ஓடி ஓடி உழைத்தாலும் ஓட்டைப் பானையில் ஒழுகும் நீரானது ரூபாயின் வீழ்ச்சி!

பணம் இருந்தால் இந்த சமூகத்தில் மதிப்பு கூடுகிறது. மரியாதை தேடி வருகிறது. எனவே நாம் பணத்தை தேடி ஓடுகிறோம். ஆனால் நாட்டில் இப்போது அந்த பணத்திற்கே மதிப்பு குறைந்து வருகிறது.
ஓடி ஓடி உழைத்தாலும் ஓட்டைப் பானையில் ஒழுகும் நீரானது ரூபாயின் வீழ்ச்சி!


பணம் இருந்தால் இந்த சமூகத்தில் மதிப்பு கூடுகிறது. மரியாதை தேடி வருகிறது. எனவே நாம் பணத்தை தேடி ஓடுகிறோம். ஆனால் நாட்டில் இப்போது அந்த பணத்திற்கே மதிப்பு குறைந்து வருகிறது. பணம் பாதளம் வரை பாயும் என்ற நிலை மாறி இப்போது பணத்தின் மதிப்பு அதள பாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. 

இது இருப்பவர் முதல் இல்லாதவர் வரை எல்லோருக்கும் கவலை அளிக்க கூடிய விசயம்தான். ஆளுபவர் தொடங்கி உழுபவர் வரைக்கும் பணத்தின் வீழ்ச்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் யாரும் மறுபத்தற்கில்லை. ஆனால் இந்த ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிய என்ன காரணம்.. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் சர்வதேச சந்தையில் டாலரின் தேவை அதிகரிப்பு போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது என்று பலருக்கும் தெரியும்.  

இந்நிலையில் இன்று கச்சா எண்ணெயின் விலை, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பாய் ஒன்றுக்கு 85 டாலராக உயர்ந்தது. ரூபாயின் மதிப்பு வர்த்தக நேர தொடக்கத்தில் 73.28 ரூபாயாக இருந்தது. பின்னர் மேலும் இந்திய ரூபாயின் மதிப்பு 43 பைசாக்கள் வீழ்ச்சி கண்டு முதன்முறையாக இன்று ரூ.73.34 ஆக ஆனது. இதேவேளையில் மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 137.62 புள்ளிகள் சரிவடைந்து 36,388.52 புள்ளிகளாக உள்ளது.

ரூபாயின் வீழ்ச்சி: நம்மை கவலையில் ஆழ்த்தும் 5 காரணங்கள்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும் என்று சொன்ன காலம் போய் இப்போது என்ன தான் ஓடி ஓடி உழைத்தாலும் இந்த ரூபாயின் வீழ்ச்சி மற்றும் விலையேற்றத்தினால் ஓட்டைப்பானையில் நீர் ஊற்றிய நிலையாகி வருகிறது. ரூபாயின் வீழ்ச்சி காரணமாக எண்ணெய் நிறுவனங்களின் சுமையை அதிகரிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமை அந்த எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டதால் அதுவும் தினமும் உயர்ந்து கொண்டே போகிறது. இதனால் சுமைக் கூலியை காரணம் காட்டி எல்லாவிதமான பொருட்களின் விலையும் உயந்து அனைத்து சுமைகளும் மக்களின் தலையில் வைக்கப்படும்.

ரூபாயின் சரிவு நாட்டின் இறக்குமதியை பாதிப்பதோடு நடப்பு கணக்குகளில் அது பற்றாக்குறை ஏற்படுத்தும். இறக்குமதியாளர்கள் தான் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அதிகமான பணம் கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

வங்கியில் நாம் வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டி விகிதங்களை இந்திய ரிசர்வ் வங்கி அதிகரிக்கும். அவ்வாறு செய்யப்படும் போது கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய மாதத் தவணை அதிகமாகும். 15 பொருளாதார வல்லுனர்களில் 14 பேர் ரிசர்வ் வங்கியிடம் ரெப்போ விகிதத்தை உயர்த்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர். குறிப்பாக வணிக வங்கிகளின் வட்டி விகிதம் 6.75% ஆகக் உயர்ந்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதில் ஒரு பொருளாதார நிபுணர் மேலும் 7% ஆக உயர்த்தப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

மேலும் ரூபாயின் வீழ்ச்சி சந்தை வர்த்தகத்தை வெகுவாக பாதிக்கக் கூடும். பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் ரூபாயின் வீழ்ச்சியால் தங்கள் உள்நாட்டுப் பங்குகளை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதுவரை இந்த ஆண்டு ரூபாய் 12.07 சதவீதமும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் முறையே 2.01 பில்லியன் டாலர்கள் மற்றும் 7.11 பில்லியன் டாலர்கள் பங்கு மற்றும் கடன் சந்தைகளில் விற்பனை செய்துள்ளனர்.

வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் மதிப்பு குறைந்து வருவதால் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். பல்கலைக்கழக / கல்லூரி கட்டணம் மற்றும் வாழ்வாதாரத்திற்குள் ஏற்படும் செலவுகள் அதிகரிக்கும். இதனால் அனைத்துத் தரப்பினர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பது சர்வ நிச்சயம். 
இந்திய ரூபாயின் மதிப்பைப் போல் இந்தோனேசியா ரூபியா 0.27%, ஜப்பான் யென் 0.13% மற்றும் தைவான் டாலர் 0.07% சரிவு கண்டுள்ளது. எனினும் எனினும், சீன யுவான் 0.31%, பிலிப்பைன்ஸ் பெஸோ 0.17% மற்றும் தென் கொரிய வோன் 0.07% உயர்ந்து காணப்பட்டது.
- டி.எஸ்.எஸ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com