Enable Javscript for better performance
சுதந்திரக் காற்றை சுவாசிப்போம்!- Dinamani

சுடச்சுட

  
  Independence Day


  இந்தியா முதன்முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்த நாள் 1947, ஆகஸ்டு 15 - ஆம் தேதி. அன்றைய வரலாற்றை எவ்வளவு முறை கேட்டாலும், படித்தாலும் நமக்கு சலிக்காது. அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக் கொள்ள சுய மரியாதையோடு போராடி, உயிர் நீத்த தியாகிகளின் ரத்தத்தை வெற்றித் திலகமாக வைத்துக் கொண்டு  1947, ஆகஸ்டு 15 ஆம் தேதி நள்ளிரவில் கோடானு கோடி இந்திய மக்கள் காத்திருந்தனர்.

  சுதந்திரம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பிரிட்டிஷ் அரசு இருந்தது. 1940 க்குப் பிறகு இந்திய திருநாட்டை மீட்டெடுப்பதற்கான போராட்டங்கள் வலுப்பெற்றன. அச்சமயம் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இதன் காரணமாக ஆங்கிலேய அரசின் கஜானா காலியாகத் தொடங்கியது. தன் சொந்த நாடான இங்கிலாந்தைப் பராமரிக்க முடியாத அளவுக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியது. அத்தகைய சூழலில் 1945 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் தேர்தல் நடைபெற்றது. அங்கு சர்ச்சிலின் தலைமையிலான பழமைவாதக் கட்சியைத் தோற்கடித்து கிளமெண்ட் அட்லீயின் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது. காலணி நாடுகளுக்கு விடுதலை அளிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியே அக்கட்சியின் வெற்றிக்கு காரணமாக கூறப்பட்டது.

  எனவே, காந்தியடிகள் தலைமையிலான அகிம்சா வழி போராட்டத்தின் தீவிரம் ஒரு பக்கம், தேர்தல் வாக்குறுதி ஒரு பக்கம் என பல்முனைத் தாக்குதல்களால் ஆங்கிலேய அரசு இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தது.1948 ஜூன் மாதத்துக்குள் கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. இதனிடையே,1947 ஆம் ஆண்டு காலகட்டங்களில் இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக பொறுப்பு வகித்தவர் மவுண்ட் பேட்டன். மகாத்மா காந்தி மற்றும் ஜின்னா ஆகியோருடன் சுதந்திரம் அளிப்பது தொடர்பாக பல கட்ட பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் தனி நாடு கோரிக்கையில் ஜின்னா அவர்கள் உறுதியாக இருந்ததால் இப்பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டது.இது தொடர்பாக 1947-ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் முன்கூட்டியே சுதந்திரம் அளிப்பது தொடர்பாகவும், தனி நாடு கோரிக்கையைப் பற்றியும் முடிவெடுக்கப்பட்டது.

  ஆனால் எந்த நாளில் சுதந்திரம் கொடுப்பது பெற்றுக் கொள்வது என்பதில் முரண்பாடு ஏற்பட்டது. ஏனெனில் இரண்டாம் உலகப் போரின் முடிவில் 1945,ஆகஸ்டு 15 ஆம் தேதியன்றுதான் நேச நாடுகளுக்கு கடும் நெருக்கடி கொடுத்த ஜப்பானிய வீரர்கள், ஆங்கிலேயர்களின் கிழக்காசிய கமாண்டராக இருந்த மவுண்ட்பேட்டனிடம் சரணடைந்தார்கள். அந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் நினைவாக ஆகஸ்டு 15-ஆம் தேதியை சுதந்திர நாளாக தேர்ந்தெடுத்தார் மவுண்ட் பேட்டன். ஆனால் சாஸ்திரங்கள் அறிந்த ஜோதிடர்கள் அனைவரும் அன்றைய நாள் வேண்டாம் என இந்திய தலைவர்களிடம் ஒருசேர கூறினர்.

  இறுதியில், ஆங்கிலேயர்களுக்கு நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த நாள், இந்தியர்களுக்கோ அதிகாலை ஐந்து மணிக்கே அடுத்த நாள் பிறப்பதாக கணக்கு என்பதால் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது. சுயாட்சி அடைந்த பெருமையோடு பாரதத்திற்கு முதல் பிரதமராக ஜவகர்லால் நேருவும், துணைப் பிரதமராக சர்தார் வல்லபாய் படேலும் பொறுப்பேற்றனர். இப்படி நீண்ட வரலாற்றைக் கொண்டது நம் சுதந்திரப் போராட்டம். ஆனால், இன்னும் ஏராளமான விடுதலைப் போராளிகளின் தியாகமும், அறியப்படாத தலைவர்களின் தீரமும் வரலாற்றுப் புத்தகங்களில் இன்றும் புரட்டப்படாமல்தான் இருக்கின்றன. இவை இனி எதற்கு, தேவையில்லை என்று நாம் ஒதுக்கி விட முடியாது. ஒருமைப்பட்ட, அசுர வளர்ச்சி காணப் போகும் இந்தியாவை உருவாக்கிட இதுவே பல ஆலோசனைகளை வழங்கப்போகும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. அதே சமயத்தில் வாங்கிய சுதந்திரம் பாழாய்ப் போகிறதே என சுதந்திரக் களத்தில் போராடிய தியாகிகள் வருத்தப்படும் அளவுக்கு பிரச்னைகள் தற்போது தலை தூக்கியிருக்கின்றன.

  ஒருமுறை ஆங்கிலேயே பெண் போர்க்ஒயிட், காந்தியிடம், 'நீங்கள் 120 வயது வரை வாழ்வேன் என்கிறீர்களே. அது எப்படி' என்று கேட்டதற்கு, 'ஆமாம் அது உண்மைதான். ஆனால் அதை தற்போது மாற்றிக் கொண்டேன். நடக்கிற நிகழ்வுகளை எல்லாம் பார்க்கும் போது மரணிப்பதே மேல் என்றே கருதுகிறேன்' என்று அப்போதே அவரின் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதுதான் அவருடைய கடைசி பேட்டி. தற்போதுகாந்தியடிகளின் 150 வது ஜெயந்தி விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். 

  தமிழகத்திலிருந்து  வ.உ.சிதம்பரம் பிள்ளையும், குஜராத்திலிருந்து சர்தார் வல்லப்பாய் படேலும்,மகாராஷ்டிராவில் பிறந்த பாலகங்காதர திலக்கும் இந்திய சுதந்திரத்துக்காக இணைந்து போராடினார்கள். இன பற்று இருந்தாலும் நாடு என்ற ஒற்றை சொல்லில் ஒற்றுமை நிலவியது. 

  கருத்துரிமை, பேச்சுரிமை, தனி மனித சுதந்திரம்,கலாசாரத்தோடு ,திறந்த சிந்தனைகளோடு பயணித்தால் நாடு வளர்ச்சியடையும். எனவே, சமூக பொறுப்புணர்வோடு, இன, மத வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும். 

  - கலைச்செல்வி சரவணன், ஊடகவியலாளர், சென்னை

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai