ஜெயலலிதா ஆட்சிதான் நடத்துகிறாரா எடப்பாடியார்?

தமிழக அரசியலில், காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பெரும்பாலான கட்சிகள் மக்களிடம் சொல்வதுண்டு. ஜெயலலிதா காட்டிய வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துகிறார்
ஜெயலலிதா ஆட்சிதான் நடத்துகிறாரா எடப்பாடியார்?

தமிழக அரசியலில், காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று பெரும்பாலான கட்சிகள் மக்களிடம் சொல்வதுண்டு. ஜெயலலிதா காட்டிய வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்துகிறார் என்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு படி மேலே “ஜெயலலிதாவின் ஆட்சியை காட்டிலும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக உள்ளது என்று கூறுகிறார். அதிமுகவினர் அம்மாவழி மற்றும் ஜெயலலிதா ஆட்சி என்பர். அப்படியென்றால் ஜெயலலிதா ஆட்சி தான் நடக்கிறதா?

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தொடர்ந்து நீட் தேர்வை எதிர்த்து வந்தார். தமிழக அரசு சார்பாக நீட் தேர்வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு தடை விதித்தது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஜிஎஸ்டி மசோத, உணவு பாதுகாப்பு மசோதா , உதயா மின் திட்டம், நீட் ... அவர் மறைந்த பின்னர் அதிமுக அரசு நீட் தேர்வை ஆதரித்து கையெழுத்துப் போட்டது.

மேலும், 8 வழி, 6 வழி, 4 வழி பெருஞ்சாலைத் திட்டங்கள், துறைமுகங்கள், உயர்மின்கோபுரங்கள், எரிவாயுக் குழாய்கள்,  கெயில் குழாய்கள்,நியூட்ரினோ ஆய்வகம் மக்கள் எதிர்ப்புத் திட்டங்கள் தூரித கதியில் அனுமதி வழங்கப்பட்டு நிறைவேற்றங்களும் நடைபெறுகின்றன. அதுமட்டுமின்றி பொதுமக்களை பாதிக்கும்  அடிப்படை வசதிகளின் கட்டண உயர்வுகள் என்னென்னெ ?

பஸ் கட்டண உயர்வு
கடந்த ஜனவரி 20, 2018  அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தும் உத்தரவை தமிழக அரசு அதிரடியாக வெளியிட்டுள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு 2018, ஜனவரி, 20 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, எந்த ஊரில் எவ்வளவு கட்டணம் உயர்ந்துள்ளது என்ற விபரம் :

சென்னையில் கட்டண விபரம் :
சாதாரண பஸ் - ரூ.6 முதல் ரூ.25 வரை 
எக்ஸ்பிரஸ் பஸ்கள் - ரூ.9 முதல் ரூ.37 வரை
டீலக்ஸ் பஸ்கள் - ரூ.13 முதல் ரூ.51 வரை
இரவு பஸ்கள் - ரூ.11 முதல் ரூ.49 வரை
வால்வோ பஸ்கள் - ரூ.28 முதல் ரூ.159 வரை

அரசு விரைவுப்பேருந்தில் மதுரைக்கு ரூ.325-ஆக இருந்த கட்டணம் ரூ.510-ஆக உயரும். அதே போல குமரிக்கு ரூ.505-ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்ணம் ரூ.250 அதிகரித்து ரூ.755 ஆகியுள்ளது. இதே போல கட்டண உயர்விற்கு பின் நெல்லைக்கு செல்ல சென்னையிலிருந்து டிக்கெட் கட்டணம் அரசு விரைவுப் பேருந்தில் ரூ.440 இலிருந்து ரூ.664 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் பஸ் கட்டணம் ரூ.150 லிருந்து ரூ.206 ஆக உயர்வு. சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் பஸ் கட்டணம் ரூ.125 லிருந்து ரூ.196 ஆக உயர்ந்தது. சென்னையில் இருந்து காரைக்குடி செல்லும் பஸ் கட்டணம் ரூ.300 லிருந்து ரூ.480 ஆக உயர்ந்தது. சென்னையில் இருந்து ஓசூர் செல்லும் பஸ் கட்டணம் ரூ.225ல் இருந்து ரூ.350 ஆக உயர்ந்தது. சென்னையில் இருந்து கும்பகோணம் செல்லும் பஸ் கட்டணம் ரூ.215ல் இருந்து ரூ.345 ஆக உயர்ந்தது. சென்னையில் இருந்து சேலம் செல்லும் பஸ் கட்டணம் ரூ.240ல் இருந்து ரூ.383 ஆக உயர்ந்தது. சென்னையில் இருந்து திருச்சி செல்லும் பஸ் கட்டணம் ரூ. 200ல் இருந்து ரூ.308 ஆக உயர்ந்தது. சென்னையில் இருந்து கோவை செல்லும் பஸ் கட்டணம் ரூ.400ல் இருந்து ரூ.600 ஆக உயந்தது.


3 மடங்கு உயர்ந்த கேபிள் டிவி கட்டண உயர்வு
அரசு கேபிள் டிவி நிறுவனம் என்ற தமிழக அரசு நிறுவனம் இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956-ன் கீழ் 04.010.2007 அன்று துவங்கப்பட்டு இதற்கென தஞ்சாவூர், திருநெல்வேலி, கோயம்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் தலா ரூ.8 கோடி செலவில் டிஜிட்டல் தலைமுனைகள் அமைக்கப்பட்டன. குறைந்த விலையில் சிறந்த கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாகும்.

பல்வேறு காரணங்களினால் செயலிழந்த நிலையில் இருந்த அரசு கேபிள் டிவி நிறுவனம் இவ்வரசு பொறுப்பேற்ற பின்னர், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் புனரமைக்கப்பட்டு புத்துயிரூட்டப்பட்டது. இதற்காக இந்நிறுவனத்திற்கு ரூ.3 கோடி நிதியுதவி கடனாக வழங்கப்பட்டது. மேலும் இந்நிறுவனத்தின் பெயர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் என மாற்றம் செய்யப்பட்டது

தமிழகத்தின் 27 மாவட்ட தலைநகரங்களில் விருப்பமுள்ள தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் குத்தகைக்கு எடுத்ததுடன், ஏற்கனவே 4 மாவட்டங்களில் இருந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறைகளை புனரமைத்தது.

ஜெயலலிதார் அவர்கள் 30.8.2011 அன்று சட்டமன்றத்தில் ஆற்றிய உரையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மாதம் ரூ.70/- என்ற கட்டணத்தில் தரமான கேபிள் டிவி சேவையை பொதுமக்களுக்கு கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் வழங்கும் எனவும், இதில் ரூ.20/-ஐ மட்டும் கேபிள் ஆப்ரேட்டர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு செலுத்துவார்கள் எனவும் அறிவிப்பு வெளியிட்டார்கள்.

2019, ஜனவரி 1 முதல் புதிய கட்டணம்- எத்தனை சேனல்களுக்கு எவ்வளவு தெரியுமா?

தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் கேபிள் டிவி மற்றும் டிடிஎச் நெட்வொர்க்குகளுக்கான புதிய கட்டண முறையை 2019 ஜனவரி 1 முதல் அமலுக்குக் கொண்டு வந்தது. டிராய்க் கொண்டு வந்த புதிய முடிவினால் நாடு முழுவதும் செட் ஆப் பாக்ஸ் இல்லாமல் தொலைக்காட்சி பார்க்கவே முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த முடிவை எதிர்த்து தொலைக்காட்சி நிறுவனங்கள் 2 வருடங்களுக்கு மேலாக வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் டிராயின் முடிவை அமல்படுத்த வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. ஆண்டனா மூலம் டிவி பார்த்தவர்களை கேபிள் டிவி மூலம் டிவி பார்க்க வைத்தனர். சேட்டிலைட் சேனல்களின் வருகைக்குப் பின்னர் கேபிள் டிவி மட்டுமல்லாது டிஷ் ஆண்டனா மூலம் டிவி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கின்றனர் மக்கள். இவை அனைத்திலுமே எஸ்டி மற்றும் எச்டி பேக்கேஜ் முறையில் விரும்பிய சேனல்களை வாடிக்கையாளர்கள் பெற்று பயன்பெற்று வந்தார்கள்.

புதிய விதிமுறைகள் அமலுக்கு வரும் போது இப்படிப் பேக்கேஜாகக் கட்டண தொலைக்காட்சி சேனல்களை வாடிக்கையாளர்களால் பெற முடியாது. ஆனால் இலவச சேனல்களை அடிப்படை பேக்கேஜ்களில் பார்க்க முடியும். ஆனால் இதற்கும் செட்-ஆப் பாக்ஸ் கட்டாயம். இலவச சேனல்களைப் பெறுவதற்காக டிராய் சில திட்டங்களை வகுத்துள்ளது. அதன் படி எவ்வளவு கட்டணம் செலுத்தினால் இலவச சேனல்களைப் பெற முடியும் என்பதை பார்க்கலாம்.

எத்தனை சேனல்கள் இலவசம் கட்டணம் எவ்வளவு:
1 முதல் 100 இலவச சேனல்களைப் பார்க்க 130 ரூபாய் உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி எனச் சேர்த்து 153.50 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

125 இலவச சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் ரூ.150 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி சேர்த்து 177 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

150 இலவச சேனல்களைப் பார்க்க வேண்டும் என்றால் ரூ. 170 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 200.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். 175 இலவச சேனல்களைப் பெற வேண்டும் என்றால் ரூ. 190 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 224.50 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

200 இலவச சேனல்கள் வரை பார்க்க வேண்டும் என்றால் ரூ. 210 உடன் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி என 248 ரூபாயைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இப்படித் தொடர்ந்து கூடுதலாக மேலும் 25 இலவச சேனல் வேண்டும் என்றால் அடிப்படை கட்டணத்துடன் மேலும் 25 ரூபாய் கட்டணம் கூடுதலாக ஜிஎஸ்டி எனத் திட்டம் நீள்கிறது.

சன் குழும சேனல்கள், ஜீ குழும சேனல்கள், ராஜ் குழும சேனல்கள், ஸ்டார் குழும சேனல்கள், கலர்ஸ் சேனல், மெகா டிவி போன்றவை கட்டண சேனல்களாக உள்ளன.

கட்டண சேனல்கள் பார்க்க வேண்டும் என்றால் மேலே கூறிய அடிப்படை திட்டங்களுள் ஒன்றைத் தேர்வு செய்துகொண்டு கட்டண சேனல்களுக்கான கட்டணம் கூடவே 18 சதவிகிதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். தேவைப்படும் போது பேக்கேஜ்களை மாற்றிக்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இலவச சேனல்கள் மாநிலத்திற்கு ஏற்றவாறு மாறுபடும். 

மேலே கூறிய திட்டங்களின் கட்டணங்கள் டிராய் வகுத்தது. கட்டண சேனல்களின் விலை மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் போன்று அவ்வப்போது மாற வாய்ப்புள்ளது.

இந்தக் கட்டண முறையை எதிர்த்துத் தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் முயன்றும், வழக்குகள் தொடர்ந்தும் தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனவே கேபிள் டிவி முதல் டிடிஎச் வாடிக்கையாளர்கள் வரை அனைவருக்கும் ஜனவரி 1 முதல் பட்ஜெட் அதிகரித்தது என்பதில் சந்தேகமில்லை. 

ஆவின் பால்விலை உயர்வு
தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 2 கோடியே 6 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 25 லட்சம் லிட்டர் பால் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், பால் கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று கடந்த மாதம் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

கடந்த 17, ஆகஸ்ட், 2019 தமிழக அரசு அனைத்து வகையான ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தியது. இதன்படி தமிழகத்தில் பால் விலை எவ்வளவு என்பது குறித்து இப்போது பார்ப்போம். கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு உயர்த்தி அறிவித்தது. பச்சை, நீலம், ஆரஞ் லிட்டருக்கு ரூ.10 உயர்த்தப்பட்டது. அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு பின் இப்போது பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஆவின் பால் விலை லிட்டரில் ( மாதாந்திர அட்டை வைத்திருப்போருக்கு) நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) பழைய விலை ரூ.34 ஆக இருந்தது. இனி நாளை முதல் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். பச்சை பால் (சமன்படுத்தப்பட்டது) பழைய விலை 39 ரூபாயாக இருந்தது. இனி 45 ரூபாய்க்கு விற்கப்படும். ஆரஞ்சு பால் (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பழைய விலை ரூ.43 ஆக இருந்தது. இனி 49 ரூபாய்க்கு விற்கப்படும். மெஜந்தா பால் (கொழுப்பு சத்து நீக்கப்பட்டது) லிட்டர் 35 ரூபாய்க்கு விற்கப்படும். இனி சில்லறை விற்பனையில் பால் விலை உயர்வு நீலம் (நிலைப்படுத்தப்பட்டது) பழைய விலை ரூ.37 ஆக இருந்தது. இனி இன்று முதல் 43 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். பச்சை பால் (சமன்படுத்தப்பட்டது) பழைய விலை 41 ரூபாயாக இருந்தது. இனி 47 ரூபாய்க்கு விற்கப்படும். ஆரஞ்சு பால் (கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்டது) பழைய விலை ரூ.45 ஆக இருந்தது. இனி 51 ரூபாய்க்கு விற்கப்படும்.

ஆவின் பால் விலை உயர்ந்ததை தொடர்ந்து, ஆவினின் மற்ற தயாரிப்புகளான வெண்ணெய், நெய் உள்ளிட்ட பொருட்களின் விலையும் உயர இருக்கிறது. தேனீர், காபி என அனைத்தையும் விலை ஏற்றுவார்கள்.

பால் உற்பத்தி, கிராமப் பொருளாதார மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகிப்பதையும், பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டும், கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள 4 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்த்தவும், எருமைப்பால் கொள் முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக, அதாவது லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

2017, ஜூலை, 1 முதல் தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 2019, ஜூலை 20, சட்டமன்ற மானியக் கூட்டத் தொடரின் கடைசி நாளில்,“தமிழக வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடு கட்டித் தரப்படும். இதற்கான பணத்தை அவர்கள் தவணை முறையில் செலுத்திக்கொள்ளலாம். சென்னை நந்தனம் மற்றும் கே.கே. நகரில் 318 அடுக்கு மாடி வீடுகள் கட்டப்படும்” என்றும் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதி உள்ளது. அங்கே வீடு கட்டினால் தொகுதிக்கு வர வேண்டியதில்லையா.

மூச்சுக்கு 300 தடவை அம்மா ஆட்சி என சொல்லும் அதிமுகவினர், பேருந்து பயணம், தொலைக்காட்சிக் கட்டணம், பால் கட்டணம் என மக்களின் அத்தியாவசியப் பொருட்களை விலை உயர்த்துவது தான் ஜெயலலிதா வழி ஆட்சியா..?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com