யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் 
யுகாதிக்கு வாழ்த்தியவர்கள் தமிழ் வருடப் பிறப்புக்கு வாழ்த்து சொல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!

தெலுங்கு வருடப் பிறப்புக்கு நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

இன்னும் சில தினங்களில் பொதுத்தேர்தல் நம்மை கடந்து செல்லப்போகிறது. தமிழகம் இதுவரை சந்தித்திராத தேர்தல் இது. தனிப்பட்ட செல்வாக்கால் கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். வலுவான கூட்டணி அமைத்து கட்சிகள் வெற்றி பெற்றதை பார்த்திருக்கிறோம். இரவோடு இரவாக பணத்தை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றியை வாங்கிய கட்சிகளையும் பார்த்திருக்கிறோம். ஆனால், இன்றைய தேர்தல் இந்த அணுகுமுறைகளை தூக்கியெறிந்துவிட்டு புதிய பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகம் எல்லா அரசியல் கட்சியினரிடமும் ஏற்பட்டிருக்கிறது. எதைக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வோம், யார் பேசினாலும் அமைதியாக கேட்போம். ஆனால் வாக்களிக்கும் போது மட்டும் ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்போம்', என்ற நிலைக்கு தமிழக வாக்காளர்கள் தயாராகி வருகிறார்கள். இதை அரசியல் கட்சிகள் புரிந்து வைத்திருக்கின்றன. அதன் விளைவுதான், ‘நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல', என்று போட்டி போட்டுக்கொண்டு தன்னிலை விளக்கம் கொடுத்துவருகிறார்கள் அரசியல் கட்சிகள்.

சில மாதங்களுக்கு முன்வரை ஒரு தலைவர் மேடையில் இந்துக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தி பேசுவார், அதை ஒரு கூட்டம் கைத்தட்டி ரசிக்கும். அந்த நிலை இன்று நிச்சயமாக இல்லை. அப்படியானால் இந்துவிரோத சிந்தனை மாறிவிட்டதா? அதற்கும் ‘நிச்சயமாக இல்லை' என்றுதான் பதில் வரும். இந்து விரோத சிந்தனைகளின் நாக்குகளை கட்டிப்போட்டிருக்கிறது இந்துக்களின் வாக்கு.

தமிழக தலைவர்கள் பலர் பலமுறை இந்து உணர்வுகளை கொச்சைப் படுத்தியிருக்கிறார்கள். அவற்றிலிருந்து ஒரு சோறு பதத்தை மட்டுமே பார்ப்போம்.

சில நாட்களுக்கு முன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சனாதனத்துக்கு எதிராக பேசினார். ‘சனாதனம் அறிவியலுக்கு மாறாக பேசுவது. அறிவியல் முறைப்படி ஆணும், பெண்ணும் இணைந்தால்தான் குழந்தைகள் பிறக்கும். அதுதான் பகுத்தறிவோடு தொடர்புடையது. ஆனால் இந்து தர்மம் என்ன சொல்கிறது என்றால், “ஐய்யப்பனே ஆம்பளைக்கும், ஆம்பளைக்கும் பிறந்த கடவுள்தான் என்கிறார். அதுதான் சனாதனம். மகாவிஷ்ணுவும், மஹா சிவனும் காட்டிலே சேர்ந்து, மஹாவிஷ்ணு பெண் அவதாரம் எடுத்து. . . என்று பேசிக்கொண்டே போகிறார்.

மரியாதைக்குறிய திருமாவளவன் அவர்களே! ஓட்டுக்கு நோட்டு கொடுப்பதை எந்த அறிவியல் சொல்லியிருக்கிறது. கை நீட்டி காசு வாங்கியவன் நமக்குத்தான் ஓட்டு போடுவான் என்ற எண்ணத்தை எந்த அறிவியல் சொல்லியிருக்கிறது? இவையெல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில்தான். மிண்ணனு ஓட்டு இயந்திரம் வேண்டுமானால் அறிவியலின் படி இயங்கலாம், ஓட்டு போடுபவன் நம்பிக்கையினால் மட்டுமே இயங்குகிறான். அதனால்தான் தோற்றுப் போனபின் அரசியல்வாதிகள் பணம் வாங்கிய வாக்காளனை திட்டாமல், அறிவியலில் பிறந்த ஓட்டு இயந்திரத்தை குறை சொல்கிறார்கள். அறிவியல் மட்டுமே அடிப்படை என்றால், தீட்சதர்கள் விபூதி பூசும்போது மறுத்திருக்க வேண்டும். இஸ்லாமியர் வசிக்கும் பகுதிகளில் குல்லாவோடு சென்றிருக்கக்கூடாது. தலையில் கைவைத்து ஆசீர்வதிக்கும் கிருஸ்தவ சகோதரரை அனுமதித்திருக்கக்கூடாது.

‘பெண் பக்தர்கள் பூ, பொட்டு, புதுச்சேலை அணிந்து கோவிலுக்கு செல்வது பூசாரியுடன் . . . .” என்ற சீச்சி கருத்தை பகிரங்கமாக ஆதரித்தவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை வேட்பாளர் சு. வெங்கடேசன். இது இந்து மதத்திற்கு எதிரான பேச்சு இல்லையா? கம்யூனிஸம் இதைத்தான் கற்பித்ததா?

இஸ்லாமிய சகோதரரின் திருமணத்திற்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் இஸ்லாமிய திருமணத்தையும் இந்து திருமணத்தையும் ஒப்பிட்டு, இந்துக்களை கேவலப்படுத்தினார். இதை நாடறியும்.

சுப வீரபாண்டியனும், வீரமணியும் இந்துக்களின் உணர்வுகளை கேவலப்படுத்துவதையே தொழிலாக தொடர்ந்து செய்து வருகிறார்கள். சமீபத்தில் ‘பொள்ளாச்சி சம்பவத்தையும், பகவான் கிருஷ்ணரையும் ஒப்பிட்டு பேசினார் வீரமணி. கள்ளழகர் ஆற்றில் இறங்குவதையும் கொச்சைப்படுத்திப் பேசினார். மகாபாரதமே விபச்சார ஏடு என்றெல்லாம் பேசினார்.

இந்து என்றால் திருடன் என்று பொருள், ராமன் என்ன இன்ஜினியரா? ராமன் குடிகாரன்! என்றெல்லாம் பேசினார் முன்னாள் முதல்வர் கருணாநிதி.

கடவுள் அப்படி ஒரு சக்தி வாய்ந்தவர் என்றால் உண்டியலுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் எதற்கு? என்று திருப்பதி பெருமாளை கிண்டலடித்தார் கனிமொழி.

திமுக தலைமை கிருஸ்மஸ் கொண்டாடுகிறது, இஸ்லாம் தரப்பு கொடுக்கும் நோன்பு கஞ்சி குடிக்கிறது. ஏன் தீபாவளி கொண்டாடுவதில்லை? என்ற கேள்விக்கு, “ஆரியன் திராவிடனை வென்ற நாள் தீபாவளி. அதை கொண்டாட முடியாது”, என்று பேசுகிறார் திமுகவைச் சேர்ந்த கிருஸ்தவ மதபோதகர் எஸ்ரா சற்குணம்.

இவர்களையெல்லாம் மிஞ்சும் விதமாக “காவித் தீவிரவாதம்” என்ற பதத்தை அடிக்கடி பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி. தீவிரவாதத்திற்கு நிறம் பூசுவது சரியா? புல்வாமா உட்பட பாகிஸ்தானிலிருந்து முடுக்கிவிடப்படும் தீவிரவாத தாக்குதலை ஒருமுறையாவது பச்சை தீவிரவாதம் என்று சொல்லியிருக்கிறாரா? ஒருவேளை பச்சைத் தீவிரவாதம் என்று சொல்லியிருந்தால், அதுவும் தவறு. ஏனென்றால், தீவிரவாதத்திற்கு நிறம் கிடையாது. இந்துக்களாகிய நாங்கள், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சார்ந்த தீவிரவாத அமைப்பின் பெயரைக்கொண்டு மட்டுமே குறிப்பிடுகிறோம். இந்தப் பண்பை ராகுல்காந்தி எங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் தலைவர்கள் பேசிய பேச்சின் சிறு துளி மட்டுமே. மக்கள் மனத்தில் இருக்கும் ஒரு கேள்வி, ‘அதெப்படி ஒரு கூட்டணியில் இருக்கும் பலர், தங்களுக்கென தனியாக கொள்கைகள் கொண்டிருந்தாலும், இந்து எதிர்ப்பு என்ற நிலையில் ஒரே நேர்க்கோட்டில் செயல்படுகிறார்கள்? அப்படியானால் இவர்கள் இந்து எதிர்ப்பாளர்கள் என்று நாங்கள் நினைத்தால் அதில் தவறில்லையே? பாஜக எதிர்ப்பிற்கும், இந்து எதிர்ப்பிற்கும் வித்தியாசம் தெரியவில்லையா? அல்லது வித்தியாசம் தெரியாதமாதிரி சேற்றைவாரி இறைக்கிறார்களா?

தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ் கட்சியின் தோழர்கள். காங்கிரஸ் வெற்றிக்கு பாடுபடுகிறார்கள். கேரளத்தில் காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் பரம எதிரி. கட்சி, கொள்கையெல்லாம் இடத்துக்கு இடம் மாறுகிறது. ஆனால், சபரிமலை விவகாரத்தில் தமிழக கம்யூனிஸ்டுகளும், கேரள கம்யூனிஸ்டுகளும் ஒரே திசையில் பயணிக்கிறார்கள். அதெப்படி?

இவையெல்லாம், ‘இந்துக்களுக்கு எதிரானவர்களை ஒன்று திரட்ட செய்யப்படும் முயற்சிகள்', என்று நினைக்கத் தோன்றுகிறது. அதெல்லாம் சரி, இவர்களுக்கு எதிராக இந்துக்கள் அனைவரும் ஓரணியில் திரளமாட்டார்கள் என்று இவர்கள் எப்படி நினைக்கிறார்கள்? ஒருவேளை இந்துக்கள் இந்த தேர்தலில் இவர்களை புறக்கணிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், அடுத்த தேர்தலில் இந்துக்களை திருப்திபடுத்த பிற மதத்தவர்களின் நம்பிக்கைகளை இவர்கள் கொச்சைப்படுத்துவார்கள். இதுதான் பிரித்தாளும் சூழ்ச்சி. இதை மாற்று மதத்தவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

திடீரென்று கடந்த இரண்டு நாட்களாக ஸ்டாலின் அவர்களும், திமுகவைச் சேர்ந்த தலைவர்களும், ‘திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியல்ல' என்ற தன்னிலை விளக்கத்தை கொடுக்கிறார்கள்.

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதை.

ஒரு காடு. அங்கு ஒரு இளம் புலி ஒன்று வசித்துவந்தது. பார்த்தாலே குலை நடுங்கவைக்கும் கொடூர உருவம்.

புலிக்கு ஒரு குணம் உண்டு. இளம் வயதில் தன் குகைக்கு பக்கத்தில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாடாது. பல கிலோமீட்டர் பயணித்து, தன் இலக்கை துரத்தி வேட்டையாடுவதே அதற்கு பிடித்தமானது. அதுதான் கெத்து, தெனாவட்டு என்று எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக்கொள்ளலாம். அப்படித்தான் இந்தப் புலியும் தனக்கு வேண்டிய உணவை தேடி தொலைவிற்கு சென்று, வேட்டையாடி சாப்பிட்டது.

பாதிக்கப்பட்ட விலங்குகள் புலியிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்தன. ஓரிடத்தில் கூடி பேசின. வயதான மான் ஒரு யோசனையைச் சொன்னது.

‘விலங்குகளே! நாமெல்லாம் புலிக்கு பயந்து வெகு தொலைவில் ஓடி ஒளிந்தால், இந்த புலி நம்மை கண்டுபிடித்து வேட்டையாடி கொல்கிறது. ஆகையால் ஓடி ஒளிவது புத்திசாலித்தனமல்ல. அதே நேரத்தில் அதோடு சண்டையிட்டு அதை ஜெயிப்பதோ, கொல்வதோ இயலாத காரியம். ஆகையால், நாமெல்லாம் அதன் குகைக்கு அருகில் சென்று வாழ்வோம். புலி நம்மை ஒன்றும் செய்யாது. பயந்து ஓடி உயிரைவிடுவதை விட, பக்கத்தில் இருந்து தைரியத்தை மறைத்து பயப்படுவோம்', என்றது அந்த மான்.

அருமையான யோசனை என்றன மற்ற விலங்குகள். அதன்படி விலங்குகள் புலியின் குகையைச் சுற்றி அமர்ந்தன. புலி குகைக்கு வெளியே வந்தது. பக்கத்தில் இருந்த விலங்குகளை கண்டுகொள்ளாமல் தொலைதூர வேட்டைக்கு புறப்பட்டது. விலங்குகளுக்கு மகிழ்ச்சி. இப்படியே மாதங்கள் ஓடின. புலிக்கு முதுமையின் அறிகுறிகள் தென்பட்டன. தன்னால் விலங்குகளை துரத்திப் பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை குறையத்தொடங்கியது. சட்டென்று நரியின் நினைவு அதற்கு வந்தது. நரியை சந்தித்து தன் நிலையை சொல்லியது.

‘புலியாரே! கவலை வேண்டாம். பக்கத்தில் இருக்கும் விலங்குகளை பிடித்து சாப்பிடுங்கள். அதே நேரத்தில் அது அந்த விலங்குகளுக்கு தெரியக்கூடாது. அவைகளுக்கு உங்கள் மீது மதிப்பு, மரியாதை, பயம் மட்டுமே இருக்க வேண்டும்', என்றது.

‘ஒரு விலங்கை சாப்பிட்டாலே மற்ற விலங்குகள் அந்த இடத்தை விட்டு ஓடிவிடும். அதன் பிறகு மதிப்பு, மரியாதை, பயமெல்லாம் இருந்து என்ன பயன்', என்று கேட்டது புலி.

சற்று பொறுங்கள்!' என்று சொல்லி புலியை தன்னுடன் விலங்குகள் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தது.

‘விலங்குகளே! நமது புலியார் இனி மாமிசங்களை சாப்பிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இனி அஹிம்சை மட்டுமே அவரின் கொள்கை. ஆகையால், நீங்கள் அவர் மீது வைத்திருக்கும் பயத்தை விட்டொழியுங்கள். அவருடன் சகஜமாக பழகுங்கள்', என்று சொல்லியது நரி.

‘இதை எப்படி நம்புவது?' என்று கேட்டது மான்.

‘இதை புலியே என்னிடம் சொன்னார். இனி புலி உங்களை எதுவும் செய்யமாட்டார். புலியின் பேச்சை நம்புவதற்கு தயக்கமாக இருந்தால் என் பேச்சை நம்புங்கள்', என்று பேசியது நரி.

‘அப்படியா! சரி நாங்கள் நம்புகிறோம். ஆனால் இன்னொரு பிரச்னை இருக்கிறது. புலியின் உருவத்தை பார்த்தாலே பயமாக இருக்கிறது. அதன் பல், கண்கள், வாய் ஆகியவை எங்களுக்கு பயத்தை தருகிறது. பயத்தோடு எப்படி நட்பாக பழக முடியும்', என்று கேட்டது மான்.

ஓ... இதுதான் பிரச்னையா! கவலை வேண்டாம்', என்று சொல்லி பக்கத்தில் கிடந்த உடைந்த பழைய மண் சட்டியை எடுத்து புலியின் தலையில் மாட்டிவிட்டது நரி.

‘இப்போது புலியை பாருங்கள்! உங்களுக்கு பயமே இருக்காது. வாருங்கள் நட்போடு பழகலாம்', என்றது நரி.

நரியாரே! அருமையான யோசனை. ஆனால், முடிவெடுக்க எங்களுக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். நாளை காலை எங்கள் முடிவைச் சொல்கிறோம்', என்றது மான்.

விலங்குகள் கலைந்து சென்றன.

‘நரியே! பிரச்னையை அருமையாக கையாண்டாய். இனி உடல் நோகாமல் உணவு கிடைக்கும். ஆனால், இன்று பசிக்கிறதே! பசியை தீர்க்க ஏதாவது வழி இருக்கிறதா', என்று கேட்டது புலி.

‘இன்று ஒரு நாள் பசியை அடக்கிக்கொண்டு, நல்லவன் வேஷம் போடுவோம். நாம் நினைத்தது நடந்த பின், மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவோம். அதுவரை நான் வெறும் சைவம். நீங்கள் வீரசைவம்', என்று சொன்னது நரி.

‘நரியே! நீ அதிபுத்திசாலி', என்று பாராட்டியது புலி. அடுத்த நாள் விடிந்தது. குகையின் வாசலில் வந்து நின்றது மான். மான் பேசியது.

‘புலியாரே! உங்கள் கொடூரமான முகத்தை சட்டியால் மூடிவிட்டீர்கள். உங்களை பார்க்கும் போது எங்களுக்கு பயம் ஏற்படவில்லை. கொடூரமான முகத்தையும், கோரமான பல்லையும் இந்த சட்டி மறைத்துக் கொண்டது. அதனால், உங்கள் மீதான எங்கள் பார்வை மாறியிருக்கிறது. ஆனால், உடைந்த சட்டி வழியாக நீங்கள் பார்க்கும் பார்வை மாறியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் எங்கள் தலையில் சட்டியில்லை. அதாவது நீங்கள் பார்க்கும் பார்வை மாறவில்லை. கடந்த காலங்களில் நீங்கள் வலிமையாக இருந்தீர்கள். உங்கள் பக்கத்தில் பயத்தோடு இருப்பது எங்களுக்கு பாதுகாப்பு என்று இருந்தோம். இப்போது நீங்கள் வலிமையில்லாமல் நரியின் உதவியை நாடியிருக்கிறீர்கள். வலிமையில்லாத உங்களை பார்த்து பயப்பட வேண்டிய அவசியமில்லை. உங்களை அழிக்க சிறப்பாக எந்த முயற்சியையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. உங்களைவிட்டு விலகினாலே போதும்', என்று சொல்லி ஓட்டம் பிடித்தது.

நரியைப் பார்த்தது புலி.

‘புலியாரே! நானும் கிளம்பறேன். இந்த சட்டியால இனிமே எந்த பிரயோஜனமும் இல்லை', என்று சொல்லிவிட்டு நகர்ந்தது நரி.

அதற்கு பிறகு நரி என்ன செய்தது, சாப்பிட வழியில்லாத புலி என்ன செய்தது என்பதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தக் கதை நமக்கு உணர்த்தும் மூன்று நீதிகளை தெரிந்துகொள்வொம்.

  • வலிமையானவனின் அநீதி, அவன் வலுவிழந்தவுடன் தோற்றுப்போகும். 
  • முகமூடிகள் உண்மையான முகத்தை காட்டுவதில்லை. புத்திசாலிகள் இதை புரிந்துகொள்வார்கள். 
  • அதிபுத்திசாலிகளின் யோசனை பசிக்கு உதவாது.


ஓ. . . அவருதான் நரியா? இவருதான் புலியா? உடைஞ்ச சட்டிதான் ‘இந்து எதிர்ப்பு இல்லை என்ற கருத்தா? என்று அனுமானங்களில் இறங்க வேண்டாம்.

இந்த நேரத்தில் நேற்று பேசிய  வைகோ, ‘இந்து அமைப்புகள் மீதான விமர்சனங்கள், மத உணர்வுக்கு எதிராக திரிக்கப்படுவதாகவும், மத உணர்வுகளை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் மதிப்பதாகவும், காவல் தெய்வங்களை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட முடியாது', என்று கும்பகோணத்தில் வைகோ பேசியிருக்கிறார்.

வைகோ அவர்களே! நீங்கள் காவல் தெய்வங்களை கொண்டாடியிருந்தால், நாங்கள் ஏன் மற்றொருவர் நிழலில் ஒதுங்கப்போகிறோம். நீண்டகாலம் கோமா நிலையில் இருக்கும் ஒருவர் வேண்டுமானால் இப்படி பேசலாம். நீங்கள் இப்படி பேசலாமா? இந்து உணர்வுகளை போட்டி போட்டுக்கொண்டு ஒரு தரப்பு தொடர்ந்து அவமதிக்கும் போது அவை ஏன் உங்கள் காதுகளை எட்டவில்லை?

இன்று தெலுங்கு வருடப் பிறப்பு. நேற்றே ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டார்கள். இன்னும் சில நாட்களில் தமிழ்வருட பிறப்பு வரப்போகிறது. அப்போது பார்ப்போம் இவர்கள் தமிழ் வருடப் பிறப்பிற்கும் வாழ்த்து சொல்வார்களா என்று!

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com