Enable Javscript for better performance
karaikudi kamban vizha - a trial...|காரைக்குடி கம்பன் விழா - ஒரு முன்னோட்டம்- Dinamani

சுடச்சுட

  

  காரைக்குடி கம்பன் விழா - ஒரு முன்னோட்டம்

  By எம். ஏ.சுசீலா  |   Published on : 27th March 2018 02:43 PM  |   அ+அ அ-   |    |  

  kamaban_image_used_in_kamban

   

  கம்பன் திரு நாள் 
  மார்ச் 28-31 காரைக்குடி

  வளமான நிலங்கள் இல்லாத வறட்சிமண் என்றாலும் வற்றாத அன்பை கபடமற்ற பிரியத்தை மழையெனப் பொழியும் மண் செட்டிநாட்டுமண்... சைவமும் தமிழும் தழைத்தோங்கி வளர்ந்த அந்தக் காரைக்குடி மண் தான் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்பதில் இன்று வரை தமிழகத்துக்கே முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது, இது, உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை.

  முதன் முதலாக 1939 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காரைக்குடி கம்பன் விழா என்னும் இலக்கியத் திருவிழா, தொடர்ச்சியாக எண்பது ஆண்டுகளை நிறைவு செய்து தன் முத்து விழாவைக்காணும் மைல்கல்லான ஆண்டு இது. 

  கம்பன் விழா அழைப்பிதழ்...

  "கம்பநாடன் கவியிற்போல் கற்றோர்க்கிதயம்’’ வேறெதிலும் கனிவதில்லை என்பதாலேயே புகழ்க்கம்பன் பிறந்த தமிழ்நாடு என்றும் ‘’கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும்..’’ என்றும் கம்பனின் புகழை வானளவு உயர்த்துகிறான் பாரதி. அத்தகைய மகா கவியான கம்பன் - பங்குனி அத்தத் திருநாளன்று, திருவெண்ணெய் நல்லூரில் தன் காப்பியமான இராம காதையை அரங்கேற்றியதை நினைவு கூரும் வகையில் - ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மகம் தொடங்கி பூரம், உத்தரம், அத்தம் வரை தொடர்ச்சியாக முதல் மூன்று நாட்கள்  காரைக்குடியிலும், இறுதி நாளன்று நாட்டரசன் கோட்டை கம்பன் சமாதியிலும் நிகழும் வகையில் வடிவமைக்கப்பட்டு அதே பாரம்பரியம் இப்போது வரை தொடர்ந்து பின்பற்றப்பட்டும் வருகிறது. கம்பனடிப்பொடியின் பாசறையில் பயின்று வளர்ந்த அணுக்கத் தொண்டரும் தீவிர கம்பன் பக்தருமான தற்போதைய காரைக்குடி கம்பன் கழகச்செயலர் திரு பழ பழனியப்பன் அவர்கள், திரு சா கணேசன் அவர்கள் கட்டிக்காத்த அதே தரத்தோடு சமகால கம்பன் விழாக்களை அமைக்க, தீவிர அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறார். 

  கவிச்சக்கரவர்த்தி கம்பனின் புகழ் பரப்புவதொன்றையே தன் வாழ்நாள் இலக்காகக்கொண்டு கம்பனின் மேல் கொண்ட தீராக்காதலால் தன் பெயரையே கம்பன் அடிப்பொடி என்று மாற்றிக்கொண்டவர்
  (விடுதலைப் போராட்டத்தின்போது சட்டை அணிவதைத் துறந்து சட்டை அணியாத சா கணேசன் என்று பெயர் பெற்ற) திரு சா கணேசன் அவர்கள்.  
  கம்பன்அடிப்பொடி அவர்கள் முன்னெடுத்து நடத்திய அந்தக் கம்பன் விழாக்காலங்கள் மேடைத் தமிழின் பொற்காலங்கள். கொஞ்சமும் நீர்த்துப் போகாத செறிவான - ஆழமான -விரிவான சொற்பொழிவை நயத்தக்க நாகரிகத்தோடு ஆற்றும் ஜாம்பவான்களால்  மட்டுமே எழிலூட்டப்பட்ட தமிழ் இலக்கியஅரங்கு, கம்பன்விழா அரங்கமும் அதன் மேடைகளும்..! உரையின் தலைப்பை விட்டு இம்மியும் பிசகாத பேச்சாளர்களுக்கு மட்டுமே இடமளிக்கும் கறாரான கம்பன் அரங்கம் அது. எத்தனை எத்தனையோ மேதைகளும், முன்னோடித் தலைவர்களும், தமிழ்அறிஞர்களும் கம்பன் பால் தாங்கள்கொண்ட ஆழங்காற்பட்ட புலமையால்  அந்தமேடைகளை அலங்கரித்திருக்கிறார்கள்

  கம்பன் விழாவின் ஒரே இலக்கு கம்பனின் தமிழ் முன்னிறுத்தப்பட வேண்டும் என்பது மட்டுமே. புலவர் என்றும் அரசியல் தலைவர் என்றும் சமயவாதி என்றும் பிறசமயத்தவர் என்றும் எந்தபேதமும் பாராட்டாதமேடை அது.  கம்யூனிஸ்ட் கட்சியின் பெருந்தலைவர் ப ஜீவானந்தம், சிலம்புச்செல்வர் ம பொ சிவஞானம், வாகீசகலாநிதி கி வா ஜகந்நாதன், தமிழ்க்கடல் இராயசொக்கலிங்கனார், குன்றக்குடி அடிகளார் [முன்னவர்], பன்மொழி அறிஞர் தெ பொ மீனாட்சி சுந்தரனார் [ம கா பல்கலைக்கழகத் துணைவேந்தராய் இருந்தவர்], மார்க்சிய அறிஞரும் கம்பனில் பெரும் தேர்ச்சி கொண்டவருமான எஸ்ஆர்கே [எஸ்ராமகிருஷ்ணன் - மதுரையில்  ஆங்கிலப் பேராசிரியராக இருந்தவர்;   கம்பனும் மில்டனும், கம்பனும் ஷேக்ஸ்பியரும், அரசியர் மூவர், தம்பியர் இருவர் என்று கம்பனைப் பற்றிய பலநூல்கள் படைத்தவர்], தூத்துக்குடி ஆங்கிலப் பேராசிரியர் அ சீனிவாசராகவன், பெரும் பேராசிரியர் அ ச ஞானசம்பந்தம் அவர்கள் [இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் என்ற அரிய கம்பன் சார்ந்த நூலின் ஆசிரியர்; மகாபல்கலைத் தமிழ்த்துறையின் தலைமைப் பொறுப்பேற்றவர்], திருச்சி பேராசிரியர்கள் இராதாகிருஷ்ணன், சத்தியசீலன், சென்னை பேராசிரியர் ஆரா இந்திரா, கோவைப்பேராசிரியர் சிவகாமசுந்தரி, புலவர் கீரன், நீதியரசர்கள் எஸ் மகராஜன், மு மு இஸ்மாயில், கவிக்கோ அப்துல்ரஹ்மான் என்று தங்கள் சொல்வளத்தால் நாநயத்தால் கருத்துச்செறிவால் கம்பன் விழா மேடைகளைமெருகூட்டாத தமிழ்அறிஞர் எவரும் அன்று இல்லை...


  காரைக்குடி கம்பன் விழா நிகழ்வுகளில் பெரியோர் - சிறியோர், பதவியில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதம் பேச்சாளர்களுக்குள் என்றுமே பாராட்டப்பட்டதில்லை.  கருத்தை ஒட்டியும் காலக்கணக்கை ஒட்டியும் பேச்சு அமையாவிட்டால் மேடையிலேயே அவர்கள் நிறுத்தப்பட்டு, தடுக்கப்பட்ட சம்பவங்களும் கூட இங்கே அரங்கேறி இருக்கின்றன. முற்பகல் நிகழ்வு காலை 9. 30க்கு என்றால் கம்பனடிப்பொடி அவர்களின் கணீர்க்குரல் ‘’கம்பன் வாழ்க! கம்பன் புகழ் வாழ்க! கன்னித்தமிழ் வாழ்க!’’

  என்ற முழக்கத்தை 9. 15க்கே தொடங்கிவிடும். பார்வையாளர்களும் அவ்வாறே எதிர் முழக்கமிட, அடுத்தமுழக்கம் 5மணித்துளி முன்பு. இறுதியாக மிகத்துல்லியமாக 9 30.க்கு மேடையில் தலைமை ஏற்பவரே வராமல் போனாலும், எவருக்காகவும் காத்திராமல் விழாநிகழ்ச்சிகள் தொடங்கி விடும். [நாம் அதை வைத்து கடிகாரத்தைக்கூட சரி செய்து கொண்டு விடலாம். அத்தனை கறாரான நேரக்கணக்கு].. 

  கம்பர்...

  கம்ப காவியத்தை எரிக்கத் துணிந்த மாற்றுத்தரப்புக்கும் கூடத் தமிழ் என்னும் தகுதிக்காகவே இடமளித்த காரைக்குடி கம்பன்கழகத்தினர், கலைஞர் கருணாநிதி அவர்கள் முதல்வராய் இருந்த காலகட்டத்தில் ஒருமுறை கவியரங்கத் தலைமைக்கு  அவரை அழைத்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் வர இயலாமல் அவர் சற்று தாமதமாக வந்து சேர முதல்வர் என்றும் பாராமல், அவருக்காகக் காத்திராமல் விழா தொடங்கப்பட்டதும் திரு கருணாநிதி அவர்களும் அதை இலகுவாக ஏற்றுக்கொண்டதும் தமிழ் இலக்கிய மேடையின் தகுதிக்கு அளிக்கப்பட்ட முன்னுதாரணமான கௌரவங்கள்.

  காரைக்குடி கம்பன் விழாவோடு தொடர்புகொண்ட எம்ஜிஆர் குறித்த ஒரு சுவையான சம்பவமும் உண்டு. 1967ஆம் ஆண்டு! அப்போது தான் எம் ஆர் ராதாவோடான துப்பாக்கிச்சூடு சம்பவத்திலிருந்து மீண்டிருந்த எம்ஜிஆர்., தற்செயலாகக் காரைக்குடிக்கு வருகை தந்திருந்தார். சா கணேசன் அவர்களின் அழைப்பை ஏற்று அவர் விழாவுக்கு வந்துவிட, பள்ளி முகப்பிலிருந்து கூட்டம் பாய்ந்துசூழ்ந்தபடி அவரை நெருக்கி அழுத்தியது... ஒருவழியாக விழா நிகழும் இடத்துக்கு வந்து சேர்ந்தார் எம்ஜிஆர். அவரைக்காண அலைமோதிய மக்கள் திரளை சமாளிக்க வழிதெரியாமல் தங்கள் கொள்கையைக்கூடச் சற்றே தளர்த்தியபடி ஒரே ஒரு நிமிடம் மேடையில் ஏறி மக்களுக்குக்காட்சி அளிக்குமாறு கம்பன்கழகத்தார் அவரை வேண்டிக் கேட்கும்நிலை; எம் ஜி ஆரோ, அந்தத் தமிழ்மேடையில் ஏறும்தகுதியும், புலமையும் தனக்கில்லை என்று மறுத்தபடி மேடைக்குக் கீழுள்ள தரைப்பகுதியில் மட்டுமே இரு முறை குறுநடை போட்டு  மக்களைப் பார்த்துவிட்டுத் தன் ரசிகர் கூட்டத்தால் - தன்புகழ் வெளிச்சத்தால் அந்தஇலக்கிய அரங்கத்துக்கு எந்தக் குறைவும் ஏற்படலாகாது என்று  விரைவாக அங்கிருந்து விலகிச் சென்றார். அதற்கு எம்ஜிஆரின் பெருந்தன்மை மட்டும் காரணம் அல்ல; அந்த அளவுக்குத் தன்னைத் தகுதிப்படுத்தி உயர்ந்த தளத்தில் வைத்துக்கொண்டிருந்த அந்த அரங்கின் தனித் தன்மையே அவரிடமிருந்தும் அந்தப்பெருந்தன்மையை வருவித்திருக்கிறது. 

  சோழனோடுஏற்பட்டபிணக்கில்

  “மன்னவனும்   நீயோ?  வளநாடும்   நின்னதோ?
  உன்னையறிந்  தோதமிழை  ஓதினேன்? – என்னை
  விரைந்தேற்றுக்  கொள்ளாத  வேந்துண்டோ;  உண்டோ
  குரங்கேற்றுக்  கொள்ளாத  கொம்பு!’’
  என்று புலமைச் செருக்கோடு பாடிச்சென்ற கம்பனின் கவிப்பாரம்பரியத்தை மட்டுமன்றி அவனது தன்மதிப்பைக் காப்பதையும்  தங்கள் கடமையாய்க்  கைக்கொண்ட சான்றோர் நடத்திய விழாஅது என்பதாலேயே அங்கே அரசியல்வாதிகள் துதிபாடப்படாமல் - அதே அரசியல்வாதிகள் மதிப்போடு அணுகும் அரங்காக அந்தவிழாக்கள் அமைந்தன என்பதை இந்தக்காலச் சூழலில் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 

  ‘’ஒட்டிய சமயத்து உறுபொருள்வாதிகள்
  பட்டி மண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்;
  பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
  செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்’’

  என்று பட்டிமண்டபம் என்னும் சொல்லை முதலில் ஆளுகிறது தமிழின் முதல்காப்பியமான சிலம்பு. இரட்டைக்காப்பியங்களின் பின்புலமாக அமைந்த குறிப்பிட்ட காலச் சூழலில் பட்டிமண்டபம் என்பது ஒன்றுக்கொன்று மாறுபட்ட இருசமயங்கள் - குறிப்பாக சமணபௌத்த சமயங்கள், சற்றுப்பிற்பட்ட காலத்தில் சைவ வைணவ சமயங்கள்- தங்கள் கோட்பாடுகளை தருக்கங்களை முன்வைத்து வாதிடும் மேடையாகவே அது இருந்திருக்கிறது.
  அப்போதும் கூட நம்கருத்துக்கு ஒத்துவராதவரோடு - அதை உடன்படாதவர்களோடு ’சீற்றமோ பூசலோ கைக்கொள்ளாமல் வாதிடுக’ 
  பற்றாமாக்கள் தம்முடன்ஆயினும்
  செற்றமும் கலாமுஞ் செய்யாது அகலுமின்  
  என்றபடி மேடைநாகரிகத்தையும் அது கூடவே கற்றுத்தருகிறது.

  தமிழக அரங்குகளைப் பொறுத்தவரை பட்டிமண்டபம் என்னும் வாதப்போரை  இலக்கியமேடைகளில் முதன்முதலாக அறிமுகம் செய்து, காலப்போக்கில் அது பரவலாகப் பல இடங்களில் நிலைபெற அடியெடுத்துக் கொடுத்ததும் கூட காரைக்குடி கம்பன்விழாக்களே. 

  பட்டிமண்டபம் என்றபெயரில் இலக்கியத்தையும் மனிதவாழ்வியலையும் கொச்சைப்படுத்தியபடி நடந்தேறும் அருவருப்பும் ஆபாசமும் மலிந்த பல மேடைகள் உண்மையான தமிழ் ஆர்வலர்களை வெட்கித் தலைகுனிய வைத்துக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில் ஐஎஸ்ஐ முத்திரை வழங்கும் அளவுக்கு மிகத்தரமான பட்டிமண்டபங்களை நடத்திக் காட்டியிருக்கிறது காரைக்குடிகம்பன்விழா. துணுக்குத் தோரணங்களுக்கோ, ’கிச்சுகிச்சு’ மூட்டும் மூன்றாந்தரமான நகைச்சுவைக்கோ, சரக்கில்லாமல் பூசுற்றுவதற்கோ அங்கே இடமோ அனுமதியோ என்றுமே வழங்கப்பட்டதில்லை. 10 மணித்துளி என்றாலும் செறிவான அடர்த்தியான கருத்துக்களுக்கு மட்டுமே இடம் என்ற தெளிவான இலக்கும் வரையறையும் அமைப்பாளர்களால் வகுக்கப்பட்டிருக்க,, அந்த எல்லைக்கோட்டைத் தாண்டாமல் அந்த அரங்குக்குள் வட்டாடவல்ல பேச்சாளர்களே அழைக்கப்பட்டார்கள். அவர்களால் விழாவும் விழாவின் தரத்தால்அவர்கள் புகழும் உயர்ந்ததற்கான அடிப்படை அதுவே.


  பட்டிமண்டபத்தின் அடுத்த பரிணாமப்படி நிலையான வழக்காடுமன்றம், சுழலும் சொற்போர் போன்ற இன்றைய மேடைநாடகங்களுக்குக் கால்கோள் அமைத்துத்தந்ததும் காரைக்குடி கம்பன்விழாவே. பட்டிமண்டபத்தில் தீர்ப்பு சொல்லப்பட்ட மறுநாள் அல்லது அடுத்த அரங்கில் அது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும் “மேல்முறையீட்டுஅரங்கம்’’என்ற ஒன்றைப் புதுமையாக அறிமுகம் செய்து இலக்கிய ஆர்வலர்களை வியப்பில் ஆழ்த்தினார் கம்பன்அடிப்பொடி சா கணேசன் அவர்கள். பெரும்பாலும் நீதியரசர்கள் மகராஜன், இஸ்மாயில் போன்றோர் நடுவராய் அமையும் அந்த மன்றத்தில் இரு தரப்புக்களிலிருந்தும்  சிறந்த பேச்சாளர்கள் இருவர் [முதல்நாள் பங்குகொள்ளாத வேறுஅறிஞர்கள்] தொடர்ந்த வாதங்களை முன்வைக்க, இறுதித்தீர்ப்பு வழங்கப்பெறும்.

  பண்டைக்காலத்தில் நூல் அரங்கேற்றங்கள் மிக உயர்ந்த தரத்தில் நடந்தேறி இருக்கின்றன. கற்றறிந்த சான்றோர் பலர் முன் நூல்களை வாசித்து  அரங்கேற்றி அவர்கள் எழுப்பும் ஐயங்களுக்கும் வினாக்களுக்கும் ஏற்ற விடைகளை வழங்கிய பின்னரே அந்த நூலின் தகுதிப்பாடு உரைத்துப் பார்க்கப்பட்டு ஏற்கப்பட்டிருக்கிறது. கம்பனின் இராம காதை அரங்கேற்றம் நிகழ்ந்ததும் அப்படித்தான்.. தன் தகுதியை உரைத்துக்காட்டிய கம்பனைப் பேசும் பேச்சாளர்களின் தரத்தையும் உரைத்துப்பார்த்த பிறகே கம்பன் விழா மேடையில் ஏறி சொற்பொழிவாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்திருக்கிறது. இதுவும் காரைக்குடி கம்பன் விழாவின் தனித்துவங்களில் ஒன்று.

  தாய்க்கழகமான காரைக்குடி கம்பன் கழகம் நிகழ்த்திய பிரம்மாண்டமான நிகழ்ச்சிகளே பின்னாளில் சென்னை, கோவை ஆகிய பல நகரங்களிலும் - வெளிநாடுகளிலும் கூட - கம்பன் கழகங்கள் அமையவும், கம்பன் விழாக்கள் நடைபெறவும் பல புதிய இரண்டாம் கட்டப் பேச்சாளர்கள் உருபெறவும் அடித்தளம் இட்டன.

  ஓர் ஊடகத்தை மலினமாக்குவதை நியாயப்படுத்திக் கொள்ள, பேச்சரங்கம் தொடங்கித் திரையரங்கம் வரை நாம் செய்துகொள்ளும் சமரசம்... சமாதானம்.
  ‘மக்கள் விரும்பவதை நாங்கள் கொடுக்கிறோம்’ என்பதே. கம்பன்விழா நிகழ்வுகள் இத்தகைய சமரசங்களுக்கு எப்போதுமே தங்களை உட்படுத்திக் கொண்டதில்லை.அடர்த்தியான ஆழமான சொற்பொழிவுகளைத் தந்தால் மக்கள் ஆரவாரத்தோடு அதை எதிர்கொள்வார்கள் என்பதற்கு சாட்சியாகவே கம்பன் திருநாள் நிகழ்வுகள் நடந்தேறி இருக்கின்றன.
  ’’வரப்புயர நீருயரும், நீருயர நெல்லுயரும்’’ என்பது போல் தரமானவற்றைக் கொடுத்தால் பார்வையாளர்கள் ஒருபோதும் அவற்றைப் புறமொதுக்குவதில்லை. தரமானதைத் தரத் தெரியாமல் – அதைத் தருவதற்கான அடிப்படை முயற்சியைக்கூட மேற்கொள்ளாமல்  நுனிப்புல் மேய்ந்தபடி - என்றோ புளித்துப்போன மாவை மலிவான வாய்ச்சாதுரியங்களோடு பரிமாறியபடி தமிழை விற்றுப் பிழைக்கும் சொல் வியாபாரிகளின் கூட்டமே இடறி விழுந்த இடமெல்லாம் நிறைந்திருக்கும் இந்நாளில்‘‘அந்த நாளும் வந்திடாதோ ‘ என்று  ஏங்க வைத்து விடும் கம்பன் விழாத் திருநாள் நினைவுகள் இன்றைய தலைமுறைக்கு ஓர் உயர்கனவு [UTOPIAN DREAM] போலக் கூடத் தோன்றலாம். 

  இன்றைய கல்வி நிறுவனங்கள் பலவற்றில் மேடைத்தமிழ் என்றே கூட ஒரு பாடப்பிரிவு இடம் பெற்றிருக்கிறது. அதைப்பாடமாகக் கற்பிப்பதை  விட இத்தகைய தரமான இலக்கிய விழாக்களுக்கு ஒரு கல்விச்சுற்றுலா போல அவர்களை அழைத்துச்சென்றால் லகர ளகர ழகர உச்சரிப்பில் தொடங்கித் தமிழ் பேசுவதற்கே தடுமாறித் தத்தளிக்கும் இன்றைய இளம் தலைமுறைக்கு சரளமான இலக்கியத் தமிழ் மீது ஒரு தூண்டுதல் பிறக்க வாய்ப்பிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பொருளில் தொடர்ந்து 20 முதல் 40 மணித்துளி வரை நூல் பிசகாமல் கருத்துச்செறிவோடு உரையாற்றுவது எப்படி என்பதை அனுபவ பூர்வமாய்க் கற்றுத் தெளிய அதை விட மேலான வேறு வழி ஏதும் இல்லை.   

  தளர்நடைப் பருவம் தொடங்கி என் தமிழ்க்காதலை வளர்த்தெடுத்ததும் தமிழ் உயர்கல்வியின் பால் என்னை ஆற்றுப்படுத்தியதும் தொடர்ந்து தமிழ் சார்ந்த என் உருவாக்கத்துக்கும் காரணமாக அமைந்தவை, காரைக்குடி மண்ணில் பிறந்து வளர்ந்த நான் கேட்டுப்பழகிய கம்பன் விழாக்களே. காரைக்குடி செக்காலையில் கம்பன் மணிமண்டபம் அமையும் வரை நான் பயின்ற மீனாட்சிபெண்கள்உயர்நிலைப்பள்ளியில் -மிக நீண்ட கால கட்டம் நிகழ்ந்தகம்பன்விழாவைக்கேட்கும்பெரும்பேறுவாய்த்தது, நான்முன்செய்ததவப்பயன். 

  கம்பன் புகழும் தமிழும் வாழ்வதோடு அடுத்த தலைமுறையின் தமிழும் தழைக்க காரைக்குடி கம்பன் விழாக்கள் போன்ற தரமான இலக்கிய விழாக்கள் மட்டுமே துணை வரக்கூடும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai