சுற்றியுள்ள மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு: வறட்சியின் பிடியில் வரலாற்று புகழ் வைகை! காரணம்?

வரலாற்றுப் புகழ் பெற்ற வைகை நதி வறட்சியின் கோரப் பிடியில் சிக்கக் காரணம்? வேறென்ன.. தண்ணீர் திருட்டு, மரக்கடத்தல், மழை குறைவுதான்.
சுற்றியுள்ள மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு: வறட்சியின் பிடியில் வரலாற்று புகழ் வைகை! காரணம்?

வரலாற்றுப் புகழ் பெற்ற வைகை நதி வறட்சியின் கோரப் பிடியில் சிக்கக் காரணம்? வேறென்ன.. தண்ணீர் திருட்டு, மரக்கடத்தல், மழை குறைவுதான்.

தேனி மாவட்டம், மேகமலையில் வருசநாடு அருகே மூல வைகை பகுதியில் வைகை நதி உற்பத்தியாகிறது. சுமார் 2.75 லட்சம் ஏக்கர் வனநிலங்களில் பெய்யும் மழை நீர் வைகை அணைக்கே வந்து சேரும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கொட்டக்குடி ஆறு, பெரியாறு, சுருளியாறு இவை எல்லாம் வைகையாற்றில் கலந்து அணைக்குள் சேரும் விதத்தில் உள்ளன. 

வைகையின் விஸ்வரூபம்: தேனி மாவட்டத்தில் வைகை நதி பிறக்கும் மேகமலை வனப்பகுதி, தேக்கடி புலிகள் சரணாலயத்தை விட பல மடங்கு சிறந்த வனப்பகுதியாகும். 1998ம் ஆண்டு வைகையின் விஸ்வரூபத்தை கண்ட மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்கள் அதிர்ந்து போயினர். அந்த ஆண்டு நவம்பரில் பெய்த கனமழையால், வைகை நதியில் வினாடிக்கு 90 ஆயிரம் கன அடிக்கு தண்ணீர் வெள்ளமாக பாய்ந்தது. தேனி பங்களாமேடு வரை சுமார் 2 கிமீ தூரம் நகருக்குள் தண்ணீர் ஊடுருவியது. குன்னூர் பாலம் மூழ்கி, பாலத்திற்கு மேல் 6 அடி உயரம் தண்ணீர் சென்றது.

மதுரையில் வெள்ளம்: அப்போதைய தேனி கலெக்டர், மாவட்ட எஸ்பி இருவரும் இணைந்து வைகை அணையை காப்பாற்ற வேறு வழியின்றி, அத்தனை மதகுகளையும் திறந்து அணைக்கு வந்த மொத்த நீரான விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீரையும் அப்படியே வெளியேற்றினர். வைகை நதியின் அகலம் தாங்காமல் கரையோரம் இருந்த பல கிராமங்கள் மட்டுமின்றி மதுரை செல்லூர் பகுதி முழுக்க நீரில் மூழ்கி பல உயிர்கள் பலியாகின. இப்படி சீறி எழுந்த வைகை, அதன் பின்னர் மெல்ல மெல்ல வடிய தொடங்கியது. ஆண்டுக்கு 9 மாதங்கள் ஓடி மக்களை மகிழ வைத்த வைகையில், 2017ல் 17 நாட்கள், 2018ல் 7 நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. நடப்பாண்டு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

வளங்கள் அழிப்பு: வைகை அழிவின் விளிம்பிற்கு செல்ல காரணம் என்ன என்பது மிகவும் கூர்மையாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம். வைகையின் முக்கிய நீர்ப்பிடிப்பான மேகமலையை பொறுத்தவரை பல லட்சம் மதிப்புள்ள அரிய வகை மரங்களை வெட்டுதல், வனத்தை ஆக்கிரமித்தல், வனத்திற்குள் பாதை அமைத்தல், வனவிலங்குகளை வேட்டையாடுதல், சட்ட விரோதமாக சுற்றுலா செல்லுதல், ஆடு, மாடுகளை மேய்த்தல், வனவிலங்குகளின் இருப்பிடத்தை மக்கள் வசிப்பிடமாக மாற்றுவது என பல சிக்கலான பிரச்னைகள் உள்ளன.

தற்போதைய நிலையில் மேகமலை வனப்பகுதியில் மட்டும் 3 ரேஞ்சர்கள், 38 வனக்காவலர்கள் (வாட்ச்சர்ஸ்), 40க்கும் மேற்பட்ட வனக்காப்பாளர்கள் (கார்டுகள்) பற்றாக்குறை உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வனநிலங்கள் விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இந்த வனநிலங்களை ஆக்கிமித்துள்ளவர்களில் பெரும்பாலானோர் நகர் பகுதியில் வசிப்பவர்கள். இவர்கள் தாங்கள் ஆக்கிரமித்துள்ள தோட்டங்களில் பணியாளர்களை குடி வைத்து விவசாயம் செய்கின்றனர். இதற்கு தேவையான தண்ணீரை வைகை நதியில் உறிஞ்சிக் கொள்கின்றனர். இதனால் வைகையின் வளம் குன்றி வருகிறது. மரங்களை வெட்டி கடத்துவதால் மழைவளம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகள் இருந்தும்... தேனி மாவட்டத்தை பொறுத்தவரை வனப்பரப்பை விட பல மடங்கு அதிகமாக விளைநிலங்கள் உள்ளன. இங்கு முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முகாநதி, கொட்டகுடி ஆறு, வரட்டாறு, வராகநதி என பல ஆறுகள் ஓடுகின்றன. நூற்றுக்கணக்கான சிற்றோடைகள் உள்ளன. 480 கண்மாய்கள் உள்ளன. பல லட்சம் போர்வெல்கள் உள்ளன. 33,860 கிணறுகள் உள்ளன. சோத்துப்பாறை அணை, மஞ்சளாறு அணை, வைகை அணை, மேகமலையில் 5 அணைகள் உள்ளன. இதில் தேங்கும் நீர் நமக்கு ஒரு போக சாகுபடிக்கு கூட போதாது. விவசாய நிலம், குடியிருப்பு பகுதிகளை பொறுத்தவரை நாம் சேமித்த நீரை விட செலவழித்த நீர் பல மடங்கு அதிகம். இதனால் இன்று தேனி மாவட்டம் நிலத்தடி நீர் இல்லாத மாவட்டமாக மாறிவிட்டது.

மண் படிவு: வைகை அணையில் 20 அடி உயரம் மண் படிவுகள் உள்ளன. இந்த நிலையிலும் 300க்கும் மேற்பட்ட நீர்மூழ்கி மோட்டார்கள் மூலம் தண்ணீர் திருடப்பட்டு, சிலர் தங்களது நிலங்களுக்கு மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட ஏராளமான இடங்களில் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தமிழக அரசு அதிரடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இருக்கும் நீர்மட்டத்தையாவது காப்பாற்ற முடியும். என்னதான் தீர்வு?: ‘‘மேகமலை வனப்பகுதியில் வனம் அழித்தல் குற்றங்களை தடுப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க, இந்தப்பகுதியில் நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அத்துடன் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேகமலையை பாதுகாக்க தமிழக அரசு கூடுதல் நடவடிக்கை எடுப்பதுடன் போதிய நிதியை ஒதுக்க வேண்டும்’’ என்று வன ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

பல கோடி பாசனம் பாதிப்பு

‘‘முல்லை பெரியாற்றில் நமது உரிமைகளை இழந்ததாலும், கேரள அரசியல்வாதிகளை சரியான முறையில் கையாள முடியாததாலும், முல்லை பெரியாற்றில் இன்னமும் சிக்கல் நீடிக்கிறது. வைகை அழிந்தால் ஐந்து மாவட்டத்தின் அழிவு என்பதை உணர வேண்டும். தற்போது வைகையில் நீர் இல்லாததால் ஐந்து மாவட்டங்களில் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் ஏற்பட்ட பொருளாதார இழப்பினை கணக்கிட்டால் பல கோடியை தாண்டி விடும். வைகை நீர்மட்டம் சரிவதால் தான் இவ்வளவு பெரிய வீழ்ச்சி என்பதை மக்கள் இன்னும் உணரவில்லை. ஒரு சிலரின் சுயநலத்திற்காக பல லட்சம் மக்களின் நீராதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கிறோம். நம் சந்ததிகளை பாதுகாக்க நிச்சயம் நாம் கை கோர்க்க வேண்டும்’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com