சுடச்சுட

  
  NarendraMOdi12

   

  2019 மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் தேசப் பாதுகாப்பு, ராணுவ நடவடிக்கைகள், வேலைவாய்ப்பு, சபரிமலை விவகாரம், சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். 

  நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை செய்து வரும் நிலையில், கடந்த 2014 தேர்தலுக்கும், தற்போதுக்கும் உள்ள மக்களின் மனநிலை எவ்வாறு உள்ளது?

  நாடு முழுவதும் தினந்தோறும் 3 தேர்தல் பரப்புரைகளில் பங்கேற்று வருகிறேன். ஒவ்வொரு பரப்புரையின் போதும் கடந்த முறையை விட ஏராளமான மக்கள் பங்கேற்கின்றனர். இதன்மூலமே மக்களின் மனநிலையும் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதை நாம் அனைவரும் காண முடிகிறது.

  ஒவ்வொரு முறையும் தேர்தலின் போது ஆளும்கட்சியை வீழ்த்துவதற்காக எதிர்கட்சிகளுக்கு வாக்களிக்கவே மக்கள் விரும்புவார்கள். ஆனால், இம்முறை தான் ஒரே அரசை மறுபடியும் ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராகியுள்ளனர். ஏனென்றால் இந்த அரசு தான் மக்களின் வாழ்வாதாரத்தை எழுச்சிமிக்கதாக மாற்றியுள்ளது.

  கடந்த 2014 தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்பினர். தற்போது 2019 தேர்தலில் அந்த மாற்றம் ஏற்பட்டு நன்மைகள் பல அடைந்துள்ளதை மக்கள் உணர்ந்துள்ளனர். அந்த நம்பிக்கையில் இதே மாற்றம் தொடர வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகின்றனர். கடந்த 2014 தேர்தலின் போது ஊழல் ஆட்சியால் மக்கள் கவலையடைந்திருந்தனர். எனவே ஊழல் இல்லாத அரசு அமைய வேண்டும் என்று விரும்பியிருந்தனர். அதை மெய்ப்பிக்கும் விதமாக ஊழலற்ற அரசை நாங்கள் வழங்கியுள்ளோம்.

  மிகவும் பின்தங்கிய நாடுகளில் இருந்து மிக வேகமாக முன்னேறும் பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. இதுவே வருகிற 2025-ஆம் ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா வளர்ச்சியடைந்திருக்கும். இந்த அரசின் அனைத்து முயற்சிகளையும் மக்கள் வரவேற்றுள்ளனர். மக்கள் என்றுமே பாஜக-வின் பக்கம் தான் உள்ளனர். 

  ராணுவ நடவடிக்கைகளை உங்கள் சுயலாபத்துக்காக பயன்படுத்துவதாக எதிர்கட்சிகள் விமர்சிக்கிறதே?

  ஒருவேளை விங் கமாண்டர் அபிநந்தன், நாடு திரும்பாமல் இருந்திருந்தால், எதிர்கட்சிகள் மௌனமாக இருந்திருக்குமா? பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் மீதான ராணுவ நடவடிக்கையை நாம் பெறுமையுடன் கொண்டாடக் கூடாதா? அவர்கள் மண்ணிலேயே நாம் வெற்றிகண்டது சாதனை இல்லையா? வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சியும் அவர்கள் ஆட்சியில் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கைகளை கொண்டாடட்டும், அதை யாரும் தடுக்கப்போவதில்லை. 

  ஒரு அணை கட்டினால் அது ஆளும் கட்சியின் சாதனை கிடையாதா? அதேபோன்று தான் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை ஆளும் கட்சி சாதனையாக கருதுகிறது. இதில் பலர் எடுத்துள்ள இரட்டை நிலைப்பாடு என்னை மிகவும் பாதித்துள்ளது.

  ஒருவேளை மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், பயங்கரவாதத்தை ஒழிக்க போர் ஒன்று மட்டுமே வழி என்று நடுநிலையாளர்களும் குற்றம்சாட்டியிருப்பார்கள். ஆனால், இப்போது வேறு மாதிரி பரப்புரை செய்கிறார்கள். இதில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு காரணம், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா வெற்றிபெறுவது தான்.

  கடந்த முறை மாநிலங்களவை மூலம் தேர்வு செய்யப்பட்டு அமைச்சரானவர்கள் அனைவரையும் இந்த தேர்தலில் மக்களவையில் போட்டியிடச் செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டதா?

  கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து அமைச்சர்களும் ஒரே அணியாக செயல்பட்டனர். ஊழலற்ற, ஆற்றல்மிகு அரசை நாங்கள் வழங்கியுள்ளோம். தற்போதும் ஒரே அணியாக மக்களிடம் சென்று, இந்த நற்பணி தொடர அவர்களின் ஆதரவையும், ஆசியையும் வேண்டுகிறோம். இந்த அரசு எப்போதும் ஒரு அணியாகவே செயல்பட்டுள்ளது. மக்களின் தேவைகளுக்கு இந்த அணிதான் பொறுப்பு. எனவே தேர்தலையும் ஒரு அணியாக நின்று எதிர்கொள்கிறோம்.

  சமீபத்தில் நடந்து முடிந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதா?

  நிச்சயமாக இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஏனென்றால் பல பொய் வாக்குறுதிகளை வழங்கி இம்மாநிலங்களில் ஆட்சிக்கு வந்துள்ள காங்கிரஸ் கட்சியை மக்கள் அடையாளம் கண்டுகொண்டனர். மின்வெட்டு, ஊழல், கிரிமினல் குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகரித்துவிட்டது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிக்கு வந்த 3 மாதங்களில் இம்மாநிலங்களை தங்களின் நிதித் தேவைக்காக மட்டுமே காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது. 

  மக்களின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை காங்கிரஸ் திருடி வருகிறது. நாட்டின் எதிர்காலத்துடனும், குழந்தைகளின் நலமுடனும் காங்கிரஸ் கட்சி விளையாடுகிறது. எனவே இந்த மாற்றத்தை மக்கள் உணர்ந்துவிட்டனர். ஏனென்றால் இந்த செயல்கள் காங்கிரஸ் கட்சியின் டிஎன்ஏ-வில் உள்ளது. அதை யாராலும் மாற்ற முடியாது. எனவே மக்களின் இந்த கோபம், இந்த மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். காங்கிரஸ் கட்சியை மக்கள் மீண்டும் புறக்கணிப்பார்கள்.

  மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் மீது பாஜக பார்வை திரும்புயள்ளது. ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா இப்பகுதி மக்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளதே?

  வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சகோதர, சகோதரிகள் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) மற்றும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா விவகாரங்களை முழுமனதுடன் புரிந்துகொள்வார்கள். இந்த திட்டங்கள் குறித்து காங்கிரஸ் கட்சி தவறான கருத்துக்களை பரப்பி வருகிறது. ஆனால், இந்த பொய் பரப்புரைகள் மக்களிடம் எடுபடாது. இத்தனை ஆண்டுகால ஆட்சியில் காங்கிரஸ் கட்சிதான் நாட்டின் வடகிழக்கு பகுதியை முற்றிலும் புறக்கணித்துள்ளது. 

  சுதந்திரம் அடைந்த 70 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு மின்வசதி கூட ஏற்படுத்தித்தரவில்லை. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் அனைவருக்கும் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு எளிதில் வர்த்தகம் வசதியை ஏற்படுத்தி பொருளாதார நிலை உயர்த்தப்பட்டுள்ளது. 

  மூங்கிலை அறுவடை செய்வதை கூட காங்கிரஸ் அரசாங்கம் சட்டவிரோதமாக அறிவித்திருந்தது. ஆனால், அவை தற்போது களையப்பட்டு, மூங்கில் அறுவடை அதிகரித்துள்ளது. இதனால் அவர்களின் அன்றாட தேவைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. 

  மேற்கு வங்கத்தின் நிலைமை அனைவருக்கும் தெரிந்ததுதான். அங்கு ஒரு தலைவர் மக்களின் நம்பிக்கையை மிக விரைவில் இழந்துவிட்டார். ஆனால் அங்கு பாஜக-வுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் வருகிற மே 23-ஆம் தேதி புதிய வரலாறு உருவாகப் போகிறது. திரிபுராவில் நடந்தது மேற்கு வங்கத்திலும் நடக்கும். 

  கர்நாடகத்தை தென்னிந்தியாவின் வழியாக பயன்படுத்த நினைக்கிறதா பாஜக தமிழகத்தில் அதிமுக-வுடன் கூட்டணி மற்றும் கேரளாவிலும் போட்டியிடுவதன் மூலம் இதை மும்முனைப் போட்டியாக மாற்றுகிறதா?

  கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என நாட்டின் எந்த பகுதியானாலும், மக்கள் இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் பாஜக ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான கட்சி என எதிர்கட்சிகள் வீண் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. அதை மக்களின் ஆதரவுடன் பாஜக முறியடித்துள்ளது. காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாஜக-வுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். 

  நலத்திட்டங்களை பாஜக-வால் மட்டுமே அர்ப்பணிப்புடன் ஏற்படுத்த முடியும் என்பதை தென்னிந்திய மக்கள் உணர்ந்துள்ளனர். கேரள மாநிலத்தில் பாஜக என்றும் மக்களின் அனைத்து பிரச்னைகளுக்காவும் போராடியுள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்துள்ளது. தென்னிந்தியாவின் சிறந்த தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவகங்களை கூட காங்கிரஸ் அரசு அமைக்கவில்லை. ஏனென்றால் தங்களின் சொந்த குடும்பத்தினரின் பெயர்களை மட்டுமே மக்களிடம் திணிக்க காங்கிரஸ் விரும்பும், அதுவே அவர்களின் நோக்கமும் கூட.

  சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதாயம் உள்ளதாக கூறப்படுகிறது. அது உண்மையா?

  பாஜக-வை பொறுத்தவரை சபரிமலை விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. கேரளாவின் கலாச்சாரம் மற்றம் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே பாஜக-வின் விருப்பமாக உள்ளது. சபரிமலை விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களின் கொடிய விருப்பங்களுக்கு இடையூராக பாஜக மட்டுமே உள்ளது. மேலும் அதனால் எங்களுக்கு நிறைய இழப்புகளும் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆதாயம் கருதியெல்லாம் அங்கு பாஜக செயல்படவில்லை. சபரிமலை பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே பாஜக-வின் நிலைப்பாடு.

  தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் இல்லாம் முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. இருந்தாலும் அங்கு இருமுனைப்போட்டி தான் ஏற்பட்டுள்ளது. அதில் எந்தளவுக்கு நம்பிக்கையுடன் உள்ளீர்கள்?

  தமிழகத்தில் உள்ள வாய்ப்புகள் தெளிவாக தெரிகின்றன. அம்மாநிலத்துக்கு எய்ம்ஸ் உள்ளிட்ட சுகாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ராணுவத் தளவாடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆளும் அதிமுகவுடன் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக இணைந்து செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை ஏற்படுத்தி வருகின்றன. மீனவர்களுக்கு பல நலத்திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் அதிக நலத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், காங்கிரஸ்-திமுக கூட்டணி ஊழல் ஆட்சியை நடத்தியது. வாரிசு அரசியலை ஊக்குவித்தது. எந்த மக்கள் நலத்திட்டங்களையும் ஏற்படுத்தவில்லை. தற்போது மக்கள் 4ஜி சேவையை பயன்படுத்தி நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தில் 2ஜி சேவையில் நடந்த ஊழல் மக்கள் மனதில் நீங்கா நினைவாக உள்ளது.

  இளைஞர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இதுகுறித்து உங்கள் கருத்து?

  வாஜ்பாயி அரசு தான் மிகச்சிறந்த வேலைவாய்ப்பு திட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால், வாஜ்பாயி அரசு குறித்து பரப்பிய அதே அவதூறு செய்தியை எதிர்கட்சிகள் இப்போதும் பரப்புகின்றன. மக்கள் விரோத அரசியல்வாதிகளுக்கு தான் வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு இல்லை என்று பொய் பிரசாரம் மட்டும் தான் செய்ய முடியும். ஆனால், அவர்களால் அதை நிரூபிக்க முடியாது. 

  3 வகையிலான வேலைவாய்ப்புகள் உள்ளது. அதன்படி இபிஎஃப்ஓ மற்றும் இஎஸ்ஐசி தகவல்களின் அடிப்படையில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஒவ்வொரு மாதமும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் ஆண்டொன்றுக்கு 1.2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. கடந்த 4 ஆண்டுகளில் மட்டுமே என்பிஎஸ் கீழ் 55 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர்.

  பிரதமரின் ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் 1 கோடி பேர் பயனடைந்துள்ளனர். தகவல்தொழில்நுட்பப் பிரிவில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக நாஸ்காம் தெரிவித்துள்ளது. பிரதமர் முத்ரா யோஜனா உள்ளிட்ட பல திட்டங்களின் மூலமும் பலர் சுயதொழில் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் எம்எஸ்எம்இ மூலம் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக சிஐஐ நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

  கடந்த 4 ஆண்டுகளில் சுற்றுலாத்துறையில் கூட 50 சதவீத வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் வளரும் பொருளாதார நாடக இந்தியா உருவெடுத்துள்ளது. அதிலும் கடந்த 1991-ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான் இதன் வளர்ச்சி அதிகரித்துள்ளது. அந்நிய முதலீடுகள் அதிகரித்துள்ளது. சாலை, ரயில்வே மற்றும் வீடு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளின் வளர்ச்சியின் வேகம் இரட்டிப்பாகியுள்ளது. சிறந்த சுயதொழில் தொடங்கும் நாடாக இந்தியா வளர்ந்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் வேலைவாய்ப்பு பெருகியுள்ளதாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும் மத்திய அரசின் ஆதரவில்லாமல் நடத்திருக்க முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும். வேலைவாய்ப்பில்லாமல் இவை அனைத்தும் சாத்தியமில்லை.  

  பணமதிப்பிழப்பு நடவடிக்கை நியாயமானது தானா?

  ஊழல்வாதிகளுக்கு தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்றும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கை எடுத்த பின்னர் தான் உத்தரப்பிரதேசத்திலும், குஜராத்திலும் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்றோம். இந்த நடவடிக்கைக்கு பிறகு தான் கறுப்பு பணத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு வெளிப்பட்டது. கறுப்பு பணத்தை தடுக்க யாராவது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் நிலவியது. அதை பாஜக வெற்றிகரமாக நடத்திக்காட்டியது. இதனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் கணக்கில் வராத ரூ.1,30,000 கோடி அளவுக்கு வரி மற்றும் அபராதத் தொகையாக வசூலானது. ரூ.50,000 கோடி மதிப்பிலான பத்திரங்கள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ரூ.6,900 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களும், ரூ.1,600 கோடி மதிப்பில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக பதிவுபெறாத 3,38,000 ஷெல் நிறுவனங்கள் கண்டெடுக்கப்பட்டு தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் வரி இரட்டிப்பாகியுள்ளது. அனைத்து பணப்பரிவர்த்தனைகளும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற்று வருகிறது. 

  ரஃபேல் உட்பட பல பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் இணைந்து செயல்பட தவறிவிட்டதா?

  முன்பெல்லாம் ராணுவ ஒப்பந்தங்கள் சர்ச்சையை மட்டும் ஏற்படுத்தவில்லை, அதில் ஊழலும் நடந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ். ரஃபேல் விவகாரத்தில் எந்த சர்ச்சையும் ஏற்படவில்லை. இதில் எவ்வித ஊழலும் நடைபெறக்கூடாது என்பதற்காக இருநாட்டு அரசுகளும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தின. ஆகவே 3-ஆம் நபரின் தலையீடு முற்றிலும் தவிர்க்கப்பட்டது. தனது தந்தையின் மீதுள்ள போஃபர்ஸ் ஊழலை மக்கள் மறக்கும் விதமாக ரஃபேல் ஒப்பந்தம் குறித்து தேவையற்ற பொய்யான தகவல்களை காங்கிரஸ் தலைவர் ராகுல் பரப்பி வருகிறார். ஆனாலும் இதன் உண்மை தன்மை மக்களுக்கு தெரியும். 

  உச்ச நீதிமன்றமும், சிஏஜி குழுவும் அனைத்து அவதூறுகளையும் அம்பலப்படுத்திய பின்னரும், இதுகுறித்து வீண் வதந்திகளை பரப்போவர் மீது கேள்வி எழுப்ப வேண்டியது ஊடகங்களின் கடமையாகும். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் கேள்வி எழுப்பும் தைரியம் அதிகாரம் இல்லாதவர்களிடம் எழுப்ப ஏன் தயக்கம் என்று ஊடகங்கள் தான் விளக்கமளிக்க வேண்டும். 

  பாகிஸ்தான் விவகாரத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறத்த வேண்டும் என்று நாம் கூறினாலும், காஷ்மீர் விவகாரத்துக்கு தான் முதலில் தீர்வு எட்டப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் கூறுகிறார்களே?

  இந்த ஒட்டுமொத்த உலகமும் பயங்கரவாதத்துக்கு எதிராக உள்ளது. அதே நிலைப்பாடு தான் இந்தியாவுடையதும். பயங்கரவாதம் மட்டுமே இன்றுள்ள மிகப்பெரிய பிரச்னையாகும். காஷ்மீர் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா எப்போதும் தயாராக உள்ளது. ஆனால், அதற்கு முன்பு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தெளிவாக உள்ளோம். முதலில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உற்பத்தி அழிக்கப்பட வேண்டும். 

  பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் உலக நாடுகள் ஒரே கருத்துடன் இருக்கும்போது, ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத தலைவன் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தடுத்து வருகிறதே?

  ஒரு காலத்தில் இந்தியாவுடன் ரஷியா மட்டுமே ஆதரவாக செயல்பட்டது. ஆனால், தற்போது ஒட்டுமொத்த உலகமும் நம்முடன் இருக்கிறது. சீனா மட்டும் தான் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ளது. சமீபத்தில் உலகளவில் நடந்த இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் இக்கூட்டமைப்பில் கலந்துகொள்ள ஒருமுறை கூட அழைப்பு வந்ததில்லை. அந்த கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என பாகிஸ்தான் கூறியதை கூட இதர இஸ்லாமிய நாடுகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சர்வதேச நாடுகளுடனான நமது உறவு இன்னும் மேம்பட வேண்டும் என விரும்புகிறேன். 

  பொருளாதார குற்றவாளிகள் தப்பியோடியது குறித்து எதிர்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. வெளிநாடுகளில் அவர்கள் உண்மையில் பாதுகாப்பாக இருக்கிறார்களா?

  நடுநிலையாளர்களிடம் ஒரு கேள்வியை மட்டுமே முன்வைக்கிறேன். அதாவது மைக்கேல் கிறிஸ்டியன், தீபக் தல்வார் மற்றும் ராஜீவ் சக்சேனா ஆகியோரை இங்கு மீண்டும் கொண்டுவந்தது யார்? இவர்கள் அனைவரும் ஐக்கிய முற்போக்குக்கூட்டணி அரசாங்கத்தின் போது ஊழல் செய்து நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தான். மேலும் பலரும் தற்போது சிறைகளில்தான் உள்ளனர். இவ்வாறு தப்பியோடிய அனைவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

  ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சியமைத்தால் நீங்கள் எந்த திட்டத்துக்கு முன்னுரிமை அளிப்பீர்கள்?

  பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் (சங்கல்ப பத்திரம்) உள்ள அனைத்து திட்டங்களும் எனக்கு முக்கியமானதுதான். எனவே மே 23-க்கு பிறகு என்ன செய்யப்போகிறோம் என்பதை ரகசியமாக வைத்துள்ளோம். 

  இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் எதை தவறவிட்டதாக நினைக்கிறீர்கள்?

  சிலர் அடுத்தவர் உழைப்பில் பலன்பெற நினைப்பார்கள். ஆனால், சிலர் தங்களின் உழைப்பில் கிடைத்த சிறு பலனையும் திருப்தியுடன் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், நான் எதிலும் எளிதில் திருப்திபெற மாட்டேன். அதில் தொடர்ந்து சிறப்பான முன்னேற்றத்தை பெற வேண்டும் என்று உழைத்துக்கொண்டிருப்பேன். எனவே இந்த நாட்டின் எதிர்காலம் குறித்த கனவு என் மனதில் என்றும் நீங்காமல் புத்துணர்வுடன் உள்ளது. அது தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்.

  இவ்வாறு நரேந்திர மோடி பேசினார். 


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai