Enable Javscript for better performance
KILLER SERVANTS... LONELY SENIOR CITIZENS... HOW TO AVOID THESE TYPE OF MURDERS?!- Dinamani

சுடச்சுட

  

  தனித்து வசிக்கும் பெற்றோர், கொலைத்திட்டம் தீட்டிய டிரைவர்... தொடரும் முதியோர் கொலைகள், தவிர்ப்பது எப்படி?

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 24th November 2018 03:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pondichery_murder

   

  புதுச்சேரியில் 72 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற வக்கீல் ஒருவரும் அவரது மனைவியும் இரு நாட்களுக்கு முன்பு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த புதுவை காவல்துறை கொலையாளிகளைக் கண்டுபிடித்து விட்டது. கொலையாளி வேறு யாருமல்ல கொல்லப்பட்டவரின் கார் டிரைவர் தான். கொலையான வக்கீல் பாலகிருஷ்ணனிடம் நான்கு மாதங்களுக்கு முன்பு டிரைவராக வேலைக்குச் சேர்ந்த டிரைவர் காசிம்... பாலகிருஷ்ணன் தம்பதியினரின் பங்களா, கார், நகை, பணம் உள்ளிட்ட வசதிகளைக் கண்டு அதை அடையும் ஆசை கொண்டிருக்கிறார். காரணம் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவியின் வயது மற்றும் தனிமைச் சூழல். பாலகிருஷ்ணன் தம்பதியினருக்கு மூன்று வாரிசுகள். இரு மகன்கள் ஃப்ரெஞ்சுக் குடியிரிமை பெற்று குடும்பத்துடன் ஃப்ரான்ஸில் வசிக்க மகள் தனது குடும்பத்தினருடன் சிங்கப்பூரில் வசித்து வந்திருக்கிறார். ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது நீண்ட விடுமுறை கிடைக்கும் போதோ மட்டுமே இவர்கள் அனைவரும் ஒன்றிணைவது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்நிலையில் வயதான காலத்தில் பாலகிருஷ்ணனிடம் இருந்த பண வசதியும், பங்களா, கார் வசதிகளும் தன்னை உறுத்தியதால் அவர்களைக் கொன்று விட்டு வீட்டில் உள்ள நகை, பணம், ஆடம்பரப் பொருட்களை கொள்ளையடிக்கும் நோக்கில் சதித்திட்டம் தீட்டி தானும் தன் நண்பனும் வீட்டினுள் நுழைந்ததாக காவல்துறை விசாரணையில் டிரைவர் காசிம் கூறி இருக்கிறார்.

  தனது நண்பனை மெத்தை தைப்பவனாக நடிக்க வைத்து பாலகிருஷ்ணனின் வீட்டுக்குள் அழைத்து வந்த காசிம், அவன் படுக்கையறைக்குள் இருந்த மெத்தையை சோதிப்பதாக நடித்துக் கொண்டிருக்கையில் அறைக்குள் வைத்து பாலகிருஷ்ணன் தம்பதியினரை கழுத்தை நெரித்துக் கதையை முடித்ததாகக் கூறி இருக்கிறார் காசிம். காலை சுமார் 11.30 மணியளவில் உள்ளே நுழைந்த கொலையாளிகள் இருவரும் பாலகிருஷ்ணன் தம்பதியினரைக் கொலை செய்து விட்டு வீட்டிலிருந்த பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகையில் மாலை மணி 4 ஆனதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

  இந்தக் கொலைவழக்கில் கொலைக்கான காரணமாக வக்கீல் பாலகிருஷ்ணனின் வயோதிகத்தையும் அவரது செல்வச் செழிப்பையும் மட்டுமே பட்டியலிட முடியாது.

  கொலைக்கான முதன்மைக் காரணம் தனிமை.

  பிள்ளைகள் அனைவரும் வெளிநாடுகளில் வசிக்க... தனித்து பெரிய பங்களாவில் வக்கீல் பாலகிருஷ்ணனும் அவரது மனைவியும் வசித்தது கொலைக்கான சதித்திட்டம் தீட்டியவர்களுக்கு வசதியாகப் போயிற்று. நம்பகமான வேலைக்காரன் போல நான்கு மாதங்கள் அவரிடத்தில் டிரைவராக நடித்து சமயம் பார்த்து போட்டுத் தள்ளி இருக்கிறார்கள். 

  தமிழகத்தில் இப்படியான கொலைகள் ஆண்டுக்கு சில கணிசமாக அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன. அதற்காக என்ன செய்வது? பிள்ளைகள் வெளிநாடுகளில் இருக்க இந்தியாவில் வசதி வாய்ப்புகளுடன் தனித்து வசிக்க நேரும் பெற்றோர் அனைவரும் பயந்து சாக வேண்டியது தானா? அவர்கள் தங்களது பாதுகாப்புக்கு என்ன தான் செய்வது?

  இந்தக் கேள்வியுடன் ஹெல்ப் ஏஜ் இந்தியா தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் முத்துகிருஷ்ணன் அவர்களை அணுகினோம்; அவரிடம் பேசியதிலிருந்து தெரிய வந்தவை;

  'ஹெல்ப் ஏஜ் இந்தியா' சீனியர் மேனேஜர் R. முத்துகிருஷ்ணன்.

  பிள்ளைகள் அயல்நாட்டில் வசிக்கும் நிலையில் தனிமையில் வசிக்க நேரும் வயது முதிர்ந்தோர் தங்களது பாதுகாப்புக்காக செய்து கொள்ள வேண்டிய முதல் வேலை;

  • முதற்கட்டமாக தங்களது வசிப்பிடத்திற்கு அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் தங்களைப் பற்றிய தகவல்களை முகவரியுடன் அளித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதை நேரில் காவல்நிலையம் சென்று செய்ய முடியாதென நினைப்பவர்கள் காவல்துறை மூலமாக உருவாக்கப்பட்டுள்ள SOS காவலன் செயலியைத் (SOS Kavalan App) தங்களது ஸ்மார்ட் ஃபோன்களில் தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு அதன் மூலமாகவும் தங்களைப் பற்றிய விவரங்களைக் காவல்நிலையத்தில் பதிவு செய்யலாம். அடிப்படையில் தனிமையில் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்களின் பாதுகாப்பிற்காக இந்தச் செயலி உருவாக்கப்பட்டாலும் தற்போது பெண்களின் பாதுகாப்புக்காக மட்டுமின்றி தனிமையில் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் அனைத்து தரப்பினரும் இந்தச் செயலி வாயிலாக காவல்துறையை அணுக முடியும் என்று கூறப்படுகிறது. மேற்கண்ட செயலி மூலமாகப் பதிவு செய்து கொண்டால் காவல்துறையினர் குறிப்பிட்ட இடைவெளிகளில் தனிமையில் வசிக்கும் முதியவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப் படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.

  • காவலன் செயலி தவிர 1253 எனும் ஹெல்ப் லைன் எண்ணும் 14 ஆண்டுகளுக்கும் மேலாக தனிமையில் இருப்போரின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டு செயல்படுத்தப் பட்டு வருகிறது. ஆபத்தில் இருக்கும் முதியோர் அல்லது பிறர் எவராயினும் இந்த எண்ணை அழுத்தினால் போதும் புகார் பதிவாகி சம்மந்தப்பட்டவர்களுக்கு உதவ காவல்துறை விரையும். கிட்டத்தட்ட 100 எமர்ஜென்ஸி எண் போலத்தான் இதுவும் என்கிறார்கள்.

  • அதோடு கூட இருவராகவோ அல்லது ஒருவர் மட்டுமேயாகவோ தனியே வசிக்கும் பெரியவர்கள் வெளியூர் செல்கையில் தங்களது முகவரியைக் காவல் நிலையத்தில் பதிவு செய்து வைத்து விட்டுச் செல்வதும் பயனுள்ளது எனக் காவல்துறை கருதுகிறது.
  • வீட்டு வேலைகளுக்காக ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் போது நம்பிக்கையான ஆட்களைத் தான் தேர்ந்தெடுக்கிறோமா என்ற உறுதி முதியோர் எஜமானர்களுக்கு வேண்டும். சந்தேகமிருக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக வேலையை விட்டு நிறுத்தத் தயங்கக் கூடாது என்பதோடு சம்மந்தப்பட்ட நபர்களைப் பற்றி காவல்துறையில் புகார் அளிக்கவும் தயங்கக் கூடாது. ஒருவேளை ஏஜென்ஸிகள் மூலமாக வேலையாட்களைத் தேர்ந்தெடுக்கும் சூழல் இருந்தாலும் அந்த ஏஜென்ஸிகளின் நம்பகத் தன்மையையும் உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
  • ஒருமுறை வீட்டு வேலைக்கு ஆட்களை தேர்வு செய்த பின் எஜமானர்கள் தங்களது பெயர் மற்று முகவரியுடன் அவர்களுடையதையும் சேர்த்து ஆதார் அட்டையுடன் காவல்நிலையத்தில் பதிவு செய்து வைத்து விட்டால் போதும். பிறகு அவர்களைத் தொடர்ச்சியான கண்காணிப்பின் மூலமாக நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை அறிய முடியும்.
  • தனியே வசிக்கும் முதியோர் இருக்கும் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராக்கள் தொடர்ச்சியான இடைவெளிகளில் கண்காணிக்கப்பட்டு சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் காவல்துறை உடனனடியாக நடவடிக்கை எடுக்க முனைய வேண்டும்.

  காவல்துறையும், தன்னார்வ அமைப்புகளும் எப்போதுமே முதியோர்களுக்கு உதவத் தயாராகவே இருக்கிறது.

  ஆனால், தனியாக வசிக்கும் முதியோர்களில் பலர் தங்களுக்கான பாதுகாப்புக்காகவேனும் காவல்துறையில் தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து வைத்துக் கொள்ள முயலாமல் அவ்விஷயத்தை அசட்டையாக அணுகுகிறார்கள்.

  பெரும்பாலான முதியோர் கொலைகளுக்கு இந்த அசட்டையே முக்கிய காரணமாகி விடுகிறது.

  முதியோர்களின் இந்த மனநிலை மாற வேண்டும். அப்போது தான் இப்படியான கொலைகளின் எண்ணிக்கை குறையும் என்கிறார் ஹெல்ப் ஏஜ் இந்தியா அமைப்பின் சீனியர் மேனேஜரான முத்துகிருஷ்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai