நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரஜினிகாந்த் இதைக் கவனிப்பாரா? ஒரு முக்கிய வேண்டுகோள்!

நதிநீர் இணைப்பை விடவும் உடனடியாக பயன் தரும் திட்டமான கிராம நீர்நிலைகள் சீரமைப்பை கையிலெடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக தகவல் தொடர்பு தொழில்நுட்ப குழு கோரிக்கை வைத்துள்ளது.
நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரஜினிகாந்த் இதைக் கவனிப்பாரா? ஒரு முக்கிய வேண்டுகோள்!

நதிநீர் இணைப்பை விடவும் உடனடியாக பயன் தரும் திட்டமான கிராம நீர்நிலைகள் சீரமைப்பை கையிலெடுங்கள் என்று நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக தகவல் தொடர்பு தொழில்நுட்ப குழு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து தமிழக தகவல் தொடர்பு தொழில்நுட்ப குழு வைத்திருக்கும் கோரிக்கை என்னவென்றால்,

“எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்” என்கிற தங்கள் அறிவிப்பை வரவேற்கிறோம். தமிழ்நாடு தனது ஜனநாயகக்  கடமையை சிறப்பாக ஆற்றிவிட்டு களைப்பாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், தமிழராக, இந்தியராக, சமுதாய ஆர்வலராக, விவசாய ஆர்வலராக, இந்திய கலாச்சார நலன் விரும்புவராக இருப்பவர்கள்  கவனிக்க வேண்டிய வேண்டிய மிக முக்கியப்பணி ஒன்று உள்ளது. "வறட்சி மற்றும் தண்ணீர் பிரச்னை ".

ஏற்கனவே 24  மாவட்டங்கள் வறட்சியானவையாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த வருடம் தண்ணீர் பிரச்னை மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நதி நீர் இணைப்பு என்பது பற்றி தாங்கள் பல ஆண்டுகளாக குரல் கொடுத்துவருகின்றீர்கள். தற்போது நடந்து முடிந்த தேர்தலில்கூட, தண்ணீர் பிரச்னையை தீர்க்க முன்னுரிமை வழங்குபவர்களை தாங்கள் ஆதரிப்பதாக கூறியிருந்தீர்கள். இது தண்ணீர் பிரச்னைக்கு தாங்கள் கொடுக்கும் முன்னுரிமையை முக்கியத்துவத்தை காட்டுகிறது.

நதி நீர் இணைப்பு என்பது அரசின் கொள்கை தொடர்புடையது. அது சாதக பாதக அம்சங்கள் தொடர்பான விவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெறுகின்றன. கொள்கை ரீதியிலான முடிவு எடுக்க எவ்வளவு காலம் ஆகும் என்பது தெரியாது. அப்படியே திட்டம் செயல்படுத்தப்பட ஆரம்பித்தாலும் அதன் பலன் கிடைக்க நிறைய காலம் தேவைப்படும்.

மழை அளவு குறைதல், உரிய நேரத்தில் தேவையான  பெய்யாமலிருத்தல், சில நேரங்களில் அளவிற்கு அதிகமான அளவு பெய்தல் என பல வழிகளில் பிரச்னை அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. உடனடியாகத் தீர்வு ஏற்படுத்தப்படவேண்டிய கட்டாயத்தில் நாடு உள்ளது. இல்லையெனில் பல கிராமங்கள் மக்கள் வாழ்வதற்கு இயலாத ஒன்றாக மாறக்கூடிய ஆபத்து உள்ளது.

நீர் மேலாண்மையில் கிராம நீர் நிலைகளின் பங்கு முக்கியமானது. நீர்தான் விவசாயத்தின் அடிப்படை. நம் முன்னோர்கள் ஆற்றுப்பாசனம், ஏரி/ கண்மாய்ப் பாசனம், கிணற்றுப் பாசனம் என ஏதாவது சில வழிகளில் மிகச்சிறப்பான வழிமுறைகளை  செய்திருந்தனர். பெய்யும் மழை நீரை சரியாக சேகரித்து வைத்துக்கொண்டாலே மாநிலத்தின் தண்ணீர் பிரச்னையை பெருமளவு தீர்த்துக்கொள்ள முடியும்.  இதனடிப்படையிலேயே, இந்தியாவின் தண்ணீர் மனிதர் டாக்டர் ராஜேந்திர சிங் அவர்கள், தமிழகம் தண்ணீருக்காக யாரிடமும் கையேந்தத்தேவையில்லை என்ற கருத்தை வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் விவசாயத்தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு, ஆழ்துளைக்கிணறுகள் தண்ணீருக்கான ஆதாரமாக இருக்கும் என்ற நம்பிக்கை மற்றும் கிராம நீர் நிலைகளுக்கான மராமத்துப்பணிகளை அரசு ஏற்று நடத்த ஆரம்பித்தது போன்ற காரணங்களால் பல கிராம நீர்நிலைகள் மக்களால் கைவிடப்பட்டிருக்கின்றன. அவற்றிக்கான வரத்துக்கால்வாய்கள் தூர்ந்து போய், மழை நீர், நீர்நிலைகளுக்கு சென்று சேராமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நம்பிக்கைகொடுக்கும் விதமாக, கடந்த 17 ஆண்டுகளாக விவசாயப்பிரச்னைக்கு தீர்வுகாண முயன்று வரும் தமிழக தகவல் தொடர்பு தொழில்நுட்பக்குழு, ஆந்திர மாநிலத்தில்  தாங்கள் வெற்றிகரமாக  செயல்படுத்திய திட்டத்தின் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றியம், வேப்பங்குளம் பஞ்சாயத்தில் நீர் மேலாண்மை மற்றும் பயிர்மேலாண்மையை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது. மக்கள் நிதி பங்களிப்புடன் சுமார் ஐந்து லட்சம் ரூபாயில் நான்கு கண்மாய்களை (சுமார் 120 ஏக்க பரப்பளவு), அவற்றின் நீர்வரத்துக்களை (ஏழு நீர்  வரத்துக்கால்வாய்கள், சுமார் பதினைந்து கிலோமீட்டர் நீளம்)  சரி  செய்து  இருக்கின்றனர். கடந்த ஆண்டு  சிவகங்கை மாவட்டத்தில் மழையளவு மிகக்குறைவாக இருந்தபோதிலும், பெய்த மழை முக்கால் கண்மாய்களை நிரப்பியது. விவசாய மேலாண்மை ஒருங்கிணைத்து சுமார் 250 ஏக்கரில் நெல் பயிரிட்டு வெற்றிகரமாக அறுவடை செய்திருக்கின்றது. ஐந்து லட்ச ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட நீர் மேலாண்மை முயற்சியினால் இன்று வேப்பங்குளம் கிராமம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நெல் உற்பத்தி செய்த கிராமமாக மாறியிருக்கிறது. விரைவில் இது மூன்று கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த முடியும் என்கிற நம்பிக்கையில் இருக்கின்றனர் கிராம மக்கள்.

வேப்பங்குளம் கிராமம் இந்த நாட்டிற்கு நம்பிக்கையோடு தெரிவிக்கும் கருத்து: 'கிராம நீர்நிலைகள் சீரமைப்பு மக்கள் நினைத்தால் இன்றும் சாத்தியமே' என்பதுதான். ஆனால் அதற்குத்தேவை உந்துதல், வழி நடத்துதல்.

எங்களை போன்ற சில நபர்களால் இது சாத்தியமாகின்றபோது, தங்களைப்போன்ற மக்கள் கொண்டாடும் பிரபலங்கள், குறிப்பாக அரசியலில் பிரவேசிப்பவர்கள், அதிலும் முக்கியமாக நீர் பிரச்னைக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள்  கிராம நீர் மேலாண்மையின் முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துச்சொல்வது மற்றும்  தங்கள் கட்சி/ ரசிகர் மன்ற நிர்வாகிகள்/ ரசிகர்கள்/ தொண்டர்கள் மூலம் பெரிய அளவில் கிராம நீர்நிலைகள் சீரமைப்பில் நேரடியாக ஈடுபடச்செய்வது என்பது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் முயற்சியில் அதிசயிக்கத்தக்க பலனை வழங்கும்.

தங்களுக்கு எங்கள் தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில், தாங்கள் நதி நீர் இணைப்பிற்கு வழங்க அறிவித்துள்ள ஒரு கோடி ரூபாய் போல், கிராம நீர் நிலைகள் சீரமைப்பிற்கு என ஒரு நிதியை ஒதுக்கி, உடனடியாக செயல்பட ஆரம்பியுங்கள். இது தமிழ் நாடு கிராமப்புற நீர் நிலைகள் பெரும்பாலானவை இந்த ஆண்டே சீரமைப்பு பெற்று, வரும் பருவகாலத்தில் பொழியும் மழை நீரை திறம்பட சேகரித்துக்கொள்ளும் நிலைக்கு  மேம்பட பெரிய காரணியாக  அமையும் என்பது உறுதி. தங்களின் அரசியல் பிரவேசத்திற்கான மங்களகரமான துவக்கமாக கிராம நீர் நிலைகள் சீரமைப்பு அமைய வாழ்த்துகள் மற்றும் பிராத்தனைகள் என்று தெரிவித்துள்ளனர்.

தங்கள் அழைப்பிற்கு காத்திருக்கும்
திருச்செல்வம் ராமு
Mission IT-Rural
9840374266
www.it-rural.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com