தமிழக கார் நிறுவனங்களில் 10 லட்சம் பேர் வேலை பறிபோகும் அபாயம்? அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக கார் நிறுவனங்களில் 10 லட்சம் பேர் வேலை பறிபோகும் அபாயம்? அரசு நடவடிக்கை எடுக்குமா?

தமிழகத்தில் உள்ள கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைத்துள்ளதால் 10 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

பொருளாதார மந்தநிலை காரணமாக, ஆட்டோ மொபைல் துறை கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாதிப்பை சந்திக்க தொடங்கியது. அந்த பாதிப்பின் தாக்கம் தற்போது எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதற்கு, பணப்புழக்கம் குறைந்தது, ஜிஎஸ்டி வரியால் வாகனங்களுக்கான விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் வாகன விற்பனை சரிந்தது. இதனால், வாகன விற்பனையில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட டீலர்கள் தங்களது கம்பெனியை மூடி விட்டனர்.

இந்நிலையில், விற்பனை சரிந்ததால், கார் நிறுவனங்கள் உற்பத்தி செய்த லட்சக்கணக்கான கார்கள் தேக்கம் அடைந்தன. இதன் காரணமாக, தற்போது கார் உற்பத்தியை குறைக்க அந்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதை தொடர்ந்து தொழிலாளர்களுக்கு கட்டாய விடுமுறை அளிப்பது, தற்காலிக பணியாளர்கள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. 

மாருதி சுசுகி, டாடா மோட்டார், ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கார் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. தற்போது ஹூண்டாய் நிறுவனமும் கார் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, இத்தொழிலை நம்பியுள்ளவர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, கார் உற்பத்தி நிறுவனங்களை நம்பி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம் நிலவுகிறது.

மத்திய அரசின் கொள்கைகள்தான் வாகன உற்பத்தி வர்த்தகத்தில் இருக்கக்கூடிய நெருக்கடிக்கு காரணம். நாட்டில் 6 கோடியே 6 லட்சம் பேர் வருமான வரித் தாக்கல் செய்கின்றனர். இவர்கள்தான் மார்க்கெட்டின் தந்தை. இவர்களில் ஏற்கனவே கார் வைத்திருப்பவர்கள் புதிய கார் வாங்க வேண்டும் என்று நினைத்தால் இப்போது உற்பத்தியாகும் கார்களுக்கு எதிர்காலம் இல்லை என்கிற மாதிரி நிலை ஏற்பட்டுள்ளது. வரும் காலத்தில் எலக்ட்ரானிக் கார்தான் என்ற நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளது. ஹூண்டாய் கார் நிறுவனம் கூட எலக்ட்ரானிக் கார்தான் உற்பத்தி செய்வோம் என்று முதன்முதலாக எல்க்ட்ரானிக் கார் உற்பத்தி செய்ய உள்ளனர். இந்த பின்னணியில் எலக்ட்ரானிக் காருக்கு 12 சதவீதம் என்ற வரியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. இப்போது உற்பத்தியாகும் மோட்டார் கார்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதெல்லாம் மோட்டார் வாகன தொழிலில் எந்த பொருளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் உற்பத்தி நிறுவனங்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. நுகர்வோருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
 

இதன் விளைவு கார் நிறுனங்களின் சந்தைகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நெருக்கடி தற்காலிகமாக மட்டும் இருக்குமா என்பதில் சந்தேகம் உள்ளது. ஒவ்வொரு தொழிற்சாலைகளும், தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மொத்தமாக கார் உற்பத்தி தயாரிப்பை நிறுத்தாமல் குறிப்பிட்ட பிரிவுகளில் மட்டும் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர். இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த தொழிலில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தாது. இருக்கிற வேலைவாய்ப்பு பறிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,500 தொழிற்சாலைகள் உள்ளன. மொத்த உற்பத்தி செலவில் 10 சதவீதத்தை குறைக்க நிர்வாகம் கூறியுள்ளது. அப்படியெனில் ஒரு மாதத்திற்கு 5 நாட்கள் விடுமுறை விட சொல்கின்றனர். அதன் மூலம் செலவு குறையும் என்றாலும், 20 சதவீதம் உற்பத்தி குறைகிறது என்றுதான் அர்த்தம். தற்போது, 1 வாரம் வரை விடுமுறை விட அந்த கார் உற்பத்தி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஹூண்டாய் கார் நிறுவனத்தில் 2,400 பேர் வேலை செய்கின்றனர். இதை தவிர்த்து 8 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஹூண்டாய் கார் உற்பத்திக்காக உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் 600 உள்ளது. தற்போது இந்த நிறுவனமும் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், பலர் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை கூட்டமைப்பில் என்ன சொல்கிறார்கள் என்றால், இதே நிலை தொடர்ந்து நீடித்தால் 10 லட்சம் பேரை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.

நிசான் கார் நிறுவனம் 1,500 நிரந்தர தொழிலாளர்களை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளன. போர்டு நிறுவனம் புதிய வாகனங்களை உற்பத்தி செய்வதில்லை. இதேப்போன்று எல்லா கார் உதிரிபாகங்கள் நிறுவனங்கள் முடிவெடுத்தால் பலர் வேலையிழப்பார்கள். நாட்டிலேயே தமிழகத்தில்தான் 40 சதவீதம் கார் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது தமிழகத்தில் செயல்படும் கார் நிறுவனங்கள் உற்பத்தியை குறைப்பது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மட்டுமின்றி டயர் தொழிற்சாலைகளில் 50 சதவீதமான தொழிற்சாலைகள் மொத்த உற்பத்தியை குறைத்துள்ளன. தமிழகம் முழுவதும் அப்போலோ, ஜேகே டயர் என 6 டயர் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், அப்போலோ டயர் கூட மாதம் 15 ஆயிரத்தில் இருந்து 5,500 ஆக தனது டயர் உற்பத்தியை குறைத்துள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும். மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழில் நெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண தமிழக அரசு தொழில் வர்த்தகர்கள், தொழிற்சங்கங்களை அழைத்து பேச வேண்டும். யாருக்கும் பிரச்னை ஏற்படாதவாறு இதற்கு தீர்வு காண வேண்டும். இருப்பினும் இந்த நெருக்கடி தொடரும் என்றுதான் தெரிகிறது. 

* மாருதி சுசுகி, டாடா மோட்டார், ஹீரோ மோட்டோ கார்ப் மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கார் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.

* காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,500 தொழிற்சாலைகள் உள்ளன. மொத்த உற்பத்தி செலவில் 10 சதவீதத்தை குறைக்க நிர்வாகம் கூறியுள்ளது.

* கார் மட்டுமின்றி டயர் தொழிற்சாலைகளில் 50 சதவீதமான தொழிற்சாலைகள் மொத்த உற்பத்தியை குறைத்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com