Enable Javscript for better performance
மனரீதியான வேதனையிலிருந்து எப்படி அவர்களை மீளச் செய்வது?- Dinamani

சுடச்சுட

  

  மனரீதியான வேதனையிலிருந்து எப்படி அவர்களை மீளச் செய்வது?

  By - அக்‌ஷா ஜான்  |   Published on : 01st April 2019 02:01 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  k22

   

  கொத்தடிமை முறை என்பது ஒரு குற்றமாகும். நாம் பல சமயங்களில் நேரடியாகப் பார்க்க முடியாத அதே சமயம் நம் அன்றாட வாழ்வில் அங்கமாக மாறிய பொருட்களில் இது மறைந்திருக்கிறது. கொத்தடிமைகளாக இருக்கும் காலத்தில் தொழிலாளர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாவதைப் பற்றிப்  பல ஆராய்ச்சி முடிவுகளும் கட்டுரைகளும் காணக் கிடைக்கின்றன.

  தினக்கூலியான ரமேஷ் குடும்ப நெருக்கடியால் தனது கிராமத்திலிருக்கும் ஒரு முக்கிய நபரிடம் 20,000/- ரூபாயை கடனாகப் பெற்றுள்ளார். ஒரு வருடத்திற்குள் திருப்பித் தர எவ்வளவோ முயன்றும் அவரால் இயலவில்லை. இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்தக் கடன் வழங்கியவர் ரமேஷையும் அவரது குடும்பத்தினரையும் கொத்தடிமைகளாக இருக்கப் பணித்துள்ளார். பெரியவர்கள் மட்டுமில்லாமல் குழந்தைகளையும் ஒரு நாளுக்கு பதினாறு மணி நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளார். ஆறு ஆண்டுகளாக குடும்பமாக வேலை செய்தும் அவர்களால் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. பல்வேறு உண்மை சம்பவங்கள் மற்றும் கட்டுரைகள் அடிப்படையில் கூறப்பட்ட இது ஒரு கற்பனையான செய்தி மட்டுமே. ஆனால் ஒவ்வொரு கொத்தடிமை தொழிலாளர்களும் உள்ளாகும் மன வேதனை கற்பனை செய்து பார்க்க முடியாததாகவும் சொல்ல முடியாததாகவும் இருக்கின்றது. இதனை உளவியல்ரீதியாக வரையறுக்க முயன்றால் அது அவர்களின் மனதில் வேதனை மிகுந்த நினைவாக இருப்பதை அறியலாம்.

  தமிழகத்தில் குற்றமாகக் கருதப்படும் கொத்தடிமை தொழில் முறை மற்றும் அவர்கள் சுரண்டப்படும் விதம் குறித்த பல நூறு கட்டுரைகள் ஊடகங்களில் காணப்படுகின்றன. இவையாவும் கொத்தடிமை தொழிலாளர்களாக  இருந்த சூழல், அவர்களின் உழைப்பு சுரண்டப்பட்ட விதம், மீட்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து விவரிக்கின்றன.

  ஒரு சாதாரண மனிதனின் மொழியில் வேதனை என்பது மன உளைச்சல் அல்லது வருத்தம் எனப் பொருள்படும். உள வேதனை அல்லது அதிர்ச்சி என்பது ஒரு துயர சம்பவத்தினால் மனதில் ஏற்படும் ஒரு மிகப்பெரிய பாதிப்பாகும். அதிகப்படியான மன அழுத்தத்தினால் மீண்டு வர முடியாத, அதேசமயம் மற்றவர்களுடன்  இயல்பாகப் பழக முடியாத உணர்வுகளை ஏற்படுத்தக் கூடியதே மன வேதனையாகும்.

  தன் வாழ்க்கையில் துயரமான சம்பவத்தைக் கடந்த ஒவ்வொரு மனிதனும் முழுமையாக மீண்டு வர உளவியல்ரீதியான ஆலோசனை அவசியம். அவ்வாறு மனதளவில் தேற்றப்பட்டவர்கள் கடந்த கால அதிர்ச்சியிலிருந்து மட்டுமல்லாமல் வாழ்க்கையைச் சுதந்திரமாகவும் நம்பிக்கையுடனும் வாழ முடியும்.

  கொத்தடிமையிலிருந்து விடுதலையான தொழிலாளர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்கப் பல அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவர்கள் மற்றவர்களைப் போல சமூகத்தில் இணைந்து வாழவும் வாழ்க்கையில் முழுமையான முன்னேற்றம் அடையவும் உளவியல்ரீதியான ஆலோசனை உதவி அவசியமாகிறது.

  இறுதியாக நான் கூற விரும்புவது மிகுந்த துயரில் இருந்து மீண்டு வந்த ஒவ்வொரு மனிதனுக்கும் சமூக உளவியல் மற்றும் சமூக உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் வகையில் ஆலோசனை  வழங்குவது அவசியம். சில சமயம் உளவியல்ரீதியான  சொற்களைப் பயன்படுத்தாமல்  அவர்களுக்குச்  சுதந்திரமான வாழ்க்கை வாழ வழிவகை செய்வதே நம் அனைவரின் பங்காக அமைகிறது.

  வாழ்க்கை என்பது முழுமையாக வாழத்தான். ஒவ்வொரு மனிதனும் அதனை முழுமையாகப் பெற உதவி செய்வதே நம் கடமையாகும். முக்கியமாக எளிதில் பாதிக்கப்படக் கூடிய கொத்தடிமை முறையிலிருந்து விடுதலையான தொழிலாளர்களை முழுமையான வாழ்க்கையை வாழ வழிவகை செய்வதே நம் தலயாய சமுதாயப் பொறுப்பாகும். 

  - அக்‌ஷா ஜான்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai