எட்ட முடியாத அந்த உயரத்தை எட்டிவிட வேண்டும்! ஏழைச் சிறுவனின் கனவு!

சந்திரனின் தாய் லதா மற்றும் தந்தை வெங்கடேஷ் ஆகியோர் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தனர்.
எட்ட முடியாத அந்த உயரத்தை எட்டிவிட வேண்டும்! ஏழைச் சிறுவனின் கனவு!

சந்திரனின் தாய் லதா மற்றும் தந்தை வெங்கடேஷ் ஆகியோர் அன்றாடம் கூலி வேலைக்குச் சென்று தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வந்தனர். வீட்டின் அருகிலிருந்த ஒரு பரோட்டா கடையில் வெங்கடேஷ் வேலை பார்த்து வந்தார். அந்த வேலையின் மூலம் கிடைக்கும் பணம் குடும்ப செலவிற்கே போதாமல் இருந்த நிலையில் வெங்கடேசனின் குடிப்பழக்கம் நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இதற்கிடையில் அவருக்கு தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் வந்ததால் அதற்கு மருத்துவம் பார்க்கப் பணம் தேவைப்பட்டது. எனவே தன் மூத்த மகன் பாஸ்கரனை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு முதலாளியிடம் ரூபாய் 20,000 வாங்கிக் கொண்டு அவனை வேலைக்குச் சேர்த்தார்.

வெங்கடேசனின் மற்ற குழந்தைகள் சொந்த ஊரில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். சில மாதங்கள் கழித்து நவம்பர் 2018 - ல் பெரும் புயல் ஒன்று தஞ்சை, திருவாரூர்  மற்றும் நாகை மாவட்டங்களைத் தாக்கியது. இதனால் விவசாயம் மற்றும் கால்நடைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வெங்கடேசனின் குடும்பம் ஒரு ஓலைக் குடிசையில் அப்போது தங்கியிருந்த நிலையில் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றில் அருகே இருந்த தென்னை மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்தது. மரம் முறிந்து விழும் சத்தத்தைக் கேட்ட லதாவும் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டனர். வெங்கடேஷ் மட்டும் விழுந்த மரத்தின் அடியில் சிக்கிக் கொண்டார். உடனே அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தொடர்ந்து எட்டு நாட்கள் அவர் அவர் சிகிச்சை பெற்றார். இதற்கிடையில் மருத்துவத்திற்குப் பணம் தேவைப்படவே தனது இளைய மகன் சந்திரனை வேலைக்கு அனுப்புவதாகக் கூறி முதலாளியிடம் ரூ.6000 லதா வாங்கியுள்ளார். மேல் சிகிச்சைக்காகத் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அப்போது சந்திரன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன். மற்றக் குழந்தைகளைப் போலவே சந்திரனும் எவ்வித கவலையுமின்றி பள்ளி செல்வதிலும் விளையாட்டிலும் ஆர்வம் காட்டினார். அவனது தாயின் வேண்டுகோளின்படி  அருகிலிருக்கும்  பூவத்தூர்   என்ற கிராமத்திற்குச் சென்று ஒரு கால்நடைப் பண்ணை வைத்திருக்கும் மகாலிங்கத்திடம் வேலைக்குச் சேர்ந்தார். எட்டு நாட்கள் கழித்து அவரது தந்தை வெங்கடேஷ்  இறந்து விட இரு மகன்களும் இறுதிச் சடங்கிற்காக அவர்களது முதலாளிகளால் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இறுதிச் சடங்கிற்காகப் பணம் தேவைப்பட்ட போது சந்திரனின் முதலாளிடம் மேலும் ரூ. 30,000 வாங்கியுள்ளார் லதா. தந்தையின் இறுதிச் சடங்குகள் முடிந்தவுடன் மகன்கள் இருவரையும் அவர்களது முதலாளிகள் வந்து வேலை செய்ய அழைத்துச் சென்று விட்டனர்.

சந்திரனுக்கு சுமார் 500 ஆடுகளை மேய்த்துப் பராமரிக்கும் வேலை தரப்பட்டது. மேய்ச்சலுக்குச் செல்லும் வயல்வெளிகளில் ஆடுகளுடனே தங்கி சிறிய டிபன் கேரியரில் முதலாளி தரும் உணவை உண்டு அவனது நாட்கள் நகர்ந்தன. அதனை நினைவுகூர்ந்த சந்திரன் தனது கழுத்தில் ஒரு துண்டும் இடுப்பில் ஒரு லுங்கியும் கட்டிக் கொண்டு ஒரு கம்பின் நுனியில் டிபன் கேரியரை கட்டியபடி அலைவேன் என்றார்.

ஒவ்வொரு நாளும் காலை ஐந்து மணிக்கு எழுந்து  ஆடுகளைப் கிடையிலிருந்து திறப்பது முதல் அவற்றை வயல் வெளிகளில் மேய்த்து அவற்றில் ஒன்று கூடத் தொலைந்து போகாமல் மீண்டும் கிடையில் அடைப்பது வரை சந்திரன் ஓயாமல் வேலை செய்தார். ஒருவேளை ஆடு ஒன்று தொலைந்தாலும் அதனைக் கண்டுபிடிக்கும் வரை நள்ளிரவு ஆனாலும் அவருக்கு வழங்கப்படும் உணவு வழங்கப்படாது.

சந்திரனின் அன்றாட காலை உணவாக முந்தைய நாள் இரவு மீதமான பழையச் சோற்றைக் கஞ்சியாக ஒரு டிபன் கேரியரில் தருவார் முதலாளி. சில நேரம் அதுவே மதிய உணவாகவும் கொடுத்து அனுப்பப்படும். ஆடுகளை மேய்க்கப் புல்வெளிகளிலும் பாறைகளிலும் பல கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும். மாலையில் அனைத்து ஆடுகளையும் சரியாக எண்ணி வெட்டவெளியில் தற்காலிகமாகப் போடப்பட்ட கிடையில் அடைக்க வேண்டும். பாம்பு, தேள், பூச்சி ஆகியவற்றிற்கிடையே படுக்கை விரித்துத் தூங்க வேண்டும். ‘முதலில் எங்கு மேய்ச்சலுக்குச் செல்வது, இரவில் என்ன கடிக்கிறது, பசிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என எதுவும் தெரியாமல் பயந்தேன். இப்படிப் பல கேள்விகள் இருந்தாலும் இது தான் என் வாழ்க்கை என்று ஏற்றுக் கொண்டேன். இதுதான் என் விதி; அதிலிருந்து தப்பிக்க வழியே இல்லை என்று நினைத்தேன். தூங்கும் போது கனவுகள் வந்து அச்சுறுத்தியதால் என்னால் தூங்கவே முடியவில்லை.’

ஒருநாள் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் போது வழிப்போக்கர் ஒருவர் சந்திரனின் வேலை, தங்குமிடம் போன்றவற்றைக் கேட்டு விசாரித்துள்ளார். அவரின் வாழ்க்கை அனுபவத்தை அவரிடம் பகிர உதவி அவரைத் தேடி வந்தது. மாவட்ட நிர்வாகத்திற்கு சந்திரனின் துயர்மிகு வாழ்க்கை தெரிய வரவே அவரைத் தேடி அவர் இருக்குமிடத்திற்கு அதிகாரிகள் வந்தனர். ஆனால் அப்போது அவர் ஆடுகளை மேய்ச்சலுக்காக வேறு ஒரு இடத்திற்குச் சென்று விட்டார். இருப்பினும் அதிகாரிகள் தொடர்ந்து சந்திரனைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டனர்.

முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் சந்திரனுக்கு விடுதலைச் சான்று வழங்கப்பட்டது. அச்சான்றில் முதலாளியிடமிருந்து வாங்கிய கடன்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தது. சந்திரனின் முதலாளி கைது செய்யப்பட்டு அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்திரன் விடுவிக்கப்பட்ட செய்தி மாவட்டம் முழுக்கப் பரவிய நிலையில் அவரது சகோதரர் பாஸ்கரனை பணியில் வைத்திருந்த முதலாளி அவருக்குச் சேர வேண்டிய கடன் திருப்பி செலுத்தப்பட்டு விட்டதாகவும் இனி அவருக்காக வேலை செய்யத் தேவையில்லை எனக் கூறி பாஸ்கரனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.

உரிய நேரத்தில் அரசின் தலையீடு, கடுமையான சட்ட நடவடிக்கை, ஊடக வெளிச்சம் ஆகியவற்றால் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. பணத்தைக் கடனாகக் கொடுத்து சட்டத்திற்கு புறம்பாக மனிதர்களை அடிமைப்படுத்தி  வைத்திருப்பது கடுமையான சட்ட நடைமுறைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதை இனியாவது உணர வேண்டும்.

பெரும்பாலான ஆடு மாடு மந்தைகளில் மேய்ச்சல் வேலைக்குச் சிறார்களே இலக்காகின்றனர். பெரும்பாலும் இது பெற்றோர் அவசரத்திற்காக வாங்கும் கடனாலும் அறியாமையிலும் நிகழ்கிறது. இவ்வாறு வேலைக்குச் சேரும் சிறார்களிடமிருந்து அவர்களது குழந்தைப் பருவம், கல்வி போன்ற உரிமைகள் பறிக்கப்பட்டு மிக மோசமான கொடுமைகளுக்கு ஆளாவதால் அதிலிருந்து அவர்கள் மீள்வதற்கு வெகு நாட்களாகிறது.

தற்போது சந்திரன் குழந்தைகள் நல அமைப்பின் மூலம் நடத்தப்படும் இல்லத்தில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்று வருகிறார். மேலும் குழந்தைகள் நல அமைப்பின் கண்காணிப்பில் அரசுச் சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னை மீட்க உதவிபுரிந்த நல் உள்ளங்களின் உதவியுடன் தனது வீட்டிலேயே தங்கிப்படிக்க விரும்புகிறார். இன்று அவர் கனவு காணப் பயப்படுவதில்லை… அவர் எட்ட முடியாது என்று நினைத்த உயரத்தை ஒரு விமானியாக மாறி எட்ட வேண்டும் என நினைக்கிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com