Enable Javscript for better performance
இந்திய அரசியல் வரலாற்றில் சோதனைகளை சாதனையாக்கிய தன்னகரில்லா தலைவர் ஜெயலலிதா!- Dinamani

சுடச்சுட

  

  இந்திய அரசியல் வரலாற்றில் சோதனைகளை சாதனையாக்கிய தன்னகரில்லா தலைவர் ஜெயலலிதா!

  By -தி.நந்தகுமார்.  |   Published on : 26th February 2018 12:28 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  jayalalitha

  இந்திய அரசியல் வரலாற்றில் தன்னகரில்லா பெண் தலைவராக விளங்கியவர் மறைந்த பிரதமர் இந்திரா காந்தி. அவருக்கு பிறகு அவருக்கு நிகராக ஒருவர் இருந்தார் என்றால், இந்தியர்களால் கைகாட்டப்படும் நபர் ஜெயலலிதாவாகதான் இருக்கும்..

  நடிகையாக இருந்தபோது, ஒருமுறை "நான் தமிழகத்தைச் சேர்ந்தவர்' என்று பேட்டியளித்திருந்தார். இதற்கு அடுத்த சில நாள்களில் மைசூரில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது ஜெயலலிதாவை கன்னட அமைப்பினர் சூழ்ந்துகொண்டு, "தமிழ் ஒழிக - கன்னடம் வாழ்க' என்று கூறுமாறு மிரட்டினர். தனக்கு ஆபத்து நெருங்கும்போது கூட கொள்கையில் உறுதியாக இருந்து தடம் மாறாமல் மறுத்தவர். "அச்சமில்லை. அச்சமில்லை...' என்ற பாரதியார் வரிகளை முழங்கி, வீரப் பெண்மணியாகத் திகழ்ந்தார். அரசியலில் கூட பதவிக்காகவோ, சுயநலத்துக்காகவோ சமரசம் செய்துகொள்ளாதவர். 

  வள்ளல் தன்மையில்...: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நடிகையாக இருந்தபோதும், அரசியல் தலைவராகவும், முதல்வராக இருந்தபோதும்  விளம்பரங்கள் இல்லாமல் பல உதவிகள் புரிந்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆர் அறக்கட்டளை, அம்மா பெஸ்ட் அறக்கட்டளைகள் வாயிலாகவும், தனிநபராகவும், தமிழக அரசின் வாயிலாகவும் நலிந்தோருக்கும், ஏழை எளியவர்களுக்கும் பல்வேறு உதவிகளைப் புரிந்தவர். கல்வி, மருத்துவம் போன்றவற்றில் உடனுக்குடன் உதவிகளை செய்தவர். போயஸ் தோட்டத்தில் உள்ள  வேதா இல்லத்தில் ஜெயலலிதா குடிபெயர்ந்தபோது, அப்போது அவர் அரசியல் களத்திலும் இல்லை. 

  இதன்பின்னர், ஜெயலலிதாவுக்கு ஜானகி ஆதரவு தெரிவித்து கட்சியை இணைத்தார். இதன்பின்னர், 1991-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றி பெற்று, அவர் முதல்வரானார். 

  இதன்பின்னர், 1991-96-ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் மகளிர் குழுக்கள் உருவாக்கம், மகளிர் காவல் நிலையங்கள், கமாண்டோ வீரர்கள், தொட்டில் குழந்தைகள் திட்டம் உள்பட பல்வேறு மக்கள் நலன் காக்கும் திட்டங்களைக் கொண்டு வந்தார்.

  இதையடுத்து, 2001-06, 2011-16-ஆம் ஆண்டுகளில் முதல்வராக  இருந்த ஜெயலலிதா தனது பதவிக்காலத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டம், கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டம், பெண்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், விலையில்லா கல்வி உபகரணங்கள், முதியோர் உதவித்தொகை ரூ.1,000-ஆக உயர்வு, இளம்பெண்களின் திருமணத்துக்கு தாலிக்குத் தங்கத்துடன் கூடிய நிதியுதவி, அம்மா உணவகங்கள், விலையில்லா அரிசி, அம்மா குடிநீர், அம்மா அழைப்பு மையம், அம்மா திட்ட முகாம்கள், ஏழை பெண்களுக்கான வளைகாப்பு, கர்ப்பிணிகளுக்கான அம்மா பரிசு பெட்டகம், மகளிர் குழுக்களுக்கு தாராளமான கடனுதவி,  அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம், உள்பட நூற்றுக்கணக்கான திட்டங்களைக் கொண்டு வந்தார்.

  தமிழக முதல்வராக இருந்து ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்ட பல்வேறு திட்டங்களை பிற மாநில  அரசுகளும், ஏன் உலகில் உள்ள  பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன.  பெண்ணுரிமைக்காக ஜெயலலிதா போராடி வருவதை அறிந்த அன்னை தெரசாவும், அமெரிக்காவின் ஹிலாரி கிளிண்டனும் தேடி வந்து பாராட்டியுள்ளனர் என்பது உலகையே திரும்பி பார்க்க விஷயம்தான்...!

  ஆணாதிக்கம் மிகுந்த அரசியல் சமூகத்தில் நாடு போற்றும் சிறந்த அரசியல் தலைவராக விளங்கிய ஜெயலலிதா, அமெரிக்காவின் தங்கத் தாரகை விருது, 69 சதவீத இடஒதுக்கீட்டை காப்பாற்றியதற்காக சமூக நீதி காத்த வீராங்கனை விருது உள்பட பல்வேறு விருதுகளும், பல்வேறு பல்கலைக்கழகங்களின் கௌரவ முனைவர் பட்டங்களும் தேடி வந்து பெருமை சேர்த்தன.

  சோதனைகளைத் தகர்ந்தெறிந்து, பொய் பிரசாரங்களை முறியடித்து, எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த தாக்குதல்களை முறியடித்து தன்னந்தனியே தனது பிரசாரத்தால் 2016-இல் மீண்டும் அதிமுகவை ஆட்சியில் அரியணையில் அமர வைத்தவர் ஜெயலலிதா. எம்ஜிஆருக்கு பிறகு, ஜெயலலிதா   தான் மீண்டும் ஆட்சியை தொடரவைத்த வரலாறு கிடைத்தது. 

  கொண்ட கொள்கையில்உறுதி..:
  1989-இல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதாதான் சட்டப் பேரவையில் தாக்கப்பட்டதையடுத்து, மீண்டும் முதல்வராகவே நுழைவேன் என்று சவால் விடுத்தார். அதை நிகழ்த்தியும் காட்டினார். 2006-11-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் இயங்கிய புதிய தலைமைச் செயலகத்தில் நுழைய மாட்டேன் என்றும் 2011-இல் முதல்வராகி செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச் செயலகத்தை இயங்கச் செய்வேன் என்றும் சபதம் மேற்கொண்டார். அதையும் நிகழ்த்திக் காட்டினார்.

  ஜெயலலிதாவின் பேச்சுகளில் கண்டிப்பாக இடம்பெறும் குட்டிக் கதைகள் சிரிக்கவும் மட்டுமின்றி, சிந்திக்கவும் வைக்கும். தவறு செய்தால் கட்சியிலும், ஆட்சியிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்  ஜெயலலிதா, தவறு செய்தவர் வருந்தும்போது மீண்டும் பதவிகளை அளித்து கௌரவப்படுத்தி மன்னிக்கும் குணம் கொண்டிருந்தவர். 

  பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளைகூட தலைமைச் செயலகத்திலேயே இருந்து மக்களுக்கு கஷ்டம் கொடுக்காமல், எளிய விழாவாக விடியோ கான்பரன்ஸிங்கில் நடத்தி முன்மாதிரி முதல்வராக விளங்கியவர் ஜெயலலிதா. 

  மோடியா - லேடியா: 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, லேடி ஆள வாக்கு அளியுங்கள் என்ற கோஷம் தமிழகத்தையே திணறவைத்தது. தமிழகத்தில் 37 தொகுதிகளில் அதிமுகவுக்கு வெற்றியை அளித்து, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக அங்கீகரித்தது.

  2011-ஆம் ஆண்டு முதல் அவர் மறைந்த 2016-ஆம் ஆண்டு வரை நடைபெற்றஅனைத்து தேர்தல்களிலும் வெற்றி வாய்ப்பை பெற்று தந்த ஜெயலலிதா, 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-இல் மண்ணுலகைவிட்டு மறைந்தார்.

  மண்ணை விட்டு மறைந்தாலும் இன்றும் ஊடகங்கள் அவரது பெயரை மறவாமல் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.  ஆம் அவரை அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும், மக்களும் இன்றும்  மறக்கவில்லை...

  அவரது பெயரை உச்சரிக்காமல்  தமிழகம் இல்லை என்பது போலும்...! மறந்தால்தானே உங்களை நினைப்பதற்கு...!

  தாய்க்கு ஜெயலலிதா எழுதிய கவிதை
  தனது தாய் சந்தியா மீது ஜெயலலிதாவுக்கு அதிகமான பாசம் இருந்தது. ஒரு பிறந்த நாளன்று அவர் தனது தாய்க்கு எழுதிய கவிதை:
  என் அன்பான தாயே!
  உனக்கோர் அம்மா இருந்தால்
  அவளை அன்பாகக் கவனித்துக் கொள்!
  அவள் அமர்ந்திருந்த நாற்காலியை
  வெறுமையாகப் பார்க்கும் வரை
  அவளது அருமை
   உனக்கு புரியாதென்பதால்
  இப்போதே அன்புடன் கவனி!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai