9000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம் பெண்ணுக்கு உருவம் கொடுத்தனர் கிரேக்க ஆராய்ச்சியாளர்கள்! ஆனால் அந்த முகத்தில் சிரிப்பு இல்லை! 

நாம் மனிதர்கள் என்பதற்கான முதல் அடையாளம் நம் உடல். கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்னால்
9000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இளம் பெண்ணுக்கு உருவம் கொடுத்தனர் கிரேக்க ஆராய்ச்சியாளர்கள்! ஆனால் அந்த முகத்தில் சிரிப்பு இல்லை! 

நாம் மனிதர்கள் என்பதற்கான முதல் அடையாளம் நமது உடல். கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்னால் உடலும் உயிருமாக வாழ்ந்த ஒரு இளம் பெண்ணின் எலும்புக்களின் எச்சங்களின் மூலம் அவளது முகத்தை வடிவமைத்துள்ளார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆச்சரியமாக உள்ளதா? உண்மைதான். இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள் ஏதென்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆராய்ச்சியாளர்கள். கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் ஆண்டு காலத்துக்கு முன்னால் வாழ்ந்த கற்கால பெண்ணின் முகத்தை எலும்புப் படிமங்கள் மூலம் கண்டறிந்து உத்தேசமான ஒரு வடிவத்தைக் கொடுத்து உருவாக்கியுள்ளனர். 

கிரேக்கத்திலுள்ள தியோபெட்ரா குகையில் 1993-ம் ஆண்டு அந்தப் பழங்காலப் பருவப்  பெண்ணின் படிமங்கள் கிடைத்தன.  முதலில் 'அவ்கி' என்றுதான் அவளுக்குப் பெயர் சூட்டினர் ஆய்வாளர்கள். ஆனால் டான் என்பது உதயத்தைக் குறிக்கும் சொல். புதிய உதயமாக பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சந்தித்த காலகட்டத்தை அவள் சேர்ந்தவள் என்பதால் உதயம் என்றே பெயர் வைக்கப்பட்டது. டான் சிறுபான்மை குடியொன்றில் கிட்டத்தட்ட 9000 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்திருக்கலாம் என்று மேலும் கண்டறிந்தனர். தொன்மப் படிமங்களாய் சிதைந்து கிடந்த அவளின் எலும்பு மற்றும் பற்களை வைத்து ஆராய்ச்சி செய்ததில், டானுக்கு 15-லிருந்து இருபது வயது இருக்கலாம் என்றனர்.

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்து மடிந்து எச்சங்களான படிமங்களை வைத்து, நவீன கருவிகள் மற்றும் 3டி உத்தியை பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் டானை மீள் உருவாக்கம் செய்தனர். அவளுடைய தாடை சற்று எடுப்பாக முன்னோக்கி இருந்ததற்கான காரணம், அந்தக் காலத்தில் மிருகங்களை நன்றாக கடித்து சாப்பிடவும் அவற்றின் தோலை மெல்லியதாக்கி சுவைக்கவும், அந்த வகையில் தாடை மற்றும் பல் அமைப்பு இருந்திருக்க வேண்டும் என்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

டானின் உருவத்தை வடிவமைத்த பேராசிரியர் மனொலிஸ் பபாகிரிகோரகிஸிடம் டான் ஏன் கோபமாக இருக்கிறாள் என்று கேட்கப்பட்ட போது, அவர் 'அத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்ததற்கு கோபப்படாமல் இருப்பது எப்படி சாத்தியம்’ என்று கிண்டலாக பதிலளித்தார்.

டானுக்கு ரத்தசோகை இருந்திருக்கலாம் ஸ்கர்வி எனப்படும் ஈறுகளில் ரத்தம் கசியும் பிரச்னையும் இருந்துள்ளது என்றனர் ஆராய்ச்சியாளர்கள். இடுப்பு மற்றும் எலும்புப் பிரச்னைகளும் அவளுக்கு இருந்துள்ளது. டான் தனது வாழ்நாளின் இறுதி கட்டத்தில் நடக்க முடியாமல் இறந்திருக்கிறாள் என்று அந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

கி.மு 7000 -ம் ஆண்டு வாழ்ந்த அப்பெண்ணின் முகத்தை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மகிழ்ச்சி என்பது மருந்துக்கும் தென்படவில்லை என்பதையும் மீள் உருவாக்கம் செய்த பின்னர் ஆய்வாளர்கள் கண்டனர். கற்காலத்திலிருந்து தற்காலம் வரை பெண்ணின் நிலையை ஒரு வேளை 'டான்’ குறியீடாகத் தோன்றியிருக்கிறாளோ என்று எண்ணத் தோன்றுகிறது. டான் தற்போது ஏதென்ஸில் உள்ள அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக மாறியிருக்கிறாள்.

நன்றி - Reuters

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com