Enable Javscript for better performance
கடிச்ச தேளை அடிச்ச திருப்தி: நீங்க நல்லவரா? கெட்டவரா?- Dinamani

சுடச்சுட

  

  கடிச்ச தேளை அடிச்ச திருப்தி: நீங்க நல்லவரா? கெட்டவரா?

  By - சாது ஸ்ரீராம்  |   Published on : 18th May 2018 01:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  karnataka_elections

   

  மதியம் மணி 2. ‘ஐய்யா! தேள் கடிச்சிடுச்சு', என்று அலறல் சத்தத்தோடு ஓடி வந்தார் வேம்பு. சாது அவரை பரிசோதித்தார்.

  ‘எப்ப தேள் கடிச்சது', என்று கேட்டார் சாது.

  ‘காலையில பத்து மணிக்கு'.

  ‘காலையில பத்து மணிக்கு தேள் கடிச்சிருக்கு. இவ்வளவு மெதுவா வற்றீங்களே! இவ்வளவு நேரம் என்ன செஞ்சிட்டு இருந்தீங்க', என்று கேட்டார் சாது.

  ‘என்னய கடிச்ச தேளு, குடுகுடுன்னு ஓடிப்போய் வாசல்படிக்கு அடியில ஒளிஞ்சிக்கிச்சு. அதை தேடிப் புடிச்சு அடிச்சிட்டு வற்றதுக்கு இவ்வளவு நேரமாயிடுச்சு', என்றார் அவர்.

  ‘வலியோட இவ்வளவு நேரம் இருந்து, கடிச்ச தேளை அடிக்கிறது அவ்வளவு முக்கியமா?' என்று கேட்டார் சாது.

  ‘கடிச்ச தேளை அடிச்சுப்பாருங்க! அப்ப புரியும் உங்களுக்கு', என்றார் வேம்பு.

  ‘நல்லாத் தெரியுமா! உங்களை கடிச்சது தேள்தானா?' என்று கேட்டார் சாது.

  ‘ஆமாம் ஐயா! இதோ பாருங்க! இது கருந்தேள். கடுமையான விஷம் கொண்டது', என்று நசுங்கிப்போன தேளை பையிலிருந்து எடுத்துக் காட்டினார் வேம்பு.

  இறந்த தேளை உற்றுப்பார்த்தார் சாது. அதனருகே தனது காதை வைத்தார்.

  ‘இறந்து போன தேள் ஏதாவது ரகசியம் சொல்கிறதா', என்று நக்கலாக கேட்டார் வேம்பு.

  ‘கடிபட்டவன் இன்னமும் உயிரோடு இருக்கிறான். கடிச்ச நான் செத்துப் போயிட்டேன். இதிலேருந்து தெரியுதா யாருக்கு அதிக விஷம்னு', என்று தேள் சொல்லியது', என்றார் சாது.

  அமைதியானார் வேம்பு. சாது மூலிகைச் சாற்றை பிழியத்தொடங்கினார். அவர் பிழியட்டும். நாம் தொடர்ந்து படிப்போம்.

  ‘கடிச்ச தேளை அடிச்ச சுகமே அலாதி. மிகப்பெரிய அஹிம்சாவாதிகளும் அஹிம்சைக்கு கொஞ்ச நேரம் ஓய்வு கொடுத்துவிட்டு தேளை அடித்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். ‘என்னை கடிச்சதுக்காக அடிக்கலை. இனி யாரையும் அது கடிக்கக்கூடாது, அதுக்காகத்தான் அடிச்சேன்' என்று உலக ஷேமத்தின் மீது பழியையும் போடுவார்கள்.

  ‘கடித்த தேளை அடிக்காமல் கொஞ்சவா முடியும்?'

  கொஞ்ச முடியும் என்கிறார்கள் தமிழக அரசியல்வாதிகள். கர்நாடகத்தில் காங்கிரஸ் சார்ந்த ஆட்சியை அமைக்கவிடாமல் தடுக்கும் கவர்னரையும், மத்திய பாஜக அரசையும் வசைபாடுவதாக நினைத்து தமிழகத்துக்கு எதிரானவர்களுக்கு இதமான வகையில் பேசிக்கொண்டிருக்கிறார்கள் தமிழக அரசியல் கட்சிகள்.

  ‘கர்நாடக கவர்னர் அபாயகரமான பாதையில் பயணிக்கக்கூடாது, அது சட்டவிரோதமானது', என்று முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் நேற்று தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதுமட்டுமில்லாது தமிழக காங்கிரஸும் இன்று கர்நாடக கவர்னருக்கு எதிராக போராட்டத்தை நடத்தியிருக்கிறது.

  சிதம்பரம் அவர்களே! வறண்டு கிடக்கும் காவிரி மணல் பரப்பிலிருந்து ஒரு சாமானியன் கேட்கும் கேள்விகள் இதுதான்.

  கடந்த ஐந்து வருடங்களில் தமிழகத்துக்கு தேவையான நேரங்களில் ஒருமுறைகூட கர்நாடகாவை ஆண்ட காங்கிரஸ் தண்ணீர் திறந்துவிடவில்லை. ஏன் ஆறுதலாக ஒரு வார்த்தையைக்கூட அன்றைய முதல்வர் திரு. சித்தராமையா பேசவில்லை. மனிதாபிமானம், கருணை, இரக்கம் என்று எதுவுமே இல்லாமல் தமிழகத்தின் மீது மூர்க்கத்தனத்தை காட்டியது சித்தராமையாவின் அரசு.

  ‘காவிரியில் தண்ணீர் தரமுடியாது', என்று முரட்டுத்தனமாக பேசினார் சித்தராமையா. அப்போது, ‘சித்தராமைய்யா அபாயகரமாக பேசுகிறார். இந்திய ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும் இது எதிரானது. இந்த அபாயகரமான பாதையில் காங்கிரஸ் பயணிக்கக்கூடாது. அது சட்டவிரோதமானது', என்று நீங்கள் சொல்லியிருந்தால், தற்போது நடக்கும் விஷயத்திற்கு இது போன்ற ஒரு கருத்தை நீங்கள் பதிவு செய்வதில் நியாயம் இருக்க முடியும். அப்போது மெளனமாக இருந்த நீங்கள் இப்போது பேசுவது சரியா?

  பல கோடி ரூபாய் மதிப்பிலான தமிழகத்தைச் சேர்ந்த 42 தனியார் பேருந்துகள் காவிரி பிரச்னைக்காக தீக்கிரையாக்கப்பட்டது. காவிரி பிரச்னை கிளம்பும்போதெல்லாம் தமிழர்கள் தாக்கப்படுவது வாடிக்கையானது. இப்படிப்பட்ட நிகழ்வுகளை வேடிக்கைப்பார்த்தது காங்கிரஸ் அரசு. அப்போது நீங்கள் கேள்விக் கணைகளால் கர்நாடக காங்கிரஸை வருத்தெடுத்திருந்தால், நீங்கள் இன்றைய அரசிடம் கேள்வி கேட்பதில் நியாயம் இருந்திருக்கும்.

  தமிழக காங்கிரஸ், தங்களது தலைமைக்கு, காவிரி தொடர்பாக அழுத்தம் கொடுத்ததா? தமிழக காங்கிரஸ், மத்திய காங்கிரஸ் மற்றும் கர்நாடக காங்கிரஸ் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத அமைப்புகளைப் போன்றதொரு தோற்றத்தை நம்மிடையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது தமிழக காங்கிரஸ். ஆனால், இன்று தமிழக காங்கிரஸ், கார்நாடக காங்கிரஸுக்கு ஆதரவாக பொங்கி எழுகிறார்களே இது எந்த ஊர் நியாயம்?

  காவிரி பிரச்னையை வருடக் கணக்கில் உறங்க வைத்த உங்கள் அரசு, இன்று உங்களுக்கு வலிக்கும் போது, அர்த்த ராத்திரியில் நீதிமன்றத்தை எழுப்புகிறீர்களே! இரவில் நீதிமன்றங்களுக்கு உறக்கம் உண்டு. நீதிக்கு உறக்கமில்லை. இதை காலம் உங்களுக்கு உணர்த்தியிருக்கிறது.

  சட்டத்தை பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது', என்று காங்கிரஸ் கதறுகிறது. பாஜக அரசு இன்று செய்யும் இதே செயலை, காங்கிரஸ் ஒருபோதும் செய்ததில்லை என்று சொல்ல முடியுமா?

  ‘தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது', என்று மூர்க்கத்தனமாக பேசிவந்த கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை இழந்தது தமிழகத்திற்கு நல்லதுதானே! சட்டம், கோர்ட், ஆகியவற்றை மதிக்காத, மனிதாபிமானமற்ற ஒரு அரசு வீழும்போது வேடிக்கை பார்ப்பது மட்டுமே நமது கடமையாக இருக்க முடியும்! இந்த தருணத்தில் சட்டம், நியாயம் என்று எதையாவது சொல்லி கார்நாடக காங்கிரஸுக்கு ஆதரவாக யாராவது பேசுவார்களேயானால், விழித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு தமிழக மக்களின் மீது அக்கறையில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

  அரசியல்வாதிகளே! ஒரு விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பாஜகவிற்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று நினைத்தால் அது தவறு. நீங்கள் தமிழக மக்களின் சிந்தனைக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கிறீர்கள். கடித்த தேளுக்கும், அதன் விஷத்துக்கும் ஆதரவாக பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

  தமிழகத்தை கடித்த தேள், முந்தைய கர்நாடக காங்கிரஸ் அரசு. அதை அடித்தவர்கள் கர்நாடக மக்கள். நம்மால் கீழே தள்ள முடியாத முரட்டு வில்லனை, பாத்ரூம் சோப்பு நுரை கீழே தள்ளியிருக்கிறது. இதில் நமக்கு மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. சுயநலத்துக்காக சட்டம், கூட்டாட்சி ஆகியவற்றைப் பற்றி கவலைப்படாத ஒருவரை யார் எப்படி வீழ்த்தினால் என்ன? வீழ்த்தப்பட வேண்டும் அவ்வளவுதான்.

  - சாது ஸ்ரீராம்
  saadhusriram@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai