Enable Javscript for better performance
அரசியலிலும், திரைத்துறையிலும் அளவில்லாத சாதனைகளை படைத்த வீராங்கனையின் வெற்றிச் சரித்திரம்!- Dinamani

சுடச்சுட

  

  அரசியலிலும், திரைத்துறையிலும் அளவில்லாத சாதனைகளை படைத்த வீராங்கனையின் வெற்றிச் சரித்திரம்!

  By தொகுப்பு: தி.நந்தகுமார்  |   Published on : 26th February 2018 12:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jaya

  அரசியலிலும், திரைத்துறையிலும் அளவில்லாத சாதனைகளை படைத்த முதல்வர் ஜெயலலிதா, 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி (சிம்ம ராசி-மகம் நட்சத்திரம்) பிறந்தார். அவர் 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மறைந்தார். அவர் தனது வாழ்நாளில் எண்ணற்ற சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்து இரும்புப் பெண்மணியாகத் திகழ்ந்தார். 

  அவரது வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
  ஜெயலலிதாவின் முன்னோர்களுக்கு பூர்விகம் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம்தான்.  தொழில் நிமித்தமாக ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூருக்கு அவரது தாத்தா ரங்கசாமி குடிபெயர்ந்தார். அவருக்கு வேதா, அம்புஜா, பத்மா ஆகிய 3 பெண்களும், சீனிவாசன் என்ற ஒரு மகனும் இருந்தனர். ரங்கசாமிக்கு பெங்களூரில் எச்.ஏ.எல். நிறுவனத்தில் எழுத்தராகப் பணி கிடைத்ததால், பெங்களூருக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. வேதா என்னும் சந்தியாவுக்கு 11 வயதாக (6-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்) இருந்தபோது, திருமணம் நடைபெற்றது.  அவரது கணவர் ஜெயராம். மைசூர் மகாராஜாவின் குடும்ப மருத்துவரான ரங்காச்சாரியின் மகன் ஜெயராமன்.

  ஜெயராம்-சந்தியா தம்பதியினர் பெங்களூரில் பரம்பரை வீட்டில் குடியிருந்தனர். ஜெயலலிதாவின் 2-வது வயதில் ஜெயராமன் இறந்தார். இதனால், சந்தியா தனது குடும்பத்துடன் சென்னைக்கு குடிபெயர்ந்தார்.

  ஜெயலலிதாவுக்கு பெற்றோர் வைத்த பெயர் கோமளவல்லி. ஆனால், அவரை குடும்பத்தினர் அம்மு என்று அழைத்தனர். பிற்காலத்தில் அம்மா என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

  சென்னை தியாகராயநகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலப் பள்ளியிலும், பெங்களூரில் பிஷப் கார்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியிலும்,  சென்னை சர்ச் பார்க் ஆங்கிலப் பள்ளியிலும் படித்தார். 

  சர்ச் பார்க் ஆங்கிலப் பள்ளியில் படித்தபோது, புதுமையான சிகை அலங்காரத்துடன் ஜெயலலிதா எடுத்த புகைப்படத்தைப் பார்த்த புகைப்பட நிபுணர் பவனா சத்யம், சந்தியாவிடம் சொல்லாமல் அனைத்திந்திய புகைப்படப் போட்டிக்கு அனுப்பிவைத்தார். அந்தப் படம் முதல் பரிசை பெற்றது. இந்தப் படத்தை தங்கப் பிரேம் போட்டு பவனா சத்யம், ஜெயலலிதாவிடம் வழங்கினார். இந்தப் படம் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தின் வரவேற்பு அறையில் இடம் பெற்றுள்ளது.

  10-ஆம் வயதில் ஜெயலலிதா பரதநாட்டியம் கற்றுக் கொண்டார். 12-ஆவது வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம் மயிலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில் நடிகர் சிவாஜி கணேசனின் முன்னிலையில் நடைபெற்றது. 

  இவரது பரதநாட்டிய குரு சரசா. படிக்கும்போதே கல்வி, விளையாட்டில் சிறப்பிடம் பெற்று, பதக்கங்கள், பரிசுகளை ஜெயலலிதா பெற்றார். பள்ளி இறுதி வகுப்பில் கணக்கு பாடத்தில் அவர் வாங்கிய மதிப்பெண்கள் நூற்றுக்கு நூறு.
  தேர்வுக்காக ஜெயலலிதா தினமும் படிக்க மாட்டார். தேர்வுக்கு முந்தைய நாளில் இரவு முழுவதும் விழித்திருந்து படிப்பார்.  இதில், பொதுத்தேர்வில் மாநிலத்தில் 2-ஆவது இடம்பெற்றதும் வியப்புதான்.

  ஜெயலலிதாவுக்கு வளர்ப்புப் பிராணிகள் மீது அதிக விருப்பம். 1958-இல் சென்னை தியாகராய நகர் சிவஞானம் தெருவில் சந்தியாவின் குடும்பத்தார் வசித்தபோது, அவர்களது வீட்டுக்கு தொலைபேசி இணைப்பு வந்தது. அப்போது, அதில் முதல்முறையாக "நான்தான்' பேசுவேன் என கூறி, தனது தோழி சாந்தினியிடம் பேசினார் ஜெயலலிதா. தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்பட பல மொழிகளை அறிந்து, புலமை பெற்றவர்.

  திரைத்துறையில்...
  திரையுலகில் தமிழில் "வெண்ணிற ஆடை' படத்தில் அறிமுகமாகி 11 ஆண்டுகள் சிறந்த  நடிகையாக வலம் வந்தார். அவர் 150திரைப்படங்களில் நடித்துள்ளார்.  மறைந்த முதல்வர் எம்ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார்.

  1961-ஆம் ஆண்டில் கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சில காட்சிகளில் அறிமுகமாகினார். 1964}ஆம் ஆண்டில் இரு கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்துமுடித்தார். திரைத்துறையில் இருந்தபோது ஜெயலலிதாவின் சிகை அலங்காரம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

  "காவிரி தந்த கலைச்செல்வி' எனும் ஜெயலலிதாவின் நாடகம் மிகவும் பிரபலம். திமுக ஆட்சியின்போது சிறுசேமிப்பு வாரியத் தலைவராக எம்ஜிஆர் இருந்தார். அப்போது, சிறுசேமிப்பை ஊக்கப்படுத்த அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் ஜெயலலிதாவின் நாட்டிய நாடகம் கண்டிப்பாக இடம்பெறும்.
  1972-ஆம் ஆண்டில் போயஸ் கார்டனில் உள்ள "வேதா நிலையம்' ஜெயலலிதா கட்டிய வீடு. இங்கு 1972-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி கிரஹப் பிரவேசம் செய்து, குடியேறினார். 

  திரைத்துறையில் ஜெயலலிதா சம்பாதித்து வாங்கிய முதல் காரின் பதிவு எண் எம்.எஸ்.எக்ஸ். 3333. ஜெயலலிதாவுக்கு ஜேன் ஆஸ்டேன், சார்லஸ் டிக்கன்ஸ், ஷிட்னி ஷெல்டன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் பிடிக்கும். படப்பிடிப்பு நேரத்தில் புத்தகத்துடன்தான் அவர் இருப்பார். தனது வீட்டில் மிகப் பெரிய நூலகத்தை அவர் ஏற்படுத்தியிருந்தார். இதில், நாவல்கள்தான் நிரம்பியிருக்கும். அரசியல் புத்தகங்கள் குறைவுதான். ஆங்கில நாவல்களை அதிகம் ஜெயலலிதா படிப்பார்.

  ஒய்.ஜி.பார்த்தசாரதியின் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ் நாடகக் குழுவின் நாடக ஒத்திகை சந்தியாவின் வீட்டில் நடக்கும். அப்போது, அங்கு சோ வருகை தருவார். அப்போது, 4-வயதாக ஜெயலலிதா இருக்கும்போதே, சோவுக்கு அறிமுகமானார். 1980-ஆம் ஆண்டில் திரையுலகில் இருந்து ஜெயலலிதா விலகினார்.

  எம்ஜிஆருடன் நடித்த திரைப்படங்கள்: மறைந்த முதல்வர் எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த 28 திரைப்படங்கள். ஆயிரத்தில் ஒருவன், கன்னி தாய், சந்திரோதயம், தனிபிறவி, முகராசி, தாய்க்கு தலைமகன்,  அரசக் கட்டளை, காவல்காரன்,  ரகசிய போலீஸ் 115, தேர்த் திருவிழா, குடியிருந்த கோவில், கண்ணன் என் காதலன், புதிய பூமி, கணவன், ஒளிவிளக்கு, காதல் வாகனம், நம்நாடு, அடிமை பெண்,  மாட்டுக்கார வேலன், என் அண்ணன், தேடி வந்த மாப்பிள்ளை, எங்கள் தங்கம், குமரி கோட்டம், நீரும், நெருப்பும், ஒரு தாய் மக்கள், ராமன் தேடிய சீதை, அன்னமிட்ட கை, பட்டிக்காட்டு பொன்னையா. அடிமைப் பெண் படத்தில் ஜெயலலிதா தனது சொந்தக் குரலில் ஒரு பாடலை பாடினார். "அம்மா என்றால் அன்பு, அப்பா என்றால் அறிவு' என்ற பாடல் பதிவாகும்போது, அப்போது எம்ஜிஆர் அருகேயிருந்து ஊக்கப்படுத்தினார்.

  பெரியாரிடம் பாராட்டு: முக்தா சீனிவாசன் இயக்கிய "சூரிய காந்தி' எனும் திரைப்படத்தின் நூறாவது நாள் விழா சென்னை ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 1973-ஆம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி நடைபெற்றது. பெண் சுதந்திரத்தை வலியுறுத்தும் இந்தப் படத்தை பாராட்டிய பெரியார், நூறாவது நாள் விழாவில் அவர் பங்கேற்றார். அப்போது, ஜெயலலிதாவுக்கு பரிசு கேடயம் வழங்கினார் பெரியார். 

  அரசியலில்... அதிமுகவில்  1982-ஆம் ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி ஒரு ரூபாய் கட்டணத்தை எம்ஜிஆரிடம் செலுத்தி இணைந்தார் ஜெயலலிதா. 
  1982-ஆம் ஆண்டு அதிமுக கொள்கை பரப்புச் செயலராகப் பொறுப்பேற்றார். மதுரையில் நடைபெற்ற கட்சி மாநாட்டில் தனக்கு வழங்கப்பட்ட செங்கோலை எம்ஜிஆருக்கு அளிக்கும் புகைப்படம்தான் அரசியலில் இன்றும் பிரபலம்.

  தமிழக அரசின் சத்துணவுத் திட்ட உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டார்.  அப்போது, இந்தத் திட்டத்துக்கு ரூ.1 லட்சத்தை நன்கொடையாக அளித்தார் ஜெயலலிதா. தனது தாய் சந்தியாவின் பெயரில் ஒரு சத்துணவுக் கூடத்தையும் அவர் நிறுவினார்.

  அதிமுகவில் இணைந்தவுடன் மாதத்தில் பாதி நாள்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணத்தில்தான் இருந்தார். கட்சி பொதுக்கூட்டங்கள், பொதுமக்களின் குறைகளைக் கேட்டு உதவுதல், கட்சியினரின் பிரச்னைகளைக் களைதல் போன்றவற்றால் அவர் புகழ்பெற்றார். தொண்டர்களிடம் மரியாதையும், எம்ஜிஆருடம் மதிப்பும் அதிகரித்தது.

  1984-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டார். 23.4.1984-ஆம் தேதி காலை 11.30 மணிக்கு அவர் எம்.பி.யாக தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துகொண்டார். அப்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை எண் 185. பேரறிஞர் அண்ணா அமர்ந்த அதே இருக்கைதான் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது.  

  மாநிலங்களவையில் மின்சார உற்பத்திக்காக தமிழக அரசு 27 திட்டங்களை அனுப்பியும், அவற்றுக்கு 11 திட்டங்களை மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஜெயலலிதா பேசிய கன்னிப் பேச்சு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

  அதிமுகவில் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா பங்கேற்கும் கூட்டங்களில்தான் மக்கள் அதிகளவில் திரண்டனர்.

  எம்ஜிஆர் மறைவுக்கு பின், அதிமுக உடைந்தது. ஜானகி, ஜெயலலிதா என்ற இரு அணிகள் தேர்தல் களத்தில் நின்றாலும், ஜெயலலிதா அணியையே மக்கள் ஆதரித்தனர். இந்த நிலையில், 1989-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டம் சட்டப்பேரவையில் நடைபெற்றது. அப்போது,  முதல்வராக கருணாநிதி இருந்தார். இந்த நேரத்தில் ஒரு பிரச்னைக்காக பேரவையில் பெரிய விவாதம் எழுந்து, தகராறு ஏற்பட்டு கடும் மோதல் முற்றியது. ஜெயலலிதா தாக்கப்பட்டார். இனி மீண்டும் சட்டப் பேரவைக்கு வந்தால் முதல்வராக வருவேன் என்று அவர் மேற்கொண்ட சபதத்தை, 1991-இல் வென்று காட்டினார்.
  ஜெயலலிதா தனது பேச்சை நிறைவு செய்யும்போது, எம்ஜிஆர் நாமம் வாழ்க என்று கூறியே முடிப்பார்.

  1990-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியன்று ஒரு சம்பவம். அவரது 42-வது பிறந்த நாளும் கூட.  பிப்ரவரி 23-ஆம் தேதி நள்ளிரவு வரை புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை முடித்த பின்னர்,  தனது தோழி சசிகலாவோடு சென்னைக்கு காரில் வந்தார். மீனம்பாக்கம் அருகே கார் வந்தபோது, எதிரே வந்த லாரி காரின் மீது மோதியது. இதில், பின் சீட்டில் தூங்கிக் கொண்டு வந்த ஜெயலலிதா காயம் அடைந்தார்.  இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர்  அனுமதிக்கப்பட்டார். இவரை காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி நேரில் வந்து பார்த்து ஆறுதல் கூறினார்.

  காவிரி நீர் பிரச்னைக்காக 1991,2007-ஆம் ஆண்டுகளில் உண்ணாவிரதம் இருந்தவர் ஜெயலலிதா. 

  தேர்தல் பிரசாரங்களில் "நீங்கள் செய்வீர்களா... செய்வீர்களா'- என்று மக்களை கேள்வி கேட்டு பதில் வாங்கும் நூதன பிரசாரம் வெகுவாக அனைவரையும் கவர்ந்தது.

  அரசியல் ரீதியாக 48 வழக்குகளை எதிர்கொண்டார். இந்த அளவுக்கு வழக்குகள் தன் மீது வந்தபோதும் துவண்டு விடாமல் சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு சமாளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai