விடிந்த பின்னும் விடியாத வாழ்க்கை

ஏன் விடிகிறது என்று கண்ணை மூடிக்கொண்டு மறுபடியும் ஒரு தூக்கம் போடலாம் என்று நினைத்த போது
விடிந்த பின்னும் விடியாத வாழ்க்கை

ஏன் விடிகிறது என்று கண்ணை மூடிக்கொண்டு மறுபடியும் ஒரு தூக்கம் போடலாம் என்று நினைத்த போது அம்மாவின் குரல் இடி போல் வந்து தாக்கியது. 'ஏய்! எழுந்திருடி. ஸ்கூலுக்கு நேரமாச்சு. பல் தேய்த்து குளித்து கிளம்பு.’ அன்றாடம் காலையில் ஒலிக்கும் அம்மாவின் குரலைக் கேட்டால் ஏன் விடிகிறது என்று எண்ணாத நாளில்லை. எப்போது தான் இந்தத் தொல்லையிலிருந்து விடுபடுவோம் என்று ஏங்காத நேரமில்லை.

என்னதான் வேண்டா வெறுப்புடன் எழுந்து பள்ளிக்கு கிளம்பினாலும் வகுப்பறைக்குள் சென்றவுடன், சகமாணவர்களை கண்டவுடன் - மலரும், மகிழ்விக்கும், என் சிறு உலகம். மீண்டும் பயணம் வீட்டை நோக்கி, பாடப் புத்தகங்களுடன் மீண்டும் அம்மாவின் அதட்டல் ஆரம்பம். 'படி, பாலைக் குடி, வீட்டுப் பாடத்தை முடி.” அட சே! என்னடா வாழ்க்கை இது! என்று சலிப்பான எண்ணத்துடன் அன்றாட வாழ்க்கையை நகர்த்தியது எவ்வளவு தவறு என்று உணர்ந்தேன் அன்று அவளை சந்தித்த பிறகு.

ஒரு விடுமுறை நாளின் மதிய வேளை. ஒரு வணிக வளாகத்திற்கு சென்றபோது அங்கு குழுவாக வந்திருந்த சிறுவர்கள், சிறுமிகளின் தோற்றத்திலும், அவர்கள் பார்வையிலும் ஒரு பெரிய வித்தியாசத்தை என்னால் உணர முடிந்தது.

அந்த கூட்டத்தில் கொஞ்சம் விவரம் அறிந்த ஒரு சிறுமியிடம் நான் விசாரித்த போது அவள் சொன்னது:

'கூரையின் வழியே சூரியக்கதிர் சுளீரென்று முகத்தில் பட்டு, தூக்கம் கலைந்து, அம்மா எழுப்ப மாட்டாளா என்று காத்திருந்த போது தூரத்தில் அம்மாவும், அப்பாவும் செங்கலுக்கு களிமண்ணை குலைத்து, களைத்துப் போயிருந்தார்கள். ‘அம்மா’ என்று அழைத்தேன். அருகில் வருவாள் என்று. அவளோ என்னை அங்கே அழைத்தாள். ‘வா நீயும் என்னோடு சேர்ந்து வேலையைக் கற்றுக் கொண்டு செய்’என்று அம்மா சொல்லும் போதே அதட்டலாக கேட்டது ஒரு குரல். 'வேலை செய்யாமல் அங்கு என்ன வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்’ என்று. அதற்கு அம்மா அமைதியாக மெதுவான குரலில் என்னிடம் சொன்னாள் ‘நான் கருவிலேயே அடிமையாக்கப்பட்டேன்’என்று.

'விதையிலே விற்கப்பட்டு விருட்சமாய் வளர்ந்தாலும் வீணாய் போகும் எங்கள் வாழ்க்கை எப்போது விடியும் என்று எண்ணியிருந்த காலத்தில் விதி செய்த நற்செயலால் மீட்கப்பட்டோம். தொண்டு நிறுவனங்களின் தொடர் முயற்சியினாலும், அரசாங்கம் அளித்த ஆதரவினாலும் வந்து நிற்கிறோம் இவ்வேற்று கிரகத்தில்’ என்று அவள் சொல்லாமல் சொல்லியது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

அன்று சுதந்திரம் பெற்றோம்; இன்று சுதந்திரமாய் பறக்கிறோம், வாழ்கிறோம். ஆனால், பெற்ற சுதந்திரத்தை சுதந்திரமாய் அனுபவிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், அன்றாட வாழ்வில் இயல்பாய் ஏற்படும் சிறு சிறு சிரமங்களை எதிர்கொண்டு மீண்டும் வர முயல்வதை தவிர்த்து சிக்கலின்றி வாழ சிரமப்படுகிறோம்.

மறுபக்கமோ:

அன்று சுதந்திரம் பெற்றோம், சுதந்திர நாட்டில் கொத்தடிமைகளாய் அன்றாடம் வாழ்க்கை வாழ்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் விடிந்த பின்னும் விடியாத, சிறகிருந்தும் பறக்காத, பறக்கத் தெரியாத வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கிற சிட்டுக் குருவிகள் போன்ற சிறு பிள்ளைகள் அருகில் இருந்தும் நாம் அவர்களை, அவர்களது துயர நிலையை அறியாமல் இருக்கிறோம். இன்றே அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கையில் விடியலுக்கு வழி வகுக்க சபதமேற்போம். கொத்தடிமை தொழில் முறையை ஒழிப்போம்.

இன்று காலை, விடியலுக்கு முன்னே விழித்து விட்டேன். அம்மாவின் வழக்கமான அதட்டலும், தொனியும் ஏனோ இன்று தேன் போல இனித்தது.

- ஜெனிடா ராபர்ட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com