Enable Javscript for better performance
என்ன சொல்கிறது சட்டப்பிரிவு 497? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?- Dinamani

சுடச்சுட

  

  'தகாத உறவு' உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சரியாக தான் புரிந்துகொண்டிருக்கிறோமா?

  By சுவாமிநாதன்  |   Published on : 05th October 2018 07:00 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  SEPTDEL023_16-09-2018_13_7_42

   

  தீபக் மிஸ்ரா. சமீபமாக இந்தியாவில் மிக அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர். ஆம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து, அக்டோபர் 1-ம் தேதி ஓய்வுபெற்றார்.

  தலைமை நீதிபதியான இவரது தலைமையிலான அமர்வுகள் பல முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தது. விசாரணை முடிந்து பல ஆண்டுகள் ஆன வழக்குகளில்கூட தீர்ப்பு அளிக்கப்படாமல் இருந்தது.

  இந்த நிலையில், நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுவதற்கு முன்பாக அவரது தலைமையிலான அமர்வுகள், சில முக்கிய வழக்குகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க, பரபரப்பான தீர்ப்புகளை வழங்கியது. 

  அவற்றில் குறிப்பாக,

  * சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து, ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று தீர்ப்பளித்தது; 

  * சட்டப்பிரிவு 497 மற்றும் 198-ஐ ரத்து செய்து, திருமண பந்தத்தை மீறிய வேறொரு நபருடனான உறவு தவறல்ல என்று தீர்ப்பளித்தது; 

  * சபரிமலைக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று தீர்ப்பளித்தது.

  இந்த மூன்று தீர்ப்புகள் குறித்தும் பாராட்டுகளும் விமரிசனங்களும் எழுந்தன. ஆனால், சட்டப்பிரிவு 497 மற்றும் 198-ஐ ரத்து செய்து, திருமண பந்தத்தை மீறிய வேறொரு நபருடனான உறவு தவறல்ல என்று அளித்த தீர்ப்பின் மீது அதிகப்படியான விமரிசனம் எழுந்தது.

  அப்படி விமரிசனம் அதிகமாக எழ என்ன காரணம்? விரிவாகப் பார்க்கும்முன், சட்டப்பிரிவு 497 குறித்துப் பார்ப்போம்.

  “வேறொரு நபரின் மனைவி என்று தெரிந்திருந்தும், அந்தப் பெண்ணின் கணவரின் சம்மதம் இல்லாமல் அல்லது அவர் நீக்குப்போக்காக அறியும் வகையில், அந்தப் பெண்ணுடன் ஒரு ஆண் உடலுறவு கொள்வது என்பது, பாலியல் வன்கொடுமைக்கு ஈடானது அல்ல என்றபோதிலும், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு என்றும், அது தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படும். அதன்படி, குற்றச் சாட்டப்பட்ட ஆணுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இந்த விஷயத்தில், அந்தப் பெண் (வேறொருவரின் மனைவி) தவறுக்கு உடந்தையாக இருந்தார் என்பதற்காக அவரைத் தண்டிக்க இயலாது”. 

  இதுதான் அந்தச் சட்டப்பிரிவு குறித்த விளக்கம். இதன்மூலம் நாம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

  • இந்தச் சட்டம், கணவன் என்பவன் பெண்களுக்கான எஜமானன் என்பதை சூசகமாகச் சொல்கிறது. ஒரு பெண் தனது கணவரின் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டால் அது குற்றமல்ல. அதுவே கணவரின் சம்மதம் இல்லாமல் உடலுறவு வைத்துக்கொண்டால் அது குற்றம் என்றால், திருமணம் என்ற ஒன்று நடந்துவிட்டால், அதன்பிறகு ஒரு பெண்ணின் உடல் உள்பட மொத்தமும் கணவனின் உரிமையாகிவிட வேண்டும் என்பதைத்தான் இந்தச் சட்டம் வலியுறுத்துகிறது.
  • இதில், வேறொரு ஆணுடன் உடலுறவில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் வழக்குத் தொடரலாம். அதே உடலுறவில், ஒரு பெண்ணின் கணவர் ஈடுபட்டிருந்தால், அவரது மனைவி தனது கணவருடன் உடலுறவில் ஈடுபட்ட பெண்ணின் மீது எந்தவிதமான வழக்கையும் தொடர சட்டப்பிரிவுகள் 497 மற்றும் 198 அனுமதிக்கவில்லை. 

  இந்த இரண்டு முக்கியமான விஷயங்களையே கருத்தில் கொண்டு, தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, சட்டப்பிரிவு 497 மற்றும் 198-ஐ ரத்து செய்து கடந்த 27-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. 

  அந்தத் தீர்ப்பில், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு குற்றமல்ல என்றும்; திருமணப் பந்தத்துக்கு எதிரான குற்றங்களை தண்டனைக்குரியதாகக் கருதுவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்றும் நீதிபதிகள் அனைவரும் ஒருமித்த குரலில் தெரிவித்த போதிலும், தீர்ப்புகளை தனித்தனியாக வாசித்தனர். 

  நீதிபதி தீபக் மிஸ்ரா

  ‘இந்தச் சட்டப் பிரிவுகள், திருமணத்துக்கு அப்பாற்பட்டு ஒரு கணவர், திருமணமாகாத பெண் அல்லது கணவரை இழந்த பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்வது குறித்த விஷயத்தை இந்த சட்டம் உள்ளடக்கி இருக்கவில்லை’.

  நீதிபதி ஏ.எம். கான்வில்கர் 

  ‘பெண்களை சமத்துவமின்றி நடத்தும் எந்தவொரு சட்டப்பிரிவையும், அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாது. கணவர் என்பவர் பெண்ணின் எஜமானர் அல்ல என்று சொல்ல வேண்டிய தருணம் இது’.

  நீதிபதி இந்து மல்ஹோத்ரா 

  ‘அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அப்பட்டமாக மீறும் வகையில் சட்டப்பிரிவு 497 அமைந்துள்ளது. அந்த சட்டப்பிரிவு இனியும் தொடர்வதில் எந்தவித நியாயமும் இருக்க முடியாது’.

  நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் 

  ‘சட்டப்பிரிவு 497 திருமணத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதாகக் கருதப்படுகிறது. திருமணமான ஆண், திருமணமாகாத பெண் அல்லது கணவரை இழந்த பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டால் அது திருமணத்தின் புனிதத்தை சிதைக்கிறது. ஆனால், அது குற்றமாகக் கருதப்படவில்லை. அப்படி இருக்கையில், இது திருமணத்தின் புனிதத்தைப் பாதுகாப்பதாக அல்லாமல், கணவரின் உரிமையாகவே இது இருக்கிறது’.

  நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 

  ‘கண்ணியமிக்க மனிதச் சமூகத்தில் தனியுரிமை என்பது உள்ளார்ந்த விஷயம். இந்நிலையில், சட்டப்பிரிவு 497-ஆனது, பெண்கள் தனக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்வதைத் தடுக்கிறது. திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவை குற்றமாக்குவது கடந்த காலத்தின் எச்சம். பெண்களுக்கான கண்ணியம், சுயமரியாதை ஆகியவற்றுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகவும், கணவனின் சொத்தாகப் பெண்ணைக் கருதும் வகையிலும் அந்தச் சட்டப்பிரிவு உள்ளது’.

  நான்கு நீதிபதிகளும் தனித்தனி கருத்துகளாகப் பதிவு செய்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, திருமணப் பந்தத்தை மீறிய ஆண்-பெண் உறவு குற்றமல்ல என்பதே முக்கியக் கருத்தாக உள்ளது.

  அதாவது. சட்டப்பிரிவு 497 என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் 14, 15 மற்றும் 21 ஆகியவற்றுக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.

  ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கள்ளக் காதல் தண்டனைக்குரிய குற்றமல்ல, தகாத உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல, முறையற்ற உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என பல தலைப்புகளில் விவாதிக்கவும், பகிரவும்பட்டது. 

  இதில், 3 முக்கியமான விஷயங்களை நாம் கவனிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

  முதல் விஷயம்

  உச்ச நீதிமன்றம், இந்த சட்டம் அரசமைப்புச் சட்டங்களுக்கு எதிரானது என்ற அடிப்படையில்தான் தீர்ப்பை வழங்கியுள்ளதே தவிர, திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவை ஆதரித்து  தீர்ப்பை வழங்கவில்லை. 

  இரண்டாவது விஷயம்

  இந்தச் சட்டம் (சட்டப்பிரிவு 497) கலாசாரத்தை அல்லது திருமணம் என்ற புனிதத்தைப் பாதுகாக்கிறது. அதனால், இந்தச் சட்டத்தை நீக்கக் கூடாது என்பதுதான் இங்கு பெரும்பாலான மக்களின் வாதமாக இருக்கிறது. 

  ஆனால், இந்தச் சட்டம், கணவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொண்டால் அது குற்றமல்ல என்று சொல்கிறது. அப்படி இருக்கையில், கணவரின் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்ளும்பொழுது அது திருமணத்தின் புனிதத்தைப் பாதிக்காதா என ஒரு கேள்வி எழுகிறது. மேலும், நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி ஆர்.எஃப்.நாரிமன் குறிப்பிட்டபடி, திருமணம் ஆன ஒரு நபர் திருமணம் ஆகாத அல்லது கணவரை இழந்த ஒரு பெண்ணுடன் உறவு வைத்துக்கொண்டால் அதுவும் திருமணப் புனிதத்தைப் பாதிக்காதா என்கிற கேள்வியையும் இந்த சட்டம் எழுப்புகிறது.

  மூன்றாவது விஷயம்

  இது கள்ளக் காதல், தகாத உறவு, முறையற்ற உறவு என பல அணுகுமுறையில்தான் இந்தச் செய்தி பகிரப்பட்டது. திருமணத்துக்கு அப்பாற்பட்ட ஒரு உறவை கள்ளக் காதலாகவோ, முறையற்ற உறவாகவோ, தகாத உறவாகவோ அணுகுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். பொதுத்தளங்களில் இதுதான் முறையற்ற உறவு, தகாத உறவு என சித்தரிப்பதுதான் சமூகத்தில் மிகப்பெரிய கேள்விகளை எழுப்புகிறது. 

  திருமணம் செய்த பிறகு வைத்துக்கொள்ளும் உறவு மட்டும்தான் சமூகத்தில் தகுந்த உறவு, முறையான உறவு என்கிற விளக்கவுரை எங்கு வரையறுக்கப்படுகிறது?

  பெரும்பான்மையான மக்களின் பார்வையில், திருமணம் செய்த பிறகு வைத்துக்கொள்ளும் உறவுதான் முறையான உறவு, தகுந்த உறவாக இருக்கிறது. அப்படி இருக்கையில், தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் பெரும்பான்மையான மக்களின் உணர்வை அடிப்படையாகக் கொண்டு அதன்வழி அணுகலாம். 

  ஆனால், பொதுத்தளங்களில் ஒரு சமூகம் என்று வரும்போது அதனை திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக முன்வைப்பதே சரியானதாக இருக்கும். தகாத உறவு, முறையற்ற உறவு, கள்ளக் காதல் என சித்தரிப்பது இந்தத் தீர்ப்பின் அம்சத்தை முற்றிலும் திசை திருப்பி, தவறான ஒரு தூண்டுதலை சமூகத்தில் விதைக்கிறது.

  ஆக, எந்த ஒரு விஷயத்திலும் மேலோட்டமாகப் பார்க்காமல் உள்ளார்ந்து ஆராய்ந்து பார்த்தால்தான் அதன் உண்மைத்தன்மை என்பது புலப்படும். இந்த விஷயத்தில், தீர்ப்பு மீதான மேலோட்டமான பார்வையே தவறான புரிதல்களுக்கு வழிவகுத்துவிட்டது.

  தினமணி இணையதளத்தின் இச் சிறப்புக் கட்டுரை, முன்னர் இருந்த சட்டப்பிரிவு என்ன சொன்னது, இப்போது உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பின் உண்மைத் தன்மை என்ன என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் என்று நினைக்கிறோம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai