7-ன் மூலம் கட்டாய உழைப்பு, நவீன வடிவிலான அடிமைத்தனம், மனிதக் கடத்தல் மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறை ஆகியவற்றை முடிவுக்கு கொண்டுவருவோம் என்று 2015-ல், உலகத் தலைவர்கள், உலகளாவிய அளவில் ஒரு உறுதியேற்றுக் கொண்டனர். கட்டாயத் திருமணத்துக்கும் நவீன அடிமைத்தனத்துக்கும் உள்ள இணைப்பு தெளிவாக இருக்கும் அதே நேரத்தில், இந்தப் பிரச்சனையின் தீவிரத் தன்மையை முழுவதுமாக உள்வாங்கிக் கொள்ளவும் தேவையான தீர்வுகளை தேர்வு செய்யவும் கட்டாயத் திருமணங்கள் பற்றிய இன்னமும் அதிகமான தகவல் தேவை. உதாரணத்துக்கு, கட்டாயத் திருமணங்கள் ‘மிகக் கடுமையான அளவில் குறைவாகவே கண்டறியப்படுகின்றன’ என்று சர்வதேச தொழிலாளர் அமைப்பான ILO அமைப்பின் அறிக்கை ஒன்று ஒப்புக் கொள்கிறது.  கட்டாயத் திருமணங்களை முடிவுக்குக் கொண்டு வருவது நவீன அடிமைத்தனம் மற்றும் மனிதக் கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்ல, விரிவான அளவில் பேசினால் பாலின சமத்துவத்துக்கும் வழி வகுக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com