
file photo
இந்தியா தனது நீர் மற்றும் நில வளத்தால் பண்டைய காலத்திருந்து இன்று வரை வேளாண்குடிகள் அதிகமாக வாழும் நாடாகவே இருந்து வருகிறது. இந்தியாவின் விவசாயத்தை ஆறுகளும், குளங்களும், கன்மாய்களுமே பெருமளவு தீர்த்து வந்தன. இந்தியாவில் 20க்கும் மேற்பட்ட மூல நதிகளும் கிளை நதிகளும் பாய்ந்தோடுகின்றன. அவற்றில் முக்கியமான நதிகளில் ஒன்றான காவிரி எங்கிருந்து எங்கே பாய்கிறது.
காவிரி உற்பத்தி: மலைகளும், காடுகளும் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலையின் கடல் மட்டத்தில் இருந்து 1,276 மீட்டர் (4,186 அடி) உயரத்தில் உள்ள குடகு நாட்டின் பிரம்மகிரி மலைப் பகுதியின் தலைக் காவிரியில் தான் காவிரி உற்பத்தியாகிறது. முதலில் குடகின் மலைப் பகுதியாகவும் பிறகு, தக்கணப் பீடபூமியின் மேட்டு நில பகுதியாகவும், இறுதியில் தமிழகத்தின் சமவெளி பகுதிக்கு தெற்கு, கிழக்கு திசைகளில் ஓடி வருகிறது காவிரி.
மொழி: குடகு பிரதேசத்தில் வாழும் மக்கள் பேசும் மொழி குடகு பாஷை. நீலகிரியில் படகரின் படகு பாஷை. அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் தனி சமஸ்தானமாக இருந்து வந்த பகுதி 1956-இல் மொழிவாரி மாநிலங்களாக
பிரிக்கப்பட்ட போது கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
காவிரி: சுமார் 800 கிலோ மீட்டர் நீளமுள்ள காவேரி, கர்நாடகா மைசூர் மாண்டியா மாவட்டம் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையை அடையும்போது ஹேமாவதி, ஹேரங்கி, ஆகிய 2 கிளை ஆறுகளுடன் கலந்து கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, பின்பு ஸ்ரீரங்கப்பட்டணத்தை தாண்டியவுடன் கேரளாவின் வயநாட்டில் உருவாகும் கபினி, சொர்ணவதி ஆறு கர்நாடகாவின் திருமுக்கூடல் பகுதியில் காவிரியுடன் கலக்கிறது.
அதன் பின் கர்நாடக மாநிலம் சோமநாதபுரம் அருகே சிவசமுத்திரம் என்ற அருவியாக மாறும் காவிரி வலப்புறம் கனசுக்கி அருவியாகவும் இடப்புறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. (1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது)
பின்பு காவிரியுடன் சிம்சா மற்றும் அர்க்கவதி ஆறுகள் இணைந்து சுமார் 350 கிலோ மீட்டர் தூரம் கடந்து தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வந்து சேருகிறது. அதன் பின் ஆழமான குறுகிய பாறைகளின் வழியாக மேகதாட்டு என்னும் இடத்தை தாண்டி தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம் ஓகேனக்கலில் அருவியாக கொட்டி நேராக சேலம் மேட்டூரில் அணையில் கலந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்தவுடன் அங்கிருந்துதான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது.
பின்னர் ஈரோடு மாவட்டம் பவானி வரும் போது காவிரியுடன் பவானி ஆறு இணைகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நொய்யல் கிராமத்தில் நொய்யல் ஆறு காவிரியுடன் கலக்கிறது. நாமக்கல்லை அடுத்து கரூருக்கு அருகே அமராவதி ஆறு காவிரியுடன் சேர்ந்து திருச்சியை தாண்டி முக்கொம்பில் காவிரி - கொள்ளிடம் என இரண்டாகப் பிரிந்து இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லணையை அடைந்த பின் சிறு ஆறுகளாக பிரிந்து தஞ்சாவூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டங்கள் வழியாக 450 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து பூம்புகார் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
நீர் பரப்பு: கர்நாடகம், தமிழகம் என இரு மாநிலத்துக்கும் பொதுவான நதியாக காவிரி இருந்தாலும் கேரளா மற்றும் புதுச்சேரிக்கே அதிக பங்குள்ளது. கிட்டத்தட்ட சுமார் 800 கிலோமீட்டர் நீளத்துக்குப் பாயும் காவிரி, துணையாறு, கிளையாறு என 81 ஆயிரத்து 155 சதுர கிலோமீட்டர் ஆறு ஆற்றுப்படுகையைக் கொண்டது. தமிழகத்தில் 43 ஆயிரத்து 856 சதுர கிலோமீட்டர் தூரமும், கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 273 சதுர கிலோமீட்டர் தூரமும், கேரளத்தில் 2 ஆயிரத்து 866 சதுர கிலோமீட்டர் தூரமும், புதுச்சேரியில் 160 சதுர கிலோமீட்டர் தூரமும் ஆற்றுப்படுகையை கொண்ட காவிரி, கர்நாடக தமிழக எல்லையின் காவிரியின் நீளம் 64 கிலோமீட்டராகும்.
காவிரி பாயும் பகுதிகள்: கர்நாடகத்தில் குடகு, ஹாசன், மைசூரு, மாண்டியா, பெங்களூரு (ஊரகம்), சாம்ராஜ்நகர் மாவட்டங்கள் வழியாக, தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகவும் காவிரி பாய்கிறது.
துணை ஆறுகள்: கர்நாடகப் பகுதியில், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, லட்மண தீர்த்தம், ஆர்க்காவதி, சிம்சா, சொர்ணவதி ஆகிய துணை ஆறுகள் பாயிகின்றன. தமிழகத்தில் பாயும் துணை அறுகள் பவானி, அமராவதி, நொய்யல், திருமணிமுத்தாறு ஆகியன துணை ஆறுகள்.
காவிரிக் கரையின் முக்கிய நகரங்கள்: கர்நாடகத்தின் குசால்நகர், மைசூரு, ஸ்ரீரங்கப்பட்டணம். தமிழ்நாட்டில் மேட்டூர், ஈரோடு, கரூர், முசிறி, குளித்தலை, திருச்சிராப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார்.
அருவிகள்: கர்நாடகாவில் சிவசமுத்திர அருவியும், தமிழகத்தில் ஒகேனக்கல் அருவியும் காவிரியின் இரு அருவிகள்.
அணைகள்: மேட்டூர் அணை, கிருஷ்ணராஜ சாகர் அணை, கல்லணை மற்றும் மேலணை ஆகியன காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகளாகும். பல தடுப்பணைகளும் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன.
மேட்டூர் அணை: மேட்டூர் அணையின் நீளம் 5,300 அடி (1.62 கி.மீ.), உயரம் 176 அடி (54 மீ). மேட்டூர் அணை தோற்றுவித்த நீர்நிலையான ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் பரப்பு 155 சதுர கிமீ.
பயன்பாடு: காவிரி நீரானது பாசனத்திற்காகவும், மக்களின் அன்றாடத் தேவைகளுக்காகவும் நீர் மின்உற்பத்திக்காகவும் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காவிரியின் குறுக்கே பல அணைகளும் குடிநீர் நீரேற்று நிலையங்களும் தடுப்பணைகளும் நீர்மின்நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.
காவிரி ஆற்றின் சிவனசமுத்திர அருவியின் இடது பக்கம் 1902-இல் அமைக்கப்பட்ட நீர்மின்நிலையமே ஆசியாவின் முதல் நீர்மின்நிலையம் ஆகும்.
அணையை கட்டிய அரசர்கள்: கி.பி.1146 - 1163-ல்களில் மைசூரை ஆண்ட போசள மன்னன் மைசூரில் அணை கட்டி காவிரியை தடுத்தாகவும், காவிரியை தடுக்காமல் ஓடவிடுமாறு ராஜராஜன் ஓலை அனுப்பிய போதும், தண்ணீர் தர மறுத்த போது படையெடுத்துப்போய் போய் அணையை உடைத்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
பின்னர் 17-ஆம் நூற்றாண்டில் மைசூரை ஆண்ட தேவ மகாராயர் காவிரியின் குறுக்கே அணை கட்டி சோழ நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்தார். அப்போது இராணிமங்கம்மாள் மைசூர் அணையை உடைக்கப் படையோடு போனார். படை அங்கு போய்ச் சேருவதற்குள் பெரு மழையில் அணை உடைந்து காவிரி தானகாவே வர தாழ்நிலமான தமிழகம் செழித்தது என்று அன்றைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்லணை: கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் காட்டாறாகப் பாய்ந்துகொண்டிருந்த காவிரியை அடக்கிக் கழனிகளில் பாய்ச்சி பயிர் செய்ய கரிகாலன் கல்லனையை கட்டினார். இது உலகிலேயே தற்போதும் பயன்பாட்டிலுள்ள நான்காவது பழமையான அணை. கல்லணை மட்டுமின்றி பூம்புகார் வரை காவிரிக்குக் கரை கட்டியவர் கரிகாலன்.
காவிரியின் பலன் பெறும் மாவட்டங்கள்: காவிரி தண்ணீரை நம்பி 12 மாவட்டங்களில் 26 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன் பெற்று வருகின்றன. சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திரூவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்கள் பயனடைகின்றன. திருப்பூர், வேலூர், ராமநாதபுரம், சென்னை மாநகரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் காவிரி நீர் குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது.
நீர் பங்கீடும்... தொடர்ந்து வந்து வழக்கு பாதையும்: சுதந்திரத்திற்கு முன்பு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக சென்னை மாகாண அரசுக்கும், மைசூர் அரசுக்கும் 1892 -ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது.
"சென்னை அரசின் முன் அனுமதியின்றி மைசூர் அரசு புதிய அணை அல்லது பாசன விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.” ‘கர்நடாகம் தனது பாசனப் பரப்பை அதிகரிக்கக் கூடாது என்றும் அந்த ஒப்பந்தம் கூறுகிறது.
1911 செப்டம்பரில் மைசூர் அரசு காவிரியில் ஒரு அணை கட்ட தொடங்கியது. இதனால் இரு அரசுகளுக்கும் இடையே 1913-இல் பிரச்னை ஏற்பட்டது. பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, 18.2.1924-இல் புதிய ஒப்பந்தம் ஏற்பட்டு கர்நாடகத்தில் கிருஷ்ண ராஜ சாகர் அணையும் (44.827 டி.எம்.சி.) தமிழகத்தில் மேட்டூர் அணையும் (93.50 டி.எம்.சி.) கட்டப்பட்டது.
1924-இல் உருவான ஒப்பந்தம் 1974-இல் முடியும் நிலையில் ஒப்பந்தமே காலாவதி ஆகிவிட்டதாக கூறியதோடு, மைசூர் சமஸ்தானத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என்று கூறி தமிழகத்தை கேட்காமல் 1968-இல் காவிரியின் உபநதிகளான ஹேமாவதி, ஹாரங்கி, கபினி பகுதிகளில் அனுமதியின்றி அணைகளைக் கட்டி காவிரி தண்ணீர் முழுவதையும் அடைத்துக் கொண்டு காவிரி ஒரு பல மாநில நதி என்பதை மறந்து இயற்கை வழங்கும் நீரை தனியுடைமையாக்கிய கர்நாடாகா, மழைக் காலத்தில் உபரி வெள்ள நீரை மட்டுமே திறந்து விட்டது.
இதையடுத்து காவிரி விவகாரம் விசுவரூபம் எடுத்ததையடுத்து, தமிழக அரசு 1971-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்து. அப்போதைய பிரதமரின் தலையீட்டால் மீண்டும் தாக்கல் செய்யும் உரிமையுடன் வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டது.
மத்திய அரசால் 1972 ஜூன் மாதம் அமைக்கப்பட்ட காவிரி உண்மை அறியும் குழு 1934 முதல் 1970 வரை கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு ஓர் ஆண்டுக்குச் சராசரியாக வந்த நீர் 378.4 டி.எம்.சி என்று அறிவித்தது.
ஹேமாவதி (1979), ஹேரங்கி (1970), கபினி (1974) ஆகிய 3 நதிகளின் குறுக்கே கர்நாடகம் கட்டிய அணைகள் விதிமுறைகளின்படி கட்டப்படவில்லை. மத்திய அரசின் தமிழக அரசின் முன் இசைவையோ, கர்நாடகம் பெறவில்லை. ஆனால், தமிழகமோ மேட்டூர் அணைக்குப் பிறகு, பவானி (1956), அமராவதி (1957) போன்ற அணைகளைக் கட்டியபோது மத்திய அரசின் அனுமதியைப் பெற்றது.
மீண்டும் தமிழக அரசு நடுவர் மன்றத்தை அமைக்கக் கோரி 29.05.75-இல் வலியுறுத்தியது. 1989-இல் தமிழக அனைத்துக் கட்சி தீர்மானம் கொண்டுவந்தது. 1990-இல் மீண்டும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4.5.1990-இல் நடுவர்மன்றம் அமைப்பது பற்றிய அறிவிப்பை ஒரு மாதத்துக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து 02.06.1990-ல் நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. காவிரி இரு மாநிலங்களுக்கு இடையிலான ஆறு என்பதை ஏற்றுக்கொண்டுதான் காவிரி நடுவர் மன்றமே 1990 ஜூன் 2-ஆம் தேதி அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணையானது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
நடுவர்மன்றம் தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 205 டி.எம்.சி. நீரைக் கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்ற இடைக்காலத் தீர்ப்பை 21.3.1991-ல் அளித்தது. தமிழகத்துக்கு முதலில் தண்ணீரைத் திறந்து விட்ட பிறகே கர்நாடகம் தனது அணைகளில் நீரைத் தேக்க வேண்டும் என இடைக்காலத் தீர்ப்பில் வலியுறுத்தப்பட்டதைக் கர்நாடகம் கண்டு கொள்ளவே இல்லை.
தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 டிசம்பர் 11 அன்று அரசிதழில் வெளியிடப்பட்டது. இதற்கு எதிராக கர்நாடகத்தில் கட்டுக்கடங்காத வன்முறை வெடித்தது. தமிழர்களுக்கு எதிராகக் கொலைகளும் கொள்ளையும் தீவைப்பும் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் அகதிகளாக வெளியேறித் தமிழகம் வந்து சேர்ந்தன. கிட்டத்தட்ட ஒரு மாத காலம் தமிழ்ப் பிள்ளைகள் பயிலும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டது.
இடைக்காலத் தீர்ப்பு வந்தபோது கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதிப்பு அதிகரித்தது மட்டுமல்லாமல், எப்போதெல்லாம் இப்பிரச்சனை வெடிக்கிறதோ அப்போதெல்லாம் கர்நாடகாவில் வாழும் தமிழர்கள் அச்சமுறும் வகையில் நிகழ்வுகள் அங்கு அரங்கேறி வந்துள்ளன.
1991-இல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட காலக்கட்டத்தில் 11.2 லட்சம் ஏக்கர் அளவிற்கு இருந்த கர்நாடக பாசனப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கப்பட்டு தற்போது 25 இலட்சம் ஏக்கருக்கு மேலும் நன்செய், புன்செய் பாசனத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
1992, 1993, 1994 ஆண்டுகளில் போதிய மழை இருந்ததால், பெரிதாக பிரச்னை எதுவும் எழவில்லை. 1995-இல் பருவமழை பொய்த்ததால் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று கர்நாடகம் மறுத்துவிட்டது.
காவிரி நடுவர் நீதிமன்றத்தில் இறுதித்தீர்ப்பு 2007-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வழங்கப்பட்டது. இதில் இறுதித் தீர்ப்பின்படி சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் கடலில் கலப்பதற்கும் 14 டி.எம்.சி ஒதுக்கியது போக, தமிழகத்துக்கு 419 டிஎம்சி, கர்நாடகத்துக்கு 270 டி.எம்.சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி ஒதுக்கப்பெற்றது.
தமிழகத்திற்கு உரிய பங்கான 419 டிஎம்சி என்பதை மத்திய அரசு அதன் அதிகாரபூர்வ இதழில் (கெசட்) வெளியிட வேண்டி விவசாயிகள் மிகப்பெரிய போராட்டம் நடந்தினர். உச்சநீதிமன்றத்தின் இறுதிக் கெடு விதித்து 6 ஆண்டுகள் கழித்து, பிப்ரவரி 19-ஆம் தேதி 2013-இல் மத்திய அரசு வெளியிட்டது. கெசட்டில் வெளியான நாள் முதல் இந்தத் தீர்ப்பு நடைமுறைக்கு வருகிறது என்று கூறப்பட்டாலும் தமிழகத்துக்கு உரிய பங்கில் தமிழ்நாட்டுக்கு கிடைப்பதுபோக, கர்நாடகம் திறந்துவிட வேண்டிய நீரின் அளவு 192 டி.எம்.சி.யாக குறைந்துபோனது. அதுவும் கிடைக்காமல் தமிழக விவசாயிகள் தவித்தனர். காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீர் மட்டும் வரவில்லை.
1956-இல் இந்திய நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட “ஆற்று வாரியம்” சட்டத்தின் படியும், 1965 சர்வதேச நதிநீர் பங்கீடு சட்டத்தின்படியும் தண்ணீர் தர மறுப்பது குற்றம் என்பது யாருக்கும் உரைக்க வில்லை.
இதையடுத்து 2016 செப்டம்பர் 20-இல் மத்திய அரசு காவிரி மேலாண்மைக் குழுவை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடைசியாக இப்போது தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என்றே கூறியது கர்நாடகம்.
நடுவர் மன்றத் தீர்ப்பில் 192 டி.எம்.சி. வழங்க வேண்டுமெனக் கூறியிருந்த நிலையில், 16.02.2018 அன்று காவிரி நீரில் இருந்து தமிழகத்திற்கு வழங்கப்படும் நீரில் 14.75 டி.எம்.சி.யை குறைத்து 177.25 டி.எம்.சி.யை வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவிரி நதி நீர் விவகாரத்தில் நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து சம்பந்தப்பட்ட நான்கு மாநிலங்களும் தொடுத்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய சிறப்பு அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. இந்த தீர்ப்பு அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நடுவர் மன்றத் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 270 டி.எம்.சி தண்ணீரோடு, இந்த 14.75 டி.எம்.சி தண்ணீரை கூடுதலாக வழங்க வேண்டுமெனக் கூறினர். தீர்ப்பில் புதுவை, கேரளாவுக்கான ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
காவிரி டெல்டாவில் புதுச்சேரியின் காரைக்கால் பகுதி உள்ளதால் காவிரி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் நேரடியாக பாய்கிறது. நீர் பங்கீடு என்று வரும்போது கேரள மாநிலமும் உரிமை கோர காரணம் காவிரியின் துணை ஆறாகிய கபினி கேரளாவில் உற்பத்தியாவதும், கபினி மற்றும் அதன் துணை ஆறுகளின் நீர் பிடிப்பு பகுதிகளும் அமராவதி மற்றும் பவானியின் நீர் பிடிப்பு பகுதிகளும் கேரளாவில் இருப்பதே காரணமாக உள்ளன.
ஒரு நதி பிறந்து வளர்ந்து தவழ்ந்து நடந்து ஓடி கடலில் கழிமுகத்தில் சங்கமிக்கிற வரை அவைகளுக்கு நாடுகளோ, மாநிலங்களோ எல்லைகள் கிடையாது. மனிதர்கள் எல்லைகள் வகுத்து பிரித்துக் கொண்டாலும் இயற்கை நதிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை நடந்த சம்பவங்களும், நடக்கும் சம்பவங்களுமே சாட்சியாக இருந்து வரும் நிலையில், கர்நாடகம் கடுமையாக தண்ணீர் தர முடியாது என்று மறுத்துப் பேசுவதற்கு ஒரே காரணம் ஆதாயமளிக்கும் அரசியல். வாக்குகள் பெற்றுத்தரும் ஒரு அட்சய பாத்திரமாக துருப்புச் சீட்டாக அங்கே காவிரி ஆறு இருக்கிறது. மேலும் அங்கு அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் தேசிய கட்சிகள் தமிழகத்தில் தங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்ற அலட்சியப் போக்கு.
ஒப்பந்தத்தை மீறி காவிரி ஆற்றுப் படுகையில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் அதிகப்படுத்தப்பட்டு விவசாயம் செய்தும் வரும் கர்நாடகா, தமிழகத்தில் விவசாயம் செய்வதை செய்யக்கூடாத செயலாக கருதப்பட்டு பலமடங்கு விவசாய நிலங்கள் காணாமல் பறிபோயுள்ளது. வேளாண் விளைபொருட்கள் வர்த்தக மஃபியா, கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் வியாபாரிகள் கூறு போட்டு வருகின்றனர்.
தமிழகத்தை நீரற்ற நிலமாக்கி ஆற்றுமனல்கள் அள்ளவும், ஸ்டெர்லைட், மீத்தேன், அனுமின் நிலையம் திட்டம் போன்றவற்றை கொண்டு வந்ததற்கான நீண்டகால சதித் திட்டமாக இருக்கலாம் என்றும் தமிழகத்தில் போடப்படும் லட்சம் கோடி முதலீடுகள் அனைத்தும் பெருநிறுவனங்களுக்கே ஒதுக்கப்படுவது சந்தேகிக்கப்படுகிறது.
இன்று தமிழகத்தில் அள்ளப்படும் மணல் அண்டை மாநிலங்களுக்கு பெரும் அளவில் அனுப்பி வைக்கப்படுகிறது. அதற்கு விவசாய நிலங்கள் பறிக்கப்படுகின்றன. விவசாயிகள் நரகம் எனும் நகரம் நோக்கி நகர்ந்து வருகின்றனர்.தமிழகம் அண்டை தேசத்திலிருந்து மணலை இறக்குமதி செய்யப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகா அணைகளுக்கு கீழே உள்ள கர்நாடக பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏரிகளை ஆழப்படுத்தி அணைகளில் நிரம்பி வழியும் நீரையும் அதில் தேக்கி வைப்பதன் மூலம் தமிழகத்திற்கு நீர் கிடைக்காமல் செய்ய முயவதுடன், தமிழக விவசாயிகளை வாழ்வை நசுக்கும் விதமாக மேகதாட்டு என்ற இடத்தில் கர்நாடக மீண்ட காலமாக தடுப்பு அணைகள் கட்ட முயற்சித்து வருகிறது. இதுகுறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் இன்றைய கர்நாடக முதல்வர் குமாரசாமி சமீபத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்னை இன்று அரசியல் ஆக்கப்பட்டதுதான் வேதனை தரும் விஷயமாக உள்ளது.
ஆற்றின் நீர் பிடிப்பு பகுதி அம்மாநிலத்தில் இருப்பதாலேயே அங்கு தேங்கும் நீர் அனைத்தும் ஒருவருக்கே சொந்தமாகிவிடாது. அந்த நீர் மொத்தமும் காவிரிப் பாசனப் பரப்பில் இருக்கும் அனைவருக்கும் பொதுவானது. ஆனால் கர்நாடக அணைகளில் தேக்கப்படும் தண்ணீரில் தமிழகத்துக்கும் பங்குண்டு என்பதை இன்று வரை மறுத்து வருகிறது கர்நாடகம்.
காவிரி பிரச்சனை இன்று நேற்றல்ல அன்றைய காலம்தொட்டே இருந்து வந்துள்ளது. அரபிக்கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை தான் தமிழகத்தில் மழையில்லாத, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் காவிரி நீரை நம்பி காலங்காலமாக பயிர்செய்யப்படும் குறுவை சம்பா சாகுபடிக்கு தேவையான கர்நாடகம் விட வேண்டிய நீரின் அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
காவேரி கடந்த பத்தாண்டுகளாக வேளாண்மைக்கான கண்களை திறக்காத நிலையில், வாய்க்காலில் இருந்து நீர் பாய்ச்சும் முறையே காவேரிக் கரைகளில் காணாமல் போகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து காவேரிக் கரையெங்கும் ஆழ் துளைக் கிணறுகள் லட்சக்கணக்கில் அமைத்து மின்சார விநியோகத்தை நம்பித் தான் வேளாண்மை நடைபெற்று வருகிறது. இதனால் மோட்டார்களின் வழியே நிலத்தடி நீரை எடுக்கப்படுவதால், நிலத்தடி நீர் இப்போது அதளபாதாளத்துக்குச் சென்று பூமி வறண்டு கிடக்கிறது.
காவிரி டெல்டா பாசனப்பகுதியின் மூலமாக உற்பத்தியாகும் மொத்த அரிசியில் பாதிக்கு மேல் தமிழகத்து வயிறுகளை நிரப்பி வந்த டெல்டா பகுதி அரிசிகளின் இடத்தை கர்நாடகா பொன்னி, ஆந்திராவின் பாபட்லா பொன்னி அரிசியும், பஞ்சாப், அரியானா பாசுமதி அரிசியும் நிரப்பி வருகிறது. ஒரு கட்டத்தில் அரிசியையும் தர மாட்டோம் என்று அவர்கள் கைவிரித்தால் சீனாவின் பிளாஸ்டிக் அரிசி. அதுவும் கிடைக்காவிட்டால் அங்கும் கூட்டு கொள்ளைக்கான கொள்கை வகுத்து திட்டமிடுவார்களோ என்னவோ..?
இந்தியாவின் நீர்நிலைகள் உரிய முறையில் பராமரிக்கப்பட்டு, தேவைக்கு ஏற்ப பகிர்ந்து கொள்ளப்பட்டால் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றுவிடும் என்றார் சர் தாமஸ் ஆர்தர் காட்டன்.
இதனை உணர்ந்த அன்றைய தமிழக முதல்வரும், எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவரும் "கருப்பு காந்தி" காமராஜர் தமிழத்தின் வளத்தை விவசாயத்தை ஆறுகளும், குளங்களும், கன்மாய்களுமே பெருமளவு தீர்த்து வருவதை உணர்ந்து ஆற்றுப்படுகைகளையும், குளங்களையும், கன்மாய்களையும் பெருமளவில் சீரமைத்தும், செப்பனிட்டு விவசாயிகளின் தாகங்களை தீர்த்து வைத்தார். அவருக்கு பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள் யாரும் காமராஜர் அளவுக்கு நீர்வள ஆதாரங்களை பெருக்குவதற்கான
நடவடிக்கைகளில் ஈடுபடாததன் விளைவால் நாம் இன்று வரை கர்நாடகாவிடம் கையேந்து நிலை ஏற்பட்டுள்ளது என்பதுதான் அனைவரின் அறிவுக்கும் எட்டிய உண்மையாக இருந்து வருகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
நடப்பாண்டில் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில், கடந்த மூன்று வாரங்களாக கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம், வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி அங்கிருந்து உபரிநீர் அனைத்தும் காவிரியில் தான் திறந்து விடவேண்டிய நிலை கார்நாடகத்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரும்போது, நம்மாலும் அந்த தண்ணீரை தேக்கி வைக்க முடியாது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டே ஆக வேண்டும் என்ற நிலையில், விரைந்து வந்த உபரிநீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதையடுத்து, கடந்த 17-ஆம் தேதி இரவு அணையின் நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, ஜூலை 19-இல் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்நிலையில், திங்கள்கிழமை பகல் 12 மணிக்கு மேட்டூர் அணையின் 85 ஆண்டுகால வரலாற்றில் 39-ஆவது முறையாக நிரம்பியது. அணையின் முழு கொள்ளளவான 120 அடியாக நீர்மட்டம் உயர்ந்ததால் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு நொடிக்கு நொடிக்கு 80 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் வந்த நீர் அப்படியே மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருவதால், திருச்சி மண்டலத்தில் 2 ஆயிரத்து 352 ஏரி, குளங்கள் உள்ளன. இதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும்
அதிகபட்சமாக 280 ஏரிகள் உள்ளன. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரில் 1.5 டி.எம்.சி நீரைக்கொண்டு வீராணம் ஏரி நிரப்பப்படும். திருச்சி மண்டலத்தில் உள்ள 694 ஏரிகளில் 4.5 டி.எம்.சி நீர் தேக்கி வைக்கப்படும். இதற்காக ஏரி, குளங்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேட்டூர் அணையில் அப்படியே திறந்துவிடப்படும் தண்ணீரின் ஒரு பகுதி கடலில் கலக்கும் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் நீர் சுமார் 20 மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்றன. 12 மாவட்டங்கள் பாசன வசதிகள் பெறுகின்றன.
ஆனால், நீர் வீணாக கடலில் கலப்பதற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இனிவரும் காலங்களிலாவது தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீரில் பாதி அளவு, டெல்டா பாசனத்துக்கு போக, மீதி தண்ணீர் கடலூக்குதான் போய் சேருகிறது. இந்த தண்ணீரை பயன்படுத்த நாம் என்ன செய்து இருக்கிறோம்? என்பது கேள்வி. கர்நாடக நான்கு அணைகளில் தண்ணீரை தேக்குகிறது. அது போதாது என்று அடுத்ததாக காவிரியில் மேகதாட்டு என்ற இடத்தில் மிகப்பெரிய அணையை கட்ட தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகமோ இன்னும் பழைய நிலையிலே இருந்து வருகிறது.
இன்று திருமலை சென்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி, நாடு சுபிட்சமாக இருக்கவும், அனைத்து வளமும் கிடைக்கவும் ஏழுமலையானை வேண்டிக்கொண்டதாகவும், கர்நாடகத்தில் தற்போது பெய்த மழையால் அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. அதன் மூலம் தமிழக விவசாயிகள் வளம்பெற காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் கடலில் கலந்து வீணாவதை தடுப்பதற்காகத்தான் மேகதாது அணை திட்டம் உருவாக்கப்பட்டது. மேகதாது அணை கட்டப்பட்டால் வீணாகும் தண்ணீர் அதில் தேக்கப்பட்டு தமிழக விவசாயிகளுக்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும்.
இரு மாநில அரசும் பேச்சுவார்த்தை மூலமே காவிரி நதிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும். நீதிமன்றம் மூலமோ சட்ட நடவடிக்கை மூலமோ ஒன்றும் செய்ய இயலாது.
இந்த பிரச்னையில் தமிழக அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர். அவர்களுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என ஏழுமலையானை நான் வேண்டிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழகம் காவிரியில் புதிதாக எந்த அணையையும் கட்ட நடவடிக்கை எடுக்க வில்லை. அல்லது தடுப்பு அணைகளாவது கட்டலாம். அதைக்கூட செய்யவில்லை என்பது தான் வேதனையாக உள்ளது. இதுபோன்ற நிலையில் என்ன செய்ய வேண்டும்? என்று தமிழக அரசு திட்டமிடல் அவசியம். ஏனென்றால், இந்த காவிரி நீருக்காகத்தான் நாம் எத்தனை போராட்டங்கள், எத்தனை உயிர்களை இழந்திருக்கிறோம். இன்று இறைவன் கருணையால் பெய்த பெருமழை, நமக்கா? கர்நாடகாவுக்கா? என்ற கேள்வி எழுப்பினாலும் இறைவன் பேதமில்லாமல் இருவருக்குமே என்ற நிலையில் தண்ணீரை அளித்துள்ளான்.
கர்நாடகத்திடம் கையேந்தும் நமது அரசும் நாமும் நமது நீர் நிலைகள் மீது எவ்வளவு அக்கறை வைத்திருக்கிறோம்? இந்தியாவின் மேம்பாடு என்பது அதன் ஆறுகளை முறையாக பயன்படுத்திக் கொள்வதில்தான் இருக்கிறது.
விவசாய உற்பத்தியை அதிகப்படுத்தாமல் பிற துறைகளில் வளர்ச்சி காண்பது பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்திவிடும் என்பதை நாம் உணராவிட்டாலும், கர்நாடகம் விரும்பாவிட்டாலும், அணைய திறந்தே விட வேண்டிய நிலையை ஏற்படுத்திட்டான இறைவன்.
மனிதர்கள் எல்லைகள் வகுத்து பிரித்துக் கொண்டாலும் இயற்கை நதிகளை யாராலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை உணராத கர்நாடக அரசிடம் ஒவ்வொரு ஆண்டும் காத்துகிடக்கும் நாம், இதுபோன்ற இயற்கை தாயின் கருணையால் கிடைத்த பெருமழையின் உபரி நீர், உப்பு நீராக மாறி விடாமல் காக்க வேண்டியதும் தமிழக அரசின் கடமை தானே! - ஆர்.வெங்கடேசன்