சுடச்சுட

  

  அச்சமும் வழிபாடும்: கடமங்குட்டை யானை ஓவியம்

  By த. பார்த்திபன்  |   Published on : 03rd May 2018 11:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  மனித இனத்தில் தொல்சமய நிலையிலாகட்டும், சமய நிலையிலாகட்டும், வழிபாடு முக்கியப் பங்காற்றுகிறது. வழிபாடு என்னும் செயல் மனிதனுடைய அச்ச உணர்ச்சியில் இருந்தும், குற்ற உணர்ச்சியில் இருந்தும் தோற்றம் கொண்டது என சிக்மண்ட் ஃபிராய்டு கருதுகிறார். அச்சமும், நன்றி உணர்ச்சியுமே மனித சமூகத்தில் இறைவுணர்வை தோற்றுவித்தன என்பது, தெய்வம் குறித்த சிந்தனையில் முதன்மையாக இருக்கின்றது. இவ்வகைச் சிந்தனையே தற்காலத்து வழிபாட்டு மரபுகளுக்கு அடிப்படைகளையும் தோற்றுவித்தது. இச்சிந்தனையே சமயத்தின் அடியோட்டங்களையும் வழங்கியது. தொல்சமயத்திலும் சரி, சமயத்திலும் சரி வழிபாடு என்பது நம்பிக்கை சார்ந்து மேற்கொள்ளப்படும் சடங்காகும். இந்தவகையில், தீமை புரிபவற்றில் இருந்து காத்துக்கொள்வது அல்லது தீமையைக் குறைத்துகொள்வது, நன்மையும் வளத்தையும் வழங்குபவற்றுக்கு நன்றி செலுத்துவது என்ற இருமுனைப்பட்ட வழிபாட்டு மரபு, தொன்மைக் காலம் முதல் இன்றுவரையிலான வழிபாட்டு மரபின் வேர்களாக நீடித்துள்ளது.

  பாலக்கோட்டைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. கல்சி.குமார் அவர்களால், அவரது முகநூல் பக்கத்தில் 2018, பிப்ரவரி 20 மற்றும் 23-ம் தேதிகளில் வெளியிடப்பட்ட, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சார்ந்த கடமங்குட்டை யானை ஓவியம், சிக்மண்ட் ஃபிராய்டு அவர்களின் கருத்தான, அச்ச உணர்ச்சியில் இருந்து மனிதனிடம் வழிபாடு தோற்றம் கண்டது என்பதற்குச் சான்றாக விளங்குகிறது. களத்தகவலின் அடிப்படையில், ஊருக்குள் யானைகள் வராமல் இருக்க இந்த ஓவியம் வழிபடப்படுவதாகத் தெரிவிக்கிறார் குமார்.

  இன்றும் வழிபாட்டில் உள்ள இவ்வோவியம், யானைகள் மீது கொண்ட அச்சம், அல்லது அவை விளைவிக்கும் தீமைகளைக் குறைத்துக்கொள்ள அவற்றை வழிபடுவது என்ற தொல்மனதில் வழிபாட்டுணர்வின் பின்னணியில் உருவாகியுள்ளதைக் காட்டுகிறது. 

  இந்த ஓவியம் வேட்டைச் சமூகத்தைச் சார்ந்தவர்களால் தீட்டப்பெற்றோ, வழிபடப்பட்டோ இருக்கமுடியாது. வேட்டைச்சமூக மக்கள் இதனை யானையை வீழ்த்தும் மந்திரச் சடங்கு வழிபட்ட ஓவியத்தையே தீட்டியிருப்பர். எனில், இப்பகுதியில் குடியேறிய வேளாண் சமூக மக்களால்தான் இது உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இம்மக்கள், மேய்த்தல் தொழிலுடன் உணவை உற்பத்தி செய்யும் சமூகத்தினராகக் கிளைத்து, அடர்காட்டின் விளிம்பில் காடுகளைத் திருத்தி மலைப்புல வேளாண்மையில் ஈடுபட்டவர்களாகவும், அருகில் தம் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டவராகவும் விளங்கியுள்ளனர். காடுகளில் இருந்து வெளிப்பட்டு வலசை போகும் யானகளால் இவர்களது விளைநிலங்களும், குடியிருப்பும் பாதிப்படைந்திருக்க வேண்டும். அப்பாதிப்பு பெரும் அச்சமூட்டுவதாக இருந்திருக்கும். அல்லது தொடர்ச்சியான நிகழ்வாக இருந்திருக்க வேண்டும். எனவே, பாதிப்பில் இருந்து தம்மையும், தம் உடைமைகளையும் காப்பாற்ற, யானை உருவங்களைத் தீட்டி வழிபட்டுள்ளனர். இவ்வோவியமும் வழிபட்டுச் செய்தியும் இதனைத் தெளிவாகக் காட்டுகிறது.

  இன்றைய கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள், யானைகளின் தொன்மைவாய்ந்த வலசைப்பாதைப் பகுதிகளாகும். குறிப்பாக, தேன்கனிக்கோட்டை, சூளகிரி மற்றும் ஒசூர் வட்டங்களைச் சார்ந்த பகுதிகள். இன்று வலசைப்பாதையில் அல்லது அதற்கு அருகாமையில் அமைந்த ஊர்கள், விளைநிலங்கள் யானைகளால் பாதிப்படைவது தினச்செய்தியாக உள்ளது. இப்பகுதியின் மூதாதையர், யானைகள் மீது கொண்ட அச்சத்தால் அவறை வழிபட்டு, தீமைகளில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ளும் நம்பிக்கையுடையவர்களாக விளங்கியுள்ளனர். இன்றைய சந்ததியினர் அதன் வலசையை மறித்து விரட்டுவது போன்ற ஒரு செயலை செய்யாத மூதாதையராக அவர்கள் வாழ்ந்திருந்ததற்கும் சாட்சியாக இவ்வோவியம் விளக்குகிறது. 

  ஓவியக்காட்சி

  ஓவியத்தில் மூன்று யானைகள் காட்டப்பட்டுள்ளன. உருவ அமைப்பிலிருந்து அவற்றை ஆண், பெண், குட்டி என வரிசைப்படுத்திப் பார்க்க முடிகிறது. (பார்க்க, புகைப்படம் 1 & 2)

  ஓவியத்தின் தன்மை

  இந்த ஓவியம் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு, வரலாற்றுக்கால ஓவியத்தின் தற்காலக் குணங்கள் வெளிப்படுகின்றன. உண்மையில், பழைய ஓவியத்தின் மீது அதே வடிவில் சிறிதும் பிசகாமல் அதன் மேலேயே தற்காலத்து திருநீர்க்கட்டி என்ற நாமக்கட்டி கொண்டு வரைந்துள்ளனர். (கல்சி.குமாருடனான உரையாடல் தகவல்) தற்காலத்தியக் குணமான சிவப்புக் குங்குமம், உருவத்தின் மீது ஆங்காங்கே வைத்திருப்பதையும் காணமுடிகிறது.

  காலம்

  ஓவியம் அவ்வப்பொழுது மறுதீட்டல் கண்டுள்ளதால், காலத்தைக் கணிப்பதில் சிக்கல் உருவாகிறது. யானைகளின் உருவ அமைதியும், கோட்டுருவ உத்தியும், பொருங்கற்படைப் பண்பாட்டைக் கொண்டுள்ளன. எனவே, பெருங்கற்படைக் காலத்து மக்களால் வரையப்பட்ட இவ்வோவியமானது, அண்மைக்காலம் வரை மறுமேல் தீட்டலுக்கு உள்ளாகிவருகிறது என்பது பொருத்தமான முடிவாகிறது. 

  ஓவியத்தின் உருவத்தன்மை மட்டுமல்லாது, ஓவியம் வரையப்பட்டுள்ள கல்குண்டில், ஓவியம் வரைய தேர்ந்தெடுத்த இடத்தைச் செதுக்கி, குழிவாக்கி, ஒரு தளத்தை உருவாக்கியுள்ள தன்மை, பெருங் கற்காலப் பண்பாட்டின் குணத்தைக் காட்டுகிறது. 

  இவ்வாறு, பாறையின் (கல்குண்டின்) மேற்புறத்தை குழைத்துச் சீராக்குவதன் மூலம், உதிரும் மேற்பரப்பிலோ, பாறையின் உப்புப்படிவுகள் மீதோ ஓவியம் தீட்டப்படுவது தவிர்க்கப்படுகிறது. மேலும், மழைத்துளி நேரடியாக விழுவதும், மேலிருந்து நீர்த்தாரையாக வரும் நீரும் ஓவியத்தின் மீது ஓடுவதும் தவிர்க்கப்படுகிறது. இங்கு சிறப்பான, நேர்த்தியான பாறைக்குழைவைப் பார்க்கமுடிகிறது. இந்த அமைப்பின் காரணமாக, மேலிருந்து வரும் நீர் ஓவியத்தைப் பாதிக்காமல் கீழே சொட்டிவிடும். ஓவியம் பாதுகாக்கப்படும்.

  மேலும், குகை, மலைமுகடு, பாறையிடுக்கு போன்ற இடங்களில் வழிபாட்டிடங்களை அமைக்கும் வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட மக்களின் நம்பிக்கை இவ்வோவியத்தின் இடத்தேர்விலும் உள்ளது. அதே சமயத்தில், பெரும்பான்மையாக வரலாற்றுக் கால ஓவியங்கள் தூண்கள், பலகைக்கற்களில் தீட்டப்பெற்றும், அடர் வண்ண முறையும், கண்ணாடிக்காட்சி போன்ற மனித, விலங்கு உருவங்கள் இடம்பெறும். மேலும் வழிபாட்டிடங்கள் வாழிடத்திலேயே அமையும். 

  இவ் ஓவியத்தின் தொன்மையினை காட்டவல்ல உடன் சான்றாக அமைவது, இதற்கு அருகில் அமைந்துள்ள கல்திட்டை போன்ற ஒரு சிறு கட்டுமானத்தின் உள், புதிய கற்காலக் கருவிகள் வைத்துள்ள வழிபாட்டிடமாகும். (பார்க்க, புகைப்படம் 3) இக்கட்டுமானமும் பெருங் கற்காலப் பண்பாட்டை அடையாளப்படுகிறது. 

  எனில், இவ் ஓவியத்தின் பழைய நிலை, இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், அண்மைக்கால மறுதீட்டல் ஒரு சில ஆண்டுகளுக்குள் நிகழ்திருக்கிறது என்றும் கருதலாம்.

  ஓவியத்தின் சிறப்பு

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நுண் கற்காலம் முதல் பெருங் கற்படைக் காலம் வரையிலான பண்பாட்டிற்குரிய பலவகையான தொல்லோவியங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை வேட்டைக்காட்சி, விழாக்காட்சி, ஏர் உழும்காட்சி, மூத்தோர் வழிபாடு என பல வாழ்வியல் செய்திகளைப் பதிவு செய்திருப்பதைக் காணமுடிகிறது. அதே சமயத்தில், அச்சம் காரணமாக மேற்கொள்ளும் வழிபாட்டு மரபை அடையாளம் காட்டும் முதல் சான்றாக கடமங்குட்டை ஓவியம் திகழ்கிறது.
   

  தொல்சமய வழிபாட்டின் நீட்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கடமங்குட்டை யானை ஓவியம் 

  (கடமங்குட்டை புகைப்படம் 1)

  (கடமங்குட்டை புகைப்படம் 2)

   (கடமங்குட்டை புகைப்படம் 3)

  (நன்றி: புகைப்படங்கள் - கல்சி.குமார். சான்று - கல்சி.குமார் (சித்திரகுமார் குமார்) முகநூல் பக்கம் - நாள் 20.02.2018 & 23.02.2018, மற்றும் தொலைபேசி உரையாடல் - நாள் 24.02.2018)
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai