என் கதை படித்திருக்கிறீர்களா? கூகுள் போற்றும் கவிஞர் கமலா தாஸின் சுய வரலாறு!

இன்று (பிப்ரவரி 1, 2018) ஓவியர் மன்ஜித் உருவாக்கிய டூடுல் கவிஞர் மற்றும் எழுத்தாளர் கமலா தாஸை
என் கதை படித்திருக்கிறீர்களா? கூகுள் போற்றும் கவிஞர் கமலா தாஸின் சுய வரலாறு!

மனிதர்களின் அறிவுப் பசிக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கும் ஒரு சர்வசக்தி வாய்ந்த செயலி கூகுள். எதைப் பற்றி வேண்டுமானாலும் கூகிளிடம் கேட்கலாம். விரல் நுனித் தீண்டலில் பதிலுரைக்கும். மனிதத் தேடலின் மகத்தான களமாக மாறிவிட்டது கூகுள் எனலாம். இந்நிலையில் கூகுள் செய்து கொண்டிருக்கும் சில நல்ல விஷயங்களுள் ஒன்றுதான் கூகுள் டூடுல். ஆம் கூகிள் தனது தேடல் பக்கத்தில் வரைபடங்களை டூடுலாக வெளியிடுவது வழக்கம். அது ஆளுமைகளின் உருவச் சித்திரமாக இருக்கலாம் அல்லது உலகின் முக்கிய நிகழ்வுகளாகவும் இருக்கலாம். உலகமெங்கிலும் வாழ்ந்து மறைந்த மாமனிதர்களின் பிறந்த நாள் அல்லது நினைவு தினத்தன்று கூகிள் இப்படி தனது லோகோவில் அவர்கள் நினைவை போற்றும் வகையில் அவர்களின் உருவப் படத்தை அழகிய சித்திரமாக்கி வெளியிடும் வழக்கத்தை கொண்டுள்ளது. இந்த ஓவியங்களே டூடுல் என சொல்லப்படுகிறது.

இன்று (பிப்ரவரி 1, 2018) ஓவியர் மன்ஜித் உருவாக்கிய டூடுல் கவிஞர் மற்றும் எழுத்தாளர் கமலா தாஸை சிறப்பிக்கும் வண்ணம் அமைந்துள்ளது. கமலாதாஸ் 1934-ல், கேரள மாநிலத்தில் மலபாரிலுள்ள 'புன்னயூர்க் குளம்' என்ற ஊரில் பிறந்தார். இவர் மாதவிக்குட்டி' என்ற பெயரில் மலையாளச் சிறுகதைகளை எழுதி வந்தவர். இஸ்லாமியராக மதம் மாறிய பின்னர் கமலா சுரையா என்று பெயரையும் மாற்றிக் கொண்டார். ஆமி என்று செல்லப்பெயரால் நெருங்கிய உறவினர்களாலும் நண்பர்களாலும் அழைக்கப்பட்டார்.

கமலா தாஸ் மலையாளத்தில் அல்லாமல் நேரடியாகவே ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியவர். ஆங்கிலக் கவிதைக்காக உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது பல சிறுகதைகள் மற்றும் தன் வரலாறு (என் கதை என்று தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது) மிகவும் புகழ் பெற்றவை. 'கல்கத்தாவில் கோடைகாலம்' (1965), 'வம்சத்தவர்' (1967), 'பழைய நாடகக் கொட்டகை மற்றும் கவிதைகள்' (1972) முதலிய தொகுப்புக்கள் வெளிவந்துள்ளன. குறிப்பாக, `என் கதா' (My Story) என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழியாக்கமாகியுள்ளது.

மலையாள பத்திரிகையான மாத்ருபூமியின் நிறுவனர் விஎம் நாயர் மற்றும் கவிஞர் நாலுகட்டு பாலாமணி அம்மாவின் அருமை மகள்தான் கமலா தாஸ். பிரபல மலையாள எழுத்தாளர் நாலுகட்டு நாராயண மேனன் அவரது தாய்மாமா. இந்த புன்புலத்தில் வளர்ந்த கமலாவிற்கு இயற்கையிலேயே எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டதில் வியப்பேதுமில்லை. தந்தை கல்கத்தாவிலுள்ள வால்ஃப்ரெட் எனும் தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் பணி புரிந்த காரணத்தால் கமலா தாஸின் இளமைப் பருவம் கல்கத்தாவில் கழிந்தது. 

கமலாவிற்கு பதினைந்து வயதில் மாதவ தாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது. அவர் வங்கியில் பணி புரிந்தார். அவர்தான் கமலாவின் எழுத்தார்வத்தை தூண்டி விட்டு அவரது படைப்புக்களை மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட உறுதுணை புரிந்தவர்.

1976-ம் ஆண்டு கமலா தாஸ் என் கதை (My Story) என்ற தலைப்பில் தனது சுயசரிதத்தை வெளியிட்டார். அவருடைய வாழ்க்கை மற்றும் எழுத்துக்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலந்தவை. துணிச்சலான எழுத்தும், மன உறுதி மிகுந்த ஒரு பெண்ணாக தன்னை ஒரு ஆளுமையாக உருவாக்கிக் கொண்டவர் கமலா தாஸ். தனது கணவரின் நேசிப்புக்கு ஏங்கித் தவிப்பவராகவே என் கதையில் சில அத்யாயங்களில் எழுதியுள்ளார். முரண்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர் கமலா. என் கதை சுய சரிதைதான் என்றாலும் எழுத்து சுவாரஸ்யத்திற்காக புனைவாக சில விஷயங்களை உட்புகுத்த வேண்டியிருந்தது என்று பின்னர் ஒப்புக் கொண்டார்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ள மாதவிக்குட்டிக்கு மொழி ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. பித்தேறச் செய்யுமொரு மொழிநடையில் சித்து வேலைகள் செய்யும் உன்மத்தக் கவிஞராகவே மாதவிக் குட்டி எழுதிவந்தார். வெவ்வேறு தலைப்புக்களில் கவிதை எழுதியுள்ள அவரது கவிதையொன்று :

சமீபமாக, எனக்குள் ஒரு பசியை உணருகிறேன்
காட்டுத் தீயின் பேராசையுடன்
காண்பதையெல்லாம் கபளீகரம் செய்கிற அது
ஒவ்வொன்றை அழிக்கையிலும்
அதிக வெறியுடன் அதிக பிரகாசத்துடன்
கனன்று எரிகிறது.
தள்ளு வண்டியில் அமர்ந்திருக்கும்
தலையில் முடி முளைக்காத குழந்தையை
நான் மட்டும்தான் பார்ப்பதாய் நினைக்கிறீர்கள்,
ஆனால் நீங்களும்தான்,
மரத்துக்குப் பின்னாலிருக்கும் ஒடிசலான காதலர்களே,
நீவிரும்தான்..
சூரிய ஒளியில் தலை முடிகள் மின்ன
கையில் செய்தித்தாளுடன் நிற்கும் வயதானவரே,
நீவிரும்தான்..
என் கண்கள் தழுவுகின்றன,
தீயின் ஜூவாலையைப் போல்
என் நரம்புகள் விழுங்கின்றன
தள்ளுவண்டியில், மரத்துக்குப் பின்னே,
பூங்கா இருக்கையில் இருக்கும்
உங்கள் அனைவரையும் அணைத்து முடித்ததும்
கக்குகிறேன் சாம்பலை சிறு குவியல்களாய்,
வேறெதுவும் இல்லை. ஆனால் என்னுள்
இக்காட்சிகளும் வாசனைகளும் சத்தங்களும்
சுழன்றபடியே இருக்கின்றன. என்னுள் துயிலும்
அந்தத் தள்ளு வண்டிக் குழந்தை உறங்கி விழித்து
சிரிக்கிறாள் பொக்கைவாய் திறந்து.
என்னுள் நடக்கிறார்கள் அந்தக் காதலர்கள்
கைகளைக் கோர்த்தபடி. என்னுள், வேறெங்கே,
அந்த வயோதிகர் அமர்ந்து சூரியனின்
வெம்மையில் காய்கிறார்.
என்னுள், தெருவிளக்குகள் மங்கலாக ஒளிர,
நடன மங்கையர் துள்ளியாட,
திருமணக் கொட்டுகள் மீண்டும் ஒலிக்க,
வண்ணப் பாவாடைகள் சுழலத் திருநங்கையர்
சோகமான காதல் பாடல்களைப் பாட,
காயமுற்றோர் முனக,
என்னுள் மரணித்துக் கொண்டிருக்கும்
தாயின் கண்கள் நம்பிக்கையுடன்
சுற்றுமுற்றும் உற்றுப் பார்த்துத் தேடுகின்றன,
இப்போது வளர்ந்து வேறு ஊர்களுக்கு,
வேறு கரங்களுக்குள் சென்று விட்டத்
தன் குழந்தையை.

(மூலம்: Forest Fire by Kamala Das, தமிழில்: ராமலக்ஷ்மி)

பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை பிரதிபலிக்கும் எழுத்துக்கள் அவருடையது எனினும் தன்னை பெண்ணியவாதி என்ற அடைமொழிக்குள் சிக்க வைப்பதை கமலா தாஸ் வெறுத்தார். புனைவெழுத்தில் மிகச் சிறந்த திறன் பெற்றவர் கமலா தாஸ். தன் சுயத்தை தன் அடையாளத்தை எழுத்தின் மூலம் துணிச்சலாக உலகிற்கு கூறியவர். பெண்ணுலகம் சார்ந்த பல விஷயங்கள் பொதுப் புத்தியில் படிந்திருந்த காலகட்டத்தில் மிகத் துணிவாக பலரும் பேசத் தயங்கிய விஷயங்களைப் பேசத் துணிந்தார். பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்து எழுத்தில் சாடினார். பெண்கள் என்றால் மென்மையானவர்கள், ஏமாளிகள், அவர்களது பலவீனத்தைப் பயன்படுத்தி எளிதாக அவர்களை வசப்படுத்திவிடலாம் போன்ற வாதங்களை கமலாவின் எழுத்துக்கள் மறுதலித்தே வந்தன.

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு அதிர்வை ஏற்படுத்தியவாறு தான் கமலா தாஸின் வாழ்க்கை நகர்ந்தோடியது. புறக்கணிப்பு, தனிமை, அலைக்கழிப்பு, மன உளைச்சல் எனப் பலவிதமான அகம் சார்ந்த பிரச்னைகளிலிருந்து மீள படைப்புலகைத் தேர்ந்தெடுத்தவர் கமலா. தனது 65-வது வயதில் தான் பெரிதும் நம்பிய ஒரு விஷயத்துக்காக, உயிரை விட மேலதிகமாக நேசித்த ஒருவருக்காக மதம் மாறவும் துணிந்தார் கமலா தாஸ். கமலா சுரையா என்று தன்னுடைய பெயரை அதற்காகவே மாற்றிக் கொண்டார்.

தன்னுடைய சுயசரிதையில் சிறுமியாக இருந்த காலம் முதல் திருமணம் அதன் பின்னான சில சிக்கல்கள், பணக்கார வாழ்க்கையின் வெறுமை போன்றவற்றை தனது எழுத்தாளுமையால் மிக அழகாக சொல்லியிருப்பார் கமலா. இந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி மலையாளத்தில் மொழிபெயர்த்து இரண்டு மொழிகளிலும் வெளியிட்டார். அந்தப் புத்தகத்தில் பெண்ணுடல் சார்ந்தும் தாம் சார்ந்த மலையாளச் சமூகத்தைப் பற்றியும் பட்டவர்த்தனமாக பல விஷயங்களை உரத்த தொனியில் எழுதியிருப்பதால் இந்தப் புத்தகத்தை தடை செய்யக் கோரினர். அவரது உறவினர்களில் பலரே அப்புத்தகத்திற்கு எதிராக இருந்தனர். ஆனால் கமலா தாஸின் ரசிகர்கள் இந்தப் புத்தகத்திற்காகவே இன்றளவும் அவரை ஆராதிக்கின்றனர். ஒருவர் வார்த்தைகள் மூலமாக மட்டுமே இந்தளவுக்குத் தன்னையும் வாழ்க்கையையும் கொண்டாட முடியுமா என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார் கமலா தாஸ்.

வாழ்க்கை அவரைப் புரட்டிப் போட்டாலும் எவ்வளவு பெரிய பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிட்டாலும் கவிதை எழுதுவதையும் சிறுகதைகள் புனைவதையும் ஒருபோதும் கமலா நிறுத்தியதில்லை. எழுத்து என்பது அவருக்கு எல்லாவற்றுக்கும் மேலானது. அத்தகைய அர்ப்பணிப்பே அவரது இயங்குதளம். கமலா தாஸின் எழுத்தை கெளரவிக்கும் வகையில் 1984-ம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 31-ம் தேதி மே மாதம் 2009-ம் ஆண்டு கமலா மரணமடைந்தார். 

கமலா தாஸின் வாழ்க்கை வரலாறு ஆமி என்ற தலைப்புடன் மலையாள சினிமாவாக உருவாகி வருகிறது. கமல் இயக்கும் இப்படத்தில் பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ரத்தம் எனும் தலைப்பில் எழுதப்பட்ட தனது ஆங்கிலக் கவிதை வாசிக்கிறார் கமலா தாஸ் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com