தேர்தல் ஸ்பெஷல்: யாருக்கு வேலூர்?

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்குவங்கி சிதறாமல் ஜெயலலிதாவிற்கே கிடைத்தது. ஆனால் திமுகவின் வாக்குகள் யாவற்றையும் ஏ.சி.சண்முகம் சிதறவைத்தார்.
தேர்தல் ஸ்பெஷல்: யாருக்கு வேலூர்?

புதிய நீதிக்கட்சியின் ஏ.சி.சண்முகத்திற்கும், திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்கும் நேரடி யுத்தம் நடக்கும் தொகுதி வேலூர். தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் உற்றுநோக்கும் தொகுதியாகவும் உள்ளது.

2014 மக்களவைத் தேர்தலில் தேமுதிக, பாஜக, பாமக, மதிமுக ஆகிய முதன்மைக் கட்சிகளுடன்  கூட்டணி சேர்ந்து தாமரைச் சின்னத்தில் போட்டியிட்ட ஏ.சி.சண்முகம் அதிமுகவிற்கு அடுத்து இரண்டாம் இடம் பிடித்தார். திமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. தற்போது அந்தக் கூட்டணியிலிருந்து மதிமுக விலகிய நிலையில் வலுவான வாக்குவங்கி கொண்ட அதிமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதால் நிச்சயம் வெற்றி பெற்றுவிட முடியும் என்று ஏ.சி.சண்முகம் நம்புகிறார்.

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக் போட்டியிட்டதால் ஏசி சண்முகத்திற்கு வலுவான சவால் இல்லாமல் போனது. தற்போது திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுவதால் படைவலிமையிலும், பணவலிமையிலும் இரண்டு வேட்பாளர்களும் சம ஆற்றலுடன் உள்ளனர்.

ஏ.சி.சண்முகத்திற்கும், கதிர் ஆனந்திற்கும் இடையே தான் கடுமையான போட்டி நிலவினாலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் முன்னாள் அமைச்சர் கே.பாண்டுரங்கன், மக்கள் நீதிமையக் கட்சியின் வேட்பாளர் சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபாலட்சுமி ஆகியோர் வாக்குகளைப் பிரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பர்.

வேலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை திராவிடக் கட்சிகளுக்கு அடுத்துக் காங்கிரஸ்க்கும், சிறிதளவாக இடதுசாரிகளுக்குச் செல்வாக்கு உண்டு. ஆனால் பாமகவிற்கும் வலிமையான வாக்குவங்கி உள்ளது.  தேமுதிகவின் வாக்குவங்கி ஏ.சி.சண்முகத்திற்கும் மதிமுகவின் வாக்குவங்கி கதிர் ஆனந்திற்கும் சிறுதுளி பெருவெள்ளம் போல் கைகொடுக்கலாம். பாஜகவைப் பொருத்தவரை இந்த மாவட்டத்தில் வாக்குவங்கி குறைவு எனினும் ஜாதிச் சங்கங்களைக் கட்டமைத்து ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாம்கள் வேலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே நடத்தப்பட்டதும், இந்துமுன்னணி சிறுகிளைகளும் பாஜகவின் வாக்குவங்கியாக மாறி ஏ.சி.சண்முகத்திற்குக் கைகொடுக்கலாம். ஆனால் திராவிடர் கழகம் திமுகவிற்கு ஆதரவு தருவதால் கதிர் ஆனந்திற்குப் பகுத்தறிவு சார்ந்த இயக்கத்தினரின் வாக்குகள் கைகொடுக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளின் கட்டமைப்பும் வேலூர் மாவட்டத்தில் நிலைத்தன்மை உள்ளது என்பதால் ஏ.சி.சண்முகத்திற்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது. பாஜகவிற்கு எதிராக சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாகப் பெறமுடியாத அளவிற்கு டிடிவி தினகரன் சார்பான சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவிற்குத் தலைவலியை தருகிறது.

தமிழகத்தில் எந்தக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும் என்கிற கணக்கீட்டிற்கு எப்போதும் வேலூர் மக்களவைத் தொகுதி முன்னுதாரணமாக எடுத்துக் காட்டப்படும். வேலூரில் வெற்றி பெறும் கட்சியே தமிழகத்தில் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு என்று சொல்லப்பட்டாலும் வேலூரில் கடுமையான இழுபறி நிலவுகிறது. இதற்குக் காரணம் ஏ.சி.சண்முகம் தன்னுடைய சுயஜாதி சார்ந்த வாக்காளர்களை அவரவர்களின் கட்சிகளைக் கடந்து தன்னகத்தே ஈர்த்துள்ளார்.

2014 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்குவங்கி சிதறாமல் ஜெயலலிதாவிற்கே கிடைத்தது. ஆனால் திமுகவின் வாக்குகளை ஏ.சி.சண்முகம் சிதறவைத்தார். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பிச்சனூர் போன்ற பகுதிகளில் அவர் சுயஜாதி சார்ந்த திமுகவினரின் வாக்குகளைக் கவர்ந்தார். இதேபோல் வேலூர் மாவட்டம் முழுவதும் பிற கட்சிகளிருந்தாலும் சுயஜாதிப் பாசத்தில் ஏ.சி.சண்முகத்திற்கே அந்தச் சமுதாயத்தினர் வாக்களித்தனர் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2011ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களின் போதும் சட்டமன்றத் தேர்தலின் போதும் திமுகவிற்குக் கிடைத்த வாக்குகள் 2014 தேர்தலில் குறைந்து போனதும், ஏ.சி.சண்முகத்திற்கு வாக்குகள் அவர் சுயஜாதி சார்ந்த வாக்குச் சாவடிகளில் அதிகரித்ததும் இந்த உண்மையை மெய்ப்பித்தன.

பேரறிஞர் அண்ணா கடவுள், ஜாதிகள் ஒழிப்பிற்குக் குரல் கொடுத்திருந்தாலும் அவரைத் தங்களின் ஜாதிப் பிரதிநிதியாகப் பார்த்ததாலேயே காஞ்சிபுரம், ஆரணி, வேலூர் போன்ற மாவட்டங்களின் திமுகவின் பலம் உயர்ந்ததாகவும் காங்கிரஸின் வாக்குகள் சிதைந்ததாகவும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அறிஞர் அண்ணா ஆட்சியின் போது பெரியார் கொள்கைகள் பலவற்றை நிறைவேற்றியதன் மூலம் தன் மீதான விமர்சங்களுக்குப் பதில் அளித்தார். எனினும்,  அறிஞர் அண்ணாவும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பகுத்தறிவுச் சிந்தனையுள்ளவர்கள், கிருபானந்தவாரியாரோ ஆன்மீகச் சிந்தனையுள்ளவர். ஆனால் இவர்கள் மூவரின் படங்களையும் தங்கள் இல்ல நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ்களில் சமமாகவே அச்சிடுவதின் மூலம் தங்களின் சுயஜாதிப் பற்றை வெளிபடுத்திக் கொள்வதில் பெருமைபடும் ஜாதிப் பற்றாளர்கள் இன்னும் உள்ளனர். இந்தச் ஜாதிப் பற்று வாக்காளர்களை ஒருங்கிணைப்பதில் கடந்த தேர்தலில் ஏ.சி.சண்முகம் கவனம் செலுத்தியதாகச் சொல்லப்படுவது போல் தற்போதைய தேர்தலிலும் இந்தக் கவனத்தை ஏ.சி.சண்முகம் கைவிட மாட்டார் எனத் தெரிகிறது.

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கீ.வ.குப்பம் ஆகிய தனித்தொகுதிகள் இருந்தாலும் அந்தத் தொகுதிகளின் நகரச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் போன்ற அதிகாரப் பதவிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே சுயஜாதி சார்ந்த வாக்குவங்கியைப் பெறுவதில் ஏ.சி.சண்முகத்திற்குச் சிக்கல் இருக்காது என்று கணிக்கப்படுகிறது.

பாமக எதிரணியில் இருப்பதால் தன்னுடைய சுயஜாதி வாக்குகளை முழுமையாகப் பெறுவதில் கதிர் ஆனந்திற்குச் சிக்கல் உள்ளது. ஆனால் துரைமுருகன் திராவிட இயக்கத்தின் தூண்களில் ஒருவராகவும் பகுத்தறிவு பேசக்கூடியவராகவும் அறியப்பட்டாலும் அவருடைய மகன் தன் சுயஜாதி சார்ந்த அறக்கட்டளை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை எப்போதாவது காண முடிவதாலும் அவரின் சமூகவாக்குகள் அவருக்குக் கிடைத்துவிடுமா என்று தெரியவில்லை. ஏ.சி.சண்முகம் போல் ஜாதிக்கட்சி நடத்துபவராக கதிர் ஆனந்த் அறியப்படாததால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் திராவிடர் சிந்தனையுள்ளோரின் வாக்குகள் கதிர்ஆனந்திற்கு எளிதில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

ஆளுங்கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை முழுமையாக அறுவடை செய்வதற்கு மக்கள் நீதி மையமும், நாம் தமிழர் கட்சியும் நிச்சயம் திமுகவிற்குப் போட்டியாக இருக்கும் என்றாலும், வாக்குகள் சிதறாமல் இருக்க பெரிய கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற வாக்காளர்களின் மனநிலையும் உதயசூரியன் மற்றும் இரட்டை இலையை நோக்கியே செல்லும்.

குடியாத்தம், ஆம்பூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடப்பதால் ஆளுங்கட்சியும், திமுகவும்  இந்தத் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.  ஆங்கிலேயர்களை விரட்டியடிக்க 1806-ல் நிகழ்த்தப்பட்ட புரட்சி, வேலூர் மண்ணுக்குப் பெருமையைச் சேர்த்திருக்கிறது. ஆனால் அந்தப் புரட்சி சிந்தனையெல்லாம் கண்காட்சியாக மாற்றப்பட்டுவிட்டதாலும், கடைசி நேரத்தில் ஓட்டுக்குப் பணம் என்கிற அவலம் அரங்கேறக் கூடிய சூழல் உள்ளதாலும் நடுநிலையாளர்களின் வாக்குகளே இந்தத் தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காரணியாக இருக்கும்.

எது எப்படியிருப்பினும் திமுகவின் வாக்குவங்கி 2014 மக்களவைத் தேர்தலில் ஜாதி வாக்குகளாக இடம்பெயர்ந்ததை இந்தத் தேர்தலில் துரைமுருகன் தடுத்து நிறுத்தாவிட்டால் அவர் மகனின் வெற்றியும் காணாமல் போகும், அவர் நம்பும் திராவிடக் கொள்கையும் வேலூர் மாவட்டத்தில் கேள்விக்குறியாகும்.

சி. சரவணன் 9360534055 senthamizhsaravanan@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com