சுடச்சுட

  

  மாணவர்களே சிந்தியுங்கள்! ஓட்டுப்போடுவதோடு உங்கள் அரசியல் முடியட்டும்.. 

  By - சாது ஸ்ரீராம்  |   Published on : 08th February 2018 05:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  indianvoters


  அரசியலில் மாணவர்கள் ஈடுபடலாமா? அந்தக் காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூன்று அல்லது நான்கு குழந்தைகள் இருப்பார்கள். ஒரு குழந்தையை அரசியலுக்கு எளிதாக கொடுக்க முடியும். இன்று நிலை அப்படியல்ல. இருக்கும் ஒரே குழந்தையின் கையில் புத்தகத்தை கொடுத்து அனுப்புவதா? கட்சிக் கொடியை கொடுத்து அனுப்புவதா?

  சில தினங்களுக்கு முன் நடிகர் கமலஹாசன் ஒழுக்கமும், கட்டுப்பாடும் நிறைந்த ஒரு தனியார் கல்லூரி விழாவில் பேசினார். ‘தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த மாணவர்கள் அரசியலுக்கு அவசியம் வர வேண்டும்', என்று அழைப்பு விடுத்தார்.

  கமலஹாசன் அவர்களே! உங்களிடம் சில கேள்விகள்:

  ‘மாணவர்கள் அரசியலுக்கு வருவது யாருக்கு நல்லது? நாட்டுக்கு நல்லது என்று சொல்வது எழுத்தளவு உண்மையே!

  நீங்கள் இளைஞராக இருக்கும் போது உங்களது நாட்களை பத்திரப்படுத்திவிட்டு தற்போதைய இளைஞர்களை உசுப்பிவிடுவது என்ன நியாயம்? உங்கள் இளமைக் காலத்தில் எத்தனை போராட்டங்களில் பங்கேற்றுள்ளீர்கள்? எத்தனை அறிக்கை வெளியிட்டுள்ளீர்கள்?

  ஏதோ இன்றுதான் ஆட்சி கெட்டுவிட்டது என்று நீங்கள் சொன்னால், அது பொய். தமிழகத்தில் கிட்டத்தட்ட இதே போன்ற ஆட்சிதான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய தகவல் தொழில் நுட்பம் பல விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. அவ்வளவுதான்.

  தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து தியேட்டர்களையும் வளைத்துப் போட்டு, அதில் ஒரே படத்தை வெளியிட்டு, ஒரே வாரத்தில் வசூல் செய்யும் வசூல் ராஜாக்களாக மட்டுமே இன்றைய திரைப்படத் துறை இருக்கிறது. பெரிய பட்ஜெட் படம் வெளியாகும் போது, அதே நாளில் வெளியிட விரும்பும் பிற படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. இந்த நிலை இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்ததா? தியேட்டர் முழுவதும் ஒரே டிக்கெட் விலை. அதுவும் அதிரடியான விலை. ரசிகர்கள் தங்கள் மீது கொண்டிருக்கும் ஈர்ப்பை உறிஞ்சி எடுக்கும் நிலைக்கு என்ன பெயர்? இப்படித்தான் எம்ஜியாரும், சிவாஜியும் அந்தக் காலத்தில் செய்தார்களா? இவையெல்லாம் தாங்கள் சார்ந்த, தாங்களும் வெற்றிகரமாக பயணிக்கும் பாதை. இது போன்ற அவல நிலைக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல், தொடர்ந்து அதே பாதையில் பயணிக்கும் நீங்கள் நியாயமான அரசியலையும், ஆட்சியை கொடுப்பீர்கள் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முட்டியும்?

  அசிங்கங்களையும், ஒழுக்கச் சீர்கேடுகளையும் சமுதாயத்தில் சர்வ சாதாரணமாக நடமாடவிட்டதற்கு திரைப்படத்துறையும் ஒரு காரணம். ‘திரைப்படத்துறை சீரழிந்து கிடக்கிறது, சமுதாயத்தை சீரழிக்கிறது. இளைஞர்களே வாருங்கள் நாம் இந்த துறையை சீரமைப்போம்', என்று என்றாவது முழங்கியிருக்கிறீர்களா?

  அரசியலுக்கு மாணவர்கள் வருவதாக வைத்துக் கொள்வோம். அவர்கள் யாரிடமிருந்து அரசியல் கற்றுக் கொள்வார்கள்? யாரை முன்னுதாரணமாக ஏற்றுக் கொள்வார்கள்?

  உலகத்தில் காணப்படும் பொதுவான நியாயங்களும், அரசியல் நியாயங்களும் ஒன்றல்ல. இரண்டும் ஒன்று போல் தோற்றத்தை ஏற்படுத்தினாலும் நடைமுறையில் ஒன்றாக இருப்பதில்லை. இதைப் பற்றி தெரிந்து கொள்ள ஒரு குட்டிக்கதையை படிப்போம்:

  ஒரு அரசன். சாதுவை அழைத்தான். தன் மகனுக்கு அரசியல் கற்றுக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான்.

  அடுத்த நாள். அரண்மனை புலவர் வீட்டிற்கு சென்றார் சாது. உடன் இளவரசனையும் அழைத்துச் சென்றார்.

  ‘புலவரே! இந்த மூட்டையில் ஆயிரம் பொற்காசுகள் இருக்கிறது. இதை விற்கவோ, உருமாற்றம் செய்யவோ, செலவு செய்யவோ கூடாது. அப்படி செய்தால் அரசனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். அதே நேரத்தில் பொற்காசுகளை எந்த சூழலிலும் அரசர் திரும்ப கேட்க மாட்டார்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

  புலவருக்கு மகிழ்ச்சி. ஆனால், ஆயிரம் பொற்காசுகளை பாதுகாக்க வீட்டில் இடமில்லை. ஆகையால் வீட்டின் பின்புறம் ஒரு குழியைத் தோண்டி, பொற்காசுகளை புதைத்து வைத்தார். வாரம் ஒரு முறை குழியைத் தோண்டி பொற்காசு மூட்டைகளை பார்த்துவிட்டு மீண்டும் மூடிவிடுவார்.

  அடுத்ததாக அரண்மனை காவலனை ஒரு மரத்தடிக்கு அழைத்துச் சென்றார் சாது.

  ‘காவலனே! இந்த மரத்தில் ஒரு பிசாசு வசித்து வருகிறது. பிசாசால் மக்களுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது. அதற்காக உன்னை இங்கு காவலுக்கு அரசர் நியமித்திருக்கிறார். இதற்கு உனக்கு இரட்டிப்பு சம்பளம் கிடைக்கும். பிசாசு இந்த மரத்திலிருந்து சென்றுவிட்டால் நீ மீண்டும் அரண்மனை பணிக்கு திரும்பிவிட வேண்டும். அதன் பிறகு உனக்கு சாதாரண சம்பளம்தான் கிடைக்கும். ஜாக்கிரதை, பிசாசு பொல்லாதது', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

  அடுத்ததாக, அந்த ஊரில் நேர்மையாளர் ஒருவர் இருந்தார். அவர் எதற்கெடுத்தாலும் நீதி, நேர்மை என்று பேசித் திரிவார். அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார் சாது. ஊருக்கு வெளியே வசிக்கும் திருடனிடம் அழைத்துச் சென்றார்.

  ‘நேர்மையாளரே! நீண்ட நாட்களாக என்னிடம் ஏதாவது வேலை வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டீர்கள். இதோ, இந்த திருடனிடம் பணியாற்றுங்கள். உங்களுக்கு சம்பளமும் இதர வசதிகளையும் செய்து கொடுப்பான்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

  சில மாதங்கள் கடந்தன. ஒரு நாள் சாது யாருக்கும் தெரியாமல் புலவரின் வீட்டிற்குச் சென்றார். புதைத்து வைத்திருந்த பொற்காசு மூட்டையை எடுத்து வந்துவிட்டார். விடிந்ததும் பொற்காசு மூட்டை காணாமல் போனது புலவருக்கு தெரிந்தது. வருத்தமைடைந்தார். விஷயம் அரசருக்கு தெரிந்தால் பிரச்னையாகிவிடும். யோசித்தார். குழியில் மண்ணைப் போட்டு மூடினார். அமைதியானார்.

  சில வாரங்களுக்குப் பிறகு மூவரையும் அரண்மனைக்கு அழைத்தார் சாது. அவர்களிடம் பேசினார்.

  ‘புலவரே! எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேட்டார் சாது.

  ‘நலமாக இருக்கிறேன். பொற்காசு மூட்டை பத்திரமாக உள்ளது. உங்கள் பரிசுதான் என்னை இன்றும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது', என்றார்.

  ‘காவலனே! பிசாசு நலமாக இருக்கிறதா?', என்று கேட்டார் சாது.

  ‘அதை ஏன் கேட்கிறீர்கள். அது செய்யும் அட்டகாசத்தை தாங்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டுதான் காவல் பணி செய்ய வேண்டியிருக்கிறது', என்றான் காவலன்.

  ‘நேர்மையாளரே! எப்படி இருக்கிறீர்கள்? இன்னமும் நேர்மையோடு இருக்கிறீர்களா?' என்று கேட்டார் சாது.

  ‘அதிலென்ன சந்தேகம்! என்றுமே நேர்மையிலிருந்து விலகியதில்லை', என்றார் நேர்மையாளர்.

  இளவரசனிடம் பேசினார் சாது.

  ‘இளவரசே! அரசியலுக்கு பல முக்கிய அம்சங்கள் தேவைப்பட்டாலும், இன்றைய சூழலுக்கு அவசியமானது மூன்று. ஒன்று, கொள்கை, இரண்டு, ஜாதி, மூன்று, நேர்மை.

  புலவரிடம் பொற்காசுகள் இல்லை. ஆனால், குழியில் பொற்காசுகள் பத்திரமாக இருப்பதாக அவர் ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அரசியல் கொள்கைகளும் அப்படித்தான். அவை தொடக்கத்தில் இருந்திருக்கும், பிறகு அது காணாமல் போயிருக்கும். ஆனால் தொடர்ந்து அது இருப்பது போன்ற ஒரு தோற்றமே மிஞ்சியிருக்கும்.

  அடுத்ததாக பேய் இருப்பதாக நான் சொன்னது பொய். தனக்கு வருமான இழப்பு ஏற்படும் என்பதற்காக பேய் இருப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறான் காவலாளி. அரசியல்வாதிகள் ஜாதிகளை கையாள்வதும் இப்படித்தான். தங்களது தேவைக்கேற்றபடி ஜாதிகளை கையாள்வார்கள். ஓரிடத்தில் ஜாதிகள் இருக்கிறது என்பார்கள். மற்றொரு இடத்தில் ஜாதிகள் இல்லை என்பார்கள்.

  அடுத்ததாக திருடனிடம் பணியாற்றும் நேர்மையாளர். நேர்மை என்பது என்ன? தனக்கு கொடுக்கப்பட்ட பணியில் நேர்மையாக இருப்பதா? அல்லது தன் பணியின் ஆதிமூலமே நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதா? நேர்மை எங்கிருந்து தொடங்குகிறது, எதுவரை களத்தில் இருக்கிறது? எங்கு முடிகிறது என்பதற்கு யாரும் விளக்கமளிக்க முடியாது. அரசியல்வாதிகளின் நேர்மையும் இப்படித்தான். அடுத்தவன் செய்வதெல்லாம் தவறு. தாங்கள் மட்டுமே நேர்மையாளன் என்ற தோற்றத்தை ஏற்படுத்துவார்கள்.

  ‘ஆகையால், இளவரசே கொள்கை, ஜாதி, நேர்மை ஆகியவற்றிற்கான விளக்கத்தை நீங்கள் புரிந்துகொண்டால், அரசியலில் பாதி தேறிவிட்டீர்கள் என்று அர்த்தம். அதை முதலில் கற்றுக்கொள்ளுங்கள்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

  இன்றைய அரசியல் இப்படித்தான் இருக்கிறது. கட்சிகளின் கொள்கை ஏட்டளவில் மட்டுமே இருக்கிறது. படிப்பதற்கும், வேலைக்கும் ஜாதி அவசியம் என்பார்கள். ஆனால், திருமணத்திற்கு ஜாதி கூடாது என்பார்கள். அதைப் போலத்தான் நேர்மையும், தான் மட்டுமே நேர்மையாளன் என்ற எண்ணத்தில் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

  காமராஜர் என்ற மாமனிதரின் நேர்மையைப் பற்றி இன்று பெருமையாக பேசுகிறோம். அவரை தோற்கடித்து அரசியலிலிருந்து அப்புறப்படுத்தியவர்களைத்தானே ஆட்சியாளர்களாக நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் மட்டுமல்ல, பெருந்தலைவர் காமராஜர் சார்ந்த கட்சிக்காரர்களும் அவர்களின் பின்னால் அல்லவா நிற்கிறார்கள்?

  கமலஹாசன் அவர்களே, கொள்கை, ஜாதி, நேர்மை ஆகியவற்றில் மற்ற கட்சிகளைப் போலத்தான் நீங்களும். உங்களிடம் பெரிய வித்தியாசத்தை காணமுடியவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, எந்தக் கட்சியும் சாராத வாக்காளர்கள் எண்ணிக்கை மிக குறைவு. இதை மனத்தில் கொண்டு புதிய வாக்காளர்களான இளைஞர்கள் மீது உங்கள் பார்வை திரும்பியிருக்கிறது.

  ஒரு விஷயத்தை மனதில் கொள்ளுங்கள். தமிழகம் சினிமாக்காரர்களால் குழம்பிப்போய் நிற்கிறது. அரசியலே கேளிக்கூத்தாக தெரிகிறது. நீங்கள் அரசியலில் குதியுங்கள். அது உங்களது உரிமை. ஆனால் இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள். அவர்களின் பெற்றோர்களின் கனவுகளை பொய்க்கச் செய்துவிடாதீர்கள். வாக்கு, வெற்றி, பதவி என்பதையெல்லாம் மறந்து, ஒரு பெற்றோரின் நிலையில் இருந்து ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.

  மாணவர்களே! ஒழுக்கத்தின் மீது அதிக நம்பிக்கை வையுங்கள். ஒழுக்கம் எங்கிருக்கிறதோ, அங்கு மற்ற நல்ல விஷயங்களும் இருக்கும்.

  அரசியலுக்கு மாணவர்களின் பங்களிப்பு எவ்வளவு அவசியமோ, அதை விட அவர்களின் குடும்பத்திற்கு அவர்களின் பங்களிப்பு மிக அவசியம். மாணவர்கள் செய்ய வேண்டியதெல்லாம், படியுங்கள், தொடர்ந்து படியுங்கள், தேர்தலில் ஓட்டுப்போடுவதோடு உங்கள் அரசியல் முடியட்டும். அரசியல் உங்கள் படிப்பையும், வாழ்க்கையையும் பாழக்கிட ஒரு போதும் அனுமதிக்காதீர்கள். அரசியல்வாதிகளின் அறைகூவலை புறக்கணியுங்கள்.

  - சாது ஸ்ரீராம்
  saadhusriram@gmail.com

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai