Enable Javscript for better performance
தீதும் நன்றும் - ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை முன் வைத்து...- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

  தீதும் நன்றும் - ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையை முன் வைத்து...

  By எம் ஏ சுசீலா  |   Published On : 20th January 2018 01:33 PM  |   Last Updated : 22nd January 2018 11:32 AM  |  அ+அ அ-  |  

  Andal

   

  தனி மனித நோக்கிலும் மதவாத அடிப்படையிலும் பாடலாசிரியர் வைரமுத்துவின் மீது வைக்கப்படும் கீழ்த்தரமான வசைகள் கண்டிக்கத்தக்கவை என்று ஒப்புக்கொள்ளும் அதே வேளையில் ஆண்டாள் குறித்த அவரது உரையில் அதன் எழுத்து வடிவமாக தினமணியில் வெளியான கட்டுரையில் அவர் முன் வைத்த வாதங்களை அடிப்படையாக வைத்து சில மாற்றுக்கருத்துக்களைத் தொகுத்துப் பதிவு செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு மதவாதிகளையும் பக்திமான்களையும் மட்டுமே சார்ந்ததல்ல என்பதையும் சொல்லியாக வேண்டியிருக்கிறது. 

  தமிழ் மொழியின் மகத்தான ஓர் ஆளுமை ஆண்டாள். எந்த மானுடனையும் மணாளனாய் நாட மாட்டேன் என்று தன் உடல் மீதும், உயிர் மீதும் தனக்குள்ள உரிமையை உரத்துப் பிரகடனம் செய்த ஒரு பெண்ணியவாதி. பாரதியின் சீடரான வ ரா, 1945 ஆம் ஆண்டில் எழுதிய தனது ‘கோதைத் தீவு’ நாவலில் பெண் விடுதலையின் குறியீடாக ஆண்டாளையே நிறுத்துகிறார். அந்த வகையில் வைரமுத்துவின் கட்டுரைக் கருத்துக்களை எதிர்கொண்டு பதிலளிக்கும் கடமை தமிழ் இலக்கிய ஈடுபாடும் தேர்ச்சியும் உடையவர்களுக்கும், தங்கள் பெண்மொழிக்கு ஆண்டாளை முன்னுதாரணமாக முன்னோடியாகக் சொல்லிக் கொண்டிருக்கும் பெண்ணியவாதிகளுக்கும் கூட உரியதுதான். ` 

  எழுத்தாளர்கள் பலர் கூட்டாக விடுத்துள்ள ஒரு அறிக்கை, குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமே உரியவள் அல்ல ஆண்டாள் என்றும் உலகளாவிய கவியாகிய அவளைப்பற்றிக் கருத்துச்சொல்லும் உரிமை எல்லோருக்கும் உண்டென்றும் சொல்கிறது. அதை முழுமையாக உடன்படும் அதே நேரத்தில் பிறழ்வான கருத்துக்களுக்குக் கருத்தியல் ரீதியாக பதில் சொல்லும் பொறுப்பு அறிவுலகுக்கு இருக்கிறதென்பதையும் நிராகரித்து விட முடியாது. தவறான, அரைகுறையான, உறுதிப்படுத்தப்படாத ஊகங்களும் அனுமானங்களும் முன்வைக்கப்பட்டு ஒரு இலக்கிய ஆளுமையின் ஒட்டு மொத்தப் பங்களிப்பும் கருத்தில் கொள்ளப்படாமல் மேலோட்டமாக மட்டுமே எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை, கருத்துச் சுதந்திரம் என்ற ஒன்றை மட்டும் காரணமாகக் காட்டித் தூக்கிப்பிடிக்கப்படுவதை ஏற்பதற்கில்லை.  

  உணர்ச்சியின் பிடியில் மட்டுமே ஆட்கொள்ளப்பட்டிருக்கும் எந்தத் தரப்பின் சார்பு நிலையும் இல்லாமல் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் உரை அல்லது கட்டுரையை அது வைத்திருக்கும் கருத்தடிப்படையில் மட்டுமே எதிர்கொண்டு உரிய எதிர்வினைகளை நடுநிலையோடு ஆற்றியாக வேண்டியிருக்கிறது. அதைத் தவற விடும் நிலையில் தமிழ் இலக்கிய வரலாற்றின் குறிப்பிடத்தக்க பெண் ஆளுமை ஒருவரைப்பற்றி வைரமுத்து போன்ற பிரபலங்கள் முன்வைக்கும்  நீர்த்துப்போன கருத்துக்கள் மட்டுமே பரவலான மக்கள் திரளைச்சென்றடையக்கூடிய அபாயம் இருக்கிறதென்பதை சிந்தனையாளர்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.

  சாதி சமய மறுப்பாளர் என்று தன்னை வெளிப்படையாகப் பிரகடனம் செய்து கொள்ளும் வைரமுத்து போன்ற ஒருவர் ’தமிழை ஆண்டாள்’ என்ற தலைப்புடன் சில இலக்கியப்பிரதிகளை அணுகும்போது ஆண்டாள் பதித்திருக்கும் தமிழ் முத்திரைகளின் மீது மட்டுமே அவரது கவனம் குவிந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுவது இயற்கை; சமயம், வரலாறு, இயற்கை இறந்த நிகழ்வுகள் என்று பிற எல்லாவற்றையுமே ஒதுக்கி வைத்து விட்டு மொழியின் ஒயிலையும் இலக்கிய அழகியலையும் மட்டுமே பார்க்க எண்ணினாலும் கூட அதற்கான  வாய்ப்பை அளவுக்கு அதிகமாகவே ஏற்படுத்தித் தருபவை ஆண்டாளின் பாடல்கள். ஆனால் தலைப்பை மட்டுமே தமிழ் என்று தந்து விட்டு அதிலிருந்து அவர் தடம் மாறிச்சென்று விட்டாரோ! என்று எண்ண வைக்கும் வகையிலேயே கட்டுரையின் தொனி தொடக்கம் முதல் அமைந்திருக்கிறது. (அந்தத் தலைப்புமே கூட இரவல்தான் என்பதும் பிற கவிஞர்களின் பாடல்வரிகளை நாம் மறந்து விடாமல் இருக்க அவ்வப்போது நினைவுபடுத்தும் அவரது வாடிக்கையான புத்திசாலித்தனமான தழுவல் போக்குதான் அது என்பதும் வேறு விஷயம்)

  • “கொழுந்தமிழும் செழுந்தமிழும் பழந்தமிழும் இளந்தமிழும் வசந்த காலக்கிளைகளில் கொழுந்தெழுந்து வருவது போலக்குழைந்தெழுந்து வருகின்றன’’
  • “ஆண்டாள் இறைத்த நீர் கண்ணன் என்ற கழனி சேர்வதற்கு முன் தமிழ் என்ற வாழையைத் தழைக்க வைத்திருக்கிறது’’

  என்று கட்டுரையின் இடையிடையே சொல் அலங்காரங்களைச் செருகியதைத் தவிர ஆண்டாளின் தமிழில் கொழிக்கும் அழகை எடுத்துக்காட்டும் முயற்சி கட்டுரையில் எதுவும் இல்லை. மாறாகக் கட்டுரையின் இறுதியில் எங்கிருந்தோ எடுத்தாண்டிருக்கும் உறுதிப்படுத்தப்படாத ஒரு மேற்கோளை முன் முடிவாகக்கொண்டு அதை நோக்கியே கட்டுரை மையப்படுத்தப்பட்டிருக்கிறது. (அந்த மேற்கோள் பற்றிய சர்ச்சைகளே ஏராளம்)

  •  “இப்படி ஒரு விடுதலைக்குரல் எப்படி சாத்தியம்’’
  • “இந்த உறுதியும் உணர்ச்சியும் எதற்கான முன்னோட்டம்’’
  • “கன்னி கழியாத பெண்ணின் பாலியல் உரையாடலுக்கு எது அடிகோலியது’’
  • “கனவு காணும் வேளையிலும் கலவி கண்டு விண்டுரைக்கும் துணிச்சலும் சுதந்திரமும் ஆண்டாளுக்கு வாய்த்தது எப்படி’’

  என்றும் திரும்பத் திரும்ப எழுப்பப்படும் கேள்விகளும்,

  அந்தக் கேள்விக்கு சாதகமான பாடல்களை மட்டுமே தேர்ந்து முன் வைத்தபடி அவள் “தமிழ் வெட்கமறுத்து விளையாடுகிறது’’ என்ற முடிவுக்கு வந்து சேருவதும், அவள் பிறப்பு குறித்து ஏதும் பெறப்படாததாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும் “குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக்கட்டுமானமுள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாக அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாச்சார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்று இறுதியில் ஆங்கில மேற்கோளுக்கு வந்து முடிப்பதும் தான் முன்னனுமானம் செய்து கொண்ட ஒரு கருதுகோளை (Hypothesis) உறுதிப்படுத்திக்கொள்ளும் முயற்சிதான் கட்டுரையாளரின் நோக்கம் என்பதை எடுத்துக்காட்டி விடுகிறது. 

  பாலியல் படிமங்கள் சொல்லப்பட வேண்டுமென்றால் அந்தப்பெண்ணின் பிறப்புப் பின்புலம் வேறுவகையாகத்தான் இருந்தாக வேண்டும் என்ற முடிவை எட்ட வைக்கும் ஆண்நோக்குக் கருதுகோள் மட்டுமே அது. அந்தக்கருத்தையுமே கூட ‘பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஆணாதிக்க மறுப்பாளர்களும், சமய மறுப்பாளர்களும் எண்ணிப்பார்ப்பார்கள்’ என்று கூறுகிறார் வைரமுத்து. 

  “ஏழுமணிக்கு மேலே நீயும் இன்பலட்சுமி’’, “விடியும் வரை பெண்ணழகு’’ என்றெல்லாம் பெண்ணைப்பற்றிப் பாட்டெழுதிய தன்னை ஆணாதிக்க மறுப்பாளர் என்று அவரால் எப்படி சொல்லிக்கொள்ள முடியும் என்பது புரியாத புதிர்)

  “தன்னுறு வேட்கை கிழவன் முன் கிளத்தல் எண்ணுங்காலை கிழத்திக்கில்லை’’ என்னும் தொல்காப்பிய மரபு சங்கப்பாடல்களிலேயே அவ்வையாலும் வெள்ளிவீதியாராலும் மீறப்பட்டிருப்பதை “முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்’’, “கன்றும் உண்ணாது கலத்தினும் படாது’’ முதலிய மேற்கோள்கள் வழி சுட்டிக்காட்டும் வைரமுத்து அந்த வெளிப்பாடுகளையும்  சொல்லாடல்களையும் வைத்து வருங்காலத்தில் அந்தப் பெண்களின் பிறப்புப் பின்புலத்தையும் கூட ஒருக்கால் ஆராய்ச்சி செய்ய முற்படலாம். அந்தப்பாடல்கள் “மணமான பெண்களின் குரல்கள்’’ என்றும் “ஆண்டாளின் குரல் கன்னிக்குரல்’’ என்றும் போகிற போக்கில்  கருத்துப்பிழையோடு ஒப்பீடு சொல்லி விட்டுப்போகிறது கட்டுரை. அவ்வை, வெள்ளிவீதியார் ஆகிய சங்கப்புலவர்களின் வாழ்க்கை வரலாறுகள் செவி வழிச்செய்தியாக அறியப்பட்டவை மட்டுமே. எந்த வகை ஆவணங்களாகவும் உறுதிப்படுத்தப்படாதவை அவை. மேலும் பிற ஆண்பாற்புலவர்களின் பாடல்களைப்போல இவற்றையும் அகத் துறைப்பாடல் புனைவுகளாக மட்டுமே கொண்டு மதிப்பிட வேண்டும். அந்த மதிப்பீட்டில் பார்க்கப்போனாலும் “வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது’’. “பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது’’.என்று வகைப்படுத்தப்பட்டிருக்கும் அவை பிரிவின்போது நிகழும் தலைவியின் கூற்றுக்கள் மட்டுமே. திருமணமான பெண்ணின் கூற்றுக்கள் அவை என்பதற்கான அகச்சான்று  எதுவும் இல்லை. பாடல்களில் சான்றுகள் இல்லாதபோது பிற்கால உரைகாரர்களின் துறைக்குறிப்புக்கள், விளக்கங்கள் இவற்றை மட்டும் வைத்து அத்தகைய செய்திகளை முடிபாகச் சொல்ல முற்படுவது தவறான அணுகுமுறை.

  பிரதியின் உள்ளடக்கம் மீறிய ஊகங்களுக்கே வைரமுத்து முதன்மை அளித்திருப்பது இதனாலும் உறுதிப்படுகிறது.

  ஒரு படைப்பில் - புனைவில் வெளிப்படும் எல்லா உணர்வுகளும் அனுபவ நுகர்வு குறித்த செய்திகளும் படைப்பாளியின் சொந்த அனுபவமாகத்தான் இருந்தாக வேண்டும் என்ற தேவை ஒருபோதும் இல்லை. ஆண் படைப்பாளிகளுக்கு நேராத இத்தகைய எதிர்வினைகள் தொடக்க காலம் தொட்டுப் பெண் படைப்பாளிகளுக்கு நேர்ந்து வருவதுதான்.

  ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடல்கள் நாயக நாயகி ‘பாவ’த்தின் வெளிப்பாடுகளே என்பதைக் கட்டுரை கோடி காட்டினாலும் அதிலுள்ள பாலியல்படிம வெளிப்பாடுகளுக்கு தேவதாசிப் பின்புலமே காரணம் என்ற முடிவை எட்டுவதற்கு அழுத்தம் தரும் வகையில் அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையிலேயே தொடக்கம் முதல் இறுதி வரை தொடர்ந்து கருத்துக்களைத் தொடுத்துக் கொண்டு போகிறது கட்டுரை.

  பக்தி இலக்கிய மரபில் மிக இயல்பானதும் இன்றியமையாத கூறுமான உயிர்-இறை-இணைவு என்னும் நாயக, நாயகி பாவனையையே ஆண்டாளும் நாச்சியார் திருமொழிப்பாடல்களில் கைக்கொண்டிருந்தபோதும், நம்மாழ்வார், குலசேகரஆழ்வார், திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் பாடியுள்ள அந்த பாவனைப் பாடல்களை விட உண்மைக்கு நெருக்கமாக, அசலாக ஆண்டாளின் பாடல்கள் வெளிப்பட்டிருப்பதற்கு சில  காரணங்கள் உண்டு.

  “புருஷன், புருஷனைக் கண்டு ஸ்னேகிப்பதைக்காட்டிலும் ஸ்திரீ புருஷனைக்கண்டு ஸ்னேகிக்கை பள்ளமடை (பள்ளத்தை நோக்கி நீர் ஓடுவது போல் இயல்பானது)'' என்று திருப்பாவை அவதாரிகை உரையில் குறிப்பிடுகிறார் பெரியவாச்சான் பிள்ளை. தான் ஒரு ஆண் என்ற பிரக்ஞையுடன் நாயகி பாவனையை வலிந்து புனைந்து கொண்டு, நனவு நிலையில் பாடும் ஆண் அடியார்களின் பாடல்களுக்கும், ஆண்டாள்  பெண்ணாகவே வெளிப்படுத்தும் உணர்வுகளுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. ''ஆண்டாளின் அகத்துறைப்பாடல்கள், வேறெந்த ஆண் புலவரின் அகத்துறைப்பாடல்களை விடவும் துணிவும், தெளிவும் உடையவை. இதனாலேயே, நாயகியாகத் தம்மைப்பாவித்துப் பெரியாழ்வாரே  பாடியபாடல்கள்  இவை என்று ராஜாஜி கருத்துரைத்தாரோ'' என்பார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்

  “முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்’’ என்ற தன் பாடலில் நாயகி பாவனையின் பித்து நிலையை விவரித்துக்கொண்டு செல்லும் அப்பர், நாயகனோடு அவள் ஒருமிக்கும் அபேத நிலையை “தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே’’ என்று சுருக்கமாய் முடித்து விட, ஆண்டாள் ஒரு பெண்ணாகவே இருப்பதால் அந்த அனுபவத்தைக் கற்பனையில் தனதாக்கிக்கொண்டு அவனோடு தலைப்படும் அந்த அனுபவத்தைச் சில பாடல்களில் விரிவாகக் காட்சிப்படுத்தி அளித்திருக்கிறாள். முன்னம் அவனுடைய நாமம் கேட்டு மூர்த்தி அவனிருக்கும் வண்ணம் கேட்டுப் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டுப் பெம்மான் அவன் மீது பிச்சியாகும் நிலை வரை சொல்லிச்செல்லும் அப்பர் பாடல், நாயக நாயகி பாவனை என்பது, மானுடக்கற்பிதங்கள், உலக ஆசார வரையறைகள் போடும் எல்லைக்கோடுகள் முதலியவற்றைத் தாண்டியது என்பதை  “அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை’’என்ற ஒரு வரியில் கோடிட்டுக்காட்டி விடுகிறது. ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப் பாடல்கள் நாயக - நாயகி பாவத்தின் உச்சம் தொடுபவை என்பதால் உலகியலிலிருந்து விலகி இருப்பதும், உலகியலாரால் விளங்கிக்கொள்ள முடியாததுமான அந்த ஆசார அகல்வுகளை விரிவாக முன் வைக்கின்றன. குறிப்பாக அவை ஒரு பெண் கவிஞரால் விவரிக்கப்படுவதால் ஏற்படும் உறுத்தலே அவர் புனைந்து கொண்டிருக்கும் பாவனையைப் பார்ப்பதற்குத் தடையாக இருக்கிறது என்பதே கசப்பான உண்மை.

  ‘உண்ணும் சோறும், பருகும் நீரும்' கண்ணன் மட்டுமே என்று கருதும் நம்மாழ்வாரின் மரபுச்சூழலிலேயே பிறந்தது முதல் வளர்ந்து ஆளாகும் ஆண்டாளின் மனதில்... நினைவு தெரிந்த நாள் முதல், வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணன், விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய், மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என்று பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே செல்கிறான்; ஒரு கட்டத்தில் உண்மையான நாயகனாகவே அவனைத் தன் மனதில் வரித்துக்கொள்ளத் தொடங்கி விட்டதாகப் பரவலான தளத்தில் வழங்கி வரும் பலதரப்பட்ட கதைகள் செல்வாக்குப் பெற்றதன் வழியாகவே நாயகி நிலையில் நின்று பாடிய உணர்வுகள், ஆண்டாளின் சொந்த உணர்வுகள் போல நமக்குத் தோற்றம் அளிக்கின்றன. 

  படைப்பாளி ஒரு பெண்ணாக இருப்பதும் குறிப்பிட்ட உணர்வு நிலைக்குத் தேவையான விவரணைகளை அவளால் அந்த அலைவரிசையில் தர முடிவதும் படைப்பில் உட்செறிந்திருக்கும் நாயக நாயகி பாவனைக்கு வலுச்சேர்க்க எந்த அளவு உதவியிருக்கின்றன என்று காண்பதுதான் இலக்கியத்தை அணுகும் சரியான வழிமுறையாக இருக்குமே தவிர, அதைக்கொண்டு அவளுடைய அந்தரங்க வேட்கையை ஆராயப்புகுவதோ அவள் எந்தக்குலத்தை அல்லது எந்தப் பின்புலத்தைச் சார்ந்தவள் என்று நியாயம் கற்பிக்க முயல்வதோ முறையானதல்ல.

  உயிரும் இறையும் ஒன்றிக்கலக்கும் அனுபூதி நிலையை - அந்தப் பேரின்ப ஒருங்கிணைப்பை மானுடருக்குப் புரியும் மொழியில் எடுத்துச்சொல்வதற்காக, அவர்களுக்குப் பரிச்சயமான ஒன்றை - அவர்கள் உணர்ந்து பழகிப்போன புலன் இன்பத்தைக் கொண்டு காட்டுவதும் அதன் வழி அதை விட மேலான ஒரு உணர்வு நிலை இருக்கிறதென்பதை அவர்களுக்குச் சுட்டுவதுமே நாயக நாயகி பாவத்தின் அடிப்படைகள். அந்த பாவனை அளிக்கும் சுதந்திரம், அது மானுட அளவுகோல் கடந்ததென்ற முழுமையான தன்னுணர்வு இவற்றாலேயே ஜெயதேவர் போல, அக்கம்மாதேவி போல ஆண்டாளும் பெண் என்ற தன் புலனுணர்வு மட்டுமே புரிந்து வைத்திருக்கும் சில பாலியல் படிமங்களைப் புனைவாகக் கையாண்டிருக்கிறாள்..

  பெண்மொழி என இன்றைய நவீன இலக்கியக்களம் கொண்டாடும் போக்கிற்குப் பாதை வகுத்தவளாக ஆண்டாள் இருந்தாலும் அதை நாயக நாயகி பாவனைக்குள் நின்றபடி மட்டுமே செய்திருக்கிறாள். கட்டற்ற - வரன்முறை கடந்த பாலியல் சுதந்திரமும் அதற்கான உரிமை கோரலும் அவளது இலக்குகள் அல்ல. தேவர்களுக்குக்காணிக்கையாகப் படைப்பதற்காக வைத்திருக்கும் அவிர்பாக உணவை, கானில்திரியும் சிறுநரிகள் சீரழிக்க விடமாட்டேன், 'சிறுமானிடவர்க்கு' அதை உரியதாக்கமாட்டேன் “மானிடவர்க்குஎன்று பேச்சுப்படில்வாழகில்லேன் கண்டாய்” என்று உரத்துப் பிரகடனம்செய்தவள் அவள். மானுடக் காதல் மானுடக்கலவி இவற்றைப்புறந்தள்ளிக் கடந்து செல்பவள் அவள் என்பதைக்காட்ட “மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்’’ என்ற திருப்பாவையின் ஒரு வரி போதும். உலகியல் துய்ப்புக்களைத் துறந்ததன் அடையாளங்களைத் தாங்கியிருக்கும் அவள் பாடல் வரிகளைக் கருத்தில் கொள்ளாமல் “துய்ப்பின் கதவுகளைத் திறந்து விட்ட அக்கால மதநெறிகளின் குறியீடாக ஆண்டா’’ளை மதிப்பிட்டிருக்கிறது அந்தக்கட்டுரை.

  தேவதாசி என்ற ஊகத்தைப் புறச்சார்புகளின் வழி கட்டுரையாளர் வெளியிட்டிருப்பதால் ஆண்டாளின் மொழிக்கோ கவித்துவத்துக்கோ பெண்ணிய ஆளுமைக்கோ எந்தக் குறையும் நேரிட்டு விடவில்லை என்பதையும் இங்கே அழுத்தமாகப்பதிவு செய்தாக வேண்டியிருக்கிறது. அந்தப்பின்னணியிலிருந்து கொண்டு கலைவளர்ச்சிக்கும் சமூகப்பணிக்கும் அழியாத பங்களிப்பு செய்த எம் எஸ் சுப்புலட்சுமி,முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமிருதத்தம்மையார் என்று இங்கே பலர் உண்டு. ஆனால் எழுதப்பட்ட இலக்கிய அகச்சான்றுகளோ கல்வெட்டு செப்பேடு ஆகிய சான்றுகளோ இல்லாமல் அவளது எழுத்தில் வெளிப்படும்  ‘பாலியல் சொல் விடுதலை’ என்ற ஒன்றை மட்டுமே விடாமல் பிடித்துக்கொண்டு அந்த ஊகத்தை அவர் வந்தடைந்திருக்கும் முறையே அதைத் தவறான போக்காகக் காட்டுகிறது. 

  தேவதாசி என்ற சொல்லை இன்றைய பொதுப்புத்தியில் வழங்கும் பொருளில் தான் ஆளவில்லை என்றும் தெய்வத்துக்கே தன்னை அடிமையாக்கியவள் என்ற அந்தக்காலகட்ட அளவுகோலின்படியே தான் அதைக் குறிப்பிட்டதாகவும் சர்ச்சைகள் வலுப்பெற்று வரும் நிலையில் விளக்கம் தந்திருக்கிறார் கட்டுரையாளர். ஆண்டாள் குறித்த அவரது அந்த உரை முழுக்க முழுக்க வெகுஜனப்பரப்புக்கானது; அந்நிலையில் தேவதாசி குறித்த பொதுப்புரிதல் என்பதும் அதை ஒட்டியதாகவே இருக்க முடியும் என்பது தெரியாதவராக  அவர் இருக்க வழியில்லை. அவரது இந்த விளக்கம் வெறும் சமாளிப்புக்கானதும், சமாதானம் நாடியதும் மட்டுமே. (கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் மேற்கோள் எந்த அறிஞரின் கருத்தை ஆதாரமாகக்கொண்டிருக்கிறதோ அவரே அதற்கான எந்த ஆவணச்சான்றுகளும் இல்லை என்பதையும் அது தன் அனுமானம் மட்டுமே என்றும் இன்று சொல்லியிருக்கிறார்]

  ஆணின் எழுதுகோலை இரவல் வாங்கி, அவன் உருவாக்கி வைத்த மதிப்பீடுகளையே வழிமொழிந்து கொண்டிருந்த சில சங்கப் பெண்பாற்புலவர்களைப் போலன்றி, இயல்பான சுயேச்சையுடன், தனித்த ஆளுமையுடன் தமிழ்க்கவிதைவெளியில் முகம் காட்டியவள் ஆண்டாள். அவளை ஒரு ஆழ்வாராக அங்கீகரிக்கத்தடை போட்ட இலக்கிய மரபுகள், அவள் பாடல்களைப் பெரியாழ்வார்தான் (அவள் பெயரில்) பாடினார் என்று கூறவும் தயங்கவில்லை

  “ஆண்டாளின் அகத்துறைப்பாடல்கள், வேறெந்த ஆண் புலவரின் அகத்துறைப்பாடல்களை விடவும் துணிவும், தெளிவும் உடையவை. இதனாலேயே நாயகியாகத் தம்மைப் பாவித்துப் பெரியாழ்வாரே  பாடியபாடல்கள் இவை என்று ராஜாஜி, கருத்துரைத்தார்’’ என்கிறார் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்.

  தான் தேர்ந்து கொண்ட தன் சொந்த சொந்த மொழியால் ஒரு பெண் பேசத் தொடங்கி விட்டால்; அவளை வியப்போடும், விலக்கத்தோடும் அணுகுவதும் அதற்கு வலிந்து ஒரு காரணம் கற்பித்தபடி அவதூறு என்னும் சேற்றை வாரி அவள் மீது இறைப்பதும் இன்றைய காலச்சூழலிலும் தொடர்கிறது என்பதற்கான நிரூபணமே வைரமுத்துவின் கட்டுரை. 

  இன்றைய பெண்கவிஞர்கள் பலரும் ஆண்டாளைத் தங்கள் பெண்மொழிக்கு முன்னோடியாகக் காட்டுபவர்கள் அவர்களையும் அப்படிப்பட்ட சார்புகளோடு மட்டும்தான்  அணுகப்போகிறதா ஆண் நோக்கு? 

  ’’பாலியல் சொல் விடுதலையைப் பேசுபவள் என்பதாலேயே ஆண்டாளைக் ‘குலமகள்’ அல்லாத அடையாளத்தோடு வைத்து உரைப்பதன் வெளிப்படையான அர்த்தம், காமத்தை எழுதுபவர்கள் குலமகளாக இருக்க முடியாது என்பது தான். 

  எழுத்திலிருந்து குல அடையாளத்தைத் தேடிப்பார்க்கும் மரபார்ந்த சொல்லாடல் இது. தன் பாலியலையும் பாலியல் விடுதலையையும் ஒரு பெண் கொண்டாடிப் பேசுவது வேறு, ஒரு பெண்ணின் எழுத்து வெளிப்பாட்டிலிருந்து அவள் பிறப்பை இவ்விதமாக அனுமானிப்பது வேறு, என்று அந்த வாதத்தைக் கவிஞர் பெருந்தேவி முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.  

  பெண் உடல் சார்ந்த பாலியல் தூண்டுதல்களையும் பிற வேதனைகளையும் வெளிப்படையாகப் பதிவு செய்வதே பெண்மொழி என்று காட்டுவதும் அந்த அடிப்படையில் மட்டுமே மகத்தான ஓர் ஆளுமையை அணுகுவதும் பரபரப்பு நோக்கிலான பார்வைகள் மட்டுமே. இலக்கியத்துக்கோ குறிப்பிட்ட படைப்பாளிக்கோ அவை எந்த வகையிலும் மேன்மை சேர்த்து விடப்போவது இல்லை 

  பெண்மொழி என்பது வெறும் பாலியல் சொல்லாடல் மட்டுமில்லை. பெண் இயங்கும் தளம், அவளது செயல்பாடுகள், பிறந்தது முதல் அவளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டு வந்திருக்கும் பண்பாடு இவை அனைத்தும் உட்செறிந்த சேர்ந்த கலவையாகவும் அது உருக்கொள்கிறது. அதுவே அவள் பேச்சைக் கட்டமைக்கிறது. பெண் புழங்கும் வெளி, அவளுக்குப் பழக்கமான புழங்கு பொருட்கள், அவளது நட்புக்கள், அவற்றோடு அவள் ஊடாடி உறவாடும் பாங்கு, அவளது அன்றாடச் செயல்பாடுகள் அவளது வாழ்க்கைநிலை, அவற்றின் அடிப்படையில் அவள் முன் வைக்கும் படிமங்கள் என்ற கண்ணோட்டத்தில் ஆண்டாளின் இலக்கியத்தை அணுகும்போது பெண்மொழி பற்றி நமக்குக் கிடைக்கக்கூடிய திறப்புக்கள் மிகப்பல. அந்த அடிப்படையிலும் தமிழிலக்கியத்தின் பெண்மொழி உருவாக்கத்துக்குக் குறிப்பிடத்தக்க முன்னோடியாகி இருக்கிறாள் ஆண்டாள். மிகக்குறைவான எண்ணிக்கையிலான சங்கப் பெண்பாற்புலவர்களிடம் கூட அதிகம் காண முடியாத மகத்தான இந்தப் பங்களிப்பை வைரமுத்துவின் கட்டுரை கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதை எவரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

  “புழக்கடைத்தோட்டத்துவாவி’’யாக..
  “முகில் வண்ணன் பேர் பாடும் முற்ற’’மாக
  “வாயிற்கடை’’யாகப்
  பதிவாகும் பெண்ணின்  ‘வெளி’,
  “நெய்யுண்ணோம்பாலுண்ணோம்நாட்காலேநீராடி
  மையிட்டெழுதோம்மலரிட்டுநாம்முடியோம்’’
  என்று அவள் செய்யும் நோன்பு,
  நோன்பு நிறைவானதும் 
  “சூடகமேதோள்வளையேதோடேசெவிப்பூவே
  பாடகமேயென்றனையபல்கலனும்யாமணிவோம்’’
  என்று பட்டியலிடும் அவளுக்குப்பழக்கமான அணிகலன்கள்,
  “...பாற்சோறுமூடநெய்பெய்துமுழங்கைவழிவார....’’ 
  “காசும்பிறப்பும்கலகலப்பக்கைபேர்த்து
  வாசநறுங்குழல்ஆய்ச்சியர்மத்தினால் 
  ஓசைப்படுத்ததயிரரவம்....’’
  என்று அன்றாடம் அவள் ஈடுபடும் சமையல் சார்ந்த தொழில்கள்,
  “வெள்ளைநுண்மணல்கொண்டுசிற்றில்விசித்திரப்படவீதிவாய்
  தெள்ளிநாங்கள்இழைத்தகோலம்’’ 

   

  - என்று சிற்றில் இழைத்து அதன் முன் சித்திரக்கோலமிட்டுத் தோழியரோடு விளையாட்டாய் அவள் கழிக்கும் பொழுதுகள்...

  எனப் போகிற போக்கில் பெண் மையம் கொண்ட சொற்களை ஆரவாரமின்றித் தெறித்து விட்டுப்போகின்றன ஆண்டாள் பாடல்கள்.

  புலர்ந்தும் புலராத சிறுகாலைப்பொழுது, வயல்வேலை செல்பவர்களுக்கு உரியது மட்டுமல்ல; வீட்டிலுள்ளோரின் வயிற்றுத் தீ தணிக்க உதயத்துக்கு முன்னெழுந்தாக வேண்டிய பெரும்பான்மையான பெண்களுக்கும் அணுக்கமான பொழுது அது. விடியலின் அழகும் நுட்பமும் கலவையான பல ஒலிகளும் இத்தனை விரிவான நயத்துடன் பதிவு செய்யப்படுவதென்பது காலைப்பொழுதின் ஓர் அங்கமாக- அதோடு தன் வாழ்வையும் கூடவே பிணைத்துக்கொண்டிருக்கும் ஒரு பெண்ணால் மட்டுமே இயல்பாக சாத்தியப்படக்கூடியது என்பதற்கு அவள் பாடல்கள் சான்றளிக்கின்றன.
   
  அவளது பாவைப்பாடலில் காலை என்ற வேளை “சிற்றஞ்சிறுகாலை’’யாக சின்னதாய் அரும்பு கட்டி மெல்ல மெல்ல மொட்டாகிப் படிப்படியாய் இதழ் விரித்துப் பின் கதிர்பரப்பி விடிகிறது.

  திருப்பாவையின் சிறுகாலை ‘புள்சிலம்பு’வதோடு தொடங்குகிறது இது... பறவைகள் கண்விழித்து இலேசாகக் குரல் கொடுக்கும் முதல்நிலை. அடுத்தது புள்ளுக்கே அரசனான கருடனை வாகனமாய்க் கொண்ட திருமாலின் கோயில் திறக்கப்பட்டு விட்டது என்பதன் அறிகுறியாக ஆலயத்தில் முழங்கும் வெள்ளை விளிச்சங்கின் பேரரவம். தொடர்ந்து அந்தத் திருமாலை மட்டுமே உள்ளத்தில் தாங்கி வாழும் முனிவர்களும் யோகியரும் தங்கள் அறிதுயிலை மெல்லக் கலைத்து (உறக்கம் கலைந்து விழிப்பு நிலை வரும் போது தூக்கிவாரிப்போட்டதைப் போல அமைந்துவிடாமல் நிதானமாக... படிப்படியாகவே அத்துயில் கலைதல் நிகழவேண்டும் என்ற அறிவியல் உண்மையினையும் குறிப்பிட்ட இந்த இடத்தில் வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள்) ‘அரி..அரி..’ என்ற பெயரைப் பெருமுழக்கம் செய்யத்தொடங்கும் அரவம்... காலை... இன்னும் சற்றுப்புலர ஆரம்பிக்கிறது. அதன் அறிகுறியாக ‘ஆனைச்சாத்தன்’ என்ற பறவையினம் தனக்குள் கலந்து பேசும் பேச்சரவம் கேட்கிறது.

  முதலில் கேட்டது, பறவைகள் கண்விழித்ததும் எழுப்பிய மெல்லொலி; இப்பொழுது கேட்பது, கரிக்குருவிகளாகிய ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் தமக்குள் கீச்சுமூச்சென்று ஆரவாரமிட்டுக் கொண்டு உரையாடும் சற்று உரத்தஓசை. ஆண்டாளின் நுண்ணிய கவிமனம்... அந்தக்குருவிகளின் இரைச்சலையும் கூட அவற்றுக்கிடையே நடக்கும் ஓர் உரையாடலாகப் பார்க்கிறது. பறவைகள் எழுப்பிய பலதரப்பட்ட ஓசைகள் ஆய்ச்சியரைக் கண்விழிக்கச் செய்ய... அவர்கள் தங்கள் காலைப்பணியைத் தயிர்கடையும் ஒலியோடு துவங்குகிறார்கள். பெருமளவில் தயாரிக்கப்பட்டாலும் கூட மத்தினால் தயிர்கடையும் ஒலிபேரோசையாக இருக்கவாய்ப்பில்லை; அதனால் அத்தொழிலில் ஏற்படும் அசைவின்போது அவர்கள் அணிந்துள்ள அணிகலன்கள் குலுங்கிச் சத்தமிடுவதையும் அதோடு கூடவே இணைத்தபடி ‘காசும் பிறப்பும் கலகலப்ப’ என்கிறாள் ஆண்டாள்.

  அடுத்தபடி நிலையாகக் கீழ்வானம் வெளுக்க ஆரம்பிக்கிறது. பனிபடர்ந்த புல்லில் மேய்வதற்காகச் சிறுதோட்டங்களை நாடி எருமைகள் மென்னடை போடத் தொடங்குகின்றன. பரந்த மேய்ச்சல் வெளிகளுக்கு இட்டுச் செல்லப்படுவதற்கு முன்பு, அருகிலுள்ள சின்னத் தோட்டங்களில், கால்நடைகள் அப்போதைக்குச் சற்று மேய்ந்து திரிவதுண்டு;  இந்த நுணுக்கமான வேறுபாட்டையே உணர்த்திக் காட்டுகிறது ‘சிறு வீடு மேய்வான்...’ என்னும் தொடர்.

  இறுதிநிலையாக வருவது... வெள்ளி எழுந்து வியாழம் உறங்கும் அரிய வானியல்காட்சி. புலரும் காலையில் வியாழக்கிரகம் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து கொள்வதும், சுக்கிரன் என்னும் விடிவெள்ளி பளிச்செனக் கண்ணில்படுவதும் இயற்கையோட ஒன்றிக்கலந்து வாழ்பவர்களுக்கு அன்றாடம் அனுபவமாகியிருக்கும் ஒரு தினசரி நிகழ்வுதான் என்றாலும்.. “வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’ என்ற பாவைப்பாட்டு வரிகள் அந்த அனுபத்தை அழியா ஓவியமாக்கி மனதில் நிலைநிறுத்தி விடுகின்றன. காலையின் மற்றொரு அடையாளமாகச் செங்கழுநீர்ப்பூக்கள் வாய் நெகிழ்த்தி விரியத்தொடங்க...

  ஆம்பல்கள் வாயடைத்துக் கூம்புகின்றன. மீண்டும்... உரத்த குரலுடன்... புட்களின் சிலம்பல் ஆலயச்சங்கின் முழக்கம்... இயற்கையாக நிகழும் இத்தனை பின்னணி ஒலிகளொடு குள்ளக் குளிரக் குடைந்து நீராடிப்பாவை நோன்பியற்றும் பெண்கள் , தங்கள் தோழியர் வீட்டு முற்றத்தில் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடும் ஒலிகளும் இறுதியாகப் பின்னிப் பிணைந்து கொள்கின்றன. காலை விடியலைக் காணாமல் கும்பகர்ணத் தூக்கம் போடும் சகதோழிக்குக் காலையின் ஒலி,ஒளிக்காட்சிகள், ஆண்டாளின் வாய்மொழியில் விரியும் வரிசை இது.

  பெண்மொழி தவிர வேறொரு நயமும் இதில் உண்டு. நந்தவனம் அருகிலேயே வாழ்ந்து அங்கே உள்ள ஒவ்வொரு புள்ளின் ஓசையையும் கேட்டுக் கேட்டுக் கண்வளர்ந்து, காலையில் அவற்றைக் கேட்டபடியே கண்மலர்ந்து அவை இரைதேடிக் கூடையும் வேளையில் அவற்றோடு குதூகலித்து வளர்ந்த ஆண்டாள் எந்தப்பறவை எது எனச்சுட்டவும் அவை ஒவ்வொன்றும் எழுப்பும் ஓசையை இனம்பிரித்துப் பார்க்கப் பழகியிருக்கிறாள்; அந்த ஓசை வேறுபாட்டையே ’புள்ளும் சிலம்பின’ என்றும் ’ஆனைச்சாத்தன் கலந்து பேசிய பேச்சரவம்’  என்று தன் பாடல் மொழியில் பதிவு செய்தும் இருக்கிறாள்.

  உடல் உள்ளம் என இரண்டாலும் பெண் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாகிய தாய்மை உணர்வு பீறிட்டடிக்கும் இடங்களும் பாவைப்பாடல்களில் உண்டு. ’’புலி சேர்ந்து போகிய கல்லளை போல வாடல் முதியோள் வயிற்றிடம்’’என்று தன் வயிற்றை சுட்டும் சங்கப்பெண் பாடல் போல இங்கே இவளது பாடலில் தாயைக்குடல் விளக்கம் செய்கிறான் கண்ணனாகிய தாமோதரன். 

  “மன்னுபுகழ்க்கோசலை தன் மணிவயிறு வாய்த்தவன்’’ என்ற குலசேகராழ்வாரின் ஆண்மொழிக்கும் தாயின் குடல் விளங்கச் செய்தவன் என்ற ஆண்டாளின் பெண்மொழிக்கும் உள்ள மொழிபு வேறுபாடு மிகவும் நுட்பமானது.

  மேய்ந்து விட்டு வரும் பசுக்களையும் எருமைகளையும் அன்றாடம் ஆயர்பாடியில் பார்த்துப்பழகிய ஆண்டாளுக்குக் கன்றை நினைத்த அளவிலேயே பால் சுரந்து பொழியும் அவற்றின் தாய்மை உணர்வே முதலில் வந்து கண்ணில் முட்டுகிறது.

  “கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
  நினைத்து முலைவழியே நின்று பால் சோர
  நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்’’
  என்று அவள் வருணனையும் விரிகிறது.

  “பெண்மொழியை உருவாக்கப் பேச்சுமொழி மரபில் தோய்வது பயனுள்ளதாக அமையலாம்’’
  - என்ற நவீனப் பெண்ணியக்கருத்தாக்கத்தை ஒட்டித் திருப்பாவைப்பாடல்களில் ‘பெண்பேச்சு’ என்பது மிக இயல்பாக அமைந்திருக்கிறது. பெண்களுக்கென்றே உரிய கிண்டல் கேலிப் பேச்சுக்களும் நட்பின் நெருக்கத்தோடு கூடிய கூற்றுக்களும் உரையாடல்களும் ஆண்டாள் பெண்பேச்சில் தனி முத்திரை பதிக்கக்கூடியவை.

  “பிள்ளைகளெல்லாம் பாவைக்களம்புக் கார்’’
  “மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை’’என்று
  ஒத்தவயதுள்ள இளம்சிறுமியர் ஒருவரை ஒருவர் செல்லமாகப் ‘பிள்ளை’ எனஅழைத்துக் கொள்ளும் தென்பாண்டித் தமிழும்,
  விடிந்தபின்னும் உறங்கும் தோழியை
  “உன் மகள் ஊமையோ அன்றி செவிடோ..அனந்தலோ?’’
  “கூற்றத்தின்வாய்வீழ்ந்தகும்பகரணனும்
  தோற்றும்உனக்கேபெருந்துயில்தான்தந்தானோ?’’
  “எங்களைமுன்னம்எழுப்புவான்வாய்பேசும்
  நங்காய்! எழுந்திராய்”
  என்று வேடிக்கையும் உரிமையுமாய் எள்ளி நகையாடுவதும்… தோழி போடுவது பொய்த் தூக்கமே என்பதைக்  
  “கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்’’
  என்று உரிமையாய் சாடுவதும் 

   

  -‘எலே’என்றபழகுதமிழ்விளியை “எல்லேஇளங்கிளியே’’ எனஆக்கி, அந்தப்பாடல்   முழுவதையுமே இரண்டுபெண்களுக்கு இடையே மாறி மாறி நடைபெறும் உரையாடலாகவே அமைத்திருப்பதும் நடைமுறை வாழ்வில் வழக்கமாய் காணப்படும்  பெண் பேச்சின் அடையாளங்கள். 

  ‘பெண்பேச்சு’க்குரியதாகச் சுட்டப்படும் மற்றொரு பண்பான எளிமைத் தன்மையும் ஆண்டாளின் கவிதைகளுக்கு உண்டு. 

  ஔவையின் கவித்திறன் பற்றித் தன் கட்டுரை ஒன்றில் விளக்கும் பாரதி,

  “சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் கவிதைத் தொழிலில் ஔவை ஒப்பற்றவள் ....அவள்நூல் ‘மிகத்தெளிந்த , மிக எளிய தமிழ்நடையில் எல்லா ஜனங்களுக்கும் பொருள் விளங்கும்படியாக எழுதப்பட்டிருக்கிறது’’என்பார்.

  இதே தன்மைகளை ஆண்டாள் பாடல்களுக்கும் பொருத்திக்காட்ட முடியும்.

  “கூட்டில் இருந்து கிளி எப்போதும் 
  கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும் 
  ஊட்டக்கொடாது செறுப்பனாகில் 
  உலகளந்தான் என்று உயரக்கூவும்’’
   என்ற நாச்சியார் திருமொழி வரிகளும், 
  “ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர’’
  என்று கண்ணனின் வரலாற்றை மிகவும் லாவகமாக அதிலும் இரண்டு பெண்கள் வழியாகவே சொல்லி விடுவதும் இன்னும் பாவைப்பாடல்களின்பலபகுதிகளும்ஆண்டாளின்கவிதைஎளிமைக்குக்கட்டியம்கூறுபவை.

  ஒரு கதைசொல்லியைப்போன்ற ஆர்வத்தோடு உடன் வரும் பெண்ணிடம் சுவாரசியமாக ஒன்றைப் பேசிக்கொண்டே போகும் ஒரு இளம்பெண்ணின் சொற்கள் எப்படி இருக்கக்கூடுமோ அதே போன்ற நடப்பியல் பாணியுடன்  
  “சிற்றஞ்சிறுகாலை”
  “குள்ளக்குளிர”
  “ஆஆ என்று ஆராய்ந்து’’
  “முன்னம் முன்னம் மாற்றுவேன்’’
  என்று அவள் கையாளும் பல இரட்டைச்சொற்கள் பெண்தமிழைப் பழகுதமிழாக ஆக்கி விடுகின்றன.
  பெண் மொழி, பெண் அடையாளம் இவற்றையெல்லாம் மீறி இலக்கியத் தகுதி, மொழி ஆளுமை என்று மதிப்பிடும்போதும் எல்லை இகந்து செல்வது ஆண்டாள் தமிழின் இலக்கிய வீச்சு. கம்பனின் பெருங்காப்பியம் ஒரு சொற்களஞ்சியம் என்றால் அதற்கு நிகரான சொல்பெட்டகம் ஒன்றைத் தன் 173 [திருப்பாவை-30,நாச்சியார் திருமொழி-143] பாடல்களுக்குள்ளேயே பொதிந்து வைத்து விட்டுப்போனவள் ஆண்டாள்.

  துயில் எழுப்பும் ஒரு பாடல் வகைக்குள்ளேதான் 
  “பேருறக்கம்’’
  “ஏமப்பெருந்துயில்’’
  “பையத் துயின்ற பரமன்’’..
  “வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்து’’
  என்று எத்தனை வகையான தூக்கங்கள்… ஒவ்வொரு தூக்கத்துக்கும் எத்தனை நுணுக்கமான வேறுபாடுகள்.?

  தூக்கம் கலைதலிலும் தூக்கம் கலைத்தலிலேயும்தான் எத்தனை நுட்பங்கள்?
  தோழியின் தூக்கத்தைக் கிண்டலாகக் கலைப்பவள்…, செல்லத் திட்டுக்களோடு கலைப்பவள் கண்ணனின் அறிதுயிலை 
  “கிங்கிணிவாய்ச்செய்ததாமரைப்பூப்போலே
  செங்கண்சிறுச்சிறிதேஎம்மேல்விழியாவோ?’’
  என்று சிறுகச் சிறுக மெல்ல மெல்லைக் கலைக்கிறாள். தளர் நடை நடக்கும் ஒவ்வொரு மழலையின் கால் கிண்கிணியிலும் அவள் தினமும் கண்டு பழகிய உவமையை அதற்குப் பொருத்தமாகக்கையாளுகிறாள். தாமரைக்கண் என்றால் அது முற்றும் விரிந்து மலர்ந்த கண். பாதி திறந்தும் மூடியும் இப்போதுதான் துயில் கலைகிற அரைகுறை விழிப்பு நிலைக்கு சதங்கைக்கிண்கிணியில் செப்புக்குள் பொதிந்தபடி இலேசாக மூடியும் திறந்தும் இருக்கும் தாமரையை உவமையாக்கும் அவளது உற்றுநோக்கும்  திறன் அபாரமானது.

  இலேசான விழிப்பு முழுமையான விழிப்பாகப் பரிணாமம் அடைந்த பிறகு மென்மையான உவமைக்களத்திலிருந்து ஆண்டாளின் எழுதுகோல் நகர்ந்து கொள்கிறது; அப்போது அந்தத் தருணத்தைப்படம் பிடிக்க மாரி மலை முழைஞ்சில் மன்னிக்கிடந்துறங்கும் கம்பீரமான சிங்கம் துணைக்கு வந்து சேருகிறது. அது மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு வருவது போல சீரிய சிங்காதனத்தில் கண்ணன் வந்து சேருகிறான்.நேருக்கு நேராக .எவருமே கண்டிருக்க இயலாத ஒரு காட்சியைக் கற்பனையால் நாடகமாக்கிக் கண்முன் விரிக்கிறது அந்த உவமை.

  பயம் கலந்த பதைப்பைப் பேச்சு வழக்கில் வயிற்றில் பற்றிக்கொண்டு எரியும் நெருப்பாகச் சொல்வது போல் ‘’கஞ்சன் வயிற்றில் நெருப்பென’’ நெடுமால் நிற்கிறான் என்கிறாள் ஆண்டாள்;. தமிழ் இலக்கண மரபுப்படி கம்சன் என்ற வடமொழிச்சொல் அவள் பாடலில் கஞ்சன் என்றாகிறது..குதூகலம் என்ற சொல்லமைப்பு தமிழுக்கு முரண் என்பதால் கோதுகலம் என்றாகிறது.

  பேச்சுமொழி மரபில் பாடல்கள் பல தந்தாலும் தமிழ் இலக்கண மரபிலும் ஆழங்காற்பட்டவள் ஆண்டாள் என்பதற்கான சான்றுகள் இது போல ஏராளம்., ஆய்ச்சியர் தயிர் கடையும் காட்சியில் அந்தக் குலப்பெண்கள்கழுத்தில்அணியும்அச்சுத்தாலியும், ஆமைத்தாலியுமேகாசும் பிறப்பும் கலகலப்ப என்றுகுறிக்கப்பட்டாலும் காசு,பிறப்புஆகிய வெண்பாவின்கூறுகளையும் உட்செரித்து உரியஇடத்தில்வெளிப்படுத்தும்திறன் அவளது கவி ஆளுமைக்கு ஒரு பதச்சோறு.

  விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்பது போல எதுகை மோனை சேர்க்கைக்கு ஆண்டாள் என்றே சொல்லிவிடும் அளவுக்கு வலிந்த செயற்கையான முயற்சி ஏதும் இன்றிப் பாவைப்பாடல்களில் அவை மழையாய்ப்பொழிந்து தமிழை செழிக்க வைத்திருக்கின்றன.

  தமிழின் மெய்யெழுத்துக்களில் ஞ,ண ஆகிய இரண்டு மெல்லெழுத்துக்கள் நீங்கலாக மற்ற 16 எழுத்துக்களையும் எதுகையாக்கிப் பாவைப்பாடல்களை ஆண்டாள் அமைத்திருப்பது ஒரு மாபெரும் சாதனை.

  குறிப்பாகத் தமிழின் சிறப்பெழுத்தான ழகர இடையினத்தை எதுகையாக்கும் மழைப்பாடல்
  “ஆழிமழைக்கண்ணாஒன்றும் நீகைகரவேல்
  ஆழியுள்புக்குமுகந்துகொடுஆர்த்தேறி
  ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்துப்
  பாழியந்தோளுடைப்பற்பனாபன்கையில்
  ஆழிபோல்மின்னிவலம்புரிபோல்நின்றதிர்ந்து
  தாழாதேசார்ங்கமுதைத்தசரமழைபோல்
  வாழஉலகினில்பெய்திடாய் ’’
  ‘ற’கர வல்லினத்தை எதுகையாய்க் கொண்ட
  “கற்றுக்கறவைக்கணங்கள்பலகறந்து
  செற்றார்திறலழியச்சென்றுசெருச்செய்யும்
  குற்றம்ஒன்றில்லாதகோவலர்த்தம்பொற்கொடியே!’’
  ‘ங’ கர மெல்லின எதுகையில் அமைந்த
  “வங்கக்கடல்கடைந்தமாதவனைக்கேசவனை
  திங்கள்திருமுகத்துசேயிழையார்சென்றிறைஞ்சி
  அங்கப்பறைகொண்டஆற்றைஅணிபுதுவை
  பைங்கமலத்தண்தெரியல்பட்டர்பிரான்கோதை’’
  என்று பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம்.
   “கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி’’

  “முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாடி’’
  “தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடி”
  “குள்ளக் குளிரக்குடைந்து நீராடி’’
  என்று முதலெழுத்து ஒன்றி வரும் மோனையிலும் கொழிக்கிறது ஆண்டாளின் தமிழ்.
  திருப்பாவை 30 பாடல்களில் எதுகை மோனை இல்லாத பாடல் ஒன்று கூட இல்லை என்பது மட்டுமல்ல, உள்ளடக்கத்தை இலேசாக்கி வெளிப்பூச்சுக் காட்டுகிற பொருளில்லாத வெற்றுச்சொற்களாகவோ, இடம் பொருள் ஏவலுக்குப் பொருந்தாத சொற்களாகவோ அவை இல்லை என்பதே ஆண்டாள் தமிழில் விளையாடும் அந்த எதுகை மோனைகளின் வலிமை.
  “சீறியருளாய்’’ என்பது போல சீற்றத்தையும் அருளையும் ஒன்றிணைத்து  முரண் அழகோடு தொடுக்கும் சொற்சேர்க்கைகள்,
  “வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்’’
  “குற்றம் ஒன்றில்லாத கோவலர்’’
  என மிகையும் குறைவும் இல்லாத அடைமொழிகள்.என்று இலக்கிய அழகியலின் எந்தக் கூறாக இருந்தாலும் தனித்துவத்தோடு கூடிய மொழி அவளுடையது.
  உலகப்பொதுநலன், சமுதாயப்பொதுநோக்கம்ஆகியஉள்ளடக்கச்செய்திகளிலும் விஞ்சி நிற்பவை ஆண்டாளின்கவிதைகள் .
  பாவைநோன்புநோற்பதால், கண்ணனுக்குஆட்செய்யும்சுயலாபம்தனக்குக்கிடைப்பதோடு,
  நீர்வளம்,பயிர்வளம், பால்வளம் ஆகியமூன்றும்உலகிற்குக்கிட்டவேண்டுமென்றதணியாதவேட்கையையே பாவைப்பாடல்களில்பதிவுசெய்கிறாள்ஆண்டாள்.
  “தீங்கின்றிநாடெல்லாம்திங்கள்மும்மாரிபெய்துஓங்குபெருஞ்செந்நெல்’’ விளைந்திடவும்,
  “வாங்கக்குடம்நிறைக்கும் வள்ளல்பெரும்பசுக்க’’ ளின்வழியே‘’நீங்காதசெல்வம்’’
  நிறைந்திடவும்அவாவுகிறதுஅவள்மனம்.

  மழைவேண்டி 

  “ஆழிமழைக்கண்ண’’னைப்பாடும்பொழுதும்கூட,மிகக்கவனமாகஅந்தமழை ,அழிக்கும்மழையாகஇருந்துவிடாமல்,‘ஆக்கும் ‘மழையாகவேஇருக்கவிரும்பி,
  “வாழஉலகினில்பெய்திடாய்’’
  என்றுஉலகைச்செழிக்கவைக்கும்மழையையேமனமாரவரவேற்றுவாழ்த்துப்பண்பாடுகிறாள்அவள்.

  நோன்புமுடிந்துபாற்சோறுஉண்ணும்கட்டத்திலும்கூடஅனைவருமாய்க் “கூடியிருந்துகுளிர்வதையேஅவள்விரும்புகிறாள்.
  “கூடியிருந்துகுளிர்ந்தேலோரெம்பாவாய்’’

  மிகப்பெரிய ஆய்வுக்கட்டுரைக்குரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய ஆண்டாள் தமிழில் கொழிக்கும் அழகுகளையும் அவளதுதனித்தமொழி ஆளுமைக்குமேலும்வலுச்சேர்க்கும்உலகளாவியஇந்தப்பார்வையையும்மட்டுமே பட்டியலிட்டுக்கொண்டு சென்றிருந்தாலும் கூட வைரமுத்துவின் நோக்கம் தமிழையும் அதன் கவிதாயினி ஒருவரையும் உயர்வுபடுத்துவது மட்டுமே என்று சொல்லியிருக்கலாம். மதமும்,சடங்குகளும்கடந்தபார்வையோடு மட்டுமல்லாமல் பெண் உடல்- அதன் பாலியல் என்ற ஒற்றைப்பார்வையைத் துறந்து விட்டு தமிழ் என்ற ஒரு நோக்குடன் மட்டுமே ஆண்டாளின்பாடல்களைஅணுகியிருந்தால் கூட அந்தக்கட்டுரை புதிதுபுதிதானவாயில்களைத் திறந்திருக்கும். கட்டுரையாளரின் இலக்கு அது இல்லை என்பதால் ’தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று மட்டுமே முடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

  கட்டுரையாளர்: 

  எம்.ஏ.சுசீலா

  தமிழ்ப்பேராசிரியர்- பணிநிறைவு,

  எழுத்தாளர்,மொழிபெயர்ப்பாளர்.


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை
  kattana sevai
  flipboard facebook twitter whatsapp