Enable Javscript for better performance
கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு: சரியான வழிகாட்டுதலின்றி தவிக்கும்இளைஞர் சமுதாயம்!- Dinamani

சுடச்சுட

  

  கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு: சரியான வழிகாட்டுதலின்றி தவிக்கும் இளைஞர் சமுதாயம்!

  By சுதாகரன் ஈஸ்வரன்  |   Published on : 19th February 2018 04:26 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jobvacancies

   

  உலக நாடுகளின் மக்கள் தொகையை அறிய உதவும் வோர்ல்டோமீட்டர் (Worldometers) புள்ளிவிவரங்களின்படி இன்றைய இந்திய மக்கள் தொகை 134.85 கோடி. இது உலக மக்கள் தொகையில் 17.74 சதவீதம். 

  உலகின் இரண்டாவது மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட ஜனநாயக நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும் வேலை கொடுப்பது எந்த ஒரு அரசாங்கத்திற்கும் சிக்கலான காரியம்தான். ஆனால் பட்டபடிப்பை முடித்த மாணவர்களில் 20 சதவீதத்தினர் மட்டும் தான் முடித்த துறை சார்ந்த வேலைவாய்ப்பை நல்ல ஊதியத்தில் பெறுவதும், மற்ற 80 சதவீதத்தினர் தன்னுடைய துறை சாராத வேலைக்கு செல்வதும் அல்லது மிகக்குறைந்த ஊதியத்தில் ஏதாவது ஒரு பணியில் அமர்வதும் இயல்பாக நடக்கும் விஷயம் அல்ல. இதற்கு கண்டிப்பாக மக்களை ஆண்ட ஆட்சியாளர்களும், ஆளும் ஆட்சியாளர்களுமே காரணமாக இருக்க முடியும். 

  அதே சமயம் தற்போது நிலவிவரும் வேலைவாய்ப்பின்மை பிரச்னைக்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறுவது முற்றிலும் தவறு. நல்ல தலைவர்கள் மக்களிடம் இருந்து உருவாகாமல் இருப்பது, அதையும் தாண்டி உருவாகும் தலைவர்களை வளர்ச்சியடைய செய்யாமல் விட்டது, சமூக  சிந்தனையுடன் செயல்படும் சமுக ஆர்வலர்களை நாம் கண்டு கொள்ளாதது, சமூக நலன் சார்ந்து செயல்படும் நல்ல சிறந்த ஆசிரியர்களை மதிக்கத்தவறிய சமூகம் என பல காரணிகள் உள்ளன. இதை அனைத்தையும் தாண்டி நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தவறவிட்ட நமது அறியாமையும் முக்கிய காரணி என்பது அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

  மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி என பல வகையான நடைமுறைகளை மத்திய அரசு தொடங்கியது. ஆனால் வழக்கம்போல பெரும்பாலான நடைமுறைகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. உண்மையில் இந்த  திட்டங்களால் பல லட்சகணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். ஒவ்வொரு திட்டமும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியமானதாகும். சில ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை மட்டுமே இந்த திட்டங்கள் இதுவரை உருவாக்கியுள்ளன. திட்டத்தின் நோக்கங்கள் மிகவும் பாராட்டத்தக்க ஒன்று. அந்த திட்டங்கள் அமல்படுத்திய விதம்தான், வேலைவாய்ப்புகளை உருவாக்க தவறிவிட்டது. இதன் குறைபாடுகளை உணர்ந்து அதை ஆராய்ச்சி செய்து, திட்டங்களை மேம்படுத்தி அமல்படுத்தினால் இன்றைய வேலையில்லா திண்டாட்டத்திற்கு முற்றுப்புள்ளியாக அமையும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. 

  ஏழை மக்கள் அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தினமும் உழைக்கிறார்கள். நடுத்தர மக்கள் தன்னுடைய அன்றாட பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுபிடிக்க வழி தேடிக்கொண்டிருக்கிறார்கள். மேல்தட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பு பிரச்னை பெரிய விதத்தில் பாதிக்கப்போவதில்லை. இப்படி அனைவரும் தன்னுடைய பிரச்னைகளை மட்டுமே நோக்கி நகர்ந்து வந்ததால், அன்று முதல் இன்று வரை நாம் இந்த வேலையில்லா திண்டாட்டத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இன்று அது பூதாகரமாக மாறி நிற்கிறது. இன்று அனைவருக்கும் அது  ஒரு முக்கிய பிரச்னையாக மாறியுள்ளது.

  அரசாங்க வேலை, தனியார் துறையில் வேலை மற்றும் சுய தொழில் என மூன்று விதமான வாய்ப்புகள் இருந்தாலும் அரசாங்க மற்றும் தனியார் துறை வேலை மட்டுமே மதிப்பு மிக்கதாக சமூகத்தில் ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. இன்றைய காலத்தில் திருமணத்திற்கு அரசாங்க மற்றும் தனியார் துறை வேலை அவசியத் தேவையாக சித்தரிக்கப்படுகிறது. இது இன்றைய கால இளைஞர்களை சுய தொழில் தொடங்க விடாமல் தடுக்கிறது. 1980-களில் கணினியின் தொடக்க காலத்தில் பல எதிர்ப்புகள் அதற்கு இருந்தன. கணினி வேலைவாய்ப்புகளை குறைத்துவிடும் என்ற ஒரு அச்சம் நிலவியது. ஆனால் கணினியின் அறிமுகம் பல வேலைவாய்ப்புகளை புதிதாக ஏற்படுத்தின. ஆட்டோமேசன் என்ற புதிய தொழில்நுட்பத்தால் வேலைவாய்ப்பு மிகவும் குறையும் என்ற அச்சம் இன்று நிலவுகிறது. ஆனால் எவ்வளவு புதிய முறைகள் வந்தாலும் மக்களின் தேவை அதிகரிக்கும் என்றும் அதனால் வேலைவாய்ப்பு எப்பொழுதும் இருந்து கொண்டுதான் இருக்கும் என்பதையும் நாம் உணர மறுக்கிறோம். 

  உண்மையில் நம்மை சுற்றி லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. அதை சரியாக நாம் பயன்படுத்த தவறுகிறோம்.  நமக்கு வேலையில்லை என்றால் உலகில் வேலையில்லை என்றில்லை. உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பாருங்கள்.  நீங்கள் வசிக்கும் வீடு, தெரு, நீங்கள் அன்றாடம் பயணம் செய்யும் சாலை, நீங்கள் கடந்து செல்லும் அரசு மற்றும் தனியார் அலுவலகம், உங்கள் வீட்டுக்கு  அருகிலுள்ள பள்ளி, கல்லுரி என நாம் அன்றாடம் பார்க்கும் அனைத்தும் அனைத்து வசதிகளிலும் மேம்பட்டு விடவில்லை. இன்னும் மேம்படுத்தப்பட வேண்டிய வசதிகள் நிறைய இருக்கின்றன.   

  ஒவ்வொரு இடத்திலும் தேவைப்படும் வசதிகளை மேம்படுத்தும் தொழில்களைதான் அரசாங்கமும், தனியார் துறையும் செய்கின்றன. ஆனால் மேம்படுத்த வேண்டிய ஏராளமான வேலைகள் இன்னும் செய்யப்படாமல் வசதி குறைவாகவே இருக்கின்றன.  இதை நாம் உணர தொடங்கினால் குறைந்த முதலீட்டில் லட்சக்கணக்கில் மாத வருமானத்தை ஈட்டும் சுய தொழில் தொடங்கி சாதிக்க முடியும். இதற்கு தேவை விழிப்புணர்வும் தன்னம்பிக்கையும் மட்டுமே. 

  சுய தொழில் தொடங்க தேவையான வசதிகளையும், அதற்கான வழிமுறைகளையும் சில அரசாங்க அமைப்புகளும் தனியார் துறைகளும் செய்து கொடுக்கின்றன. இருப்பினும் இன்றைய கால கட்டத்தில் கூகுள் மூலம் நாம் சொந்தமாக உலகில் நடக்கும் எந்தவொரு செயலையும் கற்றுகொள்ள முடியும். இதை உணர்ந்து குறைந்தது இரண்டு அல்லது மூன்று நபர்கள் சேர்ந்து சிறு தொழில்கள் அமைக்க முன் வந்தால் வேலைவாய்ப்பு பிரச்னையும் அதனால் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களும் முடிவுக்கு வரும். சில தொழில்களை, தனி ஒரு ஆளாகவும் நாம் தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அரசாங்கத்தை நம்புவதை விட தன்னை நம்பு என்று வருங்கால தலைமுறைக்கு ஒரு முன்மாதிரி தலைமுறையாய் நாம் உருவாகலாம்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai