Enable Javscript for better performance
மீனாட்சியம்மன் கோயிலிலும் திருவாலங்காடு ஸ்தல விருட்சத்திலும் பற்றிய தீ: கவனிக்க வேண்டியது என்ன?- Dinamani

சுடச்சுட

  

  மீனாட்சியம்மன் கோயிலிலும் திருவாலங்காடு ஸ்தல விருட்சத்திலும் பற்றிய தீ: கவனிக்க வேண்டியது என்ன?

  Published on : 08th February 2018 03:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  scaredtree

  தீக்கிரையான ஆலமரம்.


  சிவபெருமானின் ஐந்து சபைகள் என்பவை சிவன் நடனக் கோலத்தில் நடராசராக எழுந்தருளியுள்ள சிவஸ்தலங்களுள் முக்கியமானவை. இத்தலங்களில் சிவனின் நடனம் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. 

  அதாவது ஐம்பெரும் அம்பலங்களாக.. பொன்னம்பலம், வெள்ளியம்பலம், இரத்தினம்பலம், தாமிர அம்பலம், சித்திர அம்பலம் ஆகும். இவை முறையே சிதம்பரம் நடராஜர் கோயில் (கனக சபை), மதுரை மீனாட்சியம்மன் கோயில் (இரஜத சபை), திருவாலங்காடு வடாரண்யேசுவார் கோயில் (இரத்ன சபை), திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் (தாமிர சபை), குற்றாலநாதர் கோயில் (சித்திர சபை) ஆகும்.

  இந்த பஞ்ச சபைகளில் ஒன்றான மதுரை மீனாட்சியம்மன்  திருக்கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரவசந்தராயமண்டபத்தில் பற்றிய பயங்கர தீ தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

  தீ விபத்தில் வீரவசந்தராய மண்டபத்தில் பல தூண்கள் சேதமடைந்தன. மேற்கூரையும் இடிந்து விழுந்தது. ஆட்சிக்குப் பெயர் போன மீனாட்சியம்மன் கோயிலில் தீ பிடித்ததால், தமிழகத்தில் ஆட்சிக்கு சிக்கல் என்று பல கருத்துகளும் முன் வைக்கப்பட்டன.
   

  இது பற்றிய அச்சங்களும், விவாதங்களும் அடங்குவதற்குள், மற்றுமொரு அதிர்ச்சியாக, பஞ்ச சபைகளில் 3வதாக விளங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்சுவரர் திருக்கோயிலின் மிகப்பெரிய ஸ்தல விருட்சமான ஆலமரம் தீப்பற்றி எரிந்தது என்ற செய்தி.

  பச்சை மரம், அதுவும் கோயிலின் ஸ்தல விருட்சம் எப்படி தீப்பிடித்து எரியும் என்று செய்தியைப் பார்த்த அனைவரது மனதிலும் ஒரு சொல்ல முடியாத அதிர்ச்சி கலந்த கேள்வி எழுந்தது.

  இது மோசமான அறிகுறியா? இயற்கை நமக்குக் காட்டும் சமிக்ஞைகளா என்றெல்லாம் ஆராய்வதற்கு முன்பு, உடனடியாக இது குறித்து எழும் புரளிகளை நினைத்தும் அச்சப்பட வேண்டியுள்ளது.

  ஏற்கனவே, ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை ஆண்கள் இருக்கிறார்களோ அத்தனை விளக்குகளை வீட்டு வாசலில் ஏற்ற வேண்டும் என்ற புரளி காட்டுத் தீயாகப் பரவி வருகிறது. இதில் இன்னும் என்னவெல்லாம் பரவ உள்ளதோ..?  அது வேறு கதை.

  கடந்த ஆண்டு இறுதியில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெளிப்பிரகார மண்டபம் இடிந்து விழுந்து பெண் ஒருவர் பலியானார். இதுபோன்று கோயில்களில் அசம்பாவிதங்கள் நடக்கும் போது மக்கள் பெரிதும் அதிருப்தி அடைகின்றனர்.
   

  இதுபோன்ற அசம்பாவிதங்கள் வழக்கம் போல மனிதர்களின் அஜாக்கிரதையால் அல்லது சமூக விரோதிகளால் செய்யப்படுவதுதான். இயற்கையாகவே நடந்தாலும் சரி செயற்கையாக உருவாக்கப்பட்டாலும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் கோயிலுக்குள் நடக்கும் போது நிச்சயம் அது அபசகுனமாகவே பார்க்கப்படுகிறது. அதற்கும் காரணம் உண்டு, அதாவது கோயில்களை கட்டமைக்கும் போதே, அவை  இயற்கை சீற்றங்களை தாங்கும் விதத்திலும், பஞ்சபூதங்களால் பாதிக்கப்படாத வகையிலும் உருவாக்கப்படுவதே.

  அதையும் மீறி அங்கே ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் போது அது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதில் எந்த விநோதமும் இல்லை. 

  எனவே, எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே வாசகம்தான் இங்கும் பொருந்துகிறது. வருமுன் காப்போம் என்பதே.. இதுபோன்று கோயில்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்ட பிறகு அதற்கான பரிகாரப் பூஜைகள், ஹோமங்கள் செய்தாலும், அது மக்களின் மனதுக்கு ஆறுதலைத்தராது. எனவே, பஞ்ச சபைத் தலங்கள் உட்பட அனைத்து முக்கியக் கோயில்களையும் மிகுந்த கவனத்துடன் பராமரித்திட வேண்டும்.

  இதுவரை என்ன நடந்ததோ அது நடந்ததாகவே இருக்கலாம். இனி நடப்பது நன்மையாகவே இருக்கட்டுமே. கோயில்களை வணிக வளாகங்களாக மாற்றி, பக்தர்களுக்கு இடையூறு செய்வதை தவிர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மீனாட்சியம்மன் கோயிலுக்கு என்று மட்டும் இல்லாமல், அனைத்துக் கோயில்களிலுமே இதனை செய்வது அடுத்த கட்ட அசம்பாவிதங்களைத் தடுக்க உதவலாம்.

  கோயில்களைச் சுற்றி இருக்கும் காலி இடங்கள் சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறாமல் தடுக்கலாம். கோயிலுக்குள் எந்த விதி மீறல்களும் நடக்காமல் தடுத்து, பக்தர்கள் இடையூறு இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து வழிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். 

  அனைத்துக் கோயில்களையும் ஆய்வு செய்து, எங்கெல்லாம் சிறு பிரச்னைகள் இருக்கிறதோ அதை உடனடியாக களைந்து அரசு உரிய நடவடிக்கை எடுத்தால் மக்களுக்கு மட்டும் அல்ல அது அரசுக்கும் நல்ல சகுனமாக மாறும். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai